Wednesday, July 27, 2016

வஞ்சம் இல்லாமல் லஞ்சம் வாங்கினால் .......


B.K. Bansal என்ற பெயர் company secretary வட்டத்தில் நல்ல பரிச்சயமான பெயர். இவர் Ministry  of Corporate  Affairs-ல் Regional  Director ஆக சென்னையில் இருந்தார். மனிதர் அதிகம் பேச மாட்டார்.  அவர் அலுவலகத்தில் இருந்து எந்த file நகர வேண்டும் என்றாலும் ஒரு சிறிய காகிதத்தில் ஒரு தொகையை குறிப்பிடுவார். அதற்க்கு OK என்றால் மேற்கொண்டு பேசலாம். காரியம் நடக்கும். சட்டபூர்வமாக செய்யும் காரியங்களுக்கே இப்படி என்றால் சட்டத்தை மீறி என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளலாம்.

இவர் சமீபத்தில் டெல்லிக்கு பதவி உயர்வு பெற்று சென்றார்.  சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி - Bansal ஒரு corporate நிறுவனத்திடம் இருந்து 9 லட்சம் லஞ்சம் பெற்ற போது CBI அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்ப பட்டார்.

அவருடைய வீட்டில் கோடிக்கணக்கான பணமும், சொத்து ஆவணங்களும்  60 க்கும் அதிகமான வங்கி கணக்குகளும் பறிமுதல் செய்யப் பட்டன.

அதைவிட அதிர்ச்சியான செய்தி. அவருடைய வீட்டில் CBI  raid நடத்தப் பட்ட மறுநாள் அவருடைய மனைவியும், 27 வயதான அவருடைய மகளும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர்.

இன்னும் 3 மாதத்தில் ஓய்வு பெற இருக்கும் நிலையில் அவருக்கு இப்படி ஒரு அவலம்.

இந்த செய்தியைப் படித்ததும் மகாகவி பாரதியின் "படிச்சவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான்" என்ற வார்த்தைகள்தான் என் மனதில் தோன்றியது.

"அரசன் அன்று கொல்வான் - தெய்வம் நின்று கொல்லும்" என்று சொல்வார்கள்.  இப்போதெல்லாம் தெய்வத்திற்கும் பொறுமை இல்லை போலும்.

பொருள் ஈட்டுவதில் தவறில்லை.  ஆனால் அதை எந்த வகையில் ஈட்டுகிறோம் எனபதில்தான் பலர் தவறி விடுகின்றனர்.  நல்ல வழியில் சேர்க்கும் பொருள் நமக்கு வரமாக அமைகிறது என்றால் தவறான வழியில் சேர்க்கும் பொருள் சாபமாக அமைந்து விடுகிறது.  

Bansal தவறான வழியில் சேர்த்த பொருட்களை எல்லாம் திருப்பிக் கொடுத்தாலும் இழந்த அவருடைய மனைவியையும், மகளையும் திரும்ப பெற முடியுமா ?

இன்று அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள்.  அவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியே வந்த போது அவர் கொண்டு வந்தது அவர் உபயோகப் படுத்திய சில துணிமணிகளும் மற்ற சில பொருட்களும்தான். அவருக்கு முன்னாள் இருந்த பிரதிபா பாட்டில் வெளியேறும்போது சில லாரிகளில் அவருடைய பொருட்களை அள்ளிச் சென்றாராம்.

தன்னுடைய குடும்பத்தினர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து போன செலவையே திருப்பிக் கொடுத்தவர் அப்துல் கலாம் அவர்கள்.  அதனால்தான் அவர் மறைந்து ஒரு ஆண்டு ஆகியும் இந்தியாவே இன்னும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறது.

கலாம் போன்றவர்களின் வாழ்க்கையை நாம் அடிக்கடி நினைவு கொள்வது வாழ்க்கையின் வெற்றி என்பது வீண் ஆடம்பரத்திலும் வெறும் பகட்டு வாழ்க்கையிலும் இல்லை.  எத்தனை பேரின் இதயங்களை நாம் தொட்டிருக்கிறோம்  என்பதில்  உள்ளது என்று உணர்வதற்குத் தான்.

அப்துல் கலாம் அவரகளின் "Transcendence" என்ற புத்தகத்தில் இருந்து சில சிந்தனைகள்.

The senses are not always reliable. Infinite intelligence does not err. quiet time spent in reflection; a life of rigour and austerity; simple service done at any place to help the poor, the deprived, the disadvantaged and the disabled - and aiding animals and the environment - are methods by which infinite intelligence may be most readily contacted.

In the good of others lies our own 
In the progress of others lies our own 
In the joy of others lies our own.

Sunday, July 3, 2016

நம்மைச் சுற்றியும் நாம்தான்

"ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி" என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வெளிவரும் தொடரில் கட்டுரை ஆசிரியர் திரு. ம. செந்தமிழன் பின்வரும் அகநானுற்றுப் பாடல் காட்சி ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

காதலியைக் காம உணர்வுடன் தழுவுகிறான் காதலன்.  அவனைத் தடுத்து விலக்கும் அந்த இளம்பெண் கூறுகிறாள், "தலைவா, இதோ இந்தப் புன்னைமரம் என் சகோதரி. அவளுக்கு எதிரில் என்னால் உன்னைத் தழுவ இயலாது. ஆகவே வேறு இடம் செல்வோம்".

சமீபத்தில் கண்ட ஒரு காட்சி.  ஒரு இளம்பெண்ணும் ஒரு வாலிபனும் மக்கள் நடமாட்டம் அதிகம் ஒரு தெருவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். தன்னைச் சுற்றி மக்கள் கவனிக்கிறார்கள் என்ற எந்த உணர்வும் இல்லாமல் அந்தப் பையன் அந்தப் பெண்ணின் கையை பிடித்து இழுப்பதும் அந்தப் பெண் அதை விலக்குவதுமாக இருந்தார்கள்.  அதைப் பார்த்த ஒரு பெரியவர் அவர்களிடம் ஏதோ கேட்கப் போனார்.  அதற்கு அந்தப் பெண் கோபத்தில் சொன்ன பதில் "This is our personal matter. Mind your business. 

இன்னொரு காட்சி.  ஒரு ஆட்டோவில் ஒரு காதல் ஜோடி வண்டியை ஓட்டும் ஓட்டுனரும் எல்லா உணர்வுகளும் உள்ள சராசரியான மனிதன் என்ற எந்த உணர்வும் இல்லாமல் காதல் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

மரங்களைக் கூட சக மனிதர்களாக கருதிய சமூகத்தில் வந்தவர்கள் நாம். அதே நாம்தான் இப்போது சக மனிதர்களை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் நமக்கென்று ஒரு தனியான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முன்பெல்லாம் நமக்கு தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால் என்ற அச்ச உணர்வு காதலர்களுக்கு இருக்கும்.  ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் எல்லா ஊர்களில் இருந்தும் படிப்பதற்கும் வேலைக்கும் வருவதால் அந்த அச்ச உணர்வெல்லாம் இப்போது குறைந்து விட்டது.

காதலையும் காமத்தையும் சுமந்து கொண்டுதான் இளமையைக் கடக்க வேண்டும்.  ஆனால் அதில் ஒரு sensitivity இல்லாவிட்டால் அது சில சமயங்களில் நம் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடக் கூடும்.

முன்பெல்லாம் திருமணம் நிச்சயம் செய்யும் வரை பெண்ணின் புகைப் படத்தைக் கூட கொடுக்க மாட்டார்கள்.  அதை அவ்வளவு சென்சிட்டிவிட்டியான விஷயமாக நினைத்தார்கள்.

இன்று விதவிதமான போட்டோக்களை தினந்தோறும் whatsapp லும் facebook லும் upload செய்கிறோம்.  அது யார் யாரிடம் போய் சேருகிறது என்று கூட நமக்குத் தெரிவதில்லை.  Photoshop மூலம் நம் படத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும்.  இதில் பெண்கள்தான் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.  ஏனென்றால் பாதிக்கப் படுவது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களை நாம் மிகவும் கவனத்துடன் கையாளவேண்டும். இல்லையென்றால் ஸ்வாதிகளையும், வினுப் பிரியாக்களையும் நாம் அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஸ்வாதியின் குடும்பத்துக்காக அனுதாபப்படும் அதே நேரத்தில்,  ராம் குமாரின் குடும்பத்தை நினைத்தாலும் அதிக வேதனையாக இருக்கிறது.

வறுமையின் விளிம்பில் வாழும் ஒரு சாதாரண குடும்பம்.  தன் மகன் நன்றாக படித்து குடும்பத்தினை மேல் நிலைக்கு கொண்டு வருவான் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு இடி அவர்கள் வாழ்க்கையில் விழுந்திருக்கிறது. கொலைகாரன் குடும்பம் என்ற பழி வேறு.   அவர்கள் குடும்பத்தைப் பற்றியும் ராம் குமாரைப் பற்றியும் அவன் ஊரில் நல்லவிதமாகவே கூறுகிறார்கள்.

ஸ்வாதி நம்மில் ஒருவர் என்றால் ராம் குமாரும் நம்மில் ஒருவர்தான்.  ஆண் பெண் உறவு மிகவும் சிக்கலாக உள்ள காலக் கட்டம் இது.   ஆண் பெண் உறவை matured ஆக handle செய்ய நாமும் கற்றுக் கொண்டு நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.  இதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மிகவும் அதிகம்.

ராம்குமாரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை தருவதற்கு சட்டம் இருக்கிறது.  ஆனால் ராம்குமார்களை உருவாக்கும் இந்த சமூகத்தின் குற்றத்துக்கு யார் தண்டனை வழங்குவது ?