Wednesday, May 28, 2014

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ......

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ......


"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகன்
சான்றோன் எனக்கேட்ட தாய்".

வள்ளுவன் தாய் மகன் என்று குறிப்பிட்டு இருந்தாலும் இந்தக் குறள் தந்தை மகளுக்கும் பொருந்தும்.

எங்கள் மகள் நிவாஷினி (என்ற நிவி) CBSE பிளஸ் 2 தேர்வில் 500 க்கு 480 மதிப்பெண் பெற்று அவள் படிக்கும் மகிரிஷி வித்யா மந்திர் பள்ளியில் commerce பிரிவில் 2 வது இடம் (முதல் இடம் 482 மதிப்பெண்) பெற்ற தகவல் கிடைத்ததும் எனக்கு திருவள்ளுவரின் மேலே குறிப்பிட்ட திருக்குறள்தான் நினைவுக்கு வந்தது.

ஸ்கூல் first அல்லது ஸ்டேட் first என்ற கனவெல்லாம் எனக்கு எப்போதும் இருந்தது கிடையாது (அதாவது என் மகள் எடுப்பாள்  என்று -  நான் என்று தவறாக நினைத்து விடாதீர்கள்).  ஆனால் மதிப்பெண்ணை வைத்து மட்டுமே நாம் நினைத்த  கல்லூரியில் சுலபமாக இடம் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தினால் என் மகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.   அந்த ஆசைக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொண்டாள் நிவி.

இங்கு ஒரு விசயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.  சுமார் 14 ஆண்டுகளுக்கு முன் நிவியை LKG சேர்க்கும்போது, எல்லா பெற்றோர்களையும் போலவே நாங்களும் நிவிக்கு, தகுதிக்கு மீறிய விசயங்களை மூளையில் திணித்துக் கொண்டிருந்தோம். எங்கள் பங்குக்கு  ஐந்து ஆறு திருக்குறளையும் எக்ஸ்ட்ராவாக  மனப்பாடம் செய்ய வைத்து அவளை interviewக்கு தயார் செய்தோம்.

ஆனால் முதல் ரவுண்டு interview விலேயே நிவி clean  bold  ஆகிவிட்டாள் (ஆகிவிட்டோம்).  நீங்கள் உங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாள் போட்டோ ஆல்பத்தை எடுத்து பாருங்கள்.  பெரும்பாலும் குழந்தையைத் தவிர அனைவரும் மெழுகுவர்த்தியை ஊதிக் கொண்டிருப்பார்கள்.  அதே போல் கேக்கை குழந்தைக்கு ஊட்டும் போது அது வாயை இறுக்கமாக மூடிக்  கொண்டிருக்கும்.  ஆனால் சுற்றியுள்ள அனைவரும் வாயை "ஆவேன்று" திறந்து கொண்டிருப்பார்கள்.

அப்போது நாங்களும் அந்த நிலையில்தான் இருந்தோம்.  திருக்குறளை நானும் என் மனைவியும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் நிவி வாயைத் திறக்கவேயில்லை.

"Child not able to speak" என்ற முத்திரையுடன் எங்களை தலைமை ஆசிரியர் அறைக்கு அனுப்பி விட்டார்கள்.

அன்றுதான் "counseling" என்றால் என்ன என்று நிவி எனக்கு முதன் முதலாக சொல்லிக் கொடுத்தாள்.  தலைமை ஆசிரியர் அறைக்கு செல்லும் முன் அவளை தனியே அழைத்துச் சென்று ஒரு ஐந்து நிமிடம் அவளிடம் திருக்குறள் ஒழுங்காகச்  சொன்னால் என்ன கிடைக்கும் என்று ஆசை காட்டியும் ஒழுங்காகச் சொல்லவில்லை என்றால் என்ன நடக்கும் என்று பயமுறுத்தியும் (ஆனால் உண்மையில் பயந்திருந்தது நாங்கள்தான்) அவளை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்றோம்.

உள்ளே சென்றதும்  தலைமை ஆசிரியர் Radha மேடம் ரிபோர்ட்டை பார்த்துவிட்டு "என்னம்மா பேச மாட்டியா" என்று பரிவாக கேட்க, நாங்கள் பாவமாக பார்க்க, என்ன நினைத்தாளோ  என் மகள் - அருள் வாக்கு வந்தது போல் கட கடவென்று ஆறு திருக்குறளையும் ஒப்பித்து விட்டாள்.

தலைமை ஆசிரியர் ஆச்சரியமாக அவளைப் பார்த்து உன்னையா பேச மாட்டாய்  என்று சொன்னார்கள் என்று சொல்லி உடனே "Child eligible for Admission" என்று எழுதி எங்களை அனுப்பி வைத்தார்கள்.  அன்று முழுவதும் கடவுளுக்கு நன்றி சொன்னோம். 

இப்போதும் அதே கடவுளுக்கு நன்றி கூறிக்கொண்டேயிருக்கிறோம். "இறைவா நன்றி."

   

 

 


Thursday, May 15, 2014

தேர்வு முடிவுகளும் தேர்தல் முடிவுகளும்


எல்லா சமயங்களிலும் தேர்வுக் காலமும் தேர்தல் காலமும் ஒன்றாக அமைவது இல்லை.  தேர்வு முடிவுகள் (CBSE தவிர) வந்து விட்டது. தேர்தல் முடிவுகள் on the way.  தூங்கி எழுந்தால் தெரிந்து விடும்.

எந்த விசயத்தில் அரசியல்வாதிகளை மாணவர்கள்  follow  பண்ண வேண்டுமோ இல்லையோ, தேர்தல் முடிவுகளை அவர்கள் எதிர்கொள்ளும் விசயத்தில்  கண்டிப்பாக அரசியல்வாதிகளை  மாணவர்கள் பின்பற்ற வேண்டும்..

தேர்தல் நாள் வரை நிச்சயம் நம்மால் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைப்பார்கள்.  தேர்தல் முடிவுக்கு முதல் நாள் வரை  கண்டிப்பாக வெற்றி எங்களுக்கே என்று  நம்பிக்கையுடன் பேசி வருவார்கள்.

ஆனால் தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும் அதற்காக பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அதற்கு ஒரு காரணத்தினை சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

தேர்தல் தோல்விக்காக தீக்குளித்த தொண்டர்கள் உண்டு.  ஆனால் தீக்குளித்த எந்த தலைவரையாவது நாம் கண்டதுண்டா ?

ஆனால் சில மாணவர்கள் தேர்வில் தவறிவிட்டாலோ அல்லது மதிப்பெண் குறைந்துவிட்டாலோ வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.

தேர்தல் தோல்விகளால் தவறான முடிவுகளை எடுத்து இருந்தால் இன்று பல தலைவர்கள் நம்மிடையே இருக்க மாட்டார்கள் (நல்லாத்தான் இருந்திருக்கும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது !!!).

தேர்தலாவது ஐந்து வருடத்திற்கு ஒருமுறைதான் வருகிறது.   ஆனால் தேர்வோ ஒவ்வொரு வருடமும் (அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை) வருகிறது.

ஒரு தேர்வின் முடிவை வைத்து வாழ்கையை முடிவு செய்ய வேண்டாம். குறைவான மதிப்பெண்ணால்  நாம் எதிர்பார்த்த course  அல்லது college கிடைக்காமல் போகலாம்.  ஆனால் வாழ்க்கை மிகப் பெரியது.   சாதனையாளர்கள் பலரும் மதிபெண்ணில் கோட்டை விட்டவர்கள்தான்.

அதனால் மாணவர்கள் தேர்வு விசயத்தில் அரசியல்வாதிகளின் உழைப்பையும் நம்பிக்கையையும் பிறகு எந்தவிதமான முடிவையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கையும் கடைப்பிடித்தால் வாழ்கையில் வெற்றி பெறுவது உறுதி.







Thursday, May 8, 2014

Selamat Datang


நானும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சென்று வந்தேன் என்று எப்படி ஆரம்பிப்பது.  அதனால்தான் Welcome என்பதை "Selamat  Datang" என்று மலாய் மொழியில் தலைப்பு கொடுத்தேன்.

பணி நிமித்தமாக சென்றதால் ஊரைச் சுற்றி பார்க்க முடியவில்லை. ஆனாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் flavour-ஐ அறிந்து கொண்டு வந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

நான் மும்பை, டெல்லி செல்வது போல் சில நாட்கள் மட்டும் சென்றதால் எனக்கு வெளிநாடு செல்லும் உணர்வு   தோன்றவில்லை.  ஆனால் விமான நிலையத்தில் மனைவி குழந்தைகள் பெற்றோர் மற்றும் பல சொந்தங்களையும் விட்டு விட்டு திரும்பி வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியாமல் செல்லும் பலரின் கண்களின் ஈரம் மனதை கொஞ்சம் பிசைந்தது.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று சொன்ன தமிழனும் "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்று சொன்ன தமிழனும் வறுமைக்கு பயந்து மட்டும் வெளிநாடு சென்று இருப்பார்கள்  என்று தோன்றவில்லை. தன்னுடைய வளமையைப் பெருக்கிக்  கொள்ளத்தான் பெரும்பாலும் சென்றிருக்க வேண்டும்.

நம்முடைய  தமிழ்ச்  சமூகம்  உலகில் பெரும்பாலான நாடுகளில் வேருன்றி இருப்பது மகிழ்ச்சியான விசயமாக இருந்தாலும், பெரும்பாலும் மற்றவர்களுக்கு வேலை செய்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது.  நாம் மற்றவர்களிடம் வேலை தேடாமல் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் சமூகமாக மாறினால் நம்முடைய வளமை இன்னும் அதிகமாக பெருகும்.

ஆனால்  நம்ம ஆட்கள் எங்க போனாலும் நம்ம brand ஐ குத்தி விடுகிறார்கள். பொதுவாக எந்த நாட்டுக்கு சென்றாலும் நம்ம ஊர் முருகனுக்கோ, அம்மனக்கோ அல்லது பெருமாளுக்கோ கோவில் கட்டி விடுவார்கள்.   இது நல்ல விசயம்தான் (அல்லது தவறான விஷயம் அல்ல).  ஆனால் இப்போது சிங்கப்பூரில் "டாஸ்மாக்" கையும் ஆரம்பித்துவிட்டார்கள்.  இதுதான் கொஞ்சம் நெருடலாக இருந்தது.



இருந்தாலும் நம்ம ஊரை விட வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள்  தமிழை அதிகம் வளர்க்கிறார்களோ என்று தோன்றுகிறது.  இருக்கும்போது அதன் அருமை தெரியாது என்பதை போல.

சிங்கப்பூரில் தற்போது வசிக்கும் திரு மா. அன்பழகன் அவர்கள் சீரிய முயற்சியால் தமிழ் அன்பர்கள் பலர் கூடி தமிழை வளர்க்க பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.  நான் சென்ற நாளும் அப்படி ஒரு விழா நடந்து கொண்டு இருந்தது.  அதில் நான் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


சிங்கப்பூர் மலேசியாவைப் பற்றி நல்லதாக நாலு விசயங்களைச் சொன்னால் "நீயும் ஆரம்பிச்சிட்டியா வெளிநாட்டு புராணம்" என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுந்துவிடும்.

ஆனால்  நான் சொல்ல நினைக்கும் செய்திகளை  பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதி கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் குரலில் நம்ம சூப்பர் ஸ்டார் ஏற்கனவே பாடிவிட்டார்.  ஜஸ்ட் rewind செய்து பாருங்கள். இதோ உங்களுக்காக அந்தப் பாடல்.

அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேனே

புதுமையிலே மயங்குகிறேன் 

பார்க்கப் பார்க்க ஆனந்தம் பறவை போல உல்லாசம் 

வேலை இன்றி யாருமில்லை எங்கும் சந்தோஷம் 

வெறும்பேச்சு வெட்டிக்கூட்டம் ஏதுமில்லை இந்த ஊரில் 

கள்ளம் கபடம் இன்றி கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன் 

வாழும் சிங்கப்பூர் 

சிட்டுப்போல பிள்ளைகள் தேனில் ஆடும் முல்லைகள் 

துள்ளித் துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம் 

தினம் தோறும் திருநாளே சுகம் கோடி மனம் போலே 

சீனர் தமிழர் மலேய மக்கள் உறவினர் போல 

அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர் 


மஞ்சள் மேனிப்பாவைகள் தங்கம் மின்னும் அங்கங்கள் 

காவியத்தில் வார்த்தை இல்லை உன்னைப் பாராட்ட 

நடைபார்த்து மயிலாடும் மொழிகேட்டு கிளி பேசும் 

கண்ணில் தவழும் புன்னகை கண்டேன் 

சொர்க்கம்போல இன்பமும் பெருமையும் 


வாழும் சிங்கப்பூர்.


Terima Kasih (நன்றி)