Sunday, December 21, 2014

ஆழி மழைக் கண்ணா


"ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்து
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்சங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்"

மேலே சொன்ன ஆண்டாள் திருப்பாவையின் பொருள் :

"மேகத்திற்கு அதிபதியான கண்ணா, கடல் நீர் முழுவதையும் எடுத்துக் கொண்டு மேலே செல். கண்ணனின் நிறம் போல் கருத்து, பத்மநாபன் கையில் உள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல மின்னலை வீசு.  வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலி எழுப்பி அவனது   வில்லில் இருந்து வெளிப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக.  மார்கழி நீராடுலக்காக எல்லா நீர் நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சி அடையச் செய்வாயாக".

கடல் நீர் ஆவியாகி பிறகு மேகமாகி மழை பொழிகிறது என்று இன்றைய அறிவியல் சொல்வதை போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகிறாள் ஆண்டாள்.  இப்படி பல விஷயங்களை நம்முடைய முன்னோர் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர்.  நாம்தான் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றோம்.

திருப்பாவையின் ஒவ்வொரு பாடலின் வரிகளும் positive vibration அளிப்பது என்பது என் கருத்து.  உதாரணத்திற்கு திருப்பாவையின் 3 வது பாசுரத்தில் வரும் சில வரிகள் "தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து",  "வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்" , "நீங்காத செல்வம்". இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.     

ஆண்டாளின் திருப்பாவையை நாம்தான் கல்யாணமாகாத கன்னிப் பெண்கள் (அது என்ன கல்யாணமாகாத கன்னிப் பெண்கள் என்று கேட்காதீர்கள் - but  ஆனா, நடு  centre  என்ற வகையில் புரிந்து கொள்ளவும்) மட்டும் நல்ல கணவன் கிடைப்பதற்காக படிக்க வேண்டும் என்று சுருக்கி விட்டோம்.

என்னைப் பொறுத்த வரை திருப்பாவையை ஆண்  பெண் என்று எல்லோரும் படிக்க வேண்டும்.

கல்யாணம் ஆகாத பெண்கள் (ஆண்களும்தான்) தினமும் திருப்பாவை பாசுரம் படித்தால் நல்ல வாழ்க்கைத் துணையும், நிறைந்த செல்வமும் கிடைக்கும் என்பது நம் பெரியவர்களின் நம்பிக்கை.

"நாம் கூட திருப்பாவை பாசுரங்கள் படித்திருந்தால் நமக்குக் கூட .........." என்று மணமான (I mean கல்யாணமான) சிலபேர் நினைக்கக் கூடும். கவலையே படாதீர்கள்.  இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை.  இப்போதாவது ஒழுங்காகப் படித்தால், கொஞ்சம் ஏடாகூடமாக வாழ்க்கை (துணை) இருந்தால் கூட, தட்டி சரி செய்துவிடுவார் நம் ஆண்டாள்.  




Thursday, December 11, 2014

அருந்தவப்பன்றி


     "தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?"

என்று பாடிய மகாகவி பாரதியின்  132 வது பிறந்த நாள் இன்று.  11/12/1882-ம் ஆண்டு பிறந்து 39 ஆண்டுகளே இந்தப் புவியில் வாழ்ந்து 11/09/1921-ம் ஆண்டு மறைந்த மகாகவியின் பல கவிதைகள் அவனை ஞானக்கவிஞன் என்று பறை சாற்றும்.  அதற்கு மேல சொன்ன கவிதை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல.

1921-ம் ஆண்டே  இந்த உலகை விட்டு மறைந்தாலும், 1947-ம் ஆண்டு நாம்  பெற்ற  விடுதலையை "ஆடுவோமே பள்ளு  பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று" என்று தீர்க்க தரிசனமாகப் பாடியவன்.

சாதாரண மனிதர்களான நம்மோடு ஒப்பிடுகையில் பல மடங்கு உயர்வான வாழ்க்கை வாழ்ந்த பாரதி தன்னை ஒரு பன்றியோடு ஒப்பிட்டு சொல்லியிருக்கிறான் என்று நம்ப முடிகிறதா.  ஆனாலும் தன மேல் அவனுக்கு அவன் தகுதிக்குரிய உயர்வு மனப்பான்மையும் இருந்ததால்தான் தன்னை வெறும் பன்றி என்று குறிப்பிடாமல் "அருந்தவப்பன்றி" என்று குறிப்பிடுகிறான்.

இந்த  "அருந்தவப்பன்றி" குறித்த ஒரு கதை இருக்கிறது.  அருந்தவம் செய்த ஒரு முனிவன் ஒரு சாபத்தின் காரணமாக பன்றியாக மாறிவிடுகிறான். அப்படி  மாறுவதற்கு முன் தன்  மகனை அழைத்து அந்த முனிவன் சொல்வான்.  "மகனே நான் பன்றியாக மாறியதும் என்னை வெட்டிவிடு. அப்போதுதான் எனக்கு சாப விமோசனம் கிடைத்து நான் மீண்டும் முனிவனாக மாறுவேன்" என்று.  மகனும் சரி என்று சொல்வான்.

அதே போல் முனிவன் பன்றியாக மாறியதும் அவனை வெட்ட மகன் தயாராகும் சமயம், பன்றியாக மாறிய முனிவன் மகனிடம் "பன்றி வாழ்க்கை  நான் நினைத்தது போல் அவ்வளவு மோசமாக இல்லை.  நான் இன்னும் கொஞ்ச நாள் இந்த வாழ்க்கை வாழ்ந்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி காட்டுக்குள் சென்று விடுவான்.

சில மாதங்கள் கழித்து  மீண்டும் தன்  தந்தையைத்  தேடி காட்டுக்குள் வந்த மகன் தன்  தந்தை குடும்பம் குட்டியாக இருப்பதைப் பார்த்து திகைத்து நிற்பான்.  பன்றியான் முனிவன் தன மகனிடம் எனக்கு இந்த வாழ்க்கை பிடித்து விட்டது. நீ போய்  வா என்று சொல்லி விடுவான்.

அற்ப சந்தோஷங்கள்  எப்படி உயர்ந்த தவ வாழ்க்கை முனிவர்களையும் கீழ் நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது என்று வருந்தி திரும்புவான் மகன்.

"எமக்குத் தொழில் கவிதை" என்று சொல்லிய பாரதி சில வருடங்கள் வறுமையின் காரணமாக எட்டயபுரம் மன்னனிடம் வேலை செய்த காலத்தில் தனக்கு மிகவும் பிடித்த கவிதை தொழிலைச் செய்ய முடியாத நாட்களை பன்றியின் வாழ்க்கையோடு ஒப்பிடுகிறான்.

மகாகவி என்று நாம் கொண்டாடும் பாரதியே தன்னை "அருந்தவப்பன்றி" என்று சொல்லும்போது, "தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி" வாழும் நாம் ordinary  பன்றிகள் வகையில்கூட சேருவோமா என்று தெரியவில்லை.

பாரதி கிருஷ்ணகுமார் எழுதியுள்ள "அருந்தவப்பன்றி - சுப்பிரமணிய பாரதி"  என்ற நூலில்  மகாகவியைப் பற்றி நாம் இதுவரை அறியாத பல விஷயங்கள் தெரிய வருகிறது.

ஆனால் எனக்கு ஒரு வருத்தம்.  நாளை (டிசம்பர் 12) சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளை கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கொண்டாடிக் கொண்டிருக்கும் எல்லா சேனல்களும் மகாகவியைப் பற்றி ஒரு நிகழ்ச்சியைக் கூட நடத்தாதது ஏன் ? ஏதோ ஒரு சேனலில் மட்டும் பாரதி திரைப்படத்தைக் காட்டி தங்கள் கடமையை முடித்து விட்டார்கள்.  என்ன செய்வது ரஜினிக்கு இருக்கும் TRP Rating மகாகவிக்கு இல்லை.  அது சரி நாளை ரஜினியின் பிறந்த நாள் என்று தெரிந்திருக்கும்  நம்மில் எத்தனைப் பேருக்கு இன்று பாரதியின் பிறந்த நாள் என்று தெரியும்.

அதனால் என்ன பாரதி இன்னும் பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னும் உன்னுடைய பிறந்த நாளை தமிழ் கொண்டாடிக் கொண்டுதானிருக்கும். உன்னுடைய "புதிய ஆத்திச்சூடி" அன்றும் புதிதாகத்தான் இருக்கும்.

"புதிய ஆத்திச்சூடி"

1. அச்சம் தவிர்
2. ஆண்மை தவறேல்
3. இளைத்தல் இகழ்ச்சி
4. ஈகை திறன்
5. உடலினை உறுதிசெய்
6. ஊண் மிக விரும்பு
7. எண்ணுவது உயர்வு
8. ஏறுபோல் நட
9. ஐம்பொறி ஆட்சிகொள்
10. ஒற்றுமை வலிமையாம்
11. ஓய்தல் ஒழி
12. ஔடதம் குறை