Sunday, December 21, 2014

ஆழி மழைக் கண்ணா


"ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்து
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்சங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்"

மேலே சொன்ன ஆண்டாள் திருப்பாவையின் பொருள் :

"மேகத்திற்கு அதிபதியான கண்ணா, கடல் நீர் முழுவதையும் எடுத்துக் கொண்டு மேலே செல். கண்ணனின் நிறம் போல் கருத்து, பத்மநாபன் கையில் உள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல மின்னலை வீசு.  வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலி எழுப்பி அவனது   வில்லில் இருந்து வெளிப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக.  மார்கழி நீராடுலக்காக எல்லா நீர் நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சி அடையச் செய்வாயாக".

கடல் நீர் ஆவியாகி பிறகு மேகமாகி மழை பொழிகிறது என்று இன்றைய அறிவியல் சொல்வதை போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகிறாள் ஆண்டாள்.  இப்படி பல விஷயங்களை நம்முடைய முன்னோர் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர்.  நாம்தான் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றோம்.

திருப்பாவையின் ஒவ்வொரு பாடலின் வரிகளும் positive vibration அளிப்பது என்பது என் கருத்து.  உதாரணத்திற்கு திருப்பாவையின் 3 வது பாசுரத்தில் வரும் சில வரிகள் "தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து",  "வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்" , "நீங்காத செல்வம்". இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.     

ஆண்டாளின் திருப்பாவையை நாம்தான் கல்யாணமாகாத கன்னிப் பெண்கள் (அது என்ன கல்யாணமாகாத கன்னிப் பெண்கள் என்று கேட்காதீர்கள் - but  ஆனா, நடு  centre  என்ற வகையில் புரிந்து கொள்ளவும்) மட்டும் நல்ல கணவன் கிடைப்பதற்காக படிக்க வேண்டும் என்று சுருக்கி விட்டோம்.

என்னைப் பொறுத்த வரை திருப்பாவையை ஆண்  பெண் என்று எல்லோரும் படிக்க வேண்டும்.

கல்யாணம் ஆகாத பெண்கள் (ஆண்களும்தான்) தினமும் திருப்பாவை பாசுரம் படித்தால் நல்ல வாழ்க்கைத் துணையும், நிறைந்த செல்வமும் கிடைக்கும் என்பது நம் பெரியவர்களின் நம்பிக்கை.

"நாம் கூட திருப்பாவை பாசுரங்கள் படித்திருந்தால் நமக்குக் கூட .........." என்று மணமான (I mean கல்யாணமான) சிலபேர் நினைக்கக் கூடும். கவலையே படாதீர்கள்.  இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை.  இப்போதாவது ஒழுங்காகப் படித்தால், கொஞ்சம் ஏடாகூடமாக வாழ்க்கை (துணை) இருந்தால் கூட, தட்டி சரி செய்துவிடுவார் நம் ஆண்டாள்.  




Thursday, December 11, 2014

அருந்தவப்பன்றி


     "தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?"

என்று பாடிய மகாகவி பாரதியின்  132 வது பிறந்த நாள் இன்று.  11/12/1882-ம் ஆண்டு பிறந்து 39 ஆண்டுகளே இந்தப் புவியில் வாழ்ந்து 11/09/1921-ம் ஆண்டு மறைந்த மகாகவியின் பல கவிதைகள் அவனை ஞானக்கவிஞன் என்று பறை சாற்றும்.  அதற்கு மேல சொன்ன கவிதை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல.

1921-ம் ஆண்டே  இந்த உலகை விட்டு மறைந்தாலும், 1947-ம் ஆண்டு நாம்  பெற்ற  விடுதலையை "ஆடுவோமே பள்ளு  பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று" என்று தீர்க்க தரிசனமாகப் பாடியவன்.

சாதாரண மனிதர்களான நம்மோடு ஒப்பிடுகையில் பல மடங்கு உயர்வான வாழ்க்கை வாழ்ந்த பாரதி தன்னை ஒரு பன்றியோடு ஒப்பிட்டு சொல்லியிருக்கிறான் என்று நம்ப முடிகிறதா.  ஆனாலும் தன மேல் அவனுக்கு அவன் தகுதிக்குரிய உயர்வு மனப்பான்மையும் இருந்ததால்தான் தன்னை வெறும் பன்றி என்று குறிப்பிடாமல் "அருந்தவப்பன்றி" என்று குறிப்பிடுகிறான்.

இந்த  "அருந்தவப்பன்றி" குறித்த ஒரு கதை இருக்கிறது.  அருந்தவம் செய்த ஒரு முனிவன் ஒரு சாபத்தின் காரணமாக பன்றியாக மாறிவிடுகிறான். அப்படி  மாறுவதற்கு முன் தன்  மகனை அழைத்து அந்த முனிவன் சொல்வான்.  "மகனே நான் பன்றியாக மாறியதும் என்னை வெட்டிவிடு. அப்போதுதான் எனக்கு சாப விமோசனம் கிடைத்து நான் மீண்டும் முனிவனாக மாறுவேன்" என்று.  மகனும் சரி என்று சொல்வான்.

அதே போல் முனிவன் பன்றியாக மாறியதும் அவனை வெட்ட மகன் தயாராகும் சமயம், பன்றியாக மாறிய முனிவன் மகனிடம் "பன்றி வாழ்க்கை  நான் நினைத்தது போல் அவ்வளவு மோசமாக இல்லை.  நான் இன்னும் கொஞ்ச நாள் இந்த வாழ்க்கை வாழ்ந்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி காட்டுக்குள் சென்று விடுவான்.

சில மாதங்கள் கழித்து  மீண்டும் தன்  தந்தையைத்  தேடி காட்டுக்குள் வந்த மகன் தன்  தந்தை குடும்பம் குட்டியாக இருப்பதைப் பார்த்து திகைத்து நிற்பான்.  பன்றியான் முனிவன் தன மகனிடம் எனக்கு இந்த வாழ்க்கை பிடித்து விட்டது. நீ போய்  வா என்று சொல்லி விடுவான்.

அற்ப சந்தோஷங்கள்  எப்படி உயர்ந்த தவ வாழ்க்கை முனிவர்களையும் கீழ் நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது என்று வருந்தி திரும்புவான் மகன்.

"எமக்குத் தொழில் கவிதை" என்று சொல்லிய பாரதி சில வருடங்கள் வறுமையின் காரணமாக எட்டயபுரம் மன்னனிடம் வேலை செய்த காலத்தில் தனக்கு மிகவும் பிடித்த கவிதை தொழிலைச் செய்ய முடியாத நாட்களை பன்றியின் வாழ்க்கையோடு ஒப்பிடுகிறான்.

மகாகவி என்று நாம் கொண்டாடும் பாரதியே தன்னை "அருந்தவப்பன்றி" என்று சொல்லும்போது, "தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி" வாழும் நாம் ordinary  பன்றிகள் வகையில்கூட சேருவோமா என்று தெரியவில்லை.

பாரதி கிருஷ்ணகுமார் எழுதியுள்ள "அருந்தவப்பன்றி - சுப்பிரமணிய பாரதி"  என்ற நூலில்  மகாகவியைப் பற்றி நாம் இதுவரை அறியாத பல விஷயங்கள் தெரிய வருகிறது.

ஆனால் எனக்கு ஒரு வருத்தம்.  நாளை (டிசம்பர் 12) சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளை கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கொண்டாடிக் கொண்டிருக்கும் எல்லா சேனல்களும் மகாகவியைப் பற்றி ஒரு நிகழ்ச்சியைக் கூட நடத்தாதது ஏன் ? ஏதோ ஒரு சேனலில் மட்டும் பாரதி திரைப்படத்தைக் காட்டி தங்கள் கடமையை முடித்து விட்டார்கள்.  என்ன செய்வது ரஜினிக்கு இருக்கும் TRP Rating மகாகவிக்கு இல்லை.  அது சரி நாளை ரஜினியின் பிறந்த நாள் என்று தெரிந்திருக்கும்  நம்மில் எத்தனைப் பேருக்கு இன்று பாரதியின் பிறந்த நாள் என்று தெரியும்.

அதனால் என்ன பாரதி இன்னும் பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னும் உன்னுடைய பிறந்த நாளை தமிழ் கொண்டாடிக் கொண்டுதானிருக்கும். உன்னுடைய "புதிய ஆத்திச்சூடி" அன்றும் புதிதாகத்தான் இருக்கும்.

"புதிய ஆத்திச்சூடி"

1. அச்சம் தவிர்
2. ஆண்மை தவறேல்
3. இளைத்தல் இகழ்ச்சி
4. ஈகை திறன்
5. உடலினை உறுதிசெய்
6. ஊண் மிக விரும்பு
7. எண்ணுவது உயர்வு
8. ஏறுபோல் நட
9. ஐம்பொறி ஆட்சிகொள்
10. ஒற்றுமை வலிமையாம்
11. ஓய்தல் ஒழி
12. ஔடதம் குறை









Friday, November 28, 2014

வீடு திரும்பும் மகளின் பாதை


தினந்தோறும் கொலை> கொள்ளை> விபத்துச் செய்திகளை படித்தும் கேட்டும் பழகிப் போன நமக்கு பள்ளி> கல்லூரி> அலுவலகம் சென்று வீடு திரும்பும் நம் அன்புக்குரியவர்கள் கொஞ்சம் தாமதமாக வந்தாலும்> தினசரி படித்து> கேட்ட அல்லது பார்த்த அவநம்பிக்கைச்  செய்திகள் நம் மனதில் Flash அடித்து மனதைப் பதைபதைக்கச் செய்யும். அதிலும் பெண்களைப் பெற்றவர்களின் பயம் அதிகம் மட்டுமல்ல. ஒருவகையில் நியாயமானதும்கூட.  

ஆனால் வீடு திரும்பும் மகளின் பாதை என்ற கவிதையை ஆனந்த விகடன் இதழில் (5/11/14) படித்த போது. நம் மனதில் தோன்றும் அவநம்பிக்கைகளை அகற்றி நம்பிக்கையை விதைகின்றன.

இந்தக் கவிதையில் கவிஞர் விடுமுறைக்கு வீடு திரும்பும் தன் மகளின் வருகையை ஆவலோடு எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல், தன் மகளின் நல்ல எண்ணங்களும் அவள் தாயின் நம்பிக்கையும் சேர்ந்து அவள் பயணத்தைப் பாதுகாக்கும் கவசமாகிறது என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

இதோ அந்தக் கவிதை .....

கொரியன் தொடர்களைப் பார்க்கும் உன் தோழிகளிடையே
பாவ்லோ  கொயலோவை (Paula Coelho) பின்தொடரும் அருமை மகளே

நீ விடுமுறைக்கு வீடு திரும்பும் பாதை
நம்மிருவரின் புனைவுகளாலான திருப்பங்களை உடையது

எப்போதும் நீ எழுந்து இடம் தரும் மூதாட்டிகளின்
ஆசிர்வாதத்தால்தான் உன் உள்ளங்கைகளில்
மழை பொழிந்துகொண்டே இருக்கிறது

ஜன்னலோரம் வெள்ளரிப்பிஞ்சு விற்பவனை
சார் என்று அழைத்ததற்காக கடிந்து  கொண்ட
தோழியையும் நேசிப்பாயல்லவா 

இவ்விளகிய மனமே உன் வாகனத்தின் பாதுகாப்பு கவசம்

உன் செவிகளுக்குள் பாடிப் பாடி
சிறகுகளை வளரச் செய்திருக்கிறாள் அல்லவா காகா

அந்நம்பிக்கையில்தான் 
ஆசிட் வீசும் கதைகள் நிறைந்த பாதையில் 
நீ வந்துகொண்டிருக்கும் போதிலும் 
பதட்டமின்றி உனக்கான இரவு உணவைத் 
தயாரித்துக் கொண்டிருகிறாள் உன் தாய் 

அவளுடைய கனிந்த எண்ணங்கள் 
உன்னைச் சுற்றியும் ஓர் அகழியை உருவாக்குகிறது 

உன்னோடு உண்ணவும் படுத்து உறங்குவுமான விழைவில் இருக்கும்
கறுப்பு நாய்க் குட்டி பெலிசியாவின் கனவுகளை
எல்லா தேவதைகளும் அறிந்துதான் வைத்திருக்கின்றனர் 

காமுகர்களும் பெண்களை பாலியல் தொழிலுக்கு பழக்குபவர்களும் 
உறுப்புகளை திருடுபவர்களும் நிறைந்த சந்தைகள் ஊடாக 
விரைந்துகொண்டிருக்கிறதுன் வாகனம் 

தைரியமாய் பயணித்துக் கொண்டிருக்கும் நீ அறிந்ததுதானே 
மகள்கள் வீடு திரும்பும் வாகனத்தை 
கடவுள்தான் இயக்குகிறார் என்பது !

அவலங்கள் நிறைந்தது போன்று தோன்றும் வாழ்கை உண்மையில் மிகவும் அழகானது என்பதையும், வாழ்க்கை குறித்து வீண் அச்சங்கள் கொள்ளத் தேவையில்லை என்பதையும் மேலே உள்ள கவிதை வரிகள் நிரூபிக்கின்றன.

கவிதையை எழுதிய கவிஞர் கரிகாலனுக்கு நமது வாழ்த்துக்கள்.

Wednesday, November 12, 2014

நச்சென்று நாலு வார்த்தை


சில சமயங்களில் நீண்ட வாக்கியங்களும், சொற்க்குவியல்களும் விளக்க முடியாத விசயங்களை ஒரு சில வார்த்தைகள் விளக்கி விடும்.  Zen கவிதைகளின் சிறப்பே ஒரு சில வார்த்தைகள் நம் மனதில் பல எண்ணங்களை (நல்ல எண்ணங்கள்தான்) கிளறி விடும்.

ஆனால் இவை Zen கவிதைகளும் இல்லை அல்லது என் கவிதைகளும் இல்லை.   என் மனதில் பதிந்த வரிகளில் சில.   உங்களுக்கும் இதைப் படித்தால் இது போல சில வரிகள் நினைவில் தோன்றலாம்.


இந்திரா காந்தி சுடப் பட்ட அன்று யாரோ எழுதிய கவிதை.

"இன்றுதான் இந்திரா
காந்தியானார்"

இளமைக் கால கவிஞர்  வைரமுத்து சுதந்திரம் பற்றி  எழுதிய கவிதை.

"அவன் பட்டு வேட்டி பற்றிய
கனாவில்  இருந்த போது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப் பட்டது"

கம்பனை copy அடித்து யாரோ ஒரு இளைஞனின் (ஒரு அனுமானம்தான்) நையாண்டி புதுக் கவிதை :

"அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
பின்னாலிருந்து அவள்
அண்ணனும் நோக்கினான்"

அம்மா (தமிழ் நாட்டு அம்மா) சிறையில் இருந்த போது :

"அம்மா வேணும் என்று
குழந்தைகள் அழுகிறார்கள்
சும்மாவேனும் என்று
அமைச்சர்கள் அழுகிறார்கள்"

பாரதியின் சில வரிகள் :

"அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"

 "நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில்
எறிவதுண்டோ"

திருமூலரின் சில வரிகள் :

"மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்கத்
தேவை இல்லை"

(என் வரிகள் - மனமது செம்மையாக மந்திரம் செபிக்க வேண்டும்)

உங்களுக்கும் இது போன்ற நச்சென்ற நாலு வார்த்தைகள் நினைவுக்கு வந்தால் எனக்கு சொல்லுங்கள்.  குறித்துக் கொள்கிறேன்.



Saturday, October 18, 2014

பரம பதம்


முன்பெல்லாம் ஏகாதசி இரவில் பரம பதம் விளையாடுவார்கள் (முன்பெல்லாம் என்று ஏன் சொன்னேன் என்றால் இப்போது நிறைய பேருக்கு 'ஏகாதசி' என்றால் என்ன 'பரம பதம்' என்றால் என்ன என்று முதலில் விளக்க வேண்டும் பிறகுதான் விளையாடுவதைப் பற்றி யோசிக்க வேண்டும்).

பரம பத விளையாட்டை நம் வாழ்வின் அங்கமாக வைத்த நம் முன்னோர்கள் வாழ்வின் உண்மை உணர்ந்தவர்கள்.  தாயக்  கட்டையை  உருட்டுவது  நாமாக இருந்தாலும்  எப்போது ஏணி நம்மை ஏற்றி விடும் எப்போது பாம்பு நம்மை கீழே  இறக்கி விடும் என்று தெரியாது.

இந்த உண்மை புரியாமல் ஏணியில் ஏறும் போது "என்னால் என்னால்" என்று மார் தட்டிகொள்கிறோம், இறங்கும்போது "உன்னால் உன்னால்" என்று ஊரையே குறை சொல்கிறோம்.  நம் வாழ்வில் உயர்வதற்கு நாம் மட்டுமே காரணமாக இருந்தால், அந்த logic படி இறங்கும்போதும் நாம் மட்டுமேதானே காரணமாக இருக்க வேண்டும்.

சீன ஞானி Lao Tzu (இவரை லாட்சு என்றும் சொல்வார்கள் லாசு என்றும் சொல்வார்கள்.  நான் லாசு என்று சொல்லி அதை நீங்கள் லூசு என்று படித்து - எதற்கு அந்த ஞானி பெயரைக் கெடுக்க வேண்டும்.   அதனால் லாட்சு என்றே குறிப்பிடலாம்).

லாட்சு சொல்கிறார் - வாழ்வில் மறைந்து  கிடக்கும் உண்மைகள்தாம் நம்மை வழி நடத்துகின்றன என்று (இவருடைய இதே கருத்தை James  Allen  போன்ற தத்துவ ஞானிகளும் வழி மொழிந்திருக்கிறார்கள்).  அது என்ன மறைந்து கிடக்கும் உண்மைகள். வேறொன்றுமில்லை  நம்முடைய எண்ணங்கள்தான்.

மக்கள் நம்முடைய சொல்லையும், செயல்களையும்,  வைத்து நம்மை மதிப்பீடு செய்கிறார்கள்.  ஆனால்  இறைவன் (இறைவன் என்ற வார்த்தை பிடிக்காதவர்கள் இயற்கை என்று எடுத்துக் கொள்ளலாம்) நம்முடைய எண்ணங்களை வைத்து மட்டுமே நம்மை மதிப்பீடு செய்கிறான்.

இப்போதுதான் புரிந்தது தாயத்தை உருட்டுவது நாமாக இருந்தாலும் (அது செயல் மட்டும்தான்) ஏணியா அல்லது பாம்பா என்பதை நம் எண்ணத்தை வைத்து  இறைவன் முடிவு செய்கிறான்.

சரி இப்ப என்ன இந்த சிந்தனை என்கிறிர்களா ? எல்லாம் அம்மாவுக்கு bail கிடைத்த சந்தோசம்தான்.


Monday, September 22, 2014

கல்யாண வைபோகமே


கடந்த 20 நாட்களாக நிறைய கல்யாண வைபவங்கள்.  எல்லா விருந்துகளிலும் கிட்டத் தட்ட ஒரே மாதிரியான menu.  இலை நிறைய அயிட்டங்களை (items - தவறாக நினைத்து விடாதீர்கள்) பார்த்தாலே வயிறு நிரம்பி விடுகிறது (நான் என்னைச் சொன்னேன்).

அதிலும் சாப்பாட்டு  விசயத்தில் நான் கொஞ்சம் slow (சாப்பாட்டு விசயத்தில் மட்டுமா என்று கேட்டு விடாதீர்கள்).  நான் சாம்பாரில் கை வைக்கும்போதே பக்கத்து இலைகாரர், yeh dhil maange  மோரில் இருப்பார்.  நான் ரசத்திற்கு வரும்போது  மோர்காரர்,  கை கழுவிக் கொண்டிருப்பார்.  அதற்குள் இலை எடுப்பவர் பக்கத்து இலை வரை மடித்து பேப்பரை 'சர்' என்று கிழிக்கும்போது தெறித்து விழும் சில பருக்கைகள் போதும் எழுந்திரு என்று சொல்லாமல் சொல்லும்.  அதுவும் தவிர இப்போதெல்லாம் வெட்கமே இல்லாமல் நாமோ அல்லது மற்றவர்களோ அடுத்தவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் பின்னால் போய் நின்று விடுகிறோம்.   அதிலும் பின்னால் நிற்கும் சிலர் தெரியாதது போல தெரிந்தே நம் chair ஐ இடித்துக் கொண்டிருப்பார்கள்.  அதனால் சாப்பிடும்போது பெரும்பாலும் குப்பையில் கொட்டுவது போல எல்லா அயிட்டங்களையும் வயிற்றில் கொட்டிவிடுகிறோம்.


எதற்கு இத்தனை  அயிட்டங்களை பரிமாற வேண்டும் எனக் கேட்டால், ஒன்றுமில்லாதவனே ஓஹோ என்று செய்யும் போது நாம் இதைக் கூட செய்யவில்லை என்றால் நம்மை ஊர் என்ன சொல்லும் என்று நம்மை திருப்பிக் கேட்பார்கள்.  அதுவும் உண்மைதான். பல சமயங்களில் நாம் ஊருக்காகதான் சில விசயங்களை செய்ய வேண்டி இருக்கிறது (அல்லது செய்யாமல் இருக்க வேண்டி இருக்கிறது).

 
அதே சமயத்தில் இப்படி உணவு விரயமாவதைத் தவிர்த்தால் எல்லோருக்கும் நல்லது. Buffet சிஸ்டம் ஓரளவுக்கு ஓகே.  ஆனால் அதையும் நம்ம ஆட்கள் எல்லோரும் விரும்புவதில்லை.

ஒரு சின்ன யோசனை எனக்கும் என் மனைவிக்கும் தோன்றியது.  நாம் தாம்பூலப் பையில் ஒரு சின்ன box வைத்து அதை சாப்பிடும்போதே கொடுத்து விடலாம்.  Sweet, Cutlet போன்ற dry dish-களை, அப்போது சாப்பிட விரும்பாதவர்கள் அந்த box  இல் வைத்து வீட்டிற்குச் சென்று பொறுமையாகச் சாப்பிடலாம். 

ஆனால் இதிலும் ஒரு அபாயம் இருக்கிறது.  நம்மில் சில பேர் இலையிலும் போடு boxசிலும் போடு என்று அடம் பிடித்தால், இரண்டாவது  பந்தியிலேயே இலையில் வைப்பதற்கு ஒன்றும் இல்லாமல் .போகக்கூடும்.

இருந்தாலும் எதையாவது செய்து விரயத்தை தவிர்ப்போம்.  கொஞ்சம் சிந்திக்கலாம்.



Sunday, August 17, 2014

Celebrate the Life - The Krishna Way


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

                                        ஆண்டாள் திருப்பாவை 

பொருள்: தேவகியின் மகனாகப் பிறந்து, ஒரே இரவில் யாருக்கும் தெரியாமல் மறைந்து வந்து யசோதையிடம் சேர்ந்தவனே. உன்னால் தனக்கு கேடு வரும் என்று நினைத்துப் பயந்த கம்சன் உன்னை அழிக்க நினைத்தான். ஆனால் நீயோ அதை தவிடுபொடியாக்கி, அவனது வயிற்றில் நெருப்பைப் போல பயத்தை உண்டாக்கி நின்றாய்.


நான் சென்ற வருடம் Mount Kailash - Manasarovar சென்று திரும்பிய நாள் கிருஷ்ண ஜெயந்தி. நான் இதை ஒரு "good omen" என்றே எப்போதும் நினைப்பேன்.  ஏனென்றால் கண்ணன் காட்டிய வழியில் நடந்தால் நம்மால் வாழ்க்கையை எந்த சூழ்நிலையிலும் positive  ஆக மாற்றிக் கொள்ள முடியும்.   

வெண்ணை திருடிய "திருட்டு" கண்ணன், கோபியரோடு கொஞ்சிய  "குறும்பு" கண்ணன், போர்க்களத்தில் அர்ஜுனன் மூலமாக உலகுக்கே புத்தி சொன்ன "விஸ்வரூப" கண்ணன், இதையெல்லாம் சற்று விலக்கி விட்டு கண்ணன் பிறந்த சூழ்நிலையை எண்ணிப் பார்ப்போம். மேலே ஆண்டாள்  கூறியபடி "ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர" வேண்டிய சூழல்.  தனக்கு முன் பிறந்த குழந்தைகளை எல்லாம் தன்னுடைய தாய்மாமன் கம்சன் கொன்ற நிலையில், தான் வயிற்றில் இருக்கும்போது தன்னுடைய தாயுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும் (குழந்தை வயிற்றில் இருக்கும்போது தாய் இருக்கும் மனநிலை குழந்தையை பாதிக்கும் என்ற வாதத்தைப் பொய்ப்பித்தவன் கண்ணன் - கண்ணன் கடவுளின் அவதாரம் என்பதை கொஞ்சம் ஒதுக்கி வைத்துப் பார்த்தால்).

வளரும் பருவம் முழுவதும் தன்னை பகை சூழ்ந்த நிலையிலும் வாழ்க்கையை கொண்டாட மறக்காதவன்.  போர்க்களத்தில் பாண்டவர்களின் பக்கம் இருந்தாலும் கௌரவர்களின் மீது பகைமை  கொள்ளாதவன்.    

தன்னுடைய சொந்த சோகங்களைப் பற்றி புலம்பிக் கொண்டு இருக்காமல், போர்க் காலத்திலும் (அல்லது போர்க் களத்திலும்) வாழ்வாங்கு வாழ்வதை கீதை மூலமாகச் சொன்னவன் கண்ணன்.

கண்ணன் மூலமாக நாம்  கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் "Celebrate  the  Life - Inspite of your  Odds".

மேலே உள்ள படத்தில் புன்னகை பூத்துக் கொண்டிருப்பவன் எங்கள் வீட்டில் எங்களோடு கொண்டாட வந்த கண்ணன்.

அனைவருக்கும் "கிருஷ்ண ஜெயந்தி" நல்வாழ்த்துக்கள்.