Friday, November 28, 2014

வீடு திரும்பும் மகளின் பாதை


தினந்தோறும் கொலை> கொள்ளை> விபத்துச் செய்திகளை படித்தும் கேட்டும் பழகிப் போன நமக்கு பள்ளி> கல்லூரி> அலுவலகம் சென்று வீடு திரும்பும் நம் அன்புக்குரியவர்கள் கொஞ்சம் தாமதமாக வந்தாலும்> தினசரி படித்து> கேட்ட அல்லது பார்த்த அவநம்பிக்கைச்  செய்திகள் நம் மனதில் Flash அடித்து மனதைப் பதைபதைக்கச் செய்யும். அதிலும் பெண்களைப் பெற்றவர்களின் பயம் அதிகம் மட்டுமல்ல. ஒருவகையில் நியாயமானதும்கூட.  

ஆனால் வீடு திரும்பும் மகளின் பாதை என்ற கவிதையை ஆனந்த விகடன் இதழில் (5/11/14) படித்த போது. நம் மனதில் தோன்றும் அவநம்பிக்கைகளை அகற்றி நம்பிக்கையை விதைகின்றன.

இந்தக் கவிதையில் கவிஞர் விடுமுறைக்கு வீடு திரும்பும் தன் மகளின் வருகையை ஆவலோடு எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல், தன் மகளின் நல்ல எண்ணங்களும் அவள் தாயின் நம்பிக்கையும் சேர்ந்து அவள் பயணத்தைப் பாதுகாக்கும் கவசமாகிறது என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

இதோ அந்தக் கவிதை .....

கொரியன் தொடர்களைப் பார்க்கும் உன் தோழிகளிடையே
பாவ்லோ  கொயலோவை (Paula Coelho) பின்தொடரும் அருமை மகளே

நீ விடுமுறைக்கு வீடு திரும்பும் பாதை
நம்மிருவரின் புனைவுகளாலான திருப்பங்களை உடையது

எப்போதும் நீ எழுந்து இடம் தரும் மூதாட்டிகளின்
ஆசிர்வாதத்தால்தான் உன் உள்ளங்கைகளில்
மழை பொழிந்துகொண்டே இருக்கிறது

ஜன்னலோரம் வெள்ளரிப்பிஞ்சு விற்பவனை
சார் என்று அழைத்ததற்காக கடிந்து  கொண்ட
தோழியையும் நேசிப்பாயல்லவா 

இவ்விளகிய மனமே உன் வாகனத்தின் பாதுகாப்பு கவசம்

உன் செவிகளுக்குள் பாடிப் பாடி
சிறகுகளை வளரச் செய்திருக்கிறாள் அல்லவா காகா

அந்நம்பிக்கையில்தான் 
ஆசிட் வீசும் கதைகள் நிறைந்த பாதையில் 
நீ வந்துகொண்டிருக்கும் போதிலும் 
பதட்டமின்றி உனக்கான இரவு உணவைத் 
தயாரித்துக் கொண்டிருகிறாள் உன் தாய் 

அவளுடைய கனிந்த எண்ணங்கள் 
உன்னைச் சுற்றியும் ஓர் அகழியை உருவாக்குகிறது 

உன்னோடு உண்ணவும் படுத்து உறங்குவுமான விழைவில் இருக்கும்
கறுப்பு நாய்க் குட்டி பெலிசியாவின் கனவுகளை
எல்லா தேவதைகளும் அறிந்துதான் வைத்திருக்கின்றனர் 

காமுகர்களும் பெண்களை பாலியல் தொழிலுக்கு பழக்குபவர்களும் 
உறுப்புகளை திருடுபவர்களும் நிறைந்த சந்தைகள் ஊடாக 
விரைந்துகொண்டிருக்கிறதுன் வாகனம் 

தைரியமாய் பயணித்துக் கொண்டிருக்கும் நீ அறிந்ததுதானே 
மகள்கள் வீடு திரும்பும் வாகனத்தை 
கடவுள்தான் இயக்குகிறார் என்பது !

அவலங்கள் நிறைந்தது போன்று தோன்றும் வாழ்கை உண்மையில் மிகவும் அழகானது என்பதையும், வாழ்க்கை குறித்து வீண் அச்சங்கள் கொள்ளத் தேவையில்லை என்பதையும் மேலே உள்ள கவிதை வரிகள் நிரூபிக்கின்றன.

கவிதையை எழுதிய கவிஞர் கரிகாலனுக்கு நமது வாழ்த்துக்கள்.

Wednesday, November 12, 2014

நச்சென்று நாலு வார்த்தை


சில சமயங்களில் நீண்ட வாக்கியங்களும், சொற்க்குவியல்களும் விளக்க முடியாத விசயங்களை ஒரு சில வார்த்தைகள் விளக்கி விடும்.  Zen கவிதைகளின் சிறப்பே ஒரு சில வார்த்தைகள் நம் மனதில் பல எண்ணங்களை (நல்ல எண்ணங்கள்தான்) கிளறி விடும்.

ஆனால் இவை Zen கவிதைகளும் இல்லை அல்லது என் கவிதைகளும் இல்லை.   என் மனதில் பதிந்த வரிகளில் சில.   உங்களுக்கும் இதைப் படித்தால் இது போல சில வரிகள் நினைவில் தோன்றலாம்.


இந்திரா காந்தி சுடப் பட்ட அன்று யாரோ எழுதிய கவிதை.

"இன்றுதான் இந்திரா
காந்தியானார்"

இளமைக் கால கவிஞர்  வைரமுத்து சுதந்திரம் பற்றி  எழுதிய கவிதை.

"அவன் பட்டு வேட்டி பற்றிய
கனாவில்  இருந்த போது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப் பட்டது"

கம்பனை copy அடித்து யாரோ ஒரு இளைஞனின் (ஒரு அனுமானம்தான்) நையாண்டி புதுக் கவிதை :

"அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
பின்னாலிருந்து அவள்
அண்ணனும் நோக்கினான்"

அம்மா (தமிழ் நாட்டு அம்மா) சிறையில் இருந்த போது :

"அம்மா வேணும் என்று
குழந்தைகள் அழுகிறார்கள்
சும்மாவேனும் என்று
அமைச்சர்கள் அழுகிறார்கள்"

பாரதியின் சில வரிகள் :

"அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"

 "நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில்
எறிவதுண்டோ"

திருமூலரின் சில வரிகள் :

"மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்கத்
தேவை இல்லை"

(என் வரிகள் - மனமது செம்மையாக மந்திரம் செபிக்க வேண்டும்)

உங்களுக்கும் இது போன்ற நச்சென்ற நாலு வார்த்தைகள் நினைவுக்கு வந்தால் எனக்கு சொல்லுங்கள்.  குறித்துக் கொள்கிறேன்.