Thursday, October 18, 2018

உண்மையான வெற்றி என்பது .....


”பெருங்கடல் நீங்கள்
அலைகளாய் நாங்கள்
ஆர்ப்பரித்து தொடர்வோம்”

இந்த வரிகளை சில நாட்களுக்கு முன் செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள்.  சங்கள் IAS அகடமியின் நிறுவனர் திரு. சங்கர் அவர்களைக் குறித்த நினைவுக் குறிப்புதான் அது.

நன்றாக பறந்து கொண்டிருந்த பட்டம் திடீரென்று அறுந்து சென்றுவிட்டது.
நம்மில் பலர் தோல்விகளைக் கூட சுலபமாக தாண்டிவந்துவிடுகிறார்கள்.  ஆனால் வெற்றியைத்தான் கையாளத் தெரிவதில்லை.  ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய அவரால் தனக்கான நம்பிக்கையை தனக்ககு கொடுக்கத் தவறவிட்டுவிட்டார். 

வெற்றிகாக நாம் எந்த விலையை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்பதற்காக நம்முடைய வாழ்க்கையையே அதன் விலையாகக் கொடுத்துவிடக் கூடாது.

சமீபத்தில் பாவ்லோ கோயலோ (Paulo Goelho) எழுதிய “Manuscript Found in Accra” என்ற புத்தகத்தில் உண்மையான வெற்றி என்றால் என்பதற்கு சிந்தனையைத் தூண்டும் சில கருத்தக்களை கூறியிருந்தார்.  எல்லாம் நம் முன்னோர் சிந்தனைகள்தான்.  வெவ்வேறு வடிவங்களிலும் வெவ்வேறு வார்த்தைகளிலும்.

புத்தகத்தின் சில பக்கங்கள் என் மொழியில்.

வெற்றி என்றால் என்ன ?

யார் தன்னுடைய வாழ்க்கையை எப்போதும் மற்றவர்களுடைய வாழ்க்கையோடு ஓப்பிட்டுக் கொண்டிருக்காமல், தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தன்னுடைய முழுத்திறனை வெளிப்படுத்துகிறார்களோ அவர்களிடம் வெற்றி வந்து சேர்கிறது.

நீங்கள் வாழ்க்கையில் துணிந்து எடுக்கும் முடிவுகளால் தவிர்க்க முடியாத சில தோல்விகள் ஏற்படும்போது துவண்டு விடமாட்டீர்கள். சென்றதையே நினைத்து நேரத்தினை வீணாக்க மாட்டீர்கள்.

வாழ்க்கையில் ஏற்படும சில வெற்றிகளிலேயே உங்கள் பயணத்தினை நிறுத்திவிட மாட்டீர்கள்.  ஏனென்றால் உங்கள் இலட்சியத்தினை அடைவதற்காக நீங்கள் இன்னும் உழைக்க வேண்டியுள்ளது.

தட்டுஙகள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்.  யார் மற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறார்களோ அவர்களுக்கு மற்றவர்கள் ஆறுதலாக இருப்பார்கள்.  இது இயற்கை நியதி.

உங்கள் இலட்சியம் எதுவாக இருந்தாலும் அதை நோக்கிய பயணத்தில் நீ்ங்கள் கண்ணும் கருத்துமாக இருந்தாலும், இடையிடையே கொஞ்சம் ஓய்வெடுத்து உங்களை சுற்றியிருக்கும் சின்னச் சின்ன சந்தோஷ தருணங்களையும் அனுபவித்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.   வாழ்வை உற்று நோக்கும்போதுதான் நாம் இதற்குமுன் கவனிக்க மறந்த பல விஷயங்கள் நம் கண்ணுக்குப் புலப்படும்.

வாழ்க்கையில் குறுக்கு வழி என்று எதுவும் இல்லை. உங்கள் ஒவ்வொரு செயலும் நீங்கள் செல்லும் பாதையை மிகவும் அழகானதாகவும் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் ஆக்கட்டும்.

காலத்தின் எஜமானராக இருக்க முயலாதீர்கள்.  முழுமையாக பழுக்கும்வரை காத்திருக்காவிட்டால் சுவையற்ற காயைத்தான் பறிக்க முடியும்.  பழுத்த பிறகும் பறிக்காவிட்டால் யாருக்கும் பயனளிக்காமல் போய்விடும்.  அதனால் வாழ்க்கையில், விதைப்பதற்கும் அறுவடைக்குமான சரியான காலத்தினை மதித்து நடங்கள்.

என்னைவிட நிறைய பேர் மிகவும் புகழுடன் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். அதில் பலர் அந்த புகழுக்கு மிகவும் பொருத்தமானவர்கள்கூட.  ஆனால் பலர், தற்பெருமையாலும் வீண் ஆடம்பரத்தினாலும் தங்களை புகழுடையவர்கள் போல காட்டிக் கொள்கிறார்கள்.  ஆனால் கால ஓட்டத்தில் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.

அப்படியானால் உண்மையான வெற்றி என்றால் என்ன ?

உண்மையான வெற்றி என்பது ஒவ்வொரு நாளும் நம் மன அமைதியுடன் படுக்கைக்குச் சென்று உறங்குவதுதான்.

ஆங்கிலத்திலேயே படிக்க விரும்புவர்களுக்கு பாவ்லோ கோயலோவின் வரிகளிலேயே.....

What is Success ?

Success comes to those who do not waste time comparing what they are doing with what others are doing; it enters the house of a person who says, "I will do my best" every day.

You were not paralyzed by the defeats that are inevitable in the lives of those who take risks.  You did not sit agonizing over what you lost when you had an idea that didn’t work.

You didn’t stop when you experienced moments of glory, because you had not yet reached your goal.

To he who knocks, the door will open.  He who asks will receive. He who consoles knows that he will be consoled.

You must always have a goal in mind, but as you go along, it costs nothing to stop now  and then to enjoy the view around you. As you advance step by step, you can see a little further into the distance, and take the opportunity to discover things you had not even noticed before.

Do not try to make the road shorter, but travel it in such a way that every action leaves the land more fertile and the landscape more beautiful.

Do not try to be the Master of Time.  If you pick the fruit you planted too early, it will be green and give pleasure to no one.  If, out of fear or insecurity, you decide to put off the moment of making the Offering, the fruit will have rotted.

Therefore respect the time between showing and harvesting.

I am aware that there are many people more famous than me, and, often, that fame is richly deserved. In other cases, it is merely a manifestation of vanity or ambition, and will not stand the test of time.

What is success ?

It is being able to go to bed each night with your soul at peace.

Sunday, August 5, 2018

கல் எறியும் குளம்


நான் வலைப்பதிவில் எழுதுவதற்கு ஒரு மாதம் இடைவெளி வந்து விட்டால் என் மனதில் அடிக்கடி வந்து போகும் நண்பர் மதுரை செந்தில்தான்.  அவர்தான் போன் செய்து ஏன் சார் கொஞ்ச நாளாக எதுவும் எழுதவில்லை.  அடிக்கடி எழுதுங்கள் சார் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.  நானும் தொடா்ந்து எழுத வேண்டும் என்று நினைப்பதோடு சரி.  தினமும் ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்து அலாரம் வைத்து காலையில் சரியாக ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கும்போது அதன் தலையில் தட்டிவிட்டு எப்போதும் போல் ஆறு மணிக்கு எழுந்திருப்பதுபோல், எழுதும் நினைப்பை ஏதோ ஒரு வேலை தட்டிச் சென்றுவிடுகிறது.  அதற்கு என்ன காரணம் சொன்னாலும் அது நொண்டிக் காரணம்தான்.

என் எழுத்தை எப்போதும் நான் கண்ணதாசன் எழுத்தாகவோ அல்லது வண்ணதாசன் எழுத்தாகவோ எண்ணிக்கொள்வதில்லை.  ஆனால் இவர்களின் எழுத்துக்களை படிக்கும்போது எனக்கு ஏற்படும் சில தெளிவுகளையும், நம்பிக்கைகளையும் பிறருக்குப் பகிர்ந்தால், படிக்கும் சிலருக்கும் வாழ்க்கையின் நம்பிக்கை விதைகளை விதைக்க முடியும் என்ற ஆவல்தான் என்னை எழுதத் தூண்டுகிறது.  அதுவும் தவிர இரமண மகரிஷியின் ”பிறர்க்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்” என்ற வார்த்தைகள் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் வார்த்தைகள்.  நல்லதோ, கெட்டதோ பிறருக்கு நாம் என்ன கொடுக்கிறோமோ அது நமக்கே கொடுத்துக்கொள்வதுதான்.  So, பிறருக்கு நான் கொடுக்கும் நம்பிக்கை என்பது ஒருவகையில் எனக்கே நான் கொடுத்துக் கொள்ளும் நம்பிக்கைதான்.  நான் உண்டு பசியாறிய பிறகுதான் உங்களுக்கு பரிமாறுகிறேன்.  பிடிப்பதும் பிடிக்காதும் உங்கள் பசியைப் பொருத்தது.

இன்று ”கல்யாண்ஜி கவிதைகள்” புத்தகத்தினை மேய்ந்து கொண்டு இருந்தபோது நிறைய கவிதைகளை “புக்மார்க்“ செய்து வைத்தேன். அதில் ஒரு கவிதையை இன்று பதிவிடலாம் என்று நினைத்தேன்.

அந்தக் கவிதை

இந்த பௌர்ணமி இரவில்
தனியாக
எந்தக் குளத்தின் கரையிலாவது
அமர்ந்து
கல் எறிய வேண்டுமென இருக்கிறது.
எந்தக் குளமும் இல்லை அருகில் –
மனக்குளம் தவிர.
ஏற்கனவே எறிந்த கற்களால்
அலையடித்துக் கொண்டிருக்கும் அது
இந்த நிலவிரவில் சற்று
அடங்கினால் நல்லது.
போக
கல்லெறிகிற ஆசை
இருக்கும் வரைக்கும்
கலங்கும் தானே எல்லாக் குளமும்.

ஒரு நல்ல கவிதையோ அல்லது எழுத்தோ எழுதுபவனின் எண்ணத்தைத்தான் பிரதிபலிக்க வேண்டுமென்ற கட்டயாமில்லை.  படிப்பவனின் மனநிலைக்குக் தகுந்தமாதிரி வேறுமாதிரியும் பொருள் கொடுக்கலாம். 

ஒரு முறை கண்ணதாசனின் வாசகர் ஒருவர் அவரின் ஒரு கவிதையைச் சுட்டிக்காட்டி அதன் பொருள் இதுதானே என்று கேட்டதற்கு  கண்ணதாசன் ”ஓ அப்படி ஒரு பொருள் இருக்கிறதா.  அப்படியும் வைத்துக்கொள்ளலாம் என்றாராம். 

அதனால் கல்யாண்ஜியின் இந்தக் கவிதை உங்களுக்கு எந்த மாதிரியான புரிதலைக் கொடுத்தாலும் சரிதான்  அதற்காக கல்யாண்ஜி நம்மீது கோபப்பட மாட்டார்.

இந்தக் கவிதையைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது இதுதான்  நாம் மனம் நிறைய ஆசைகளை அடுக்கிக் கொண்டு மனம் அடங்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறோம். ”ஏற்கனவே எறிந்த கற்களால் அலையடித்துக் கொண்டிருக்கும் அது இந்த நிலவிரவில் சற்று அடங்கினால் நல்லது” என்று நினைத்தாலும் மீண்டும் கல் எறியத்தான் ஆசைப்படுகிறோம்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பத்துப் பொருட்களை நினைவில் கொண்டு வாருங்கள்.  அவற்றில் எந்தப் பொருள் இல்லாமல் நம்மால் எப்போதும் போல் வாழ முடியும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.  எனக்கு அப்படி எந்தப் பொருளை யோசித்தாலும் அது இல்லாமல் வாழ முடியும் என்றுதான் தோன்றுகிறது.

வணிகமயமாகிவிட்ட நுகர்வுக் கலாசாரத்தில் நம்மீது பொருட்கள் திணிக்கப்பட்டுகொண்டே இருக்கின்றன. 

கைகள் போதாமல் நாம் குளத்தில் கற்களை எறிந்து கொண்டே அமைதியையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.  அதனால்தான் அமைதியையும் ஒரு பொருளாக நமக்கு விற்கும் வியாபாரிகள் பலர் ”ஆன்மீகவாதிகளாக” அலைந்து கொண்டிருக்கிறார்கள்.




Sunday, June 24, 2018

வழி



மனதின் பலவீனமான நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் அல்லது நமது செயல்கள் எப்படி நம்மை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுவிடும் என்பதை அடிநாதமாக  கொண்டு சொல்லப்பட்ட கதைதான் சுந்தர ராமசாமியின் ”வழி” என்ற சிறுகதை.

இந்தக் கதையின் நாயகன் ஒரு மலையருவியில் குளித்துவிட்டு வரும்போது பக்கத்தில் எங்கோ மிருகங்கள் புணரும் சத்தம் கேட்டவுடன் அந்தக் காட்சியை காணும் ஆவலுடன் அந்த சத்தம் வரும் திசையை நோக்கி செல்லத் துவங்குவான்.

எப்போதும் நாம் ஒரு தவறான வழியில் செல்ல முற்படும்போது, இயற்கை அதை ஏதோ ஒரு வகையில் நமக்கு உணா்த்த முயலும்.  நமது மனதின் பலவீனத்திலிருந்து அப்போது நம்மால் வெளியே வர முடிந்தால் நமக்கு வரக்கூடிய ஆபத்திலிருந்து நம்மால் தப்பித்துக் கொள்ள முடியும்.

இந்தக் கதையிலும் கதையின் நாயகனுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.  இவனுடன் அருவியில் குளித்துவிட்டு தலை துவட்டிக் கொண்டிருந்த பெரியவா் ஒருவர், இவன் அருவியின் பின்பக்கம் செல்வதைப் பார்த்துவிட்டு ”வேண்டாம் ஐயா” என்பார்.

”அந்தக் குரலும் அதில் தோய்ந்திருந்த வேண்டுதலும் அன்பும் இப்போதும் என் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.  அந்தக் குரலைத் தாண்டி நான் சென்ற நிமிஷத்தில் பிசகு நிகழ்ந்தது.  அதன் பின் என் அடிச்சுவடுகள் குரங்குகள் விளையாடிய நுால் கண்டு மாதிரி சிடுக்காகி விட்டன.

ஒரு சில எட்டுகளில் புணர்ச்சியின் காட்சி சொரூபம் கிடைத்துவிடும் என்ற கிளுகிளுப்பின் எச்சிலை மனது நக்கியது எவ்வளவு தவறு என்பது இப்போது தெரிகிறது”.

காடு எந்த அளவுக்கு அழகானதோ, அதை விட அதிகம் ஆபத்துக்கள் நிறைந்தது.

நம் மலைப்பயணங்களில் தூரத்தில் யானைக்கூட்டம் பார்ப்பதற்கு எவ்வளவு பரவசம் தருமோ அதை விட அதிக கிலியை தரும் அவை நாம் செல்லும் பாதையின் குறுக்கே வந்து நம்மை பயமுறுத்தினால்.  மழைக்காற்றின் சுகத்தினை அனுபவிக்க கீழே இறங்கி நின்ற நேரத்தில் காலில் ஏறி நம் இரத்தத்தினை உறிஞ்சம் ஒரு அட்டைகூட நமக்கு மரணபயத்தினை கொடுக்கலாம்.

காட்டில் வழி தவறி சிக்கிக் கொண்டால் அதிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதல்ல.  நாம் நன்கு பழகிய நம் வீட்டிலேயே திடீரென்று மின்சாரம் தடைப்பட்டால் வாசல் என்று நினைத்து சுவற்றில் முட்டிக் கொள்வோம். மனித நடமாட்டமே இல்லாத மிருகங்கள் மட்டுமே சஞ்சரிக்கும் காட்டில் எப்படி இருக்கும். நகரமே பகலில் ஒரு மாதிரியும் இரவில் வேறுமாதிரியும் இருக்கும்.  காட்டின் இரவு இன்னும் அதிக ஆபத்துக்கள் நிறைந்தது.

இந்தக் கதையின் நாயகன் வெளியே வரும் பாதை என்று நினைத்து அடா்ந்த காட்டின் உள்ளே சென்று மாட்டிக்கொள்வான். அவனுக்கு இருப்பது பகலின் சில மணிநேரங்கள்தான்.  அதற்குள் அந்தக் காட்டிலிருந்து வெளிவரா விட்டால் அவனுடைய உயிருக்கே அது மிகவும் ஆபத்தாகிவிடும். அந்த அவஸ்தைகளை விளக்குவதும் பின் அதிலிருந்து மீண்டு வருகிறானா என்பதும்தான் கதை.

இந்தக் கதையில் காட்டின் வர்ணணைகளும், கதையின் இடையிடையே கதை நாயகனின் எண்ண ஓட்டங்களுமே கதையினை நகர்த்திச் செல்கிறது.

மிருகங்கள் வாழும் காட்டையும், மனிதா்கள் வாழும் நாட்டையும் ஒப்பிட்டுச் சொல்லுமிடத்தில் நான் சுந்தர ராமசாமியை ரசித்தேன்.

”காடு அந்தகாரத்தின் அடா்த்தி கொண்டிருந்தாலும், ஆபத்துக்களின் களி நிலம் என்றாலும், ஊா்களை விட அவை மோசமானவை என்று சொல்ல முடியாது.  அறிய அறிய மிருகங்களும் பறவைகளும் நியதிகளும் ஒழுக்கங்களும் நோ்மையும் கொண்டவையாக மாறும்போது, அறிய அறிய மனிதர்கள் அறிய முடியாத சிக்கல்களை கொண்டிருக்கிறார்கள் என்றுதான்படுகிறது.  மிருகங்களுக்கு வழிவிட்டு மனிதன் வாழத் தெரிந்துகொள்ளும்போதுகூட, மனிதர்களுக்கு வழிவிட்டு ஊர்களில் எப்படி வாழ்வது என்பது மனிதனுக்குத் தெரியவில்லை.”

அதைப்போலவே எப்படியும் பிழைத்து அந்தக் காட்டிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற தீராத மன உறுதியை கதையின் நாயகன் வெளிப்படுத்தும் இடத்தையும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளில் எழுத்தாளர் வெளிப்படுத்தியிருப்பார்.

”என் உள்மனதில் எரிந்துகொண்டிருக்கும் ஜ்வாலை அணையாமல் இருந்தால் உணவற்ற நிலையிலும் உடல் வலியிலும் ரணங்களிலும் நான் நடந்து கொண்டுதான் இருப்பேன். நான் வாழ்ந்தாக வேண்டும்.  நான் யாருக்காகவும் என் வாழ்க்கையை இழக்க முடியாது”.

எழுத்தின் வலிமை என்பது இதுதான்.  இந்தக் கதை 1986-ம் ஆண்டு கொல்லிப்பாவை என்ற இதழில் வெளிவந்தது.  ஆனால் இப்போதும் எப்போதும் எங்கோ படிக்கும் வாசகனுக்கும் அதிலிருந்து ஒரு நம்பிக்கை கீற்று வெளிப்படலாம்.

Saturday, May 19, 2018

ஆல்கஹால் என்ற ஆட்கொல்லி



முருகன் எனக்கு ஒன்றுவிட்ட அண்ணன் (என் பெரியப்பா மகன்). சிறுவனாக இருந்தபோது அவரின் மிகுந்த அன்புக்கு உரியவன் நான். நான்தான் படிக்கலை.  நீயெல்லாம் நல்லாப் படித்து பெரிய ஆளா வரணும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்.  எம்ஜியாரின் தீவிர ரசிகா்.  வீட்டின் சுவரெல்லாம் மன்னாதி மன்னன், நாடோடி மன்னன், மீனவ நண்பன் என்று பலவாறு எம்ஜியார் சிரித்துக் கொண்டிருப்பார்.  என் அண்ணனும் உடலை நன்கு பார்த்துக் கொள்வார்.  இப்போது போல் அப்போதெல்லாம் ஜிம்முக்கு போகாமலேயே ஜம்மென்று இருப்பார்.  அவா்கூட இருக்கும் நேரங்களில் மிகவும் பாதுகாப்பாக இருப்பது போன்று ஒரு உணா்வு இருக்கும்.

அவருக்கு எப்போது குடிப்பழக்கம் ஏற்பட்டது என்று தெரியாது.  அவரது உடல் கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலையத் தொடங்கியது.  70 அல்லது 80 வயதுக்குப் பிறகும் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்க வேண்டியவா் 35 வயதிலேயே முழுவதுமாக உருக்குலைந்து விட்டார்.  கடைசியில் அவரை மருத்துவமனையில் பார்த்தபோது அவா் கண்கள் கலங்கியிருந்தன.  ”நல்லா படிப்பா” என்று கரகரத்த குரலில் சொன்னபோது அவா் இந்த உலகத்தினை விட்டு நழுவிக்கொண்டிருந்தார் என்று எனக்கு அப்போது புரியவில்லை.

மதுவுக்கு அடிமையாகாமல் இன்றும் அவா் இருந்திருந்தால் அவா் குடும்பத்துக்கும் எங்களுக்கும் மிகப்பெரிய பலமாக இருந்திருப்பார்.

மதுவின் வாடை எனது மனதுக்கு எப்போதும் செல்லக்கூடாது என்று நான் எடுத்த முடிவுக்கு முக்கிய காரணம் என் முருகன் அண்ணன்தான்.

அடுத்து நான் பணிபுரிந்த அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிந்த நண்பர் ஷமிம்.  இவர் ஒரு முன்னாள் இராணுவ வீரா்.  ஆள் பார்ப்பதற்கு நல்ல வாட்டசாட்டமாக இருப்பார். எங்கள் அலுவலகத்தில் அட்மின் அதிகாரியாக பணிபுரிந்தவா்.  அவா் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு எப்போதும் பஞ்சமிருக்காது.  நல்ல மனிதர்.  அவரும் கொஞ்சம் கொஞ்சமாக குடியில் தன்னை இழந்தவா்தான்.

அந்த நிறுவனத்திலிருந்து நாங்கள் விலகியபோதும் இருவருக்குமான நட்பு தொடா்ந்தது.  சில ஆண்டுகளுக்கு முன் அவரை சந்திக்க நோ்ந்தபோது அவரும் குடியில் தன்னை முழுவதுமாக இழந்திருந்தார்.  என்னை பார்த்த போது கடனாக கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது என்று சொன்னார்.  அவரால் திருப்பிக் கொடுக்கமுடியாது என்று தெரிந்தும் அவா் எதற்காக அந்தப் பணத்தை கேட்கிறார் என்று தெரிந்தும் நட்புக்காக அவா் கேட்ட பணத்தினை கொடுத்தேன்.  அதற்குப் பிறகு அவரை சந்திக்கவே இல்லை.  

அன்பான குடும்பம் நல்ல குழந்தைகள் என்று இருந்தும், நீண்ட ஆண்டுகள் நலமாக வாழ்ந்திருக்கவேண்டியவா் இன்று இல்லை.

இந்தப் பதிவை இப்போது எழுதுவதன் முக்கிய நோக்கம், இன்று இந்தியாவிலேயே அதிக மதுப்பழக்கம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு வந்து கொண்டிருக்கிறது என்ற செய்திதான்.  குடிப்பழக்கம் என்பது காலம் காலமாக இருந்து வருவதுதான்.  ஆனால் தெருவுக்கு தெரு டீக்கடைகளை போல் டாஸ்மாக் கடைகள் இருப்பதும், இருபது வயதுகூட நிரம்பாத சிறுவா்களும், நடுத்தர வயது ஆண்களும் எந்தவிதமான உறுத்தலுமின்றி நடுத்தெருவில் நின்று குடித்துக் கொண்டு இருப்பதை பார்க்கும்போது எத்தனை ஆயிரம் முருகன் அண்ணாக்களும் ஷமிம்களும் தங்கள் குடும்பத்தை நிர்க்கதியாக விட்டுச் செல்வார்களோ என்ற பதட்டம் ஏற்படுகிறது.

”கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு  எத்தனை நாளைக்கு தான் தன்னை பாதுகாத்துக் கொள்ளமுடியும்” என்று சொல்லி 1971-ம் ஆண்டு மதுவிலக்கை தளர்த்திய கருணாநிதியும், ”என் இறுதி மூச்சு  இருக்கும் வரை  மதுவிலக்குக் கொள்கையை நான் நிறைவேற்றுவேன் என்று என்னைப் பெற்ற அன்னை மீது உறுதி எடுத்துக்கொள்கிறேன்” என்று சொல்லிய இரண்டே ஆண்டுகளில் மதுவிலக்கினை தளர்த்திய எம்ஜியாரும், ”மதுவிலக்கினை படிப்படியாக கொண்டுவருவோம்” என்று சொல்லி மறுபடியும் ஆட்சிக்கு வந்து இன்று வரை ஒருபடிகூட ஏறாத இன்றைய அதிமுக அரசு என்று எல்லோரும்தான் இன்றைய தமிழக நிலைக்குக் காரணம். தமிழகத்துக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்பதெல்லாம் ஒரு வடிகட்டிய பொய். ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கிடைக்கும் கோடிக்கணக்கான பணம்தான் இப்படி தமிழகத்தை சீரழிப்பதற்கு முக்கிய காரணம்.

முழுமையான மதுவிலக்கு என்பது கண்டிப்பாக நடைமுறையில் அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை.  ஆனால் கண்டிப்பாக எந்த அரசாங்கம் நினைத்தாலும் ஒரளவுக்காவது நடைமுறைப்படுத்த முடியும். ஊருக்கு ஆயிரம் கடைகள் இருப்பதை பாதியாகக் குறைக்கலாம். காலையில் இருந்து இரவு வரை திறந்திருக்கும் நேரத்தைக் குறைக்கலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

சிவன் சொத்து குல நாசம் என்பார்கள்.  அது உண்மையோ என்னவோ தெரியவில்லை.  ஆனால் இலட்சக்கணக்கான குடிகளை கெடுக்கும் இந்த குடியால் கிடைக்கும் பணத்தை சுயநலமாக அனுபவிக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியும் அல்லது அதிகாரியும், தங்கள் சந்ததியினருக்கு தீராத பாவத்தினை சோ்க்கிறாரா்கள் என்று உணர வேண்டும்.  அப்படி உணரும்போது நாம் எதிர்பார்க்கும் மதுவிலக்கு என்ற நிலை உருவாகலாம்.

இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் உங்கள் குடும்பத்தின் தலைவராகவோ அல்லது மூத்த உறுப்பினராகவோ இருக்கலாம்.  நீங்கள் குடிப்பழக்கம் உள்ளவராகவோ அல்லது குடிப்பழக்கம் இல்லாதவராகவோ இருக்கலாம்.  ஆனால் உங்கள் குடும்பத்தில் உள்ள அடுத்த இளையதலைமுறை இந்த பழக்கத்திற்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த மதுப்பழக்கம் பொதுவாக 15 வயதிலிருந்து 30 வயதுக்குள் ஏற்படுகிறது.  நண்பா்களின் பிறந்த நாள், கல்யாணம், அலுவல் நிமித்தமாக அல்லது காதல் சோகம் என்று இந்தப் பழக்கத்தினை ஆரம்பிப்பதற்கு ஒரு காரணம் தேவைப்படுகிறது.  தொடா்வதற்கு ஒரு காரணமும் தேவையில்லை. 

மதுப்பழக்கம் என்பது முதலில் சிலந்தி வலையைப் போல மனிதா்கள் மீது படா்கிறது.  ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த சிலந்தி வலை ஒரு இரும்புச் சங்கிலியாக இறுகி மதுப்பழக்கத்திற்கு அடிமையானவா் அதிலிருந்து விடுபட நினைத்தாலும் அதிலிருந்து மீளமுடியாமல் செய்து விடுகிறது.  அப்படி இறந்தவா்கள் இளைஞா்களாகவோ அல்லது நடுத்தர வயதானவா்களாகவோ இருந்தால் அவா்கள் குடும்பத்தினரையும் அவா்களது மரணம் நடைப்பிணமாக்கி விடுகிறது.

மதுப்பழக்கம் இல்லாத அடுத்த தலைமுறையை உருவாக்குவது நம்மிடமிருந்தே தொடங்கட்டும்.   அரசியல் மாற்றம் தானாக வரும்.

Tuesday, May 8, 2018

மேடம் பிளாவட்ஸ்கி (Madame Blavatsky)



அடையாறில் உள்ள ”தியாசிபகல் சொசைட்டி” பலருக்கு தெரிந்திருக்கும். இந்தப் பெயரைக் கேள்விப்டாதவா்களுக்குக் கூட ”அடையாறு ஆலமரம்” என்றால் உடனே எங்கிருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள்.  அடையாறு ஆலமரம் இந்த தியாசிபகல் சொசைட்டியில்தான் இருக்கிறது.

இந்த தியாசிபகல் சொசைட்டி நவம்பா் 17, 1875-ம் ஆண்டு ஆரம்பித்ததாகச் சொல்லப்படுகிறது.  இதை தோற்றுவித்தவா்களில் ஒருவா்தான் மேடம் பிளாவட்ஸ்கி (Madame Blavatsky). 

இவரிடம் ஒரு விநோதமான பழக்கம் இருந்தது.  அவா் பல ஊா்களுக்கும் இரயிலில் பயணம் செய்யும்போதெல்லாம் தன்னுடைய கைப்பையில் பலவிதமான மலா்களின் விதைகளை தன்னுடன் கொண்டு செல்வாராம்.  அந்த விதைகளை வழியெங்கும் ஜன்னல் வழியாக தூவிக்கொண்டே வருவாராம்.  ஏன் இப்படிச் செய்கிறீா்கள் என்று கேட்டதற்கு அவா் சொன்ன பதில் ”இந்த விதைகள் மிகவும் அழகான மலா்களின் விதைகள்.  கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் வரும்போது இந்த விதைகள் வளர்ந்து செடியாகி ஆயிரக்கணக்கான பூக்களாக மலரும்.  நான் மீண்டும் இந்த வழியில் வரமாட்டேன்.  அப்போது மலர்ந்திருக்கும் இந்த மலா்களை நான் காண மாட்டேன்.  ஆனால் இந்த ஆயிரக்கணக்கான மலா்கள் இதைப் பார்க்கும் எண்ணிலடங்காத மக்களை மகிழ்விக்கும்.  என்னுடைய மகிழ்ச்சி என்பது என்னுடைய இந்தச் செயல் பல்லாயிரக்கணக்கான மக்களை மகிழ்விக்கும் என்ற எண்ணம்தான்.  நான் என்னுடைய மகிழ்ச்சியை மிகவும் சுயநலமாக என்னைச் சுற்றியுள்ளவா்களிடம் மட்டும் வெளிப்படுத்த விரும்பவில்லை.  நான் காணவே காணாத மக்களையும் என்னுடைய செயல் மகிழ்விக்க வேண்டும்.  அதுதான் என்னுடைய உண்மையான மகிழ்ச்சி.  என்னுடைய அன்பின் வெளிப்பாட்டை நான் என்னுடைய ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

இயற்கையின் அடிப்படை விதி இதுதான்.  நாம் எதை அதிகம் மற்றவா்களிடம் பகிர்கிறோமோ அது நம்மிடம் அதிகம் வளா்கிறது.  நாம் அன்பையும் மகிழ்ச்சியையும் அதிகம் பகிர்ந்தால் நம் வாழ்வில் அன்பும் மகிழ்ச்சியும் அதிகம் வளா்கிறது.  மாறாக வெறுப்பையும் துயரத்தையும் அதிகம் பகிர்ந்தால் துயரமும் வெறுப்பும்தான் நம் வாழ்வில் அதிகம் ஈர்க்கப்படுகிறது.

நாம் வாழ்வில் எதை அதிகம் விரும்புகிறோம் என்பதை விட மிக முக்கியமானது அதை அடைவதற்கு நாம் என்ன செய்கிறோம் என்பதுதான்.

மகிழ்ச்சியை மலர விடுவதன் மூலமே நம் வாழ்வில் மகிழ்ச்சியை பெருகச் செய்யமுடியும் என்ற அடிப்படை இயற்கை விதியை அறிந்து கொள்வோம்.

மேடம் பிளாவட்ஸ்கி (Madame Blavatsky) 1891-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி மறைந்தார்.  அவரது நினைவுதினம் ”வெள்ளைத் தாமரை தினம்” (White Lotus Day)  என்று அழைக்கப்படுகிறது.   அதற்குக் காரணம் அவரது மறைவிற்குப் பிறகு அவரது தோட்டத்தில் வெள்ளைத் தாமரை மலா்கள் மிக அதிகமாக பூத்துக் குலுங்கியதாம். 

ஊரெல்லாம் மலா்களின் விதைகளைத் தூவியவருக்கு இயற்கையின் மலரஞ்சலியாகக் கூட இது இருக்கலாம்.

இன்று மேடம் பிளாவட்ஸ்கியின் நினைவு தினம்.

Sunday, April 22, 2018

கடந்து செல்வதின் கலை ....


எழுத்தாளர் எஸ்.ரா. அவா்களின் வலைப்பக்கத்தினை வாசித்துக் கொண்டிருந்தபோது அவா் கவிஞா் ஷங்கா்ராமசுப்ரமணியன் வலைப்பக்கத்தில் வாசித்ததில் மிகவும் பிடித்த கதை என்று பின்வரும் புத்தரின் கதையை குறிப்பிட்டிருந்தார்.  ஏற்கனவே இந்தக் கதையினை ஓஷோவின் புத்தகத்தில் வாசித்திருந்தாலும் மீண்டும் படித்தபோது இதை எனது வலைப்பக்கத்திலும் பகிரலாம் என்று தோன்றியது.
இதற்கு மிக முக்கிய காரணம் நாம் தியானம் என்ற வார்த்தையை பொதுவாக மிகவும் தவறாக புரிந்துகொண்டிருக்கிறோம்.  Hallucination (ஹாலுசினேசன்) என்ற ஒரு வார்த்தை கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டது.  இதன் பொருள் மாயத்தோற்றம்.  அதாவது நாமாக ஒரு விஷயத்தினை கற்பனை செய்துகொண்டு அதுதான் உண்மை என்றும் நம்ப ஆரம்பித்துவிடுவோம்.  இந்த தியான விஷயத்திலும் அப்படி நிறைய ஹாலுசினேசன் நிறையப் பேருக்கு உண்டு.  
”மகிழ்ச்சியின் மந்திரம்” என்ற தலைப்பில் ஆழ்நிலைத் தியானம் குறித்து நான் எழுதிய புத்தகத்தினை படித்த என் நண்பா்கள் பலா் என்னிடம் ”தியானம் குறித்து நாங்கள் என்னென்வோ கற்பனை செய்து வைத்திருந்தோம்.  ஆனால் இப்போது நிறைய புரிதல் ஏற்பட்டுள்ளது” என்னிடம் தெரிவித்தனர்.  
அதனால்தான் புத்தரின் இந்தக் கதையை படித்ததும் கண்டிப்பாக இதைப் பகிர வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.  ஒரு விஷயத்தினை முழுவதும் புரிந்து கொள்ளாமல் அதை ஆதரிப்பதோ அல்லது எதிா்ப்பதோ மிகவும் ஆபத்தானது.  தியானமும் அப்படித்தான். 
இதோ அந்தக் கதை .....
ஒரு நாள் புத்தர் தனது சீடன் ஆனந்தாவுடன் வனத்தைக் கடந்துகொண்டிருந்தார். அது கடுமையான கோடைக்காலம் என்பதால் புத்தருக்குத் தாகமாக இருந்தது. அவர், ஆனந்தனிடம், “கொஞ்சம் திரும்பிப் போனால், மூன்று நான்கு மைல் தூரத்தில் நாம் கடந்த ஒரு சிறு நீரோடை வரும். அதில் இந்தப் பிச்சைப் பாத்திரத்தில் நீர் மொண்டு வா. நான் மிகுந்த தாகம் மற்றும் சோர்வை உணர்கிறேன்” என்றார்.
ஆனந்தா வந்த வழியிலேயே திரும்பிச் சென்றான். ஆனால் அவன் அந்தச் சிறு நீரோடையை அடையும்போது, அவனுக்கு முன்னால் சென்ற சில மாட்டு வண்டிகள் நீரோடைக்குள் இறங்கித் தாண்டிச் சென்றதால், அந்த நீரோடை முழுவதும் கலங்கிச் சேறாகிவிட்டது. நீரினடியில் கிடந்த இலைகளும் மேலே வந்துவிட்டன. புத்தனின் சீடன் ஆனந்தா, நீரோடையின் நிலையைப் பார்த்துவிட்டு, இந்தத் தண்ணீரைக் குடிக்கவே முடியாது என்று நினைத்து, வெறும் கையுடன் திரும்பிவிட்டான்.
“நீங்கள் கொஞ்சநேரம் காத்திருக்க வேண்டும். கொஞ்சம் பொறுங்கள். அடுத்த இரண்டு மூன்று மைல்களில் ஒரு பெரிய நதி ஒன்று இருக்கிறது. அங்கே போய்த் தண்ணீர் கொண்டு வருகிறேன்’ என்று புத்தரிடம் கூறினான்.
ஆனால் புத்தரோ, மறுபடியும் சிறு நீரோடைக்குச் சென்றுதான் நீர்கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஆனந்தாவால் இந்த வலியுறுத்தலைப் புரிந்துகொள்ளவே முடியவேயில்லை. ஆனால் குரு சொல்லிவிட்டாரென்றால், சீடன் அதைப் பின்பற்றுவதுதானே முறை. என்ன இது அபத்தம் என்று மனதில் நினைத்துக்கொண்டே மீண்டும் மூன்று, நான்கு மைல்கள் திரும்பவும் நடந்தான். அந்த நீரோடையின் நீர் குடிப்பதற்கு லாயக்கில்லாமல் இருக்கும் என்று நினைத்தான். அவன் திரும்பி நடந்தபோது, “ நீரோடையில் தண்ணீர் அழுக்காக இன்னும் இருந்தால் உடனடியாக வந்துவிடாதே ஆனந்தா. கரையில் கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார். எதுவும் செய்ய வேண்டாம். நீரோடைக்குள்ளும் போக வேண்டாம். சும்மா, கரையில் அமர்ந்து அமைதியாகப் பார். கொஞ்ச நேரம் கழிந்தோ நீண்ட நேரம் கழிந்தோ தண்ணீர் தெளியலாம். அப்போது தண்ணீரை முகந்து எடுத்துவந்தால் போதும்.” என்றார்.
ஆனந்தா நீரோடைக்குச் சென்றான். புத்தர் சொன்னது சரிதான். தண்ணீர் முன்பைவிட கலங்கல் குறைவாக இருந்தது. இலைகள் ஒதுங்கியிருந்தன. சேறு இறங்கியிருந்தது. ஆனால் இன்னும் முழுமையாகத் தெளிவடையவில்லை.
ஆனந்தா கரையிலமர்ந்து நீரோடையின் ஓட்டத்தை அமைதியாகக் கவனிக்கத் தொடங்கினான். மெதுவாக, நீரோடையின் மேற்பரப்பு ஸ்படிகம் போல மாறிவிட்டது. ஆனந்தாவுக்கு மகிழ்ச்சியில் நடனமாடத் தோன்றியது. புத்தர் ஏன் அவ்வளவு தூரம் அவனைக் கட்டாயப்படுத்தினார் என்பது புரிந்தது. 
புத்தருக்கு அவன் தண்ணீரைக் கொண்டுவந்து தந்தான். அவரது பாதங்களைத் தொட்டு நன்றி சொன்னான்.
“நீ என்ன செய்கிறாய் ஆனந்தா. நீ கொண்டு வந்த நீருக்காக நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்.”
“எனக்கு இப்போது புரிகிறது. நான் முதலில் கோபமடைந்தேன்; ஆனால் உங்களிடம் அதைக் காண்பிக்கவில்லை. திரும்ப நீரோடைக்குப் போவது முட்டாள்தனமான வேலை என்று நினைத்தேன். தற்போது எனக்கு உங்கள் செய்தி புரிந்துவிட்டது. இதுதான் எனக்கு இப்போதைய அவசியமான செய்தி. என் மனதிற்கும்தான்; அந்தச் சிறிய நீரோடையின் கரையில் அமைதியாக அமர்ந்திருந்ததைப் போல, என் மன விஷயத்திலும் விழிப்புணர்வை அடைவதற்காகக் காத்திருக்க வேண்டும்.
மனதுக்குள் குதித்துவிட்டால், சத்தம் அதிகமாகி, கூடுதலான பிரச்சினைகள் தான் எழும். இப்போது என் மனதின் கரையில் அமர்ந்திருப்பதன் முக்கியத்துவத்தை உணர்கிறேன். அதன் அசிங்கம், பிரச்சினைகள், பழைய இலைகளைப் போல மேலே வரும் பழைய வலிகள், நினைவுகள், ஆசைகள் ஆகியவற்றை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். அதைப் பற்றித் துயருறாமல், அமைதியாக அமர்ந்திருந்தால் எல்லாம் தெளிவடையும் என்பது புரிகிறது” என்றான் ஆனந்தா.
எல்லாம் அதன் போக்கில் நடக்கும். உங்கள் மனதின் கரையில் உட்கார்ந்துவிட்டால் போதும், அதற்கு எந்த ஆற்றலையும் நீங்கள் செலவழிப்பதில்லை. அதுதான் உண்மையான தியானம். கடந்து செல்வதின் கலைதான் தியானம்.


Sunday, April 8, 2018

”தி கிரேட் டிக்டேடா்” (The Great Dictator)



1940-ம் ஆண்டு சார்லி சாப்ளின் நடித்து வெளிவந்த படம் ”தி கிரேட் டிக்டேடா்” (The Great Dictator).  இந்தப் படம் ஹிட்லரின் சர்வாதிகாரத்தினை கிண்டல் செய்து அந்தக் காலத்திலேயே வந்த முழுநீள நகைச்சுவை திரைப்படம்.  இப்போது சமூக வலைதளங்களில் நிறைய வரும் மீம்ஸ்களுக்கு முன்னோடியாகக்கூட இந்தப் படத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இந்தப் படத்தில் சார்லி சாப்ளினுக்கு இரண்டு வேடங்கள்.  ஒன்றில் ஒரு நாட்டின் சா்வாதிகாரி. மற்றொன்று முடிதிருத்தும் தொழிலாளி.  ஆள்மாறாட்டாத்தினால் இந்த முடிதிருத்தும் சாப்ளினை அந்த நாட்டின் சர்வாதிகாரியாக ஆக்கிவிடுவார்கள்.  அவரை இராணுவ வீரா்கள் முன்பு பேச அழைப்பார்கள்.  அந்தப் பேச்சும் அவரது முகபாவங்களும் class.  இந்தப் படத்தின் கதை வசனமும் சாப்ளின்தான்.  சுமார் 75 வருடங்களுக்கு முன்பு அவா் பேசியது இன்றைக்கும் மிகவும் பொருந்துகிறது என்பதால்தான், பல படங்களில் அவா் பேசாமல் நடித்திருந்தாலும், இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இன்றும் அவர் ஒரு பேசுபொருளாக உலகில் இருக்கிறார். 

இதோ சாப்ளின் அந்தப் படத்தின் கடைசிக் காட்சியில் நிகழ்த்திய உரையின் சாரம்:

”என்னை மன்னியுங்கள். எனக்கு சா்வாதிகாரியாக இருக்க விருப்பமில்லை.  அது என்னுடைய வேலையுமில்லை.  நான் யாரையும் அதிகாரம் செய்யவோ வெற்றிகொள்ளவோ விரும்பவில்லை.  நான் எல்லோருக்கும் உதவிசெய்யவே விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒருவருக்கொருவா் உதவி செய்யவே விரும்புகிறோம். மனித சுபாவம் அதுதான்.  நாம் ஒவ்வொருவரும் மற்றவரின் மகிழ்ச்சியில் வாழவே விரும்புகிறோம் – அடுத்தவரின் துயரத்தில் அல்ல. நாம் யாரையும் வெறுக்கவோ கொடுமைப்படுத்தவோ விரும்புவதில்லை.

இந்த உலகம் எல்லோருக்கும் பொதுவானது.  இந்த வளமான பூமியானது எல்லோருக்கம் தேவையானதை கொடுக்கவல்லது.  நமது வாழ்க்கை மிகவும் சுதந்திரமானது, அழகானது, ஆனால் நாம் அதை இழந்துவிட்டோம்.  பேராசை நமது மனங்களை விஷமாக்கிவிட்டது, அது நமது உலகத்தினை பிரித்துவிட்டது, இரத்தம் தோய்ந்த யுத்தங்களுக்கும் அதனால் ஏற்பட்ட வேதனைகளுக்கும் காரணமாகிவிட்டது. 

நமது வாழ்க்கை மிகவும் வேகமாகிவிட்டது, ஆனால் அந்த வேகமே நம்மை அடிமைப்படுத்திவிட்டது.  நமது அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் நமக்கு நிறைய வசதி வாய்ப்புக்களை கொடுத்தாலும் திருப்தியில்லாத மனநிலையிலேயே நம்மை வைத்திருக்கின்றன.  நம்முடைய அறிவு எல்லாவற்றையும் சந்தேகப்படும் நிலைக்கே நம்மை தள்ளியிருக்கின்றன. 

நம்முடைய புத்திசாலித்தனம் மிகவும் இறுக்கமாகவும் கருணையற்றதாகவும் இருக்கிறது.  நம் சிந்தனை அதிகரித்துவிட்டது ஆனால் நம்முடைய உணா்வுகள் குறைந்து விட்டன.  நாம் வசதிகளை பெருக்குவதைவிட மனிதப் பண்புகளை வளா்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.  புத்திசாலித்தனத்தைவிட அன்பும் கருணையும் அதிகம் தேவைப்படுகிறது.  அது கிடைக்காதபட்சத்தில் நமது வாழ்க்கை நரகமாகிவிடும்.

விமானப் பயணங்களும் ரேடியோவும் நம்மிடையிலான இடைவெளியை குறைத்திருக்கின்றன.  இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் மனித குலத்தின் அன்பையும் சகோதரத்துவத்தையும் பெருக்குவதாக இருக்க வேண்டும். இப்போதும் என்னுடைய குரல் குழந்தைகள் பெரியவா்கள் போரினால் பாதிக்கப்பட்ட அகதிகள் ஏதுமறியா அப்பாவிகள் என இலட்சக்கணக்கான மக்களை சென்று சோ்ந்து கொண்டிருக்கிறது.  அவா்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்வேன்.  

”நம்பிக்கை இழக்காதீா்கள்.  இந்தத் துயரங்கள் சிலரது பேராசையினால் விளைந்தது.  அந்தப் பேராசைக்காரா்களும் சா்வாதிகாரிகளும் அழிந்துபோவார்கள்.  எந்த மக்களிடமிருந்து தங்களது அதிகாரத்தினை எடுத்துக் கொண்டார்களோ அந்த அதிகாரம் மீண்டும் மக்களுக்கே வந்து சேரும். இறப்பு என்ற ஒன்று மனிதர்களுக்கு இருக்கும்வரை மனதர்களது சுதந்திரத்தினை யாரும் பறிக்கமுடியாது.

வீரா்களே, உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவா்களுக்கு, உங்களை அடிமையாக்க நினைப்பவா்களுக்கு, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ன சாப்பிட வேண்டும், என்று நிர்பந்திப்பவா்களுக்கு அடிபணியாதீா்கள்.  அவா்களது இதயம் இயந்திரமானது.  ஆனால் நீங்கள் இயந்திரங்கள் அல்ல.  நீங்கள் ஆடுமாடுகள் அல்ல. இந்த மனித குலத்தின் அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது.  நீங்கள் யாரையும் வெறுக்க மாட்டீா்கள்.  இதயத்தில் அன்பு இல்லாதவா்கள்தான் வெறுப்பினை உமிழ்ந்து கொண்டிருப்பார்கள்.  அடிமைத்தனத்திற்காக சண்டை செய்யாதீா்கள்.  விடுதலைக்காக யுத்தம் செய்யுங்கள்.

கடவுளின் அரசாங்கம் மனிதனின் இதயத்துள் உள்ளது என்று பைபிள் கூறுகிறது – ஒரு மனிதா் அல்லது சில மனிதா்கள் அல்ல – எல்லா மனிதர்களுக்குள்ளும் கடவுளின் அரசாங்கம் இருக்கிறது. உங்களால் இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக உருவாக்க முடியும்.  உங்களால் இந்த உலகத்தினை சுதந்திரமானதாக அழகானதாக ஆக்கமுடியும்.

இந்த மக்கள் சக்தியின் பெயரால் நாம் அந்த அதிகாரத்தினை பயன்படுத்துவோம். நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.  ஒரு புதிய உலகத்தினை படைப்பதற்காக நாம் ஒன்றாக போராடுவோம். அந்த உலகத்தில் எல்லோருக்கும் சமமான வாய்ப்புக்கள் கிடைக்கட்டும்.  அந்த உலகத்தில் இளைஞா்களுக்கு ஒரு வளமான எதிர்காலம் கிடைக்கட்டும்.  அந்த உலகத்தில் வயதானவா்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் கிடைக்கட்டும்.

மேற்கண்ட இந்த வாக்குறுதிகளை அளித்துத்தான் சர்வாதிகாரிகள் அதிகாரத்திற்கு வந்தார்கள்.  ஆனால் அவா்கள் பொய்யான வாக்குறுதிகளை நமக்கு அளித்தார்கள்.  அவா்கள் அதை நிறைவேற்ற மாட்டார்கள்.  சா்வாதிகாரிகள் தங்களை வளப்படுத்திக் கொண்டு மக்களை அடிமையாக்குபவா்கள. இப்போது நமக்காக போராடுவோம்.  இந்த உலகத்தின் விடுதலைக்காக போராடுவோம். பேராசை, குரோதம் வெறுப்பு, சகிப்புத்தன்மையற்ற நிலை இவற்றுக்கு எதிராகப் போராடுவோம்.  மக்களாட்சியின் பெயரால் நாம் ஒன்றுபடுவோம்.
****

சில சமயங்களில் மொழிபெயா்ப்பு மூலஉரையின் உணர்வினை சிதைக்கும் வாய்ப்பு இருப்பதால் சாப்ளினின் ஆங்கிலப் பேச்சு  உங்கள் பார்வைக்கு கீழே கொடுக்கப் பட்டுள்ளது. 

"I’m sorry, but I don’t want to be an emperor. That’s not my business. I don’t want to rule or conquer anyone. I should like to help everyone - if possible - Jew, Gentile - black man - white. We all want to help one another. Human beings are like that. We want to live by each other’s happiness - not by each other’s misery. We don’t want to hate and despise one another.

In this world there is room for everyone. And the good earth is rich and can provide for everyone. The way of life can be free and beautiful, but we have lost the way. Greed has poisoned men’s souls, has barricaded the world with hate, has goose-stepped us into misery and bloodshed. We have developed speed, but we have shut ourselves in. Machinery that gives abundance has left us in want. Our knowledge has made us cynical. Our cleverness, hard and unkind. We think too much and feel too little. More than machinery we need humanity. More than cleverness we need kindness and gentleness. Without these qualities, life will be violent and all will be lost.

The aeroplane and the radio have brought us closer together. The very nature of these inventions cries out for the goodness in men - cries out for universal brotherhood - for the unity of us all. Even now my voice is reaching millions throughout the world - millions of despairing men, women, and little children - victims of a system that makes men torture and imprison innocent people. To those who can hear me, I say - do not despair. The misery that is now upon us is but the passing of greed - the bitterness of men who fear the way of human progress. The hate of men will pass, and dictators die, and the power they took from the people will return to the people. And so long as men die, liberty will never perish.

Soldiers! don’t give yourselves to brutes - men who despise you - enslave you - who regiment your lives - tell you what to do - what to think and what to feel! Who drill you - diet you - treat you like cattle, use you as cannon fodder. Don’t give yourselves to these unnatural men - machine men with machine minds and machine hearts! You are not machines! You are not cattle! You are men! You have the love of humanity in your hearts! You don’t hate! Only the unloved hate - the unloved and the unnatural! Soldiers! Don’t fight for slavery! Fight for liberty!

In the 17th Chapter of St Luke it is written: “the Kingdom of God is within man” - not one man nor a group of men, but in all men! In you! You, the people have the power - the power to create machines. The power to create happiness! You, the people, have the power to make this life free and beautiful, to make this life a wonderful adventure. Then - in the name of democracy - let us use that power - let us all unite. Let us fight for a new world - a decent world that will give men a chance to work - that will give youth a future and old age a security.

By the promise of these things, brutes have risen to power. But they lie! They do not fulfil that promise. They never will! Dictators free themselves but they enslave the people! Now let us fight to fulfil that promise! Let us fight to free the world - to do away with national barriers - to do away with greed, with hate and intolerance. Let us fight for a world of reason, a world where science and progress will lead to all men’s happiness. Soldiers! in the name of democracy, let us all unite!"