Sunday, January 22, 2017

போதும் இந்தப் போராட்டம் (இப்போதைக்கு)


ஆங்கிலத்தில் Timing என்று சொல்வார்கள்.  அதாவது எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கும் அல்லது முடிப்பதற்கும் சரியான நேரம் என்று ஒன்று உண்டு.  இதற்கும் நாம் நல்லநேரம் பார்ப்பதற்கும் சம்மந்தமில்லை.  சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படும் செயல் எப்படி வெற்றிகரமாக முடியுமோ அப்படித்தான் ஒரு செயலை சரியான நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவதும்.

ஜல்லிக்கட்டு விஷயமும் அப்படித்தான் எனக்குப் படுகிறது.  இந்தப் போராட்டம் ஆரம்பித்ததும் அது மிகப் பெரிய தன்னெழுச்சியான போராட்டமுமாக மாறியதும் வரலாறு.  தமிழா் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.  ஆனால் அந்தப் போராட்டத்தினை முடிக்க இப்போது அந்தப் போராட்டத்தினை முன்னெடுத்தவா்கள் தாமதப்படுத்தும் ஒவ்வொரு கணமும் அந்தப் போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்வது மட்டுமல்லாமல், விஷமிகள் அல்லது புல்லுருவிகள் இந்த மக்கள் சக்தியை தங்களுடைய சுயநலத்துக்காக மாற்றக் கூடிய அபாயம் பெருமளவில் இருக்கிறது.  அதற்கு நம் இளைஞா்கள் பகடைக் காய்களாகிவிடக் கூடாது.

என்னைப் பொறுத்த வரையில் தமிழக அரசின் இந்த அவசரச் சட்டம் இப்போது நிரந்தரத் தீர்வு இல்லையென்றாலும் கண்டிப்பாக நிரந்தரத் தீா்வுக்கான முயற்சியாக கண்டிப்பாக அமையும்.  இந்த சட்டம் (Ordinance) ஆறுமாத காலத்திற்கு மட்டும்தான் செல்லுபடியாகும் என்றாலும் அதற்குள் கண்டிப்பாக அரசாங்கம் இதை நிரந்தரமாக்க எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.  இத்தகைய போராட்டத்தினை பார்த்த பிறகு எந்த அரசாங்கமும் இந்தச் சட்டத்தினை நிரந்தரமாக்கத்தான் கண்டிப்பாக முயற்சி செய்யும்.  அப்படி செய்யாத பட்சத்தில் மீண்டும் மக்கள் தங்களுடைய சக்தியை இதற்கு மேலாகக் காட்டலாம்.

ஆனால் இப்போது போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர தாமதிக்கும் நேரத்தில் இந்தப் போராட்டம் திசை மாறிப் போவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் மட்டுமல்ல, அதற்கான விஷயங்களும் நடக்க ஆரம்பித்திருக்கின்றன.

இப்போது Social Media வில் சில செய்திகள் வருகின்றன.  அதாவது நாம் தமிழா் என்பது உண்மையாக இருந்தால் குடியரசு தினத்தினை கொண்டாடக் கூடாது.  நம் தேசியக் கொடியை அன்று அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டும் என்பது போன்ற செய்திகள்தான் அவை.

நாம் தமிழா் என்று பெருமைப்படும் ஒரு விஷயத்தினை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்யும் அரசியல் வியாபாரிகளுக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ இரையாகி விடக்கூடாது.
நாம் தமிழா் என்பதற்கு பெருமைப்படும் அதே நேரத்தில் நாம் இந்தியர்  என்பதற்காகவும் பெருமைப்படும் மக்கள்தான் இங்கு அதிகம்.  அதனால் நாம் மிகவும் கவனமாக இருந்து இத்தகைய களைகளை முதலிலேயெ பிடுங்கி எறிந்துவிட வேண்டும்.


ஏனென்றால் நம் வெற்றியை வாழ்த்தும் வாய்கள் இங்கே குறைவுதான்.  ஆனால் நாம் தவறுதலாக தடுக்கி விழுந்தாலும் கை கொட்டி சிரிக்க இங்கே ஆயிரக்கணக்கான கைகள் தயாராக இருக்கின்றன.  ஏனென்றால் தமிழரின் இந்த மாபெரும் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாமல் எத்தனையோ வயிறுகள் எரிந்துகொண்டு இருக்கின்றன. நாம்தான் கவனமுடன் இருக்க வேண்டும்.


Friday, January 20, 2017

வாடி வாசலில் இனி ஆடிக் கொண்டாட்டம்


At last நம் இளைஞா்கள் சாதித்து காட்டிவிட்டார்கள்.  வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட்டார்கள்.  இனி வெற்றிக் கோப்பையை வாங்க வேண்டிய சம்பிரதாயம் மட்டும்தான் பாக்கி. அதுவும் அநேகமாக இந்த ஞாயிற்றுக் கிழமையே கூட இருக்கலாம்.

சென்னைவாசியான என்னைப் போன்றவா்களுக்கும் இன்னும் பலருக்கும் இந்த வருடம் வரை ஜல்லிக்கட்டைப் பற்றி பெரிதாக ஒன்றும் நினைக்கக் கூடிய அளவில் இருந்தது இல்லை. கிராமப் புறங்களில் பொங்கல் சமயத்தில் நடத்தப்படும் ஒரு விளையாட்டு என்ற அளவில் மட்டுமே அது இருந்தது.  ஆனால் இந்த விளையாட்டுக்கு பின்னனியில் இருக்கும் நுணுக்கமான அரசியலைப் பார்க்கும்போதுதான் இந்த இளைஞா்களின் தன்னெழுச்சியான போராட்டத்தின் அழுத்தமான காரணம் புரிந்தது.

இப்போது கூட நிறையப் போ் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமாக மட்டும் இதை நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  அப்படி இருந்தால் ஜல்லிக்கட்டுப் பற்றி அதிகம் தெரியாத அல்லது அந்த விளையாட்டு குறித்த அதிக அக்கறை இல்லாத பல லட்சக்கணக்கான மக்கள் இதை தங்கள் போராட்டமாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.   இது உண்மையில், நாம் நம்பும் நம் தலைவா்கள் நம்மை வார்த்தை ஜாலம் செய்து ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை ஏமாற்றுகிறார்களே என்ற கோபத்தின் வெளிப்பாடுதான்.  இனி இவா்களை நம்பியது போதும்.  நாமே நமக்கானதை போராடிப் பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டார்கள்.  அதில் முதல் வெற்றியும் பெற்று விட்டார்கள். 

அரசியல், மதம், இனம் என்று பல அணிகளாக இருந்த தமிழ் மக்கள் இன்று Team தமிழ்நாடு என்ற ஒரே அணியாக மாறி சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.  இந்த விழிப்புணர்வு தொடா்ந்தால் வருங்காலத்தில் இந்தியா கண்டிப்பாக வல்லரசாகும். 

சென்னை மெரினாவில் நடக்கும் இந்தப் போராட்டத்தின் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.  அதில் தமிழனாகவும், சென்னைவாசியாகவும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

அந்த மகிழ்ச்சியில் ஜல்லிக்கட்டு குறித்த சில Tit Bits.

நாடா ? மாடா ? என்ன தேவை உங்களுக்கு.  எங்களுக்குத் தேவை நாட்டு மாடு.

இன்று ஜல்லிக்கட்டை நடத்தாவிட்டால் நாளை ”ஜல்லிக்கட்டு இதிகாசம்” என்ற புத்தகத்தை வருங்கால வைரமுத்து எவராவது எழுத வேண்டியிருக்கும்.

மாடு முட்டி செத்த மனிதா் உண்டு, மனிதர் முட்டி செத்த மாடு உண்டா ?

இது காளைக்கான போராட்டம் மட்டுமல்ல, நமது நாளைக்கான போராட்டமும் கூட.

அரசியல்வாதிகளே நீங்கள் குனிந்து குனிந்து எங்களையும் உலக அரங்கில் குனிய வைத்தீர்கள். காளையரே, கன்னியரே  நீங்கள் நெஞ்சம் நிமிர்த்தி எங்களையும் நிமிர வைத்து விட்டீர்கள்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் வழித்தோன்றல்கள் நாங்கள். மிருகவதை பற்றி எங்களுக்கு பாடம் எடுக்காதீா்கள்.

வாடி வாசலில் இனி ஆடிக் கொண்டாட்டம்.

Wednesday, January 18, 2017

தும்பை விட்டு விட்டு ......


சட்டக் கல்லூரியில் படிக்கும் எனது மகள் நிவாஷினி இன்று காலை கல்லூரி சென்றவுடன் போன் செய்தாள் .  "அப்பா இன்று எங்கள் college strike. எல்லோரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக "மெரினா" செல்கிறார்கள். நானும் செல்லட்டுமா?" என்று கேட்டாள்.  ஒரு அப்பாவாக ஒரு சின்ன தயக்கம் எனக்குத் தோன்றியது.  அங்கே சென்று ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்று.  

உடனே இன்னொரு எண்ணமும் தோன்றியது.  அங்கே போராடும் மாணவ மாணவிகள் எல்லோருக்கும் பெற்றோர்கள் இருப்பார்களே.  அந்த மாணவர்கள் எல்லாம் தங்களுடைய சுயநலத்துக்காகவா போராடுகிறார்கள். இப்படி பொது நலத்துக்காக போராடும்போது, "நீ மட்டும் போகாதே. பத்திரமாக வீடு வந்து விடு" என்று சொல்வது எவ்வளவு சுயநலமாக இருக்கும் என்று தோன்றியது. "பத்திரமாக போய் விட்டு வா" வாழ்த்திச் சொல்லி அனுப்பினேன். எனது மனைவியும் என் மனநிலையில்தான் இருந்தார்.

எனக்கு நினைவு தெரிந்து தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக ஒரு போராட்டத்தில் இறங்கி இருப்பது இப்போதுதான்.  ஒரு பலமான அரசியல் தலைமை இல்லை என்பதும் ஒரு காரணம் என்றாலும்,  நம்முடைய இளைஞர்கள் தன்னைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களில் மிகுந்த கோபம் கொண்டு அதை எதிர்ப்பதற்கு ஒரு காரணியாக ஜல்லிக்கட்டை கையில் எடுத்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.  அது உண்மையாக இருந்தால் ஜல்லிக்கட்டு is just the beginning.

தற்போதைய நம்முடைய இளைஞர்கள் பொதுவாக நாட்டு நலனைப் பற்றி அவ்வளவு கவலைப் படாமல்  தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார்கள் என்ற  பொதுவான குற்றச்ச்சாட்டை இந்தப் போராட்டம் தகர்த்து ஏறிந்து இருக்கிறது.

முன்பெல்லாம் corporate media சொல்வதுதான் நியூஸ்.  இப்போது social media எல்லா விஷயங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக பிடுங்கி விடுகிறார்கள். மக்களை முட்டாளாக்க நினைக்கும் அரசியல்வாதிகளை மக்கள் முட்டாளாக்கி விடுவார்கள்.  அதனால்தான் போஸ்டர்  அடித்து அது காய்வதற்குள் சாணி அடித்து விடுகிறார்கள்.  

இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம் இந்த இரண்டு மூன்று நாட்களாக நடக்கும் இந்தப் போராட்டம் மிக மிக பொறுமையுடனும் பொறுப்பாகவும் நடந்து கொண்டிருக்கிறது.  இத்தனை லட்சம் இளைஞர்கள் திரண்டிருக்கும் இந்தப் போராட்டத்திற்கு எவ்வளவு போலீஸ் போட்டாலும் பத்தாது.

இந்தப் போராட்டத்தை சீக்கிரம்  நல்ல முறையில் முடிவுக்கு கொண்டு வருவது அரசாங்கத்தின் கையில் இருக்கிறது.  ஏனென்றால் எதற்கும் ஒரு boiling point இருக்கிறது.  நிலைமை கைமீறாமல் தடுப்பது அரசாங்கத்தின் முதல் கடமை.  ஜல்லிக்கட்டு போராட்டம் என்பதால் இந்த உதாரணம் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறன்.  "தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க வேண்டாம்".

இளைஞர்களின் அடுத்தப் போராட்டம் டாஸ்மாக்கை மூடுவதற்கும், மணல் கொள்ளைகளை தடுத்து நீர்நிலைகளை காப்பதற்குமாக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.  வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களாய் நம் இயற்கை அன்னை வெள்ளமாய் 2015 ல் மழை பொழிந்தும் இப்போது அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்கிறோம்.  இதை வெட்கக் கேடு என்று சொல்வதா அல்லது சாபக் கேடு என்று சொல்வதா ?  இன்னொரு நல்ல மழை வந்தாவது நம் பிரச்சினை குறையட்டும் என்று இயற்கையிடம் பிரார்த்திப்பதைத் தவிர இப்போது நமக்கு வேறு வழியில்லை. 

எண்ணங்களை விதைத்து வைப்போம்.  சீக்கிரம் துளிர்க்கட்டும்..