Monday, November 5, 2018

பிரயாணம்



அசோகமித்திரன் ”பிரயாணம்” என்ற சிறுகதையை எழுதிய ஆண்டு 1969.  கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழிந்த பின்னும் யாரோ ஒருவர் இந்தக் கதையைப் படித்தும் அதுகுறித்து பேசியும் எழுதியும் வருகிறார்கள்.  அதுதான் ஒரு எழுத்தாளனின் வெற்றி.  அவனுக்கான வாசகர்கள் சமகாலத்தில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயமல்ல.  நல்ல எழுத்து என்பது ஒரு விதையைப் போன்றது.  எந்த வாசகனது மனதிலாவது எப்போதும் அது முளைத்துக் கொண்டுதான் இருக்கும்.

கதையின் சுருக்கம் இதுதான்.

தன்னுடைய வயதான குருவோடு மலையின் மீது தங்கியிருக்கிறார் அவரது சீடர்.  வயது முதிர்வின் காரணமாக அந்த குரு அங்கேயே இறந்து விடுகிறார்.  அந்த குருவின் கடைசி ஆசை (??) அவரது உடலை சமதளத்தில் புதைக்க வேண்டும்.  அதற்காக அந்த சீடன் அவரை எடுத்துக்கொண்டு மலையடிவாரத்திற்கு கொண்டுவருகிறார்.  அப்படி வரும்போது அந்த இரவில் அந்த குருவின் உடலை கவ்விக்கொண்டு போக வட்டமிடும் ஓநாய்கள்.  அந்த ஓநாய்களிடமிருந்து அவரால் தப்பிக்க முடிகிறதா ? அவரது குருவை அவர் ஆசைப்பட்டபடி சம தளத்தில் அடக்கம் செய்ய முடிந்ததா என்பதுதான் கதை.

ஒரு எழுத்தாளனின் வெற்றி என்பது அவர் கதையை சொல்லும் விதம் மட்டுமல்ல அவர் சொல்லாமல் விட்ட கதையை வாசகன் தன்னுடைய அறிவிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப புரிந்துகொள்ள விட்டுவிடுவதுதான். 

இந்தக் கதையின் கடைசியின் இப்படி முடியும்.

”ஓநாய்கள் என் குருதேவரின் வயிற்றுப் பாகத்தைக் குதறித் தள்ளியிருந்தன. தலையையே காணோம். உடலெல்லாம் இரத்தம் வெளிப்பட்டு உறைந்திருந்தது போல இருந்தது. கைக்கட்டை விரல்களைக் கட்டியிருந்த துணி அறுபட்டுக் கிடந்தது. ஒரு ஓநாயின் கால் அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு, என் குருதேவரின் வலது கைப்பிடியில் இருந்தது”.

இதைப் படித்ததும் நமக்கு திக்கென்று இருக்கும்.  இறந்துவிட்ட குருவின் கைப்பிடியில் எப்படி ஓநாயின் கால் இருக்க முடியும்.  அப்படியென்றால் அவர் இறக்கவில்லையா ? அப்படியே இறக்கவில்லையென்றாலும் வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்டு கிடக்கும் நேரத்தில் அவரால் ஒரு ஓநாயின் காலை அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்க முடியுமா ? அல்லது அந்த குரு தனது சீடனை அந்த ஓநாய்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக தான் இறந்த பிறகும் தனது அமானுஷ்ய சக்தியால் ஏதாவது செய்தாரா என்ற பல கேள்விகள் நமக்கு பிறக்கிறது.

சில விஷயங்களை அதனோடு சம்பந்தபட்ட அனுபவங்கள் நமக்கு ஏற்பட்டால் மட்டுமே முழுமையாக அதனை உணர முடியும். அந்த வகையில் இந்தக் கதை எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தினை நினைவுக்கு கொண்டுவந்தது.

நான் சில வருடங்கள் முன்பு வரை நினைத்த நேரத்தில் திருவண்ணாமலைக்கு கிளம்பிவிடுவேன்.  சில சமயங்களில் நண்பா்களுடன் சில சமயங்களில் தனியாக.  சுமார் 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வோம்.  பிறகு அந்த தினத்தில் கூட்டம் மிகவும் அதிகமாகிவிட்டதால், பௌர்ணமி தினத்தில் செல்வதை தவிர்த்துவிட்டேன்.

பொதுவாக நாம் தனியாக சென்றாலும், கிரிவலப் பாதையில் யாராவது நமக்கு முன்னாலோ பின்னாலோ வந்து கொண்டிருப்பார்கள்.  அதனால் நமக்கு தனியாகச் செல்கிறோம் என்ற உணர்விருக்காது. அதே நேரத்தில் யாருடனும் பேசாமல் மௌனமாக கிரிவலம் செல்லலாம்.  அப்படிச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒருமுறை அப்படிச் செல்லும் போது இரவு சுமார் ஒரு மணி இருக்கும்.  ரமணாஸ்ரமம் செல்லும் வரை ஒரு சிலர் முன்னும் பின்னும் வந்து கொண்டிருந்தனர். நான் சாலையின் வலதுபுறம் நடந்து கொண்டே சிங்க தீர்த்தம் உள்ள இடம் அருகில் வரும்போது கொஞ்ச துாரத்தில் சாலையின் இடதுபுறத்தில் ஒரு மனிதர் முழுநிர்வாணமாக நின்று கொண்டிருந்தார்.  

சாலையையொட்டி நான் நடந்து கொண்டிருந்த இடமோ ஒரு மயான பூமி. எனக்கு “பக்“கென்றது. இப்போது எனக்கு முன்னேயும் யாருமில்லை. பின்னே திரும்பி பார்த்தாலும் யாருமில்லை.

அந்த நிர்வாண மனதரைப் பார்த்ததும் எனக்குத் தோன்றிய முதல் சிந்தனை அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபராக இருக்கலாம் என்பதுதான்.  நான் தனியாக நடந்து கொண்டிருக்கிறேன்.  அவரைக் கடக்கும்போது அவர் என்னைத் தாக்கினால் எப்படி என்னால் தனியாக தற்காத்துக்கொள்ள முடியும் என்ற சிந்தனையே எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது.  திரும்பிவிடலாமா என்றுகூட நினைத்தேன். 

ஆனால் மீண்டும் கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டு அந்த நபரை மீண்டும் பார்த்தேன்.  அந்த மனிதரின் காலடியில் ஒரு நாய்.படுத்துக் கொண்டு இருந்தது.  அந்த மனிதர் மலையைப் பார்த்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுந்திருப்பதும், நின்று கொண்டே மலையை வணங்கிவிட்டு மீண்டும் விழுந்து வணங்குவதுமாக இருந்தார்.

இப்போது எனக்கு கொஞ்சம் தைரியம் வந்து விட்டது.  ஒருவேளை அவர் ஒரு சித்தராக இருக்கலாம் என்று தோன்றியது.  எனக்கு இப்போது தோன்றிய ஒரே எண்ணம் அந்த இடத்தைக் கடக்கும் வரை அவரை மீண்டும் பார்க்கக்காமல் கடந்துவிட வேண்டும் என்பதுதான்.  அவர் வேலையை அவர் செய்யட்டும் நம் வேலையை நாம் செய்யலாம் என்று நினைத்து நடக்க ஆரம்பித்தேன்.  அந்த இடத்தினைக் கடந்து செல்ல எனக்கு ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும்.  மீண்டும் அவரை நான் திரும்பிப் பார்க்கவேயில்லை.

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால். அது ஒரு நெடுஞ்சாலை.  திருவண்ணாமலையிலிருந்து கிருஷ்ணகிரி பெங்களுர் செல்லும் மாநில நெடுஞ்சாலை.  இரவு நேரத்திலும் வாகனக் போக்குவரத்து இருந்து கொண்டெ இருக்கும்.  ஆனால் நான் அந்த இடத்தை கடந்த அந்த 15 நிமிடங்களில் ஒரு வாகனம்கூட அந்த இடத்தினை கடக்கவில்லை அல்லது நான் என்னைச் சுற்றிய நிகழ்வுகளில் இருந்து விடுபட்டிருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

கதை இங்கே முடிந்து விட்டது என்று நினைக்காதீர்கள்.  அந்த நெடுஞ்சாலையில் இருந்து கிரிவலம் செல்ல நாம் வலப்பக்கமாக திரும்ப வேண்டும்.  அந்தத் திருப்பத்தில் ஒரு பத்து பதினைந்து நாய்கள் மொத்தமாக நின்று கொண்டிருந்தன.  அந்த நாய்களின் உறுமல் சத்தத்தில் எனது சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது. 

என் உள்மனது மட்டும் பயத்தில் ஓடிவிடாதே என்று சொல்லிக்கொண்டே இருந்தது.  ஓடினால் “பிரயாணம்” கதையில் குருவுக்கு ஏற்பட்ட நிலைதான் எனக்கும் ஏற்பட்டிருக்கும்.

நான் எனக்குத் தெரிந்த மந்திரங்களையெல்லாம் உச்சரித்துக் கொண்டே நடந்துகொண்டிருந்தேன். 

இப்போது அசோகமித்திரனின் வார்த்தைகளை படியுங்கள்.

”பகலெல்லாம் ஓநாய்களைக் கண்ணெதிரேபாராமல், ஆனால் அவை எங்களைத் தாக்க எங்கோ தூரத்தில் பின்தொடர்ந்து வருகின்றன என்ற உணர்வே என்னைப் பெரும் பீதியில் விறைப்பாக இருக்கச் செய்தது. இப்போது அவற்றை நேரே கண்டவுடன் என் ஆழ்ந்த அமைதி ஏற்பட்டது. அந்நேரத்தில் எனக்குச் சிந்தனைகளே அவ்வப்போது எழாமல் போவதையும் உணர்ந்தேன்.

நான் மிகவும் நிதானமாக என் கைகளை அசைத்துக்கொண்டிருந்தேன். ஓநாய்கள் எங்களை இன்னமும் சுற்றிச் சுற்றி வந்தவண்ணமிருந்தன. நான் முதலில் தாக்க வேண்டும் என்று அவை காத்திருந்ததுபோலத் தோன்றிற்று. எனக்கும் அந்த ஓநாய்க் கூட்டத்துக்குமிடையே எழுந்திருக்க ஒரு இக்கட்டு நிலையை இருவரும் தீவிரப்படுத்தாமல் இருந்தால் இரவின் எஞ்சிய நேரம் அப்படியே கழிந்துவிடும் என்றுகூடத் தோன்றிற்று. பகல் என்று  ஏற்பட்டவுடன் ஓநாய்கள் பின்வாங்கிவிடக்கூடும்.

நான் நிச்சயமாக இருந்தேன். அந்த ஓநாய்களின் அடக்கமான உறுமல் கூட அப்போது அப்பிரதேசத்தின் அமைதியோடு பொருந்திவிடக் கூடியதாகவே தோன்றியது தாமாகவே தங்களுக்குள்ளாக ஏற்படுத்திக்கொண்ட ஒரு நியதிக்கு அவை தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு அதிலிருந்து இம்மியளவு  பிறழத் தயாராக இல்லாதிருப்பதுபோல எங்களை வலம்வந்துகொண்டிருந்தன.

எனக்கு அந்த ஓநாய்கள் மீது பெரும் பரிவு ஏற்பட்டது. அவற்றைக் காலம் காலமாக நான் அறிந்து பழகியதுபோல ஒரு உணர்வு ஏற்பட்டது. ஒரு நிலையில் நானே அவற்றுடன் சேர்ந்து என்னையே சுற்றி வருவதுபோலத் தோன்றிற்று. அப்போது என் கையிலிருந்த கொள்ளிக் கட்டை சட்டென்று அணைந்துவிட்டது. ஜூவாலை எழுப்ப அதை நான் வேகமாக வீசினேன். அப்போது, அந்த மலைப் பிரதேசமே மூச்சு விடுவதை அப்படியே நிறுத்திக்கொண்டு ஸ்தம்பித்துக் கிடப்பதுபோலத் தோன்றிற்று. என் கைக்கட்டை முழுவதும் அணைந்துவிட்டது. அதைப் போட்டு விட்டுக் கீழே தணல் நுனிகளுடன் கிடந்த கட்டைகளில் ஒன்றைப் பொறுக்கி எடுக்க நான் தீயின் பக்கம் குனிந்தேன். ஒரு அரைக் கணம் ஓநாய்கள் உறுமுவதுகூட நின்றுவிட்டது. அடுத்துப் பேரிரைச்சலுடன் பெரிய ஓநாயாக ஒன்று என் மேல் பாய்ந்தது. என் முகத்திற்கு நேரே பயங்கரமாக விரிந்துவந்த ஓநாயின் வாயில் என் கை விறகுக் கட்டையைத் திணித்தேன். அது ஊளையிட்டுக் கொண்டு பின் வாங்கிற்று. அந்த நேரம் வேறு சில ஓநாய்கள் என் குருதேவரின் உடலைப் போர்த்தியிருந்த கம்பளப் பையைக் கடித்துக் கிழிக்க ஆரம்பித்தன.

அதுவரை நிலவிய அமைதி, நியதிக்குட்பட்ட கட்டுப்பாடு எல்லாம் நொடிப் பொழுதில் சிதறுண்டுபோயின. என்னை ஒவ்வொரு ஓநாயாகத்தான் தாக்கின ஆனால் உயிரற்றுக் கிடந்த என் குருதேவரின் சடலத்தின் மீதே கூட்டமாகப் பாய்ந்தன. நான் என் மூங்கில் கழியைச் சக்கரமாகச் சுற்றினேன். ஒவ்வொரு முறை என் கழி எதையாவது தாக்கும்போது என் தோள் பட்டை விண்டுவிடுவது போல நான் எதிரடி உணர முடிந்தது.

ஓநாய்கள் உறுமிக்கொண்டு பாய்ந்து வந்து, பிடுங்கி, அடிபட்டு, பின்வாங்கிமீண்டும் பாய்ந்த வண்ணமிருந்தன. அப்போது இன்னொன்றையும் உணர்ந்தேன். என் சுயநினைவில் கற்பனை செய்தும் பார்க்க முடியாத ஒலிகளை, உரத்த ஒலிகளை, நான் எழுப்பிக்கொண்டிருந்தேன். அந்தப் போரில் நானும் ஒரு பயங்கர விலங்காக மாறிப்போயிருந்தேன். ஒரு நிலையில் நாங்கள் இரு தரப்பினரும் சம வலிமை பெற்றவர்களாகத் தோன்றினோம். ஓநாய்களுக்குள் ஓநாயாக நான் இருந்தேன்”.

கதையில் ஓநாய்கள் எனக்கு நேரில் நாய்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.  ஆனால் நான் அவைகளுடன் சமர் புரியவில்லை.  ஏனென்றால் அப்படி செய்தால் அதன் முடிவு என்ன என்று நிச்சயமாக எனக்குத் தெரிந்திருந்தது.

அதே நேரத்தில் நாம் எப்போது மிகப்பெரிய ஆபத்தான நிலையை சந்திக்கிறோமோ அந்த நேரத்தில் நமது மனம் மிகவும் விழிப்படைந்து விடுகிறது.  அந்த நேரத்தில் நமக்கு எது குறித்தும் - even மரணம் குறித்துகூட பயம் ஏற்படுவதில்லை. 

நான் நடக்க நடக்க நாய்களின் உறுமல் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது.  எனக்கு எந்தச் சேதாரமும் இல்லாமல் காப்பாற்றியது அந்த இறைதான் என்பதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என்ன ?

Thursday, October 18, 2018

உண்மையான வெற்றி என்பது .....


”பெருங்கடல் நீங்கள்
அலைகளாய் நாங்கள்
ஆர்ப்பரித்து தொடர்வோம்”

இந்த வரிகளை சில நாட்களுக்கு முன் செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள்.  சங்கள் IAS அகடமியின் நிறுவனர் திரு. சங்கர் அவர்களைக் குறித்த நினைவுக் குறிப்புதான் அது.

நன்றாக பறந்து கொண்டிருந்த பட்டம் திடீரென்று அறுந்து சென்றுவிட்டது.
நம்மில் பலர் தோல்விகளைக் கூட சுலபமாக தாண்டிவந்துவிடுகிறார்கள்.  ஆனால் வெற்றியைத்தான் கையாளத் தெரிவதில்லை.  ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய அவரால் தனக்கான நம்பிக்கையை தனக்ககு கொடுக்கத் தவறவிட்டுவிட்டார். 

வெற்றிகாக நாம் எந்த விலையை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்பதற்காக நம்முடைய வாழ்க்கையையே அதன் விலையாகக் கொடுத்துவிடக் கூடாது.

சமீபத்தில் பாவ்லோ கோயலோ (Paulo Goelho) எழுதிய “Manuscript Found in Accra” என்ற புத்தகத்தில் உண்மையான வெற்றி என்றால் என்பதற்கு சிந்தனையைத் தூண்டும் சில கருத்தக்களை கூறியிருந்தார்.  எல்லாம் நம் முன்னோர் சிந்தனைகள்தான்.  வெவ்வேறு வடிவங்களிலும் வெவ்வேறு வார்த்தைகளிலும்.

புத்தகத்தின் சில பக்கங்கள் என் மொழியில்.

வெற்றி என்றால் என்ன ?

யார் தன்னுடைய வாழ்க்கையை எப்போதும் மற்றவர்களுடைய வாழ்க்கையோடு ஓப்பிட்டுக் கொண்டிருக்காமல், தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தன்னுடைய முழுத்திறனை வெளிப்படுத்துகிறார்களோ அவர்களிடம் வெற்றி வந்து சேர்கிறது.

நீங்கள் வாழ்க்கையில் துணிந்து எடுக்கும் முடிவுகளால் தவிர்க்க முடியாத சில தோல்விகள் ஏற்படும்போது துவண்டு விடமாட்டீர்கள். சென்றதையே நினைத்து நேரத்தினை வீணாக்க மாட்டீர்கள்.

வாழ்க்கையில் ஏற்படும சில வெற்றிகளிலேயே உங்கள் பயணத்தினை நிறுத்திவிட மாட்டீர்கள்.  ஏனென்றால் உங்கள் இலட்சியத்தினை அடைவதற்காக நீங்கள் இன்னும் உழைக்க வேண்டியுள்ளது.

தட்டுஙகள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்.  யார் மற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறார்களோ அவர்களுக்கு மற்றவர்கள் ஆறுதலாக இருப்பார்கள்.  இது இயற்கை நியதி.

உங்கள் இலட்சியம் எதுவாக இருந்தாலும் அதை நோக்கிய பயணத்தில் நீ்ங்கள் கண்ணும் கருத்துமாக இருந்தாலும், இடையிடையே கொஞ்சம் ஓய்வெடுத்து உங்களை சுற்றியிருக்கும் சின்னச் சின்ன சந்தோஷ தருணங்களையும் அனுபவித்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.   வாழ்வை உற்று நோக்கும்போதுதான் நாம் இதற்குமுன் கவனிக்க மறந்த பல விஷயங்கள் நம் கண்ணுக்குப் புலப்படும்.

வாழ்க்கையில் குறுக்கு வழி என்று எதுவும் இல்லை. உங்கள் ஒவ்வொரு செயலும் நீங்கள் செல்லும் பாதையை மிகவும் அழகானதாகவும் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் ஆக்கட்டும்.

காலத்தின் எஜமானராக இருக்க முயலாதீர்கள்.  முழுமையாக பழுக்கும்வரை காத்திருக்காவிட்டால் சுவையற்ற காயைத்தான் பறிக்க முடியும்.  பழுத்த பிறகும் பறிக்காவிட்டால் யாருக்கும் பயனளிக்காமல் போய்விடும்.  அதனால் வாழ்க்கையில், விதைப்பதற்கும் அறுவடைக்குமான சரியான காலத்தினை மதித்து நடங்கள்.

என்னைவிட நிறைய பேர் மிகவும் புகழுடன் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். அதில் பலர் அந்த புகழுக்கு மிகவும் பொருத்தமானவர்கள்கூட.  ஆனால் பலர், தற்பெருமையாலும் வீண் ஆடம்பரத்தினாலும் தங்களை புகழுடையவர்கள் போல காட்டிக் கொள்கிறார்கள்.  ஆனால் கால ஓட்டத்தில் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.

அப்படியானால் உண்மையான வெற்றி என்றால் என்ன ?

உண்மையான வெற்றி என்பது ஒவ்வொரு நாளும் நம் மன அமைதியுடன் படுக்கைக்குச் சென்று உறங்குவதுதான்.

ஆங்கிலத்திலேயே படிக்க விரும்புவர்களுக்கு பாவ்லோ கோயலோவின் வரிகளிலேயே.....

What is Success ?

Success comes to those who do not waste time comparing what they are doing with what others are doing; it enters the house of a person who says, "I will do my best" every day.

You were not paralyzed by the defeats that are inevitable in the lives of those who take risks.  You did not sit agonizing over what you lost when you had an idea that didn’t work.

You didn’t stop when you experienced moments of glory, because you had not yet reached your goal.

To he who knocks, the door will open.  He who asks will receive. He who consoles knows that he will be consoled.

You must always have a goal in mind, but as you go along, it costs nothing to stop now  and then to enjoy the view around you. As you advance step by step, you can see a little further into the distance, and take the opportunity to discover things you had not even noticed before.

Do not try to make the road shorter, but travel it in such a way that every action leaves the land more fertile and the landscape more beautiful.

Do not try to be the Master of Time.  If you pick the fruit you planted too early, it will be green and give pleasure to no one.  If, out of fear or insecurity, you decide to put off the moment of making the Offering, the fruit will have rotted.

Therefore respect the time between showing and harvesting.

I am aware that there are many people more famous than me, and, often, that fame is richly deserved. In other cases, it is merely a manifestation of vanity or ambition, and will not stand the test of time.

What is success ?

It is being able to go to bed each night with your soul at peace.

Sunday, August 5, 2018

கல் எறியும் குளம்


நான் வலைப்பதிவில் எழுதுவதற்கு ஒரு மாதம் இடைவெளி வந்து விட்டால் என் மனதில் அடிக்கடி வந்து போகும் நண்பர் மதுரை செந்தில்தான்.  அவர்தான் போன் செய்து ஏன் சார் கொஞ்ச நாளாக எதுவும் எழுதவில்லை.  அடிக்கடி எழுதுங்கள் சார் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.  நானும் தொடா்ந்து எழுத வேண்டும் என்று நினைப்பதோடு சரி.  தினமும் ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்து அலாரம் வைத்து காலையில் சரியாக ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கும்போது அதன் தலையில் தட்டிவிட்டு எப்போதும் போல் ஆறு மணிக்கு எழுந்திருப்பதுபோல், எழுதும் நினைப்பை ஏதோ ஒரு வேலை தட்டிச் சென்றுவிடுகிறது.  அதற்கு என்ன காரணம் சொன்னாலும் அது நொண்டிக் காரணம்தான்.

என் எழுத்தை எப்போதும் நான் கண்ணதாசன் எழுத்தாகவோ அல்லது வண்ணதாசன் எழுத்தாகவோ எண்ணிக்கொள்வதில்லை.  ஆனால் இவர்களின் எழுத்துக்களை படிக்கும்போது எனக்கு ஏற்படும் சில தெளிவுகளையும், நம்பிக்கைகளையும் பிறருக்குப் பகிர்ந்தால், படிக்கும் சிலருக்கும் வாழ்க்கையின் நம்பிக்கை விதைகளை விதைக்க முடியும் என்ற ஆவல்தான் என்னை எழுதத் தூண்டுகிறது.  அதுவும் தவிர இரமண மகரிஷியின் ”பிறர்க்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்” என்ற வார்த்தைகள் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் வார்த்தைகள்.  நல்லதோ, கெட்டதோ பிறருக்கு நாம் என்ன கொடுக்கிறோமோ அது நமக்கே கொடுத்துக்கொள்வதுதான்.  So, பிறருக்கு நான் கொடுக்கும் நம்பிக்கை என்பது ஒருவகையில் எனக்கே நான் கொடுத்துக் கொள்ளும் நம்பிக்கைதான்.  நான் உண்டு பசியாறிய பிறகுதான் உங்களுக்கு பரிமாறுகிறேன்.  பிடிப்பதும் பிடிக்காதும் உங்கள் பசியைப் பொருத்தது.

இன்று ”கல்யாண்ஜி கவிதைகள்” புத்தகத்தினை மேய்ந்து கொண்டு இருந்தபோது நிறைய கவிதைகளை “புக்மார்க்“ செய்து வைத்தேன். அதில் ஒரு கவிதையை இன்று பதிவிடலாம் என்று நினைத்தேன்.

அந்தக் கவிதை

இந்த பௌர்ணமி இரவில்
தனியாக
எந்தக் குளத்தின் கரையிலாவது
அமர்ந்து
கல் எறிய வேண்டுமென இருக்கிறது.
எந்தக் குளமும் இல்லை அருகில் –
மனக்குளம் தவிர.
ஏற்கனவே எறிந்த கற்களால்
அலையடித்துக் கொண்டிருக்கும் அது
இந்த நிலவிரவில் சற்று
அடங்கினால் நல்லது.
போக
கல்லெறிகிற ஆசை
இருக்கும் வரைக்கும்
கலங்கும் தானே எல்லாக் குளமும்.

ஒரு நல்ல கவிதையோ அல்லது எழுத்தோ எழுதுபவனின் எண்ணத்தைத்தான் பிரதிபலிக்க வேண்டுமென்ற கட்டயாமில்லை.  படிப்பவனின் மனநிலைக்குக் தகுந்தமாதிரி வேறுமாதிரியும் பொருள் கொடுக்கலாம். 

ஒரு முறை கண்ணதாசனின் வாசகர் ஒருவர் அவரின் ஒரு கவிதையைச் சுட்டிக்காட்டி அதன் பொருள் இதுதானே என்று கேட்டதற்கு  கண்ணதாசன் ”ஓ அப்படி ஒரு பொருள் இருக்கிறதா.  அப்படியும் வைத்துக்கொள்ளலாம் என்றாராம். 

அதனால் கல்யாண்ஜியின் இந்தக் கவிதை உங்களுக்கு எந்த மாதிரியான புரிதலைக் கொடுத்தாலும் சரிதான்  அதற்காக கல்யாண்ஜி நம்மீது கோபப்பட மாட்டார்.

இந்தக் கவிதையைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது இதுதான்  நாம் மனம் நிறைய ஆசைகளை அடுக்கிக் கொண்டு மனம் அடங்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறோம். ”ஏற்கனவே எறிந்த கற்களால் அலையடித்துக் கொண்டிருக்கும் அது இந்த நிலவிரவில் சற்று அடங்கினால் நல்லது” என்று நினைத்தாலும் மீண்டும் கல் எறியத்தான் ஆசைப்படுகிறோம்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பத்துப் பொருட்களை நினைவில் கொண்டு வாருங்கள்.  அவற்றில் எந்தப் பொருள் இல்லாமல் நம்மால் எப்போதும் போல் வாழ முடியும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.  எனக்கு அப்படி எந்தப் பொருளை யோசித்தாலும் அது இல்லாமல் வாழ முடியும் என்றுதான் தோன்றுகிறது.

வணிகமயமாகிவிட்ட நுகர்வுக் கலாசாரத்தில் நம்மீது பொருட்கள் திணிக்கப்பட்டுகொண்டே இருக்கின்றன. 

கைகள் போதாமல் நாம் குளத்தில் கற்களை எறிந்து கொண்டே அமைதியையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.  அதனால்தான் அமைதியையும் ஒரு பொருளாக நமக்கு விற்கும் வியாபாரிகள் பலர் ”ஆன்மீகவாதிகளாக” அலைந்து கொண்டிருக்கிறார்கள்.




Sunday, June 24, 2018

வழி



மனதின் பலவீனமான நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் அல்லது நமது செயல்கள் எப்படி நம்மை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுவிடும் என்பதை அடிநாதமாக  கொண்டு சொல்லப்பட்ட கதைதான் சுந்தர ராமசாமியின் ”வழி” என்ற சிறுகதை.

இந்தக் கதையின் நாயகன் ஒரு மலையருவியில் குளித்துவிட்டு வரும்போது பக்கத்தில் எங்கோ மிருகங்கள் புணரும் சத்தம் கேட்டவுடன் அந்தக் காட்சியை காணும் ஆவலுடன் அந்த சத்தம் வரும் திசையை நோக்கி செல்லத் துவங்குவான்.

எப்போதும் நாம் ஒரு தவறான வழியில் செல்ல முற்படும்போது, இயற்கை அதை ஏதோ ஒரு வகையில் நமக்கு உணா்த்த முயலும்.  நமது மனதின் பலவீனத்திலிருந்து அப்போது நம்மால் வெளியே வர முடிந்தால் நமக்கு வரக்கூடிய ஆபத்திலிருந்து நம்மால் தப்பித்துக் கொள்ள முடியும்.

இந்தக் கதையிலும் கதையின் நாயகனுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.  இவனுடன் அருவியில் குளித்துவிட்டு தலை துவட்டிக் கொண்டிருந்த பெரியவா் ஒருவர், இவன் அருவியின் பின்பக்கம் செல்வதைப் பார்த்துவிட்டு ”வேண்டாம் ஐயா” என்பார்.

”அந்தக் குரலும் அதில் தோய்ந்திருந்த வேண்டுதலும் அன்பும் இப்போதும் என் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.  அந்தக் குரலைத் தாண்டி நான் சென்ற நிமிஷத்தில் பிசகு நிகழ்ந்தது.  அதன் பின் என் அடிச்சுவடுகள் குரங்குகள் விளையாடிய நுால் கண்டு மாதிரி சிடுக்காகி விட்டன.

ஒரு சில எட்டுகளில் புணர்ச்சியின் காட்சி சொரூபம் கிடைத்துவிடும் என்ற கிளுகிளுப்பின் எச்சிலை மனது நக்கியது எவ்வளவு தவறு என்பது இப்போது தெரிகிறது”.

காடு எந்த அளவுக்கு அழகானதோ, அதை விட அதிகம் ஆபத்துக்கள் நிறைந்தது.

நம் மலைப்பயணங்களில் தூரத்தில் யானைக்கூட்டம் பார்ப்பதற்கு எவ்வளவு பரவசம் தருமோ அதை விட அதிக கிலியை தரும் அவை நாம் செல்லும் பாதையின் குறுக்கே வந்து நம்மை பயமுறுத்தினால்.  மழைக்காற்றின் சுகத்தினை அனுபவிக்க கீழே இறங்கி நின்ற நேரத்தில் காலில் ஏறி நம் இரத்தத்தினை உறிஞ்சம் ஒரு அட்டைகூட நமக்கு மரணபயத்தினை கொடுக்கலாம்.

காட்டில் வழி தவறி சிக்கிக் கொண்டால் அதிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதல்ல.  நாம் நன்கு பழகிய நம் வீட்டிலேயே திடீரென்று மின்சாரம் தடைப்பட்டால் வாசல் என்று நினைத்து சுவற்றில் முட்டிக் கொள்வோம். மனித நடமாட்டமே இல்லாத மிருகங்கள் மட்டுமே சஞ்சரிக்கும் காட்டில் எப்படி இருக்கும். நகரமே பகலில் ஒரு மாதிரியும் இரவில் வேறுமாதிரியும் இருக்கும்.  காட்டின் இரவு இன்னும் அதிக ஆபத்துக்கள் நிறைந்தது.

இந்தக் கதையின் நாயகன் வெளியே வரும் பாதை என்று நினைத்து அடா்ந்த காட்டின் உள்ளே சென்று மாட்டிக்கொள்வான். அவனுக்கு இருப்பது பகலின் சில மணிநேரங்கள்தான்.  அதற்குள் அந்தக் காட்டிலிருந்து வெளிவரா விட்டால் அவனுடைய உயிருக்கே அது மிகவும் ஆபத்தாகிவிடும். அந்த அவஸ்தைகளை விளக்குவதும் பின் அதிலிருந்து மீண்டு வருகிறானா என்பதும்தான் கதை.

இந்தக் கதையில் காட்டின் வர்ணணைகளும், கதையின் இடையிடையே கதை நாயகனின் எண்ண ஓட்டங்களுமே கதையினை நகர்த்திச் செல்கிறது.

மிருகங்கள் வாழும் காட்டையும், மனிதா்கள் வாழும் நாட்டையும் ஒப்பிட்டுச் சொல்லுமிடத்தில் நான் சுந்தர ராமசாமியை ரசித்தேன்.

”காடு அந்தகாரத்தின் அடா்த்தி கொண்டிருந்தாலும், ஆபத்துக்களின் களி நிலம் என்றாலும், ஊா்களை விட அவை மோசமானவை என்று சொல்ல முடியாது.  அறிய அறிய மிருகங்களும் பறவைகளும் நியதிகளும் ஒழுக்கங்களும் நோ்மையும் கொண்டவையாக மாறும்போது, அறிய அறிய மனிதர்கள் அறிய முடியாத சிக்கல்களை கொண்டிருக்கிறார்கள் என்றுதான்படுகிறது.  மிருகங்களுக்கு வழிவிட்டு மனிதன் வாழத் தெரிந்துகொள்ளும்போதுகூட, மனிதர்களுக்கு வழிவிட்டு ஊர்களில் எப்படி வாழ்வது என்பது மனிதனுக்குத் தெரியவில்லை.”

அதைப்போலவே எப்படியும் பிழைத்து அந்தக் காட்டிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற தீராத மன உறுதியை கதையின் நாயகன் வெளிப்படுத்தும் இடத்தையும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளில் எழுத்தாளர் வெளிப்படுத்தியிருப்பார்.

”என் உள்மனதில் எரிந்துகொண்டிருக்கும் ஜ்வாலை அணையாமல் இருந்தால் உணவற்ற நிலையிலும் உடல் வலியிலும் ரணங்களிலும் நான் நடந்து கொண்டுதான் இருப்பேன். நான் வாழ்ந்தாக வேண்டும்.  நான் யாருக்காகவும் என் வாழ்க்கையை இழக்க முடியாது”.

எழுத்தின் வலிமை என்பது இதுதான்.  இந்தக் கதை 1986-ம் ஆண்டு கொல்லிப்பாவை என்ற இதழில் வெளிவந்தது.  ஆனால் இப்போதும் எப்போதும் எங்கோ படிக்கும் வாசகனுக்கும் அதிலிருந்து ஒரு நம்பிக்கை கீற்று வெளிப்படலாம்.

Saturday, May 19, 2018

ஆல்கஹால் என்ற ஆட்கொல்லி



முருகன் எனக்கு ஒன்றுவிட்ட அண்ணன் (என் பெரியப்பா மகன்). சிறுவனாக இருந்தபோது அவரின் மிகுந்த அன்புக்கு உரியவன் நான். நான்தான் படிக்கலை.  நீயெல்லாம் நல்லாப் படித்து பெரிய ஆளா வரணும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்.  எம்ஜியாரின் தீவிர ரசிகா்.  வீட்டின் சுவரெல்லாம் மன்னாதி மன்னன், நாடோடி மன்னன், மீனவ நண்பன் என்று பலவாறு எம்ஜியார் சிரித்துக் கொண்டிருப்பார்.  என் அண்ணனும் உடலை நன்கு பார்த்துக் கொள்வார்.  இப்போது போல் அப்போதெல்லாம் ஜிம்முக்கு போகாமலேயே ஜம்மென்று இருப்பார்.  அவா்கூட இருக்கும் நேரங்களில் மிகவும் பாதுகாப்பாக இருப்பது போன்று ஒரு உணா்வு இருக்கும்.

அவருக்கு எப்போது குடிப்பழக்கம் ஏற்பட்டது என்று தெரியாது.  அவரது உடல் கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலையத் தொடங்கியது.  70 அல்லது 80 வயதுக்குப் பிறகும் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்க வேண்டியவா் 35 வயதிலேயே முழுவதுமாக உருக்குலைந்து விட்டார்.  கடைசியில் அவரை மருத்துவமனையில் பார்த்தபோது அவா் கண்கள் கலங்கியிருந்தன.  ”நல்லா படிப்பா” என்று கரகரத்த குரலில் சொன்னபோது அவா் இந்த உலகத்தினை விட்டு நழுவிக்கொண்டிருந்தார் என்று எனக்கு அப்போது புரியவில்லை.

மதுவுக்கு அடிமையாகாமல் இன்றும் அவா் இருந்திருந்தால் அவா் குடும்பத்துக்கும் எங்களுக்கும் மிகப்பெரிய பலமாக இருந்திருப்பார்.

மதுவின் வாடை எனது மனதுக்கு எப்போதும் செல்லக்கூடாது என்று நான் எடுத்த முடிவுக்கு முக்கிய காரணம் என் முருகன் அண்ணன்தான்.

அடுத்து நான் பணிபுரிந்த அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிந்த நண்பர் ஷமிம்.  இவர் ஒரு முன்னாள் இராணுவ வீரா்.  ஆள் பார்ப்பதற்கு நல்ல வாட்டசாட்டமாக இருப்பார். எங்கள் அலுவலகத்தில் அட்மின் அதிகாரியாக பணிபுரிந்தவா்.  அவா் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு எப்போதும் பஞ்சமிருக்காது.  நல்ல மனிதர்.  அவரும் கொஞ்சம் கொஞ்சமாக குடியில் தன்னை இழந்தவா்தான்.

அந்த நிறுவனத்திலிருந்து நாங்கள் விலகியபோதும் இருவருக்குமான நட்பு தொடா்ந்தது.  சில ஆண்டுகளுக்கு முன் அவரை சந்திக்க நோ்ந்தபோது அவரும் குடியில் தன்னை முழுவதுமாக இழந்திருந்தார்.  என்னை பார்த்த போது கடனாக கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது என்று சொன்னார்.  அவரால் திருப்பிக் கொடுக்கமுடியாது என்று தெரிந்தும் அவா் எதற்காக அந்தப் பணத்தை கேட்கிறார் என்று தெரிந்தும் நட்புக்காக அவா் கேட்ட பணத்தினை கொடுத்தேன்.  அதற்குப் பிறகு அவரை சந்திக்கவே இல்லை.  

அன்பான குடும்பம் நல்ல குழந்தைகள் என்று இருந்தும், நீண்ட ஆண்டுகள் நலமாக வாழ்ந்திருக்கவேண்டியவா் இன்று இல்லை.

இந்தப் பதிவை இப்போது எழுதுவதன் முக்கிய நோக்கம், இன்று இந்தியாவிலேயே அதிக மதுப்பழக்கம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு வந்து கொண்டிருக்கிறது என்ற செய்திதான்.  குடிப்பழக்கம் என்பது காலம் காலமாக இருந்து வருவதுதான்.  ஆனால் தெருவுக்கு தெரு டீக்கடைகளை போல் டாஸ்மாக் கடைகள் இருப்பதும், இருபது வயதுகூட நிரம்பாத சிறுவா்களும், நடுத்தர வயது ஆண்களும் எந்தவிதமான உறுத்தலுமின்றி நடுத்தெருவில் நின்று குடித்துக் கொண்டு இருப்பதை பார்க்கும்போது எத்தனை ஆயிரம் முருகன் அண்ணாக்களும் ஷமிம்களும் தங்கள் குடும்பத்தை நிர்க்கதியாக விட்டுச் செல்வார்களோ என்ற பதட்டம் ஏற்படுகிறது.

”கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு  எத்தனை நாளைக்கு தான் தன்னை பாதுகாத்துக் கொள்ளமுடியும்” என்று சொல்லி 1971-ம் ஆண்டு மதுவிலக்கை தளர்த்திய கருணாநிதியும், ”என் இறுதி மூச்சு  இருக்கும் வரை  மதுவிலக்குக் கொள்கையை நான் நிறைவேற்றுவேன் என்று என்னைப் பெற்ற அன்னை மீது உறுதி எடுத்துக்கொள்கிறேன்” என்று சொல்லிய இரண்டே ஆண்டுகளில் மதுவிலக்கினை தளர்த்திய எம்ஜியாரும், ”மதுவிலக்கினை படிப்படியாக கொண்டுவருவோம்” என்று சொல்லி மறுபடியும் ஆட்சிக்கு வந்து இன்று வரை ஒருபடிகூட ஏறாத இன்றைய அதிமுக அரசு என்று எல்லோரும்தான் இன்றைய தமிழக நிலைக்குக் காரணம். தமிழகத்துக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்பதெல்லாம் ஒரு வடிகட்டிய பொய். ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கிடைக்கும் கோடிக்கணக்கான பணம்தான் இப்படி தமிழகத்தை சீரழிப்பதற்கு முக்கிய காரணம்.

முழுமையான மதுவிலக்கு என்பது கண்டிப்பாக நடைமுறையில் அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை.  ஆனால் கண்டிப்பாக எந்த அரசாங்கம் நினைத்தாலும் ஒரளவுக்காவது நடைமுறைப்படுத்த முடியும். ஊருக்கு ஆயிரம் கடைகள் இருப்பதை பாதியாகக் குறைக்கலாம். காலையில் இருந்து இரவு வரை திறந்திருக்கும் நேரத்தைக் குறைக்கலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

சிவன் சொத்து குல நாசம் என்பார்கள்.  அது உண்மையோ என்னவோ தெரியவில்லை.  ஆனால் இலட்சக்கணக்கான குடிகளை கெடுக்கும் இந்த குடியால் கிடைக்கும் பணத்தை சுயநலமாக அனுபவிக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியும் அல்லது அதிகாரியும், தங்கள் சந்ததியினருக்கு தீராத பாவத்தினை சோ்க்கிறாரா்கள் என்று உணர வேண்டும்.  அப்படி உணரும்போது நாம் எதிர்பார்க்கும் மதுவிலக்கு என்ற நிலை உருவாகலாம்.

இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் உங்கள் குடும்பத்தின் தலைவராகவோ அல்லது மூத்த உறுப்பினராகவோ இருக்கலாம்.  நீங்கள் குடிப்பழக்கம் உள்ளவராகவோ அல்லது குடிப்பழக்கம் இல்லாதவராகவோ இருக்கலாம்.  ஆனால் உங்கள் குடும்பத்தில் உள்ள அடுத்த இளையதலைமுறை இந்த பழக்கத்திற்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த மதுப்பழக்கம் பொதுவாக 15 வயதிலிருந்து 30 வயதுக்குள் ஏற்படுகிறது.  நண்பா்களின் பிறந்த நாள், கல்யாணம், அலுவல் நிமித்தமாக அல்லது காதல் சோகம் என்று இந்தப் பழக்கத்தினை ஆரம்பிப்பதற்கு ஒரு காரணம் தேவைப்படுகிறது.  தொடா்வதற்கு ஒரு காரணமும் தேவையில்லை. 

மதுப்பழக்கம் என்பது முதலில் சிலந்தி வலையைப் போல மனிதா்கள் மீது படா்கிறது.  ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த சிலந்தி வலை ஒரு இரும்புச் சங்கிலியாக இறுகி மதுப்பழக்கத்திற்கு அடிமையானவா் அதிலிருந்து விடுபட நினைத்தாலும் அதிலிருந்து மீளமுடியாமல் செய்து விடுகிறது.  அப்படி இறந்தவா்கள் இளைஞா்களாகவோ அல்லது நடுத்தர வயதானவா்களாகவோ இருந்தால் அவா்கள் குடும்பத்தினரையும் அவா்களது மரணம் நடைப்பிணமாக்கி விடுகிறது.

மதுப்பழக்கம் இல்லாத அடுத்த தலைமுறையை உருவாக்குவது நம்மிடமிருந்தே தொடங்கட்டும்.   அரசியல் மாற்றம் தானாக வரும்.

Tuesday, May 8, 2018

மேடம் பிளாவட்ஸ்கி (Madame Blavatsky)



அடையாறில் உள்ள ”தியாசிபகல் சொசைட்டி” பலருக்கு தெரிந்திருக்கும். இந்தப் பெயரைக் கேள்விப்டாதவா்களுக்குக் கூட ”அடையாறு ஆலமரம்” என்றால் உடனே எங்கிருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள்.  அடையாறு ஆலமரம் இந்த தியாசிபகல் சொசைட்டியில்தான் இருக்கிறது.

இந்த தியாசிபகல் சொசைட்டி நவம்பா் 17, 1875-ம் ஆண்டு ஆரம்பித்ததாகச் சொல்லப்படுகிறது.  இதை தோற்றுவித்தவா்களில் ஒருவா்தான் மேடம் பிளாவட்ஸ்கி (Madame Blavatsky). 

இவரிடம் ஒரு விநோதமான பழக்கம் இருந்தது.  அவா் பல ஊா்களுக்கும் இரயிலில் பயணம் செய்யும்போதெல்லாம் தன்னுடைய கைப்பையில் பலவிதமான மலா்களின் விதைகளை தன்னுடன் கொண்டு செல்வாராம்.  அந்த விதைகளை வழியெங்கும் ஜன்னல் வழியாக தூவிக்கொண்டே வருவாராம்.  ஏன் இப்படிச் செய்கிறீா்கள் என்று கேட்டதற்கு அவா் சொன்ன பதில் ”இந்த விதைகள் மிகவும் அழகான மலா்களின் விதைகள்.  கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் வரும்போது இந்த விதைகள் வளர்ந்து செடியாகி ஆயிரக்கணக்கான பூக்களாக மலரும்.  நான் மீண்டும் இந்த வழியில் வரமாட்டேன்.  அப்போது மலர்ந்திருக்கும் இந்த மலா்களை நான் காண மாட்டேன்.  ஆனால் இந்த ஆயிரக்கணக்கான மலா்கள் இதைப் பார்க்கும் எண்ணிலடங்காத மக்களை மகிழ்விக்கும்.  என்னுடைய மகிழ்ச்சி என்பது என்னுடைய இந்தச் செயல் பல்லாயிரக்கணக்கான மக்களை மகிழ்விக்கும் என்ற எண்ணம்தான்.  நான் என்னுடைய மகிழ்ச்சியை மிகவும் சுயநலமாக என்னைச் சுற்றியுள்ளவா்களிடம் மட்டும் வெளிப்படுத்த விரும்பவில்லை.  நான் காணவே காணாத மக்களையும் என்னுடைய செயல் மகிழ்விக்க வேண்டும்.  அதுதான் என்னுடைய உண்மையான மகிழ்ச்சி.  என்னுடைய அன்பின் வெளிப்பாட்டை நான் என்னுடைய ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

இயற்கையின் அடிப்படை விதி இதுதான்.  நாம் எதை அதிகம் மற்றவா்களிடம் பகிர்கிறோமோ அது நம்மிடம் அதிகம் வளா்கிறது.  நாம் அன்பையும் மகிழ்ச்சியையும் அதிகம் பகிர்ந்தால் நம் வாழ்வில் அன்பும் மகிழ்ச்சியும் அதிகம் வளா்கிறது.  மாறாக வெறுப்பையும் துயரத்தையும் அதிகம் பகிர்ந்தால் துயரமும் வெறுப்பும்தான் நம் வாழ்வில் அதிகம் ஈர்க்கப்படுகிறது.

நாம் வாழ்வில் எதை அதிகம் விரும்புகிறோம் என்பதை விட மிக முக்கியமானது அதை அடைவதற்கு நாம் என்ன செய்கிறோம் என்பதுதான்.

மகிழ்ச்சியை மலர விடுவதன் மூலமே நம் வாழ்வில் மகிழ்ச்சியை பெருகச் செய்யமுடியும் என்ற அடிப்படை இயற்கை விதியை அறிந்து கொள்வோம்.

மேடம் பிளாவட்ஸ்கி (Madame Blavatsky) 1891-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி மறைந்தார்.  அவரது நினைவுதினம் ”வெள்ளைத் தாமரை தினம்” (White Lotus Day)  என்று அழைக்கப்படுகிறது.   அதற்குக் காரணம் அவரது மறைவிற்குப் பிறகு அவரது தோட்டத்தில் வெள்ளைத் தாமரை மலா்கள் மிக அதிகமாக பூத்துக் குலுங்கியதாம். 

ஊரெல்லாம் மலா்களின் விதைகளைத் தூவியவருக்கு இயற்கையின் மலரஞ்சலியாகக் கூட இது இருக்கலாம்.

இன்று மேடம் பிளாவட்ஸ்கியின் நினைவு தினம்.