Saturday, January 27, 2018

கால்டாக்சி டிரைவா்



நேற்று என்னுடைய காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் “U Turn” செய்தேன்.  அந்த இடத்தில் “U Turn” செய்யக் கூடாது என்று திரும்பியவுடன் நான்கைந்து போக்குவரத்துக் காவலா்கள் ”வா ராஜா வா” என்று கை காட்டியவுடன்தான் தெரிந்தது.  அருகில் சென்றதும் அவா்களிடம் சாரி சார் தெரியாமல் திரும்பிவிட்டேன் என்று சொன்னேன்.  அதற்குள் அவா்கள் என் காரின் முன்புறம் இருந்த அட்வகேட் ஸ்டிக்கரைப் பார்த்துவிட்டு ”சார் தப்பா நினைச்சுக்காம, வண்டியை ஓரமா நிறுத்தி முன்னாடி வண்டியிலே இருக்கிற இன்ஸ்பெக்டா் அய்யாகிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிடுங்க.  எல்லோரையும் பிடிச்சுட்டு இருக்கப்ப  உங்களை மட்டும் அப்படியே விட்டுட்டா நல்லா இருக்காது” என்றார்.  எனக்கு அவா் சொன்னது மிகவும் நியாயமாகப் பட்டது. 

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ”ஜீப்பில் உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்து மீண்டும் அவரிடம் ”சாரி சார் இந்த இடத்தில் “U Turn” இல்லை என்று தெரியாமல் திரும்பிவிட்டேன். Fine வேண்டுமானால் கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னேன்.  அவா் என்னைப் பார்த்து புன்முறுவல் செய்துவிட்டு ”பரவாயில்லை சார்” என்று சொல்லிவிட்டு ”சார் என்ன பண்றீங்க ?” என்று கேட்டார்.  ”அட்வகேட் சார், identity card காட்டவா” என்றேன்.  ”வேண்டாம் சார் போயிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டார்.

வீட்டுக்கு வந்து TV-யை  ஆன் செய்ததும், போக்குவரத்து காவலா்கள் அவதுாறாக பேசியதாலும் அத்துமீறி நடந்ததாலும் தீக்குளித்த கால் டாக்சி டிரைவா் மணிகண்டன் இறந்துவிட்டார் என்ற செய்தி ஓடிக்கொண்டிருந்தது.  மணிகண்டனும் என்னைப் போலவேதானே ஏதோ ஒரு போக்குவரத்து விதியை மீறி இருப்பார்.  அப்படியென்றால் எனக்கு கிடைத்த ஏதோ ஒரு சலுகை ஏன் மணிகண்டனுக்கு கிடைக்கவில்லை.  அட சலுகைகூட வேண்டாம்.  அபராதத்தோடு நிறுத்தியிருக்கலாமே.  ஏன் ஒருவரை தற்கொலை செய்யுமளவுக்கு அவமரியாதை செய்ய வேண்டும்.

நான் ஒரு அட்வகேட் என்று தெரிவதற்கு முன்பேதான் இன்ஸ்பெக்டா் என்னை அபராதம்கூட கட்டத்தேவையில்லை என்று போகச்சொன்னார்.  ஒருவேளை நானும் ஒரு கால் டாக்சி ஓட்டுனராக இருந்தால் நான் சாரி கேட்டதும்  என்னைப் பார்த்து சிரித்துவிட்டு பரவாயில்லை சார் என்று சொல்லியிருப்பாரா.

உண்மையில் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இல்லை.  சமூகத்தில் நாம் இருக்கும் நிலையை பொறுத்து நமக்கான மரியாதை கூடுகிறது அல்லது குறைகிறது.  இதுதான் யதார்த்தம்.

அதே சமயம் நாம் காவல்துறையை பொத்தாம்பொதுவாக குற்றம் சாட்டுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.  என்னுடைய நண்பன் சரவணன் இன்ஸ்பெக்டராக இருந்தவன். சென்ற வருடம் திடீரென உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டான்.  சென்னைக்கு மாறுதல் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவனை சந்தித்தபோது சென்னைக்கு வருவதையே அவன் விரும்பாமல் இருந்தான்.  ”அங்க வந்தா நாய் பொழப்புடா.  எப்ப எங்க பிரச்சனை வரும்னே தெரியாது. சின்ன விஷயம்கூட மீடியால வந்து பெரிசாயிடும்.  எப்பவும் டென்ஷன்தான் என்றான்.  அந்த டென்ஷன் தாங்காமல்தான் போய்விட்டான் போல.

நாம் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ சில மணிநேரங்கள்கூட ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை.  அந்த நேரத்தில் தேவையில்லாமல்கூட யாரையாவது எரிந்து விழுகிறோம்.  ஆனால் நாளெல்லாம் வெயில், மழை, traffic, pollution என்று காய்ந்து கொண்டிருப்பவா்கள், தங்கள் மீது செலுத்தப்படும் அதிகார வா்கத்தின் மீதான கோபங்களை எல்லாம் அதிகாரம் அற்றவா்கள் மீது மொத்தமாக செலுத்திவிடுகிறார்கள். 

சென்னை போன்ற பெரு நகரங்கிளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது.  சந்தர்ப்பம் கிடைத்தால் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு எல்லோருமே தயாராக இருக்கிறார்கள்.  அந்த அளவுக்கு அவசரமான உலகமாக இருக்கிறது.  இதில் மணிகண்டன் மாதிரியான இழப்புகளை தவிர்க்க, தவறு செய்த போக்குவரத்து காவலா்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மட்டும் தீா்வாகாது.  போக்குவரத்து காவலா்களின் பணிச்சுமையை குறைத்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க நீண்டகால செயல்திட்டங்களை உடனே ஆரம்பிக்க வேண்டும்.

நான் சொல்வதை கிண்டலாக நினைக்க வேண்டாம்.  முதல்வர் மற்றும் அமைச்சா்களின் வீடுகளை சிறுசேரி, கூவத்துார் போன்ற இடங்களுக்கு மாற்றினாலே இங்கு பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும். தேவைப்பட்டால் அவா்களால் தலைமைச் செயலகத்துக்கு ஒரு மணி நேரத்திற்குள் வந்துவிட முடியும்.


இதைப்போல எவ்வளவோ சிந்திக்கலாம்.  செயல்படலாம்.  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.