Wednesday, August 10, 2016

ஞானப் பல் தப்பிய கதை

"முப்பத்திரு பல் முனைவேல் காக்க" என்று கந்த சஷ்டி கவசத்தில் படிக்கும் போது பாலன் தேவராயன் ஸ்வாமிகள் ஏன் பல்லுக்கு கூட இவ்வளவு importance கொடுத்தார் என்று சிறுவயதில் புரியவில்லை - கிரிக்கெட் விளையாடும்போது என் நண்பன் கண்ணனுடன் மோதி முன் பல் damage ஆகும்வரை (அவன் முன் நெற்றியில் நாலு தையல் போட்டது வேறு விஷயம்). 

அதற்குப் பிறகு எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது.   சென்ற மாதத்தில் ஒரு  நாள் ஹோட்டலில் தோசை சாப்பிடும்போது கடைவாயில் இருந்து 'கடக்' என்று ஒரு சத்தம். இதற்குப் பெயர்தான் கல் தோசை போலும் என்று நினைத்து கல்லை வெளியில் எடுத்தால் அது கல் இல்லை, சாட்சாத் என் பல்லேதான். விண்ணில் இருந்து மண்ணில் விழும் எரி கல்லின் ஒரு சிதறல் போல ஒரு சின்ன piece தான்.  நாக்கைத் துழாவிப் பார்த்தால் மழைக்குப் பிந்தைய சென்னை நகரின் சாலையைப் போல ஒரு பெரிய பள்ளம் (அல்லது எனக்கு அப்படித் தோன்றியது).

வலியெல்லாம் ஒன்றுமில்லை.  ஆனாலும் என்ன சாப்பிட்டாலும் உணவுத் துகள்கள்  மாட்டிக் கொண்டு சாப்பிடுவதை விட அதை எடுப்பதற்கு அதிக நேரம் செலவு செய்ய வேண்டி இருந்தது (as a matter of hygienic also).

சரி பல் டாக்டரிடம் சென்று அடைத்து விடலாம் என்று நினைத்து casual ஆக தெரிந்த டாக்டரிடம் சென்று காண்பித்தேன் (தெரியாத doctor அனாவசியமாக பயமுறுத்திவிடலாம் என்பதால்).  ஆனால் தெரிந்த டாக்டரும் பயமுறுத்தலாம் என்று அன்று புரிந்து கொண்டேன்.

அவர் சொன்ன விஷயம் இதுதான்.  ஞானப் பல் என்று அழைக்கப் படும் wisdom tooth மற்ற பற்களைப் போல அல்ல. (Tooth  singular or plural ? - என்னைப் போல தமிழ் medium படித்த ஆட்களுக்கு  அடிக்கடி இப்படி basic doubts வந்து விடுகிறது. என்னைப் போலவே confuse ஆகிவிடும் ஆட்களுக்கு சொல்கிறேன்.  Tooth singular தான். ஆனாலும் திரும்பவும் அடுத்த வாரம் கேட்டால் மீண்டும் doubt வர chance அதிகம்). சரி மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன்.  இது தாடை எலும்போடு (jaw bone) ஒட்டியிருக்குமாம்.  அதனால் மற்றப் பற்களை போல சுலபமாக (??) பிடுங்கி விட முடியாதாம். இது கொஞ்சம் complicated.  கிட்டத் தட்ட ஒரு சின்ன surgery செய்துதான் எடுக்க முடியும் என்று சுலபமாக சொல்லிவிட்டார். சொத்தை எடுக்கப் போய் நம் சொத்தையே எடுத்துவிடுவாரோ என்று மனம் லேசாக கலங்கி விட்டது.  மீண்டும் பாலன் தேவராயன் ஸ்வாமிகள் நினைவுக்கு வந்து சென்றார். 

ஆனாலும் வேறு வழியில்லை.  மீண்டும் ஒரு நாள் appointment fix செய்து விட்டு சில நாட்களுக்கு முன் சென்று அவரைப் பார்த்தேன்.  முதலில் ஒரு Xray எடுத்துக் பார்த்துவிடலாம் என்று Xray எடுத்துப் பார்த்தவர் சொன்ன விஷயம் என் காதில் தேனாக விழுந்தது.  ஆமாம்.  ஞானப் பல் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.  குழி விழுந்த (??) இடத்தை fill செய்தால் போதும். பிரச்சினை ஏதும் வராது என்று.   அரை மணி நேரத்தில் treatment ஓவர். Complicated என்று நினைத்த விஷயம் மிகவும் easy ஆக முடிந்து விட்டது.

இந்தப் பதிவின் நோக்கம், என் ஞானப் பல் தப்பிய கதையை பீற்றிக் கொள்வதற்காக அல்ல.  நாம் பொதுவாக டாக்டர் நம் உடல்நிலை குறித்து ஏதாவது negative ஆக ஏதாவது சொன்னால் அதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு அதை நம்பி நம்பியே இல்லாத ஒன்றைக் கூட வரவழைத்துக் கொள்கிறோம்.  எனக்குப் பார்த்த ஒரே டாக்டர் ஒரே வாரத்தில் U turn அடித்து விட்டார்.  அதனால் உடல் நலன் குறித்து தேவையற்ற பயம் கொள்ளத் தேவை இல்லை.  டாக்டரும் நம்மைப் போல சக மனிதரே.  அவருக்கு கிடைக்கும் ரிப்போர்ட்டை வைத்து நம் உடல் நலனை கணிக்கிறார்.  Report எப்படி வேண்டுமானாலும் மாறும். இறைவன் மிகப் பெரியவன். அவனை நம்புவோம்.

பின்குறிப்பு : ஞானப் பல்லுக்கும் ஞானத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒரே ஒரு ஒற்றுமை ஞானமும் ஞானப் பல்லும் கடைசியில்தான் வரும். 










Wednesday, July 27, 2016

வஞ்சம் இல்லாமல் லஞ்சம் வாங்கினால் .......


B.K. Bansal என்ற பெயர் company secretary வட்டத்தில் நல்ல பரிச்சயமான பெயர். இவர் Ministry  of Corporate  Affairs-ல் Regional  Director ஆக சென்னையில் இருந்தார். மனிதர் அதிகம் பேச மாட்டார்.  அவர் அலுவலகத்தில் இருந்து எந்த file நகர வேண்டும் என்றாலும் ஒரு சிறிய காகிதத்தில் ஒரு தொகையை குறிப்பிடுவார். அதற்க்கு OK என்றால் மேற்கொண்டு பேசலாம். காரியம் நடக்கும். சட்டபூர்வமாக செய்யும் காரியங்களுக்கே இப்படி என்றால் சட்டத்தை மீறி என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளலாம்.

இவர் சமீபத்தில் டெல்லிக்கு பதவி உயர்வு பெற்று சென்றார்.  சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி - Bansal ஒரு corporate நிறுவனத்திடம் இருந்து 9 லட்சம் லஞ்சம் பெற்ற போது CBI அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்ப பட்டார்.

அவருடைய வீட்டில் கோடிக்கணக்கான பணமும், சொத்து ஆவணங்களும்  60 க்கும் அதிகமான வங்கி கணக்குகளும் பறிமுதல் செய்யப் பட்டன.

அதைவிட அதிர்ச்சியான செய்தி. அவருடைய வீட்டில் CBI  raid நடத்தப் பட்ட மறுநாள் அவருடைய மனைவியும், 27 வயதான அவருடைய மகளும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர்.

இன்னும் 3 மாதத்தில் ஓய்வு பெற இருக்கும் நிலையில் அவருக்கு இப்படி ஒரு அவலம்.

இந்த செய்தியைப் படித்ததும் மகாகவி பாரதியின் "படிச்சவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான்" என்ற வார்த்தைகள்தான் என் மனதில் தோன்றியது.

"அரசன் அன்று கொல்வான் - தெய்வம் நின்று கொல்லும்" என்று சொல்வார்கள்.  இப்போதெல்லாம் தெய்வத்திற்கும் பொறுமை இல்லை போலும்.

பொருள் ஈட்டுவதில் தவறில்லை.  ஆனால் அதை எந்த வகையில் ஈட்டுகிறோம் எனபதில்தான் பலர் தவறி விடுகின்றனர்.  நல்ல வழியில் சேர்க்கும் பொருள் நமக்கு வரமாக அமைகிறது என்றால் தவறான வழியில் சேர்க்கும் பொருள் சாபமாக அமைந்து விடுகிறது.  

Bansal தவறான வழியில் சேர்த்த பொருட்களை எல்லாம் திருப்பிக் கொடுத்தாலும் இழந்த அவருடைய மனைவியையும், மகளையும் திரும்ப பெற முடியுமா ?

இன்று அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள்.  அவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியே வந்த போது அவர் கொண்டு வந்தது அவர் உபயோகப் படுத்திய சில துணிமணிகளும் மற்ற சில பொருட்களும்தான். அவருக்கு முன்னாள் இருந்த பிரதிபா பாட்டில் வெளியேறும்போது சில லாரிகளில் அவருடைய பொருட்களை அள்ளிச் சென்றாராம்.

தன்னுடைய குடும்பத்தினர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து போன செலவையே திருப்பிக் கொடுத்தவர் அப்துல் கலாம் அவர்கள்.  அதனால்தான் அவர் மறைந்து ஒரு ஆண்டு ஆகியும் இந்தியாவே இன்னும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறது.

கலாம் போன்றவர்களின் வாழ்க்கையை நாம் அடிக்கடி நினைவு கொள்வது வாழ்க்கையின் வெற்றி என்பது வீண் ஆடம்பரத்திலும் வெறும் பகட்டு வாழ்க்கையிலும் இல்லை.  எத்தனை பேரின் இதயங்களை நாம் தொட்டிருக்கிறோம்  என்பதில்  உள்ளது என்று உணர்வதற்குத் தான்.

அப்துல் கலாம் அவரகளின் "Transcendence" என்ற புத்தகத்தில் இருந்து சில சிந்தனைகள்.

The senses are not always reliable. Infinite intelligence does not err. quiet time spent in reflection; a life of rigour and austerity; simple service done at any place to help the poor, the deprived, the disadvantaged and the disabled - and aiding animals and the environment - are methods by which infinite intelligence may be most readily contacted.

In the good of others lies our own 
In the progress of others lies our own 
In the joy of others lies our own.

Sunday, July 3, 2016

நம்மைச் சுற்றியும் நாம்தான்

"ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி" என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வெளிவரும் தொடரில் கட்டுரை ஆசிரியர் திரு. ம. செந்தமிழன் பின்வரும் அகநானுற்றுப் பாடல் காட்சி ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

காதலியைக் காம உணர்வுடன் தழுவுகிறான் காதலன்.  அவனைத் தடுத்து விலக்கும் அந்த இளம்பெண் கூறுகிறாள், "தலைவா, இதோ இந்தப் புன்னைமரம் என் சகோதரி. அவளுக்கு எதிரில் என்னால் உன்னைத் தழுவ இயலாது. ஆகவே வேறு இடம் செல்வோம்".

சமீபத்தில் கண்ட ஒரு காட்சி.  ஒரு இளம்பெண்ணும் ஒரு வாலிபனும் மக்கள் நடமாட்டம் அதிகம் ஒரு தெருவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். தன்னைச் சுற்றி மக்கள் கவனிக்கிறார்கள் என்ற எந்த உணர்வும் இல்லாமல் அந்தப் பையன் அந்தப் பெண்ணின் கையை பிடித்து இழுப்பதும் அந்தப் பெண் அதை விலக்குவதுமாக இருந்தார்கள்.  அதைப் பார்த்த ஒரு பெரியவர் அவர்களிடம் ஏதோ கேட்கப் போனார்.  அதற்கு அந்தப் பெண் கோபத்தில் சொன்ன பதில் "This is our personal matter. Mind your business. 

இன்னொரு காட்சி.  ஒரு ஆட்டோவில் ஒரு காதல் ஜோடி வண்டியை ஓட்டும் ஓட்டுனரும் எல்லா உணர்வுகளும் உள்ள சராசரியான மனிதன் என்ற எந்த உணர்வும் இல்லாமல் காதல் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

மரங்களைக் கூட சக மனிதர்களாக கருதிய சமூகத்தில் வந்தவர்கள் நாம். அதே நாம்தான் இப்போது சக மனிதர்களை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் நமக்கென்று ஒரு தனியான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முன்பெல்லாம் நமக்கு தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால் என்ற அச்ச உணர்வு காதலர்களுக்கு இருக்கும்.  ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் எல்லா ஊர்களில் இருந்தும் படிப்பதற்கும் வேலைக்கும் வருவதால் அந்த அச்ச உணர்வெல்லாம் இப்போது குறைந்து விட்டது.

காதலையும் காமத்தையும் சுமந்து கொண்டுதான் இளமையைக் கடக்க வேண்டும்.  ஆனால் அதில் ஒரு sensitivity இல்லாவிட்டால் அது சில சமயங்களில் நம் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடக் கூடும்.

முன்பெல்லாம் திருமணம் நிச்சயம் செய்யும் வரை பெண்ணின் புகைப் படத்தைக் கூட கொடுக்க மாட்டார்கள்.  அதை அவ்வளவு சென்சிட்டிவிட்டியான விஷயமாக நினைத்தார்கள்.

இன்று விதவிதமான போட்டோக்களை தினந்தோறும் whatsapp லும் facebook லும் upload செய்கிறோம்.  அது யார் யாரிடம் போய் சேருகிறது என்று கூட நமக்குத் தெரிவதில்லை.  Photoshop மூலம் நம் படத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும்.  இதில் பெண்கள்தான் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.  ஏனென்றால் பாதிக்கப் படுவது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களை நாம் மிகவும் கவனத்துடன் கையாளவேண்டும். இல்லையென்றால் ஸ்வாதிகளையும், வினுப் பிரியாக்களையும் நாம் அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஸ்வாதியின் குடும்பத்துக்காக அனுதாபப்படும் அதே நேரத்தில்,  ராம் குமாரின் குடும்பத்தை நினைத்தாலும் அதிக வேதனையாக இருக்கிறது.

வறுமையின் விளிம்பில் வாழும் ஒரு சாதாரண குடும்பம்.  தன் மகன் நன்றாக படித்து குடும்பத்தினை மேல் நிலைக்கு கொண்டு வருவான் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு இடி அவர்கள் வாழ்க்கையில் விழுந்திருக்கிறது. கொலைகாரன் குடும்பம் என்ற பழி வேறு.   அவர்கள் குடும்பத்தைப் பற்றியும் ராம் குமாரைப் பற்றியும் அவன் ஊரில் நல்லவிதமாகவே கூறுகிறார்கள்.

ஸ்வாதி நம்மில் ஒருவர் என்றால் ராம் குமாரும் நம்மில் ஒருவர்தான்.  ஆண் பெண் உறவு மிகவும் சிக்கலாக உள்ள காலக் கட்டம் இது.   ஆண் பெண் உறவை matured ஆக handle செய்ய நாமும் கற்றுக் கொண்டு நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.  இதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மிகவும் அதிகம்.

ராம்குமாரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை தருவதற்கு சட்டம் இருக்கிறது.  ஆனால் ராம்குமார்களை உருவாக்கும் இந்த சமூகத்தின் குற்றத்துக்கு யார் தண்டனை வழங்குவது ?

Monday, June 13, 2016

உங்கள் வாசனை என்ன ?


இன்று மதுரையில் இருந்து நண்பர் திரு. செந்தில் phone செய்திருந்தார்.  என்ன sir உங்கள் blog-இல் ஒரு மாதமாக புதிதாக எதுவும் பதிவு செய்யவில்லையே. அடிக்கடி உங்கள் வலைதளத்தை எட்டிப் பார்த்து ஏமாந்து விடுகிறேன் என்று சொன்னார்.  நம்முடைய வலைதளத்தையும் தினமும் சிலர் பார்க்கின்றனர் என்பதே ஒரு பெருமைதானே.

நீங்கள் சொல்லும் விஷயம் எல்லோருக்கும் தெரிந்த பொதுவான விஷயமாக இருந்தாலும் உங்கள் எழுத்து நடை படிக்கும் போது சுவாரசியமாக இருக்கிறது என்றும் சொன்னார்.  இது போதாதா  நமக்கு.  ஒரு எழுத்தாளனுக்கு தேவையான அனைத்து சாமுத்ரிகா லட்சணங்கலுள் ஒரு சில நமக்கும் இருக்கிறது போலும் என்ற ஒரு சின்ன சந்தோஷம் எனக்கு. 

அவருக்காகவே இன்று ஒரு பதிவு.  

திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் "சிறிது வெளிச்சம்" என்ற நூலில் "வாசனையாக மாறுங்கள்" என்ற கட்டுரை ஞாபகம் வந்தது.  அதில் இருந்து சில வெளிச்சங்கள்.

"மனிதர்களின் தீராத வாசனையின் பெயர் சிரிப்பு.  குழந்தைகளின் சிரிப்பை பார்த்து இருக்கிறீர்களா ? காரணம் இல்லாத சிரிப்பு அது. குழந்தைக்கு நினைவுகள் இல்லை.  அது சிரிப்பை மட்டுமே தன் சந்தோஷத்தின் வெளிப்பாடாகக் கொண்டிருகிறது.

குழந்தைகள் சிரிக்கும்போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவில்லாதது. அப்படியான சிரிப்பு வளர வளரத் தேய்ந்து விடுகிறது.  பல நேரங்களில் சிரிப்பதற்காக இடம் தேடி, ஆள் தேடி அலைகிறோம்.  நடுத்தர வயதில் சிரிப்பை முழுமையாக கைவிட்டு விடுகிறோம்.

தீர்க்க  முடியாத நோய்களில் ஒன்று சிரிப்பை இழப்பது.  ஞானிகளும் குழந்தைகளும் சிரிப்பதற்கு காரணத்தை நாடுவதில்லை.   பனி உருகுவது போல சிரிப்பு அவர்களின் மனதில் இயல்பாக வெளிப்படுகிறது.

சிரிப்புக்கு ஒரு வாசனை இருக்கிறது.  அதை நுட்பமாக உணர்ந்தவர்கள் அறிந்து இருக்கிறார்கள்".   இப்படிப் போகிறது அந்தக் கட்டுரை.

இந்தக் கட்டுரையை படித்ததும் கண்ணை மூடி கொஞ்சம் சிந்தித்தேன். உண்மைதான் நாம் வாசனை என்று நினைப்பது எல்லாம் பொதுவாக அத்தர் ஜவ்வாது மற்றும் பல வாசனைத் திரவியங்களைத்தான்.  அதனால்தான் TMS கூட அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசியும் அங்கம் மணக்கவில்லையே என்று மனம் உருகப் பாடினார்.

இத்தகைய வாசனைத் திரவியங்கள் நம்முடைய வியர்வை நாற்றத்தில் இருந்து வேண்டுமானால் நம்மை கொஞ்சம் பாதுகாக்கலாம்.

ஆனால் நம்முடைய வாசனை என்பது அதற்கும் சற்று மேலே.

சிலர் ஏதோ ஒரு வகையில் நம்மை ஈர்த்துக் கொண்டிருப்பார்கள்.  சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அருகில் சென்று பழகும்போது விலகி ஓடும்படி செய்து விடுவார்கள்.  

யோசித்துப் பார்த்தால் நம்முடைய எண்ணங்கள் நம்மைச் சுற்றி ஒரு வாசனையை உருவாக்கி விடுகிறது.  மூக்கினால் நுகர முடியாத அந்த வாசனை பிறரை நம்மை நோக்கி இழுக்கிறது அல்லது நம்மிடம் இருந்து விலக வைக்கிறது.

ரமண மகரிஷி போன்ற மகான்களின் புன்முறுவல் பூக்கும் அந்த முகங்களின் வாசனை இன்றும் நம்மை அவர்கள் இருந்த இடங்களை நோக்கி இழுக்கிறது.

நாமும் அப்படிப்பட்ட வாசனையைப் பெற கொஞ்சமாவது முயற்சி செய்வோம்.  அதற்கு பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம்.  யாரிடமும் நெஞ்சில் வஞ்சம் இல்லாமல் பழகத் தெரிந்தால் போதும்.  உங்கள் புன்னகை தந்திரப் புன்னகையாக இல்லாமல் இருந்தால் மந்திரப் புன்னகையாக மாறும். (அடப் பாவி அதுதானே கஷ்டம் என்று சொல்கிறிர்களா ? அதுவும் சரிதான்).  ஆனால் முயற்சி திருவினையாக்கும்.





Wednesday, May 18, 2016

நல்லாட்சி அமையட்டும்

தேர்தல் நாளன்று நம் விரலில் வைக்கப்பட்டு மிச்சம் இருக்கும் மை பின் வரும் நாட்களில் பெரும்பாலும் நம் முகத்தில் .பூசப்பட்டு விடுகிறது அரசியல்வாதிகளால் / ஆட்சி செய்பவர்களால்.

ஆனால் இனிமேல் யார் ஆட்சிக்கு வந்தாலும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்க வேண்டியிருக்கும்.  ஏனென்றால் மக்களின் political awareness அதிகமாகிக்கொண்டே வருகிறது.  இது ஒரு நல்ல விஷயம்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மது விலக்கு என்று கூறியதற்கு மக்களின் இந்த awareness தான் காரணம்.  Social Media  கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் வைகோ விஜயகாந்த் என்று யாராக இருந்தாலும் மீம்ஸ் போட்டு நோகடித்து விடுகிறார்கள்.  மக்கள் நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே அரசியல்வாதிகளுக்கு ஒரு அச்சுறுத்தல்தான்.  

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தேனாறும் பாலாறும் ஓடப் போவதில்லை. நம் சோற்றுக்கு நாம்தான் உழைக்க வேண்டும்.  

நாம் எதிர்பார்ப்பது எல்லாம் ஊழலற்ற திறமையான நிர்வாகம்,  நீர்நிலை ஆதாரங்களைப் பெருக்கி சுத்தமான ஆரோக்கியமான நீர், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்புக்கள் அல்லது சுய தொழில் வாய்ப்புக்கள், அமைதியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் போன்றவைதான்.   இவற்றை ஒரு அரசாங்கத்தால்தான் கொடுக்க முடியும்.   இவற்றை அளிக்க முயன்றதால்தான் நாம் இன்னும் காமராஜர் ஆட்சியை நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

வரும் ஆட்சி இந்த அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று நம்புவோம்.

நம் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு ஒரு like வைப்போம். இவ்வளவு பண பலம், அதிகார பலம் மிக்க அரசியல்வாதிகளுக்கு இடையில் முடிந்த வரையில் தன்னுடைய கடமையை ஒழுங்காகவே செயதிருக்கிறார். அதற்கு அமைதியாக நடந்து முடிந்த தேர்தலே சாட்சி.  சபாஷ் லக்கானி.

நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்கு அளித்திருக்கலாம். ஆனால்  மீண்டும் துளிர்க்கப் போவது இலையோ  அல்லது மீண்டும்  உதிக்கப் போவது சூரியனோதான் .

நாளை சூரிய உதயத்தில் தெரிந்து விடும்.  பொறுத்திருப்போம்.




Saturday, May 7, 2016

பறவையின் நிழல்


நேற்று (6/05/2016) மயிலாப்பூர் CIT காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் திரைப்பட இயக்குனரும் வசனகர்த்தாவுமான திரு. பிருந்தா சாரதியின் இரு கவிதை நூல்கள் (ஞாயிற்றுக் கிழமைப் பள்ளிக்கூடம் மற்றும் பறவையின் நிழல்) வெளியீட்டு விழா Discovery Book Palace சார்பில் நடைபெற்றது.

பட்டிமன்ற பேச்சாளர் திரு கு. ஞானசம்பந்தன், எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன்,   இயக்குனர் திரு லிங்குசாமி, நடிகர் திரு நாசர், ஓவியர் ட்ராட்ஸ்கி திரு. மருது, இயக்குனர் திரு ராஜு முருகன், கவிஞர்கள் திரு அறிவுமதி, திரு யுக பாரதி மற்றும் பல கவிஞர்களும் அறிஞர்களும் கலந்து கொண்ட அறிவார்ந்த சபையாக இருந்தது.

விழா குறித்த நேரத்தில் துவங்கவில்லை என்ற குறையைத் தவிர (அதற்குக் தகுந்த காரணமும் இருந்தது) மற்ற எல்லா விஷயங்களும் மிகச் சிறப்பாக இருந்தன.  நிறைய பேர் பேசினாலும் வளவள என்று பேசாமல் சுவையாக பேசினார்கள்.  

சில சமயங்களில் (அல்லது பல சமயங்களில்) எதிர் பாராமல் நடக்கும் சில விஷயங்கள் மனதிற்கு மிகவும் திருப்தி அளிக்கும். அப்படி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்தி இருந்தது.  Discovery Book Palace திரு வேடியப்பனுக்கு நன்றி. அவர்தான் என்னை கட்டாயம் கலந்து கொள்ளச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்.

வேடியப்பன் பிருந்தா சாரதியை என்னிடம் அறிமுகம் செய்து வைத்த போது அவர் குறித்த எந்தத் தகவலும் என்னிடம் இல்லை.  அதனால் casual ஆக ஒரு ஹலோ சொல்லி அவரைக் கடந்து விட்டேன்.  ஆனால் அவரைக் குறித்து விழாவில் கலந்து கொண்ட எல்லா ஆளுமைகளும் உயர்வாக பேசியதும், அவரது கவிதைகளை புகழ்ந்ததும்  உடனே அவரது கவிதைகளைப் படிக்கத் தூண்டியது.

பறவையின் நிழல்  என்ற புத்தகத்திலிருந்துஅவரது ஒரு காதல் கவிதை :

என் எதிரி என்று ஒருவனைக் காட்டினார்கள் நண்பர்கள் 
புரியாமல் கேட்டேன் யார் அவன் என
உன்னைக் காதலிப்பவனாம்.
உன்னைக் காதலிப்பவன் எனக்கு எப்படி எதிரியாக முடியும் 
அவனிடம் அறிமுகம் செய்து கொண்டு 
அவனுக்கும் சேர்த்து நான் உன்னைக் காதலிப்பதாகக் கூறி 
விலகிக் கொள்ள வேண்டினேன் 
அவனும் அதையே கூறுகிறான் என்னிடம் 
எங்களிருவரில் நீ யாரைத் தேர்ந்தெடுத்தாலும் 
இருமடங்கு காதல் கிடைக்கும் உனக்கு.

இந்தக் கவிதையை விமர்சிக்கும் கவிஞர் ஜெயபாஸ்கரன் இப்படி சொல்கிறார்.  தனக்கு கிடைக்காத பெண் மீது ஆசிட் வீசும் கோட்பாடு நிலைபெற்று அது அவ்வப்போது ஆங்காங்கே கொடூரமாக நடக்கும் இந்தக் காலத்தில் அந்த இழிவு கலாசாரத்திற்கான ஓர் அறிவார்ந்த விடையாக இந்தக் கவிதையை நான் பார்க்கிறேன்  என்று.

உண்மைதான்.  நம் அன்பு பெரும்பாலும் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே அடங்கி விடுகிறது.  ஒருவர் மேல் நாம் கொள்ளும் அன்பு அவரின் மீதோ அல்லது தன்  மீதோ அல்லது அவரின் பொருட்டு வேறு ஒருவரின் மீதோ வெறுப்பை வளர்த்தால் அந்த அன்பினால் என்ன பயன் ?   கட்டிப் பிடித்துக் கொண்டு காறித் துப்பிக் கொள்வதற்குப் பதில், விலகி இருந்து நேசிப்பது உத்தமம்.

உடலைக் கொண்டாடும் காதல் கவிதைகளுக்கு இடையில் உள்ளங்களின் சிலிர்ப்பை கொண்டாடும் இத்தகைய காதல் கவிதைகள் மனதிற்கு இதமாக இருக்கின்றன.

வாழ்த்துக்கள் பிருந்தா சாரதி.  வேடியப்பன், இலக்கியத் தரமான இத்தகைய வெளியீடுகளை நம் Discovery Book Palace தொடர்ந்து செய்ய என் வாழ்த்துக்கள்.








Saturday, April 23, 2016

நம் ஓட்டு யாருக்கு ?


இன்று (23/04/2016) The Hindu நாளிதழில் திருச்சி லால்குடி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் திரு. ஜெயசீலன் அவர்களைப் பற்றிய ஒரு செய்தி வந்திருந்தது.

25 வருடங்களுக்கு மேல் கட்சியில் உறுப்பினராக இருக்கும் 49 வயதான திரு. ஜெயசீலன் வசிப்பது வெறும் 210 சதுர அடி வீடு. இது வரை அவரது பெயரில் வங்கிக் கணக்கு இல்லை.  அவரது 76 வயது தாயார் 100 நாள் தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் ஒரு சாதாரண தொழிலாளி.  மனைவி தனியார் பள்ளி ஆசிரியை.

இவரும் முதுகலை பட்டம்  பெற்று இருக்கிறார்.

இதுவரை லால்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கிறார்.

ஒரு கட்சியில் சேர்ந்து சில வருடங்களிலேயே சொகுசு கார், ஆடம்பர வீடு என்று ஊரை வளைத்து உலையில் போடும் "மாண்புமிகுக்கள்" மிகுதியாக இருக்கும் நம் ஊரில், இன்றும் கட்சி ஊதியமாக அளிக்கும் சில ஆயிரம் ரூபாயில் தன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

25 வருடங்களுக்கு மேலாக மிகவும் simple ஆக வாழ்ந்த ஒருவர் கண்டிப்பாக தன்னுடைய பதவியையும் மக்கள் சேவைக்காகவே பயன்படுத்துவாரே தவிர கொள்ளை அடிக்கும் வியாபாரமாக நினைக்க மாட்டார்.

நாம் எந்த ஒரு கட்சியையும் சாராத நடு நிலை (??) வாக்காளராக இருந்தாலும், பொதுவாக நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கட்சியின் மீது அபிமானம் இருக்கும்.  அல்லது யார் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதை வைத்து அவருக்கு ஓட்டு போடுவோம். 

இந்த முறையாவது நம்முடைய தொகுதியில் நிற்கும் ஒவ்வொரு வேட்பாளரையும் அலசி ஆராய்ந்து யார் உண்மையில் தகுதியானவர் என்று நினைக்கிறோமோ அவர்களுக்கு நம் வாக்கை செலுத்துவோம்.  அவர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் பரவாயில்லை அல்லது அவர்கள் வெற்றி அடைய வாய்ப்பு இல்லையென்றாலும் பரவாயில்லை. 

ஜெயசீலன் போன்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவது நாட்டுக்கும் நமக்கும் நல்லது.