Monday, July 27, 2015

அணைந்து விடாத அக்னிச் சிறகுகள்


நாம் வாழ்நாளில் ஒரு முறை கூட நேரில் பார்க்காத ஒரு மனிதரின் மரணம் நம்  இதயத்தில் ஒரு வலியை உருவாக்கி, நம்  கண்களில் ஒரு சொட்டு கண்ணீரையாவது வரவழைத்தால் அந்த ஆத்மாவிற்கு பெயர்தான் மகாத்மா. 

இந்தியாவின் ஒரு கோடியில் பிறந்து மறு கோடியில் இறந்தாலும், ஒவ்வொரு இந்தியரும் தனக்கு நெருக்கமானவர் இவர்  என்று நினைக்க வைத்தால் அவர் சாதாரண மனிதராக இருக்க முடியாது. ஒரு மகானாகத் தான் இருக்க முடியும்.

தூக்கத்தில் வருவது அல்ல கனவு.  உன்னை தூங்கவிடாமல் இருக்க வைப்பதுதான் கனவு என்று கனவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கிய மாமேதை கலாம் தன்னுடைய அக்னிச் சிறகுகளை விரித்து விண்ணோக்கிப் பறந்து விட்டார்.

நான் என்னுடைய வாழ்வின் இறுதியில்  குழந்தைகளுடன் நடுவில் இருக்க (இறக்க)  விரும்புகிறேன் என்ற தன்னுடைய கடைசி ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நம் நன்றிகள்.

இப்படி ஓயாமல் உழைத்துக் கொண்டே இருக்கிறீர்களே - எப்போது ஓய்வு எடுப்பீர்கள் ? என்ற கேள்விக்கு கலாம் அளித்த பதில் "ஓய்வு என்பது என்ன. நமக்குப் பிடித்த வேலையை மகிழ்ச்சியாக செய்து கொண்டு இருப்பதுதான். அதனால் நான் எப்போதும் ஓய்வாகத் தான் இருக்கிறேன்".  மரணத்தின் கடைசி நொடி வரை உழைத்த மனிதனுக்கு இனி நிரந்தரமான ஓய்வு.

ஒருமுறை கலாமிடம் சிறந்த தலைவனுக்கான அடிப்படைத் தகுதிகள் (good leadership qualities)  என்ன என்று கேட்டபோது அவர் பட்டியலிட்ட ஆறு அடிப்படைத் தகுதிகள்:

1. உயரிய நோக்கம் ( Great Vision) 
2. புதிய பாதையில் பயனித்தல் (Able to travel the untravelled path)
3. தோல்விகளை எதிர்கொள்ளும் திறமை (Able  to manage failures)
4. முடிவெடுக்கும்  துணிவு (Courage to take decision)
5. நேர்மையான செயல் மூலமான வெற்றி (Work with integrity and succeed with it)
6. மனிதர்களுடன் பழகும் திறன் (Able  to mix with people)  

ஆறு அடிப்படைத் தகுதிகள் மட்டுமல்லாது, பல நூறு தகுதிகள் பெற்ற கலாம் உங்களுக்கு ஒவ்வொரு இந்தியனின் சார்பிலும் ஒரு சலாம். 

 
கலாமின் அக்னிச் சிறகுகள் என்ற புத்தகத்தில் இருந்து சில வைர வரிகள்.

ஒருவர் தன் வாழ்நாளில் தனக்குரிய இடத்தில் என்ன நிலையில் இருக்கிறாரோ, நல்லதோ கெட்டதோ எந்த நிலையை அவர் எட்டி இருந்தாலும் அது தெய்வ சங்கல்பம்.

உங்களுடைய குழந்தைகள் எல்லாம் உங்களுடைய குழந்தைகள்  அல்ல. அவர்கள் உங்கள் மூலமாக வந்தவர்கள்.  அவர்களிடம் நீங்கள் உங்கள் அன்பை வழங்கலாம். ஆனால் உங்களுடைய சிந்தனைகளை அல்ல. தங்களுக்கு என்ற  சிந்தனை கொண்டவர்கள் அவர்கள்.

நம்பிக்கை வைத்தால் உன் தலைவிதியை உன்னால் மாற்றி அமைக்க முடியும்.

எந்த சிக்கலான சூழ்நிலையிலும் பலனைப் பற்றி யோசிக்காமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இரு.  ஏனென்றால் சிக்கலான எல்லா விஷயங்களிலுமே இழப்பு என்பது தவிர்க்க முடியாது.

மற்றவர்களை அறிந்தவன் பண்டிதன். தன்னை அறிந்தவன்தான் உண்மையான கல்விமான்.  விவேகம் தராத கல்வி பயனற்றது.

எதிர்கால வாய்ப்புகள் பற்றி யாரும் கவலைப்படவே கூடாது.  மாறாக வலுவான அடித்தளம் அமைப்பது அது பற்றிய ஆர்வம், தேர்வு செய்துள்ள துறையில் தீவிரமான நாட்டத்தை வளர்த்துக் கொள்வது என்பதுதான் மிகவும் முக்கியம்.

கடவுள் உங்களுடைய நம்பிக்கையாகவும், ஜீவனாகவும் , வழிகாட்டியாகவும் இருந்து உங்களுடைய எதிர்காலத்தை நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் ஒளி  வழங்கட்டும்.

எனக்கான வாய்ப்புக்களை நானேதான்  உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

சர்வ சக்தி கொண்ட எல்லைகள்தான் உன்னுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.  எவ்வளவு அதிக சுமையையும் உன்னால் மட்டுமே தூக்க முடியும்.  எவ்வளவு வேகமாகவும் உன்னால் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும்.  எவ்வளவு கடுமையாகவும் உன்னால் மட்டுமே பாடுபட முடியும். எவ்வளவு தொலைவாக இருந்தாலும் உன்னால் மட்டுமே பயணப்பட முடியும்.  

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

சந்தேகத்தை அறவே விடுத்து அலட்டிக் கொள்ளாமல் இருக்கும்போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்.

பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொண்டு சமாளியுங்கள்.

வாட்டி வதைத்தாலும் கடுமையாகப் பாடுபட்டால்தான் பிரச்சனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு  காணமுடியும்.

பிரச்சனைகள்தான் உள்ளார்ந்த துணிச்சலையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகின்றன.

நான் என்றுமே தெய்வ நம்பிக்கை கொண்டவன்.  எனது பணியில் இறைவனையும்  பங்குதாரராக சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.  அபாரமான வேலைக்கு எனக்கிருக்கும் திறமையை விட  அதிகம் தேவை என்பதை அறிந்திருந்தேன்.  எனவே கடவுளால் மட்டுமே தரக் கூடிய உதவியை நாடினேன்.

உனது எல்லா நாள்களிலும் தயாராக இரு 
எவரையும் சம உணர்வோடு சந்தி 
நீ பட்டறைக் கல்லானால் அடிதாங்கு 
நீ சுத்தியானால் அடி.

உனது பயணத்தில் நடை போடுவதற்கு இறைவன் உனக்கு ஒளி  காட்டுவான்.

கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுமதிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

உங்கள் முன்னே  நடமாடித் திரிவதற்காக எந்த  தேவ தூதரையும் நாங்கள் அனுப்பவில்லை. ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக நடந்து கொள்வதை வைத்துதான் உங்களை சோதிக்கிறோம். அதற்குக் கூட உங்களிடம் பொறுமை இல்லையா ?

கவலைப் படாதே, முணுமுணுக்காதே 
மனம் தளராதே, இப்போதுதான் 
வாய்ப்புக்கள் வர ஆரம்பித்துள்ளன 
சிறந்த  பணி  இன்னும் ஆரம்பமாகவில்லை 
சிறந்த பணி இன்னும்  முடிக்கப் படவில்லை.

காலத்தின் மணல் பரப்பில் 
உன் காலடிச் சுவடுகளைப் 
பதிக்க விரும்பினால் 
உனது கால்களை 
இழுத்து இழுத்து நடக்காதே.

உங்களுடைய  கல்வியையும் திறமையையும் வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அறிவாற்றல்தான் நிதர்சனமான நிலையான சொத்து என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

வெற்றி அடைந்த எல்லோரிடமும் காணப்படும் பொதுவான அம்சம் முழுமையான பொறுப்புணர்வு. 

வெற்றிகளால் மட்டுமே நாம் உயர்ந்துவிட முடியாது. தோல்விகளாலும் நாம் முன்னேறுவோம் என்பதை எப்போதுமே  மறந்துவிடக் கூடாது.

கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு எதிர்காலத்திற்காக மட்டும் வாழ்வது சாரமற்ற முழுமை அடையாத ஒரு வாழ்க்கை.  சிகரத்தை எட்டுவதற்காக மலையின் பல்வேறு பகுதிகளை அனுபவிக்காமல் மலை ஏறுவதைப் போன்றது அந்த வாழ்க்கை.  இந்தப் பகுதிகளில்தான் மலையின் ஜீவன் இருக்கிறது.  சிகரத்தில் அல்ல.

மற்றவர்களின் சிந்தனையில் விளைந்த ஆதாயங்களைப் பயன்படுத்திக் கொண்டு நான் என்றுமே வாழ்ந்தது இல்லை. எனது வாழ்க்கையை நிர்ணயம் செய்திருப்பது   எனது இயல்புதான்.

யாருக்கு பெருமை போய்ச் சேரும் என்பதைப் பொருட்படுத்தாமல் செயல் ஆற்றுபவர்கள் மூலம்தான் மகத்தான காரியங்களை இறைவனால் நிறைவேற்ற முடியும்.

அபாரமான சாதனைகளை நிகழ்த்துவதில் ஆழமான ஈடுபாடு கொள்ளுங்கள். உடனே கிடைக்கும் செயற்கையான சந்தோஷத்தைத் துரத்தி அலையாதீர்கள். 

Friday, July 17, 2015

மந்திரி எந்திரி


ஆனந்த விகடனில் கடந்த சில வாரங்களாக தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் "மந்திரி தந்திரி" என்ற தலைப்பில் காய்ச்சிக் கொண்டு இருக்கிறார்கள்.  நானும் at least ஒரு மந்திரியாவது ஆனந்த விகடன் சொன்ன தகவல் தவறு என்று சொல்வார்கள் என்று பார்க்கிறேன்.    ஆனால் ஒன்றையும் காணோம்.

அதனால் பாதிக்கப் பட்ட மந்திரிகளின் சார்பில் ஆனந்த விகடனுக்கு ஒரு கடிதம் (இதற்கு ஆனந்த விகடன் கட்டுரையே பரவாயில்லை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல).

இனி கடிதம் .....


ஐயா ஆனந்த விகடனாரே உங்களுக்கு எங்கள் மேல் ஏன் இவ்வளவு கோபம் ? இப்படி "அபாண்டமான" உண்மைகளை போட்டு உடைத்து மக்களுக்கு எங்கள் மேல் இருக்கும் கொஞ்ச நஞ்சம் மரியாதையையும் கெடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.  

நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்று தெரிந்த உங்களுக்கு மந்திரி மூலமும் பார்க்கக் கூடாது என்று தெரியாதா  ?

எங்களில் பலர் படிக்காமல் பட்டம் வாங்கியதாக பெரிதாக குற்றம் சொல்லும் உங்களுக்குத் தெரியாதா நாமெல்லாம் (??) சிறு வயதில் படிக்கும் போதே பட்டம் வாங்கி விட்டவர்கள் என்று.  அப்போது அத்தனை பட்டம் வாங்கிய எங்களுக்கு மந்திரியான பிறகு கேவலம் ஒரு பட்டத்தை வாங்கத் தெரியாதா. அப்படி என்ன நாங்கள் ஆசைப்பட்டா இந்த பட்டத்தினை வாங்கினோம். நாங்கள் தேர்தலில் நிற்பதற்கு அடிப்படைத்  தகுதி என்று சொன்னதால் வாங்கினோம்.  வேண்டாம் என்று சொல்லுங்கள்  வாங்கிய பட்டத்தை தூக்கி எறிந்து விட்டு எங்கள் உண்மையான "டிகிரியான" ஐந்தாவது அல்லது ஆறாவது என்று போட்டுக் கொள்கிறோம்.

நாங்கள் பலரையும் ஏறி மிதித்து இந்த இடத்தை அடைந்து இருக்கிறோம் என்றால் இன்றைய அரசியல்வாதிகளுக்குரிய அடிப்படை தகுதி எங்களுக்கு இருக்கிறது என்று அர்த்தம்.  உங்களுக்கு எங்களைப் பற்றிய அப்பட்டமான உண்மைகள் தெரிவதற்கு எங்களால் மிதிபட்டவர்கள்தான் காரணம் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்.  மிதி பட்டவர்கள் எந்த நேரம் எங்களை மீண்டும் மிதித்து விடுவார்களோ என்று ஒவ்வொரு கணமும் நாங்கள் தவித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?

உங்கள் மீது அவதூறு வழக்கு போடலாம் என்று கூட நாங்கள் நினைத்திருந்தோம்.  ஆனால் அப்படி ஏதாவது வழக்குப் போட்டு மிச்சம் மீதி உண்மைகளும்  நீதி மன்றத்தில் சந்தி சிரித்துவிடுமோ என்று அடங்கி விட்டோம்.

இப்போதெல்லாம் எங்களைப் பார்த்து யாராவது உண்மையிலேயே சிரித்தாலும், இவர்கள் இதை  நினைத்து சிரிக்கிறார்களோ அல்லது அதை நினைத்து சிரிக்கிறார்களோ என்று நாங்களாகவே பலதையும் நினைத்துக் கொள்கிறோம். நீங்கள் எதிர்பார்த்தது இதைத்தானா ?

ஒவ்வொரு வாரமும் விகடனைப் படித்துவிட்டு எங்கள் மேலிடம் நாங்கள் காரில் ஏறும் போது மந்திரி இறங்கும் போது எந்திரி என்று சொல்லிவிடுவார்களோ என்று நாங்கள் பயந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?  நாங்கள் கோவில் கோவிலாக சென்று பூஜை செய்வதும் மொட்டை போட்டுக் கொள்வதும் எங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டும்தான் என்பதை எங்களால் வெளிப்படையாக சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறோம். 

நடுநிலைப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் பல பத்திரிகைகளுக்கும் விளம்பரம் என்ற பெயரில் சொந்தச் செலவிலும் அரசு செலவிலும் லட்சக் கணக்கில் பணம்  கொடுத்து அவர்கள் வாயை அடைத்து விட்டோம்.  உங்களைத்தான் எப்படி correct பண்ணுவது என்று தெரியவில்லை.

ஆனால்  ஒன்று ஒவ்வொரு வாரமும் எங்கள் பெயர் கட்டுரையில்  வந்த பிறகு ஆட்டத்தில் out ஆன  பிறகு மற்றவர் ஆட்டத்தை ரசிக்கும் மனநிலைக்கு இப்போது வந்து விட்டோம்.

ஏதோ மக்கள் புண்ணியத்தாலும்,  மேலிடத்தின் ஆசியாலும் மந்திரி ஆகிவிட்டோம்.  இனி உங்கள் புண்ணியத்தில் மேலும் ஒரு முறை மந்திரி ஆக விட மாட்டிர்கள் என்று நினைக்கிறோம். 

வாழ்க உங்கள் தொண்டு. 

இப்படிக்கு பாதிக்கப்பட்ட மந்திரிகள் 

Saturday, July 4, 2015

இணங்கி இருக்கும் கலை


சமீபத்தில் ஓஷோவின் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன்.  இணங்கி இருக்கும் கலை என்ற தலைப்பில் கொடுக்கப் பட்டிருந்த அவருடைய கருத்துக்கள் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் இருந்தது. 

நம்முடன் நாம் கொண்டிருக்கும் உறவுதான் அடுத்தவருடன் நாம் கொண்டிருக்கும் உறவுக்கும் அடிப்படை என்ற அவருடைய கருத்து மிகவும் சிந்திக்க வேண்டிய ஒன்று.  

இதோ ஓஷோவின் வார்த்தைகள்.....
  
அன்பு என்பது அடுத்தவருடன் இணங்கி இருக்கும் கலை. தியானம் என்பது நீ உன்னுடன் இணங்கி இருத்தல். அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். தன்னுடன் எப்படி இருப்பது என்று தெரியாத ஒருவரால் மற்றவருடன் உண்மையாக தொடர்பு கொள்ள  முடியாது. அவரது உறவுகள் அருவெறுக்கதக்கதாக, அசிங்கமானதாக, விபத்து போல, இருக்கும். ஒரு நிமிடம் எல்லாமும் நன்றாக இருக்கும், மற்றொரு நிமிடம் எல்லாமும் தவறாகி விடும். அது எப்போதும் மேலும் கீழுமாக சென்று வரும். அதற்கு ஆழமிருக்காது. அது மிகவும் கூச்சலிடும். அது உன்னை ஆக்ரமித்திருக்கும். ஆனால் அதில் எந்த லயமும் இருக்காது, அது உன்னை இயற்கையின் உயரங்களுக்கோ, இருப்பின் ஆழங்களுக்கோ எடுத்துச் செல்லாது.
மற்றொரு வகையிலும் இது அப்படித்தான். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத ஒருவருக்கு தன்னுடன் தொடர்பு கொள்வதும் மிகவும் கடினமானதாக இருக்கும். ஏனெனில் தொடர்பு கொள்ளும் கலை என்பது அதேதான். உன்னுடன் நீ தொடர்பு கொள்வதோ, அன்றி மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதோ ஒன்றேதான். அதில் எந்த வித்தியாசமும் இல்லை.
இவை ஒரே நேரத்தில் சேர்ந்தே கற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவற்றை பிரிக்க முடியாது. மக்களுடன் இரு. தன்னுணர்வின்றி இருப்பது போல இருக்காதே. உணர்வுடன் இரு. புல்லாங்குழல் வாசிப்பது போல, ஒரு பாடல் பாடுவது போல மக்களுடன் தொடர்பு கொள். ஒவ்வொருவரும் ஒரு இசைக் கருவி போல. மரியாதை கொடு, அன்பு செய், அவர்களை ஆராதனை செய். ஏனெனில் ஒவ்வொருவருக்குள்ளும் இறைமை ஒளிந்திருக்கிறது.
அதனால் மிகவும் கவனமாக இரு. மிகவும் ஈடுபாட்டுடன் இரு. நீ சொல்வது என்ன என்பதில் கவனமாக இரு. நீ என்ன செய்கிறாய் என்பதில் கவனமாக இரு. சிறிய விஷயங்கள் உறவை சிதைத்துவிடும். சிறிய விஷயங்கள் உறவை மிகவும் அழகாக்கிவிடும். சில நேரங்களில் ஒரு புன்னகை கூட அடுத்தவரின் இதயத்தை உனக்கு திறந்துவிடும். சில நேரங்களில் உன்னுடைய கண்களில் இருக்கும் ஒரு தவறான பார்வை கூட அடுத்தவரின் இதயத்தை மூடி விடும். இதுதான் மிக மென்மையான செயல்பாடு. இதை ஒரு கலை. ஒரு ஓவியன் வண்ணத்திரையில் எவ்வளவு கவனமாக வரைவானோ அதைப் போலத்தான் இதுவும். ஒரு கோடு கூட வித்தியாசத்தை உண்டாக்கி விடும். ஒரு உண்மையான ஓவியனால் ஒரு சிறிய கோட்டின் மூலம் மிகப் பெரிய வித்தியாசத்தை கொண்டு வர முடியும்.
வாழ்க்கையை மிகவும் கவனத்துடன், மிகவும் மென்மையாக நுணுக்கமாக கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் மற்றவர்களுடன் நாம் தொடர்பு கொள்வது என்பது ஒரு கண்ணாடி போல. நீ என்ன செய்கிறாய், அதை எப்படி செய்கிறாய், என்ன நிகழ்கிறது என்று பார். அடுத்தவர்களுக்கு என்ன நிகழ்கிறது, நீ அவர்களது வாழ்க்கையை துயரமானதாக மாற்றுகிறாயா, நீ அவர்களுக்கு வலி கொடுக்கிறாயா, நீ அவர்களுக்கு ஒரு நரகமாக மாறுகிறாயா, அப்படி என்றால் விலகிவிடு. உன் வழியை மாற்றிக் கொள். உன்னைச் சுற்றி வாழ்க்கையை அழகாக்கு. உன்னை சந்திக்கும் ஒவ்வொருவரும் அதை ஒரு பரிசாக உணர வேண்டும். உன்னுடன் இருப்பதாலேயே ஏதோ ஒன்று பொங்கி பெருக வேண்டும், ஏதோ ஒன்று வளர வேண்டும், இதயத்துள் பாடல் மலர வேண்டும், மலர்கள் மலர வேண்டும். தனிமையில் இருக்கும்போது மௌனத்தில் இரு, நிசப்ததில் இரு, உன்னை நீயே கவனி.
எப்படி பறவைக்கு இரண்டு சிறகுகள் இருக்கிறதோ அது போல அன்பும் தியானமும் உனது இரண்டு சிறகுகள் ஆகட்டும். அவை இரண்டிற்க்கும் ஒத்த லயத்தை உருவாக்கு. அப்போது அவை இரண்டும் ஒன்றுகொன்று பிளவுபடாது, ஒன்றையொன்று வளப்படுத்தும், ஒன்றுகொன்று ஊட்டப்படுத்தும், ஒன்றுக்கொன்று உதவும். இதுதான் உன் பாதை. அன்பும் தியானமும் ஒருங்கிணைந்தது.


Sunday, June 28, 2015

கட்டாய ஹெல்மெட்


ஜூலை 1 முதல் வசூல் வேட்டை தீவிரமாகும். அன்றிலிருந்து ஹெல்மெட் அணிவது மீண்டும் கட்டாயமாகிறது.  சில வருடங்களுக்கு முன்புதான் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.  எப்போது அதை வாபஸ் பெற்றார்கள், மீண்டும் கட்டாயமாக்குவதற்கு ?

நாட்டில் தினமும் நடக்கும் சாலை விபத்துக்களைப் பற்றி அறியும் போது தலைக் கவசத்தின் அவசியத்தை யாரும் மறுக்க முடியாது.   ஆனால் நமது அரசாங்கம் செய்துள்ள அறிவிப்பைப் பார்க்கும் போது மக்களின் உயிர் மேல் இருக்கும் அக்கறையை விட stock clearance  sale முனைப்போடு செயல்படுவது போல் உள்ளது.

மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஹெல்மெட் அணிந்து சென்றும்  கிரிதரன் என்ற இளைஞர் விபத்து என்ற பெயரில் அநியாயமாக கொல்லப்பட்டார்.  ஒழுங்கான சாலை வசதிகள், விளக்கு வசதிகள் இல்லாமல் பல விபத்துக்கள் நடக்கின்றன.  இதைப் பற்றியெல்லாம் அரசாங்கம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.   ஆனால் வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறது. 

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் ஹெல்மெட் அணிய வேண்டும். சரி. மிகவும் நியாயமானது.  பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் அணிய வேண்டும் என்பது நடைமுறையில் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. இனிமேல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது கையிலேயே ஒரு ஹெல்மெட்டையும் கொண்டு செல்வது உசிதம்.  வழியில் அப்பா, அண்ணன்,  கணவன் , நண்பன் என்று யாரைப் பார்த்தாலும் அவர்களுடன் வண்டியில் ஏறி வருவதற்கு வசதியாக இருக்கும்.

இன்று சாலை விபத்துக்களின் மூல காரணமாக இருப்பது மது என்ற  அரக்கன். ஊரெங்கும் பார்களைத்  (bar)  திறந்து அரசாங்கமே ஊற்றிக் கொடுத்துவிட்டு கட்டாய ஹெல்மெட்  என்று சொல்வது காறித் துப்பிவிட்டு கன்னத்தை துடைத்துக் கொள் என்று சொல்வது போல் உள்ளது.

ஹெல்மெட் எல்லாம் விற்றுத் தீர்ந்த பிறகு கட்டாய ஹெல்மெட் கட்டாயம் பிசுபிசுத்துப் போகும்.  அதுவரை காந்தி சிரிக்கும் கரன்சி நோட்டுக்கள் கொஞ்சம் கைவசம் இருக்கட்டும்.

Saturday, June 6, 2015

நூடுல்ஸ் நொந்த கதை

நமக்கு ஏதாவது ஏமாற்றம், வேதனை  அல்லது விரக்தி ஏற்பட்டால் நொந்து நூலாகிவிட்டேன் அல்லது நூடுல்ஸ் ஆகிவிட்டேன் என்று  சொல்வது வழக்கம்.  ஆனால்  இப்போது அந்த நூடுல்ஸ்சே நொந்து போய் இருக்கிறது.

நம்ம ஊரில் எப்போதும் உள்ள ஒரு பழக்கம் ஒரு ஆளையோ அல்லது பொருளையோ தூக்கிவிடும் போதும் தகுதிக்கு மேல் தூக்கி விடுவோம், அதே போல் கீழே விழும்போதும் சகட்டுமேனிக்கு மிதித்து துவைத்து விடுவோம். இப்போது Nestle வின் Maggi நூடுல்ஸுக்கு நேரம் சரியில்லை.

இன்று 20 முதல் 30 வயதுள்ள அனைவரும் Maggi நூடுல்ஸ் சாப்பிட்டு வளர்ந்த குழந்தைகளாகத்தான் இருப்பார்கள்.  மம்மி கையால் நூடுல்ஸ் சாப்பிடாதவர்கள் கூட மனைவி கையால் சாப்பிட்டு இருப்பார்கள்.

ஏதோ போன மாதம் அறிமுகப்படுத்தி இந்த மாதம் தடை செய்யப் பட்டதைப் போல, குழந்தைகளுக்கு கறிவேப்பிலை சாற்றைக் கொடுங்கள் கொத்துமல்லி சாற்றைக் கொடுங்கள்  என்றெல்லாம் வைத்தியம் சொல்கிறார்கள்.  எவ்வளோவோ junk foods பார்த்த நம் உடம்பு இதைப் பார்க்காதா என்ன ?

நான் நூடுல்ஸுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைத்து விடாதீர்கள்.     நம்ம சுகாதாரத் துறை அதிகாரிகள் முடிவு எடுத்த பிறகு தீர்ப்பு எழுதும் குமாரசாமிக்களாகவே இருக்கிறார்கள்.   இத்தனை வருடங்களாக Maggi நூடுல்ஸ் ஆய்வில் உடல் நலனுக்கு எந்த கெடும் விளைவிக்காத அளவுக்கு மிகச் சரியாக இருந்ததா ?  அல்லது Coke, Pepsi, Lays, Kurkure இன்னும் பல junk foods உடலுக்கு மிகவும் நன்மை தரக் கூடியதா?  உண்மையான சோதனைக்கு உட்படுத்தினால் அவை Maggi நூடுல்ஸ்ஐ விட மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும்.

இப்போது Maggi நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அமிதாப் முதல் நூடுல்ஸ் செய்த ஆயா வரை எல்லோரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது காவல்துறை, குளிர் பான விளம்பரங்களில் நடிக்கும் விக்ரம், விஜய், தனுஷ், இன்னும் பிறரும் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.  சீனாவில் பலாப் பழம் சாப்பிட்டு விட்டு உடனே Coke அருந்திய ஒருவர் இறந்து விட்டாராம்.   நல்ல வேளை நம்ம ஊரில் பிரியாணி Coke combinationதான் பெரும்பாலும் என்பதால் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை (இதுவரை).

Maggi நூடுல்ஸ் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் இரண்டு நிமிடத்தில் உணவு என்ற concept ஐ இனி யாராலும் மாற்ற முடியாது.  இனி Maggi நூடுல்ஸுக்கு பதில் எதாவது ஸாகி நூடுல்ஸ் வரலாம். இப்போதெல்லாம் நாம் மிகவும் health conscious ஆகிவிட்டோம்.  சம்பா, வரகு, திணை, என்று எந்தப் பெயரில்  பாக்கெட் உணவு வந்தாலும் அது எவ்வளவு விலை என்றாலும் வாங்கி வாயில் (அல்லது வயிற்றில்) போட்டுக் கொள்வோம் (கொல்வோம்).

Junk Foods எதுவும் சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் அது வாயை மூடிக் கொண்டு பேசவும் என்பது போல இருக்கும்.  முடிந்த வரை avoid  செய்வோம்.






Saturday, May 2, 2015

நேபாள மக்களுக்கு நமது பிரார்த்தனைகள்


ஒவ்வொரு மண்ணுக்கும் ஒருஅடிப்படை குணம் உண்டு என்று சொல்வார்கள். அப்படிப் பார்த்தால், நேபாள மக்களின் அடிப்படை குணம் பொறுமை அல்லது சாந்தம் என்று எடுத்துக் கொள்ளலாம்.  

நம் ஊரில் இருக்கும் கூர்காக்களையோ அல்லது சில ஹோட்டல்களில் வேலை செய்யும் நேபாளிகளையோ நீங்கள் கவனித்து இருக்கக் கூடும்.   நாம் திட்டினாலும் அல்லது பாராட்டினாலும் ஒரே மாதிரியான மோனாலிசா புன்னகையுடன் இருப்பார்கள்.  அப்படிப்பட்ட மக்களைப் புரட்டிப் போட்டு கதற வைத்து விட்டது இந்த நில நடுக்கம்.

எந்த இழப்பும் நமக்கு ஒரு செய்தியாகத்தான் இருக்கும், அது நம்மோடு சம்பந்தப் படாத வரையில்.  அப்படித்தான் பல செய்திகளை தினமும் கடந்து கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில்தான்  இந்த நேபாள நில நடுக்கம் எனக்குள் பல அதிர்வுகளை  ஏற்படுத்தியது.  நான் 2013 ம் வருடம் கைலாய யாத்திரை சென்ற போது சில நாட்கள் நேபாள் காத்மாண்டுவில் தங்கியிருந்தோம்.  அப்போது நாங்கள் பார்த்த பல நூற்றாண்டு கால கட்டிடங்கள் இன்று மண்ணோடு மண்ணாகிவிட்டது.

'காலத்தால் அழியாத' என்று சொல்லப்பட்ட பல நினைவுச் சின்னங்களை, காலம் ஒரு கணத்தில் கலைத்துப் போட்டுவிட்டது.  காலத்தால் அழியாத என்ற ஒன்று இல்லவே இல்லை என்று இயற்கை நமக்கு மீண்டும் உணர்த்திவிட்டது.  எவ்வளவு காலம் என்பதில்தான் வித்தியாசம்.

நேபாள நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடு.  அதனால்தான் நிவாரண உதவிகளில் கூட ஏகப்பட்ட சுணக்கம் மற்றும் தொய்வு.  ஆனால் நேபாள நாட்டிற்கு நமது இந்திய அரசின் உடனடி உதவிகளை நாம் கண்டிப்பாக பாராட்டலாம். பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

நெருங்கிய சொந்தங்களை இழந்த நேபாள மக்களின் வாழ்வில் மீண்டும் வசந்தம் எப்போது வரும் என்று சொல்ல முடியாது.   ஆனால் வேதனையின் உச்சத்தில் இருக்கும் அவர்களின் மன வலியை நம்முடைய பிரார்த்தனையும் நம்மால் முடிந்த உதவிகளும் கண்டிப்பாக குறைக்கும் என்று நம்பலாம்.

காலத்தால் அழியாத என்ற ஒன்று இல்லவே இல்லை இயற்கையில் - இந்த துயரம் உட்பட.

Saturday, April 25, 2015

ஜெ .கே - சில குறிப்புக்கள

ஒரு எழுத்தாளன் எழுதுவதை நிறுத்தி 25 ஆண்டுகளுக்குப் பிறகும் அவனுடைய மரணம் எல்லோராலும் பரவலாகப் பேசப்பட்டது திரு ஜெயகாந்தனாகத்தான் இருக்கும்.

ஜெ .கே என்று பிரியமுடன் அழைக்கப்படும் ஜெயகாந்தனின் எழுத்து எனக்கு  பரிச்சயமாக இருந்தாலும், அவரின் எழுத்து வீரியத்தையும் அவரின் குணநலன்களையும் முழுமையாக அறிந்து கொண்டது எங்கள் Discovery Book Palace சார்பில் நடத்தப்பட்ட அவரது அஞ்சலிக் கூட்டத்தில்தான்.

முகநூலில் (Facebook) பத்து வரிகளுக்கு மேல் தமிழில் ஒரு தகவல் வந்தாலே படிக்கச் சிரமப்படும் இன்றைய தலைமுறைக்கு (நான் பொதுவாச் சொன்னேன்) ஜெயகாந்தனின் எழுத்துக்கள் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது.  ஆனால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த நமது சமூக சூழ்நிலையோடு ஒப்பிடும்போது, அவருடைய அக்னிப் பிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற கதைகள் அந்தக் காலத்தில் எந்த அளவு அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் என்று உணர முடிகிறது.

மது, கஞ்சா என்ற அவரது வாழ்க்கை முறை எனக்கு உடன்பாடில்லாதது. ஆனால் பாசாங்கு இல்லாத அவரது வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்தமானது. நாம் எல்லோரும் பெரும்பாலும் நமது செய்கைக்கு நியாயம் கற்பிப்போம். நாம் சொல்வதையும் செய்வதையும் மற்றவர்கள் அங்கிகரிக்க வேண்டும் என்று நினைப்போம்.   ஆனால் எனக்கு சரி உனக்கு தவறு என்றால் உனக்கு சரி எனக்குத் தவறாகும் என்ற அவரது சிந்தனை, அவரது எந்த செயலையும் அவர்  நியாயப் படுத்தவும் இல்லை, பிறர் அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இல்லை.  உன் வாழ்கையை நீ வாழ். என் வாழ்க்கையை  நான் வாழ்கிறேன் என்ற அளவில் வாழ்ந்து சென்றவர் அவர்.

பொதுவாக இருவர் பேசிக் கொண்டிருக்கும் போது,  தங்களைப் ப ற்றிய  தற்பெருமையோ அல்லது மூன்றாவது மனிதரைப் பற்றிய அவதூறோ  (அல்லது கிசுகிசுப்போ) இடம் பெறுவது இப்போதெல்லாம் வாடிக்கையான ஒன்று.  ஆனால் ஜே.கே. இருந்த இடத்தில இந்த இரண்டும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.  இது நாமெல்லோரும் பின்பற்றவேண்டிய மிகச் சிறந்த பண்பாகும்.

ஜே.கே. கதைகள் மட்டும்தான் எழுதுவார் என்று நினைத்திருந்தேன்.  ஆனால் அவர் மிகச் சிறந்த திரைப்படப் பாடல்கள் சிலவற்றையும் எழுதியுள்ளார் என்பது இப்போதுதான் தெரிந்தது.   அவருடைய ஒரு பாடலின் சில வரிகள் - பருவ மழை பொழியப்  பொழிய பயிர்களெல்லாம் செழிப்பாகும்.  ஆனால் பருவ மழை பொழிந்ததால் இவள் வாழ்க்கை பாலைவனம் ஆகியது என்ற வரிகளின் மூலம்  வாழ்கையில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவலத்தை மிகச் சில வரிகளில் உணர்த்திவிட்டார்.

பேச்சு என்பது காற்றில் கரைந்துவிடக் கூடியது.  எழுத்துதான் நிரந்தரமான பேச்சு.  இது ஜெயகாந்தன் சொன்னது.  அதனால்தானோ என்னவோ அவருடைய மூச்சு நின்ற பின்னும் அவரது பேச்சு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இனிமேல்தான் ஜெயகாந்தனின் எழுத்துக்களை முழுமையாக படிக்க வேண்டும்.  அப்போது தேவைபட்டால் அவரது எழுத்துகளைப் பற்றி மீண்டும் எழுதுகிறேன்.