Monday, July 28, 2014

சித்தி


இன்று காலை எழுந்ததும் எங்கள் குடும்ப நண்பர் சுதாவிடமிருந்து "சித்தி இறந்துவிட்டார்" என்ற அதிர்ச்சியான குறுந்தகவல் (SMS) வந்தது.

சுமார் 7 மாதங்களுக்கு முன்புதான் சித்தியின் கணவர் மணி ஐயர் காலமானார். யாருக்கும் தொந்தரவு தராத நல்ல மரணம் என்று மனம் நினைத்தாலும், மணி ஐயர் காலமான பிறகு சித்தியை பார்க்க வேண்டும் என்று நானும் என் மனைவியும் பல முறை நினைத்தும் ஏதோ  ஒரு காரணத்தினால் தள்ளிக் கொண்டே போனது.  ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது தன்   கடமையை செய்து கொண்டே இருக்கிறது.

சித்தியும், மணி ஐயரும் எங்கள் ரத்த சம்பந்தம் அல்ல.  ஆனால் தன்னுடைய மாறாத அன்பால் எங்கள் குடும்ப உறவாய் ஆனவர்கள்.  சுமார் 25 வருட கால உறவு இது.

மணி ஐயர்தான் எங்களுடைய திருமணத்தை நடத்தி வைத்தவர். திருமணத்தின் ஒவ்வொரு சடங்கையும் விளக்கி, வேத மந்திரங்களின் பொருளைச் சொல்லி, மந்திரங்களை ஒழுங்காக உச்சரிக்கச் செய்து எங்கள் திருமணத்தினை நடத்திக் கொடுத்தார்.

நாங்கள் அவர் வீட்டுக்குப்  போகும்போதெல்லாம் நீங்களெல்லாம் எங்கள் குழந்தைகள் கண்ணா என்று அன்புடன் உபசரிப்பார்கள்.

அவர்கள்  வசித்த சிறிய வீட்டில் எத்தனை பேர் எத்தனை முறை சென்றாலும் முகம் கோணாமல் சுவையான காபி (coffee) கலந்து கொடுப்பார்கள். ஏதாவது sweet  அல்லது பலகாரம் செய்தால் "சீனு உனக்கு பிடிக்குமே என்று வைத்திருந்தேன்" என்று சொல்லி கொடுப்பார்கள்.  

இன்று நம்மில் எத்தனை பேர் வசதி இருந்தும் உறவுகளையும், நட்பையும்  வீட்டுக்கு அழைத்து விருந்தோம்ப நினைக்கிறோம்.  மிஞ்சிப் போனால் Party  என்ற பெயரில் ஏதாவது ஒரு ஹோட்டலில் விருந்து கொடுத்து உறவைப் பேணி (?) விடுகிறோம்.

இப்படி பல நினைவுகளோடு சித்தியை கடைசியாக பார்க்கச் சென்றோம். சித்தியின் மகன் சிவா என்னைப் பார்த்ததும், "அண்ணா, அம்மாவுக்கு AC யில் தூங்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஆசை.  ஆனால் அந்த ஆசையை என்னால் கடைசி வரை நிறைவேற்ற முடியவில்லை" என்று அழுதான்.

ஆனால் குளிர்பதனப் பெட்டியில் வைக்கபட்டிருந்த சித்தியின் முகம் தன் மகன், AC யில் தூங்க வேண்டும் என்ற தன்னுடைய கனவை நிறைவேற்றி விட்டான் என்பது போல மலர்ச்சியுடனும் பொலிவுடனும் இருந்தது. 

உடலுக்குத்தான் மரணம், ஆத்மாவுக்கு அல்ல.



  

Sunday, July 27, 2014

நிறைய Vs நிறைவாக


சில நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன்.  நிறைய பேர் பேசினார்கள்.  ஆனால் மனதுக்கு நிறைவாக பேசியவர்கள் மிகச் சிலரே.  சில "பெரிய மனிதர்கள்" கூட பார்வையாளர்கள் தங்கள் பேச்சை ரசிக்கவில்லை என்று தெரியாமலேயே (அல்லது தெரிந்தும்கூட) குறித்த நேரம் கடந்தும் பேசிக்  கொண்டிருந்தார்கள்.

ஆனால் மிகச் சிலர் அவை அறிந்து பேச வேண்டிய கருத்துக்களை மிகவும் சுவையாக பேசி குறித்த நேரத்தில் பேசி அமர்ந்தார்கள். இதன் நீட்சியாக எனது சிந்தனைகள் சில.

நாம் வாழ்கையில்  நிறைய சந்தர்ப்பங்களில் நிறைய செய்ய ஆசைப்படுகிறோம். ஆனால் நிறைவாகச்  செய்கிறோமா என்று யோசித்தால் இல்லை என்றுதான் தோன்றுகிறது.  நாம் பொதுவாக செய்யும் கீழ்க்கண்ட சில விஷயங்களை யோசித்துப் பாருங்கள், உங்களுக்கே புரியும்.


  • நிறைய படிக்கிறோம் - நிறைவாக படிக்கிறோமா ?
  • நிறைய சாப்பிடுகிறோம் - நிறைவாக சாப்பிடுகிறோமா ?
  • நிறைய தூங்குகிறோம் - நிறைவாக தூங்குகிறோமா ?
  • நிறைய பேசுகிறோம் - நிறைவாக பேசுகிறோமா ?
  • நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் - நிறைவான நண்பர்களாக இருக்கிறார்களா ?
  • நிறைய செலவு செய்கிறோம் - நிறைவாக செய்கிறோமா ?
  • நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறோம் - நிறைவாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறோமா ?
  • நிறைய வருடங்கள் வாழ்கிறோம் - நிறைவான வாழ்க்கை வாழ்கிறோமா ? (ஆதி சங்கரரும், விவேகானந்தரும் நிறைய வருடங்கள் வாழவில்லை - 40 வருடங்கள் கூட இந்த பூமியில் இல்லை - ஆனால் நிறைவான வாழ்வு வாழ்ந்தார்கள்).


உங்களுக்கும் நான் மேலே சொன்னது போல நிறைய விஷயங்கள் தோன்றக்கூடும்.

யோசித்துப் பார்த்தால் நாம் வாழ்கையின் மதிப்பை பெரும்பாலும் எண்ணிக்கையில் அடக்கி விடுகிறோம். நம்மை சுற்றியுள்ள வாழ்வின் ஒப்பிடுகளால் (comparisons) நம் மன அமைதியை கெடுத்துக் கொள்கிறோமா என்று கூட தோன்றுகிறது.

உடுத்திக்கொள்ள இரண்டு set உடைக்கு மேல் இல்லாத கக்கனும், இறக்கும்போது சில நூறு ரூபாய் கூட தன்னுடைய சொத்தாக வைத்துக் கொள்ளாத நம் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரும் நிறைவான வாழ்க்கை  வாழவில்லையா ?

அதே சமயத்தில் இன்றைய சூழலில் நாம் கக்கனைப் போல, காமராஜரைப் போல வாழ்ந்தால் நம்மை மன நிலை சரியில்லாதோர் பட்டியலில் உலகம் சேர்த்துவிடக் கூடும்.

ஆனால் நம் மன அமைதிக்கு எது சரி என்று நினைக்கிறோமோ அதன் படி நம் வாழ்கையை அமைத்துக் கொண்டால் நம்மால் நிறைவான வாழ்கை வாழ முடியும் என்பதுதான் நமது முப்பாட்டன் வள்ளுவன் காலத்தில் இருந்து நமக்கு சொல்லி கொடுக்கபட்டிருக்கும் பாடம்.  நாம்தான் அடிப்படையை மறந்து விட்டு அந்தரத்தில் திண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

சரி சரி நான் நிறைய எழுதிக் கொண்டே போகிறேன் என்று நினைத்துவிடப் போகிறிர்கள்.  அதனால் இத்துடன் நிறைவு செய்கிறேன்.


Wednesday, June 25, 2014

புத்தரின் மனைவி


கடந்த ஜூன் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் (சனி, ஞாயிறு) சென்னை பல்கலை கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற தினமணி தமிழ் இலக்கியத் திருவிழாவின் இரண்டாவது நாள் அமர்வில் பார்வையாளனாக சில மணி நேரங்கள் பங்கு பெற்றேன்.

நிறையப் பேர் நிறைய  பேசினாலும் நிறைவாகப் பேசியது சில பேர் மட்டுமே. அவர்களில் என்னை மிகவும் கவர்ந்த இருவர் - வைகோ மற்றும் பாரதி கிருஷ்ணகுமார்.  கையில் ஒரு குறிப்பைக் கூட வைத்துக்கொள்ளாமல் தங்கு தடையின்றி சரளமாகப் பேசுவது ஒரு கலை.  அதில் இருவருமே வல்லவர்கள்.

வைகோவைப் பற்றி பலருக்கும் "ராசி இல்லாத" அல்லது "பிழைக்கத் தெரியாத" அரசியல்வாதி என்ற அளவில் தெரிந்து இருக்கும்.  ஆனால் இன்று பேச்சாற்றலிலும் இலக்கிய அறிவிலும் செறிந்து இருக்கும் ஒரே அரசியல்வாதி வைகோ என்று கூறலாம்.

என்னைச் செதுக்கிய இலக்கியம் என்ற தலைப்பில் சிலப்பதிகாரத்தினை அவர் மடை திறந்த வெள்ளம் போல் பேசியது "வாவ்" போட வைத்தது.  ஆனால் எதைப் பற்றி பேசினாலும் அதை இலங்கைப் பிரச்சினையோடு ஒப்பீடு செய்து பேசுவது அவருடைய பலமா அல்லது பலவீனமா என்று தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது.  அரசியலில் இன்று அவருடைய நிலை எப்படியோ எதிர்காலத்தில்  தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக வைகோ விளங்குவார்.

பாரதி கிருஷ்ணகுமார் அவர்களை ஒரு இலக்கியவாதி என்ற அளவில் தெரியும்.  ஆனால் இவ்வளவு அருமையான பேச்சாளர்  என்று தெரியாது.

புத்தக வாசிப்பின் அவசியத்தைப் பற்றி பாரதி கிருஷ்ணகுமார் பேசியது புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களைக் கூட வாசிப்பின் அருகில் கொண்டு வந்துவிடும்.

பேச்சில் கேட்ட புத்தரைப் பற்றிய ஒரு சம்பவம் சுவையாக இருந்தது.

புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர்.  அவர்  தனது 16 வயதில் யசோதரையை 
மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன்.  பிறகு அவர் தனது 29வது வயதில் மனைவி மக்களைப் பிரிந்து துறவறம் பூண்டார்  என்பது அனைவரும் அறிந்ததே. 

ஆனால் நிறையப் பேருக்குத் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது.  சித்தார்த்தர் புத்தர் ஆனா பிறகு நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய மனைவியையும் மகனையும் சந்தித்தார்.  அப்போது அவர் மனைவி யசோதரை புத்தரைப் பார்த்து  சில கேள்விகள் கேட்டாள் :

1. நீங்கள் எங்களை விட்டுச் செல்லும்போது எங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்று விட்டீர்களே.  ஏன்  ?

2. நீங்கள் போக வேண்டாம் என்று நாங்கள் தடுத்து விடுவோம் என்று சொல்லாமல்  சென்று இருந்தால் அவ்வளவு பலகீனமானவரா நீங்கள் ?

3. நீங்கள் செய்த இதே வேலையை நான் செய்து இருந்தால் நீங்களும் இந்த சமுதாயமும் என்னை இப்படி கொண்டாடி இருப்பீர்களா ?

போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தரால் ஒரு கேள்விக்கும் பதில் கூற முடியாமல் மௌனமாகத் தலை கவிழ்ந்தார்.

போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தனுக்கே மனைவியின் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்றால் ???? - ஆகையால் ஆண்மக்களே  .........

எனக்குத் தெரியும் நான் தனி மரமல்ல ஒரு பெரிய தோப்பு என்று. ......





Wednesday, May 28, 2014

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ......

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ......


"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகன்
சான்றோன் எனக்கேட்ட தாய்".

வள்ளுவன் தாய் மகன் என்று குறிப்பிட்டு இருந்தாலும் இந்தக் குறள் தந்தை மகளுக்கும் பொருந்தும்.

எங்கள் மகள் நிவாஷினி (என்ற நிவி) CBSE பிளஸ் 2 தேர்வில் 500 க்கு 480 மதிப்பெண் பெற்று அவள் படிக்கும் மகிரிஷி வித்யா மந்திர் பள்ளியில் commerce பிரிவில் 2 வது இடம் (முதல் இடம் 482 மதிப்பெண்) பெற்ற தகவல் கிடைத்ததும் எனக்கு திருவள்ளுவரின் மேலே குறிப்பிட்ட திருக்குறள்தான் நினைவுக்கு வந்தது.

ஸ்கூல் first அல்லது ஸ்டேட் first என்ற கனவெல்லாம் எனக்கு எப்போதும் இருந்தது கிடையாது (அதாவது என் மகள் எடுப்பாள்  என்று -  நான் என்று தவறாக நினைத்து விடாதீர்கள்).  ஆனால் மதிப்பெண்ணை வைத்து மட்டுமே நாம் நினைத்த  கல்லூரியில் சுலபமாக இடம் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தினால் என் மகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.   அந்த ஆசைக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொண்டாள் நிவி.

இங்கு ஒரு விசயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.  சுமார் 14 ஆண்டுகளுக்கு முன் நிவியை LKG சேர்க்கும்போது, எல்லா பெற்றோர்களையும் போலவே நாங்களும் நிவிக்கு, தகுதிக்கு மீறிய விசயங்களை மூளையில் திணித்துக் கொண்டிருந்தோம். எங்கள் பங்குக்கு  ஐந்து ஆறு திருக்குறளையும் எக்ஸ்ட்ராவாக  மனப்பாடம் செய்ய வைத்து அவளை interviewக்கு தயார் செய்தோம்.

ஆனால் முதல் ரவுண்டு interview விலேயே நிவி clean  bold  ஆகிவிட்டாள் (ஆகிவிட்டோம்).  நீங்கள் உங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாள் போட்டோ ஆல்பத்தை எடுத்து பாருங்கள்.  பெரும்பாலும் குழந்தையைத் தவிர அனைவரும் மெழுகுவர்த்தியை ஊதிக் கொண்டிருப்பார்கள்.  அதே போல் கேக்கை குழந்தைக்கு ஊட்டும் போது அது வாயை இறுக்கமாக மூடிக்  கொண்டிருக்கும்.  ஆனால் சுற்றியுள்ள அனைவரும் வாயை "ஆவேன்று" திறந்து கொண்டிருப்பார்கள்.

அப்போது நாங்களும் அந்த நிலையில்தான் இருந்தோம்.  திருக்குறளை நானும் என் மனைவியும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் நிவி வாயைத் திறக்கவேயில்லை.

"Child not able to speak" என்ற முத்திரையுடன் எங்களை தலைமை ஆசிரியர் அறைக்கு அனுப்பி விட்டார்கள்.

அன்றுதான் "counseling" என்றால் என்ன என்று நிவி எனக்கு முதன் முதலாக சொல்லிக் கொடுத்தாள்.  தலைமை ஆசிரியர் அறைக்கு செல்லும் முன் அவளை தனியே அழைத்துச் சென்று ஒரு ஐந்து நிமிடம் அவளிடம் திருக்குறள் ஒழுங்காகச்  சொன்னால் என்ன கிடைக்கும் என்று ஆசை காட்டியும் ஒழுங்காகச் சொல்லவில்லை என்றால் என்ன நடக்கும் என்று பயமுறுத்தியும் (ஆனால் உண்மையில் பயந்திருந்தது நாங்கள்தான்) அவளை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்றோம்.

உள்ளே சென்றதும்  தலைமை ஆசிரியர் Radha மேடம் ரிபோர்ட்டை பார்த்துவிட்டு "என்னம்மா பேச மாட்டியா" என்று பரிவாக கேட்க, நாங்கள் பாவமாக பார்க்க, என்ன நினைத்தாளோ  என் மகள் - அருள் வாக்கு வந்தது போல் கட கடவென்று ஆறு திருக்குறளையும் ஒப்பித்து விட்டாள்.

தலைமை ஆசிரியர் ஆச்சரியமாக அவளைப் பார்த்து உன்னையா பேச மாட்டாய்  என்று சொன்னார்கள் என்று சொல்லி உடனே "Child eligible for Admission" என்று எழுதி எங்களை அனுப்பி வைத்தார்கள்.  அன்று முழுவதும் கடவுளுக்கு நன்றி சொன்னோம். 

இப்போதும் அதே கடவுளுக்கு நன்றி கூறிக்கொண்டேயிருக்கிறோம். "இறைவா நன்றி."

   

 

 


Thursday, May 15, 2014

தேர்வு முடிவுகளும் தேர்தல் முடிவுகளும்


எல்லா சமயங்களிலும் தேர்வுக் காலமும் தேர்தல் காலமும் ஒன்றாக அமைவது இல்லை.  தேர்வு முடிவுகள் (CBSE தவிர) வந்து விட்டது. தேர்தல் முடிவுகள் on the way.  தூங்கி எழுந்தால் தெரிந்து விடும்.

எந்த விசயத்தில் அரசியல்வாதிகளை மாணவர்கள்  follow  பண்ண வேண்டுமோ இல்லையோ, தேர்தல் முடிவுகளை அவர்கள் எதிர்கொள்ளும் விசயத்தில்  கண்டிப்பாக அரசியல்வாதிகளை  மாணவர்கள் பின்பற்ற வேண்டும்..

தேர்தல் நாள் வரை நிச்சயம் நம்மால் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைப்பார்கள்.  தேர்தல் முடிவுக்கு முதல் நாள் வரை  கண்டிப்பாக வெற்றி எங்களுக்கே என்று  நம்பிக்கையுடன் பேசி வருவார்கள்.

ஆனால் தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும் அதற்காக பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அதற்கு ஒரு காரணத்தினை சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

தேர்தல் தோல்விக்காக தீக்குளித்த தொண்டர்கள் உண்டு.  ஆனால் தீக்குளித்த எந்த தலைவரையாவது நாம் கண்டதுண்டா ?

ஆனால் சில மாணவர்கள் தேர்வில் தவறிவிட்டாலோ அல்லது மதிப்பெண் குறைந்துவிட்டாலோ வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.

தேர்தல் தோல்விகளால் தவறான முடிவுகளை எடுத்து இருந்தால் இன்று பல தலைவர்கள் நம்மிடையே இருக்க மாட்டார்கள் (நல்லாத்தான் இருந்திருக்கும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது !!!).

தேர்தலாவது ஐந்து வருடத்திற்கு ஒருமுறைதான் வருகிறது.   ஆனால் தேர்வோ ஒவ்வொரு வருடமும் (அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை) வருகிறது.

ஒரு தேர்வின் முடிவை வைத்து வாழ்கையை முடிவு செய்ய வேண்டாம். குறைவான மதிப்பெண்ணால்  நாம் எதிர்பார்த்த course  அல்லது college கிடைக்காமல் போகலாம்.  ஆனால் வாழ்க்கை மிகப் பெரியது.   சாதனையாளர்கள் பலரும் மதிபெண்ணில் கோட்டை விட்டவர்கள்தான்.

அதனால் மாணவர்கள் தேர்வு விசயத்தில் அரசியல்வாதிகளின் உழைப்பையும் நம்பிக்கையையும் பிறகு எந்தவிதமான முடிவையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கையும் கடைப்பிடித்தால் வாழ்கையில் வெற்றி பெறுவது உறுதி.







Thursday, May 8, 2014

Selamat Datang


நானும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சென்று வந்தேன் என்று எப்படி ஆரம்பிப்பது.  அதனால்தான் Welcome என்பதை "Selamat  Datang" என்று மலாய் மொழியில் தலைப்பு கொடுத்தேன்.

பணி நிமித்தமாக சென்றதால் ஊரைச் சுற்றி பார்க்க முடியவில்லை. ஆனாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் flavour-ஐ அறிந்து கொண்டு வந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

நான் மும்பை, டெல்லி செல்வது போல் சில நாட்கள் மட்டும் சென்றதால் எனக்கு வெளிநாடு செல்லும் உணர்வு   தோன்றவில்லை.  ஆனால் விமான நிலையத்தில் மனைவி குழந்தைகள் பெற்றோர் மற்றும் பல சொந்தங்களையும் விட்டு விட்டு திரும்பி வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியாமல் செல்லும் பலரின் கண்களின் ஈரம் மனதை கொஞ்சம் பிசைந்தது.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று சொன்ன தமிழனும் "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்று சொன்ன தமிழனும் வறுமைக்கு பயந்து மட்டும் வெளிநாடு சென்று இருப்பார்கள்  என்று தோன்றவில்லை. தன்னுடைய வளமையைப் பெருக்கிக்  கொள்ளத்தான் பெரும்பாலும் சென்றிருக்க வேண்டும்.

நம்முடைய  தமிழ்ச்  சமூகம்  உலகில் பெரும்பாலான நாடுகளில் வேருன்றி இருப்பது மகிழ்ச்சியான விசயமாக இருந்தாலும், பெரும்பாலும் மற்றவர்களுக்கு வேலை செய்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது.  நாம் மற்றவர்களிடம் வேலை தேடாமல் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் சமூகமாக மாறினால் நம்முடைய வளமை இன்னும் அதிகமாக பெருகும்.

ஆனால்  நம்ம ஆட்கள் எங்க போனாலும் நம்ம brand ஐ குத்தி விடுகிறார்கள். பொதுவாக எந்த நாட்டுக்கு சென்றாலும் நம்ம ஊர் முருகனுக்கோ, அம்மனக்கோ அல்லது பெருமாளுக்கோ கோவில் கட்டி விடுவார்கள்.   இது நல்ல விசயம்தான் (அல்லது தவறான விஷயம் அல்ல).  ஆனால் இப்போது சிங்கப்பூரில் "டாஸ்மாக்" கையும் ஆரம்பித்துவிட்டார்கள்.  இதுதான் கொஞ்சம் நெருடலாக இருந்தது.



இருந்தாலும் நம்ம ஊரை விட வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள்  தமிழை அதிகம் வளர்க்கிறார்களோ என்று தோன்றுகிறது.  இருக்கும்போது அதன் அருமை தெரியாது என்பதை போல.

சிங்கப்பூரில் தற்போது வசிக்கும் திரு மா. அன்பழகன் அவர்கள் சீரிய முயற்சியால் தமிழ் அன்பர்கள் பலர் கூடி தமிழை வளர்க்க பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.  நான் சென்ற நாளும் அப்படி ஒரு விழா நடந்து கொண்டு இருந்தது.  அதில் நான் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


சிங்கப்பூர் மலேசியாவைப் பற்றி நல்லதாக நாலு விசயங்களைச் சொன்னால் "நீயும் ஆரம்பிச்சிட்டியா வெளிநாட்டு புராணம்" என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுந்துவிடும்.

ஆனால்  நான் சொல்ல நினைக்கும் செய்திகளை  பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதி கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் குரலில் நம்ம சூப்பர் ஸ்டார் ஏற்கனவே பாடிவிட்டார்.  ஜஸ்ட் rewind செய்து பாருங்கள். இதோ உங்களுக்காக அந்தப் பாடல்.

அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேனே

புதுமையிலே மயங்குகிறேன் 

பார்க்கப் பார்க்க ஆனந்தம் பறவை போல உல்லாசம் 

வேலை இன்றி யாருமில்லை எங்கும் சந்தோஷம் 

வெறும்பேச்சு வெட்டிக்கூட்டம் ஏதுமில்லை இந்த ஊரில் 

கள்ளம் கபடம் இன்றி கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன் 

வாழும் சிங்கப்பூர் 

சிட்டுப்போல பிள்ளைகள் தேனில் ஆடும் முல்லைகள் 

துள்ளித் துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம் 

தினம் தோறும் திருநாளே சுகம் கோடி மனம் போலே 

சீனர் தமிழர் மலேய மக்கள் உறவினர் போல 

அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர் 


மஞ்சள் மேனிப்பாவைகள் தங்கம் மின்னும் அங்கங்கள் 

காவியத்தில் வார்த்தை இல்லை உன்னைப் பாராட்ட 

நடைபார்த்து மயிலாடும் மொழிகேட்டு கிளி பேசும் 

கண்ணில் தவழும் புன்னகை கண்டேன் 

சொர்க்கம்போல இன்பமும் பெருமையும் 


வாழும் சிங்கப்பூர்.


Terima Kasih (நன்றி)

 



Saturday, April 19, 2014

Desiderata


The “Desiderata” (means something that is needed or wanted) poem was originally written by Max Ehrmann. It was used by Rev. Frederick Kates of St Paul´s Church in Baltimore in devotional materials he compiled for his congregation. On top of this material he had written "Old St Paul´s Church, Baltimore A.C. 1692". The year was the foundation year of the church.

Life is so precious and valuable. The advice given in this poem is valuable and worth some serious contemplation.   During my college days, my friend had sent this to me and now only I could fully understand and appreciate its relevance in life.  Surely, you will find this very useful.

Desiderata

Go placidly amid the noise and the haste, and remember what peace there may be in silence.
As far as possible, without surrender, be on good terms with all persons.

Speak your truth quietly and clearly; and listen to others,
even to the dull and the ignorant; they too have their story.

Avoid loud and aggressive persons; they are vexatious to the spirit.
If you compare yourself with others, you may become vain or bitter,
for always there will be greater and lesser persons than yourself.

Enjoy your achievements as well as your plans.
Keep interested in your own career, however humble;
it is a real possession in the changing fortunes of time.

Exercise caution in your business affairs, for the world is full of trickery.
But let this not blind you to what virtue there is;
many persons strive for high ideals, and everywhere life is full of heroism.
Be yourself. Especially do not feign affection.
Neither be cynical about love, for in the face of all aridity and disenchantment,
it is as perennial as the grass.

Take kindly the counsel of the years, gracefully surrendering the things of youth.
Nurture strength of spirit to shield you in sudden misfortune.
But do not distress yourself with dark imaginings. Many fears are born of fatigue and loneliness.

Beyond a wholesome discipline, be gentle with yourself.
You are a child of the universe - no less than the trees and the stars;
you have a right to be here. And whether or not it is clear to you,
no doubt the universe is unfolding as it should.

Therefore be at peace with God, whatever you conceive Him to be.
And whatever your labors and aspirations,
in the noisy confusion of life, keep peace in your soul.

With all its sham, drudgery, and broken dreams, it is still a beautiful world.
Be cheerful. Strive to be happy.