Saturday, April 25, 2015

ஜெ .கே - சில குறிப்புக்கள

ஒரு எழுத்தாளன் எழுதுவதை நிறுத்தி 25 ஆண்டுகளுக்குப் பிறகும் அவனுடைய மரணம் எல்லோராலும் பரவலாகப் பேசப்பட்டது திரு ஜெயகாந்தனாகத்தான் இருக்கும்.

ஜெ .கே என்று பிரியமுடன் அழைக்கப்படும் ஜெயகாந்தனின் எழுத்து எனக்கு  பரிச்சயமாக இருந்தாலும், அவரின் எழுத்து வீரியத்தையும் அவரின் குணநலன்களையும் முழுமையாக அறிந்து கொண்டது எங்கள் Discovery Book Palace சார்பில் நடத்தப்பட்ட அவரது அஞ்சலிக் கூட்டத்தில்தான்.

முகநூலில் (Facebook) பத்து வரிகளுக்கு மேல் தமிழில் ஒரு தகவல் வந்தாலே படிக்கச் சிரமப்படும் இன்றைய தலைமுறைக்கு (நான் பொதுவாச் சொன்னேன்) ஜெயகாந்தனின் எழுத்துக்கள் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது.  ஆனால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த நமது சமூக சூழ்நிலையோடு ஒப்பிடும்போது, அவருடைய அக்னிப் பிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற கதைகள் அந்தக் காலத்தில் எந்த அளவு அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் என்று உணர முடிகிறது.

மது, கஞ்சா என்ற அவரது வாழ்க்கை முறை எனக்கு உடன்பாடில்லாதது. ஆனால் பாசாங்கு இல்லாத அவரது வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்தமானது. நாம் எல்லோரும் பெரும்பாலும் நமது செய்கைக்கு நியாயம் கற்பிப்போம். நாம் சொல்வதையும் செய்வதையும் மற்றவர்கள் அங்கிகரிக்க வேண்டும் என்று நினைப்போம்.   ஆனால் எனக்கு சரி உனக்கு தவறு என்றால் உனக்கு சரி எனக்குத் தவறாகும் என்ற அவரது சிந்தனை, அவரது எந்த செயலையும் அவர்  நியாயப் படுத்தவும் இல்லை, பிறர் அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இல்லை.  உன் வாழ்கையை நீ வாழ். என் வாழ்க்கையை  நான் வாழ்கிறேன் என்ற அளவில் வாழ்ந்து சென்றவர் அவர்.

பொதுவாக இருவர் பேசிக் கொண்டிருக்கும் போது,  தங்களைப் ப ற்றிய  தற்பெருமையோ அல்லது மூன்றாவது மனிதரைப் பற்றிய அவதூறோ  (அல்லது கிசுகிசுப்போ) இடம் பெறுவது இப்போதெல்லாம் வாடிக்கையான ஒன்று.  ஆனால் ஜே.கே. இருந்த இடத்தில இந்த இரண்டும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.  இது நாமெல்லோரும் பின்பற்றவேண்டிய மிகச் சிறந்த பண்பாகும்.

ஜே.கே. கதைகள் மட்டும்தான் எழுதுவார் என்று நினைத்திருந்தேன்.  ஆனால் அவர் மிகச் சிறந்த திரைப்படப் பாடல்கள் சிலவற்றையும் எழுதியுள்ளார் என்பது இப்போதுதான் தெரிந்தது.   அவருடைய ஒரு பாடலின் சில வரிகள் - பருவ மழை பொழியப்  பொழிய பயிர்களெல்லாம் செழிப்பாகும்.  ஆனால் பருவ மழை பொழிந்ததால் இவள் வாழ்க்கை பாலைவனம் ஆகியது என்ற வரிகளின் மூலம்  வாழ்கையில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவலத்தை மிகச் சில வரிகளில் உணர்த்திவிட்டார்.

பேச்சு என்பது காற்றில் கரைந்துவிடக் கூடியது.  எழுத்துதான் நிரந்தரமான பேச்சு.  இது ஜெயகாந்தன் சொன்னது.  அதனால்தானோ என்னவோ அவருடைய மூச்சு நின்ற பின்னும் அவரது பேச்சு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இனிமேல்தான் ஜெயகாந்தனின் எழுத்துக்களை முழுமையாக படிக்க வேண்டும்.  அப்போது தேவைபட்டால் அவரது எழுத்துகளைப் பற்றி மீண்டும் எழுதுகிறேன்.






Tuesday, March 31, 2015

இன்ஸ்பெக்டர் சரவணன் பேசறேன்


2009 ம் ஆண்டு என் குடும்பத்துடன் மூணாறு சென்றிருந்த போது அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் இருந்து வந்த குரலில் சற்றுக்  கடுமை தெரிந்தது - "நான் Crime Branch இன்ஸ்பெக்டர் பேசறேன்.  நீங்கள் சென்னை வந்ததும் என்னை வந்து பார்க்கவும். உங்களிடம் enquiry செய்ய வேண்டியுள்ளது".  நான் கொஞ்சம் jerk ஆனேன்.  ஆனாலும் Crime Branch இன்ஸ்பெக்டர் நம்மை enquiry செய்யும் அளவுக்கு பெரிய மனிதன் ஆகவில்லையே.  யாரோ நண்பர்கள் கலாய்க்கிறார்கள் என்று தோன்றியது.

மறுமுனையில் தொடர்ந்த பேச்சு அதனை உறுதி செய்தது.  "என்னடா பயந்துட்டியா ? நான்தான் உன் காலேஜ் friend சரவணன் பேசறேன். எப்படிடா இருக்க ? என்றது அந்தக் குரல்.

என் நினைவலைகள் 1990 ம் ஆண்டுக்கு பின்னோக்கி ஓடியது.  நானும் சரவணனும் B.Com, M.Com என 5 வருடங்கள் ஒன்றாக  படித்தவர்கள்.  என்னுடைய கல்லூரி நண்பர்களில் முக்கியமானவன் சரவணன்.  அப்போது அவன் வீடு திருவான்மியூர் வால்மீகி நகரில் இருந்தது.  அதனால் பெரும்பாலான நாட்களில் திருவான்மியூர் கடற்கரையில் கடலை போட்டுக் கொண்டிருப்போம்.  எங்கள் நட்பின் பிணைப்பு அதிகமாகியது அந்த நாட்களில்தான். அப்போதே காவல்துறையில் அதிகாரம் மிக்க பதவியில் வரவேண்டும் என்பது அவனது இலட்சியமாக இருந்தது.  கல்லூரி வாழ்க்கை முடிந்த சில மாதங்களில் எங்கள் பயணம் வேறுவேறு பாதைகளில் செல்ல ஆரம்பித்து விட்டது.  அவன் சப்-இன்ஸ்பெக்டர் ஆகி ஏதோ ஒரு ஊரில் posting ஆனதுவரை எங்கள் தொடர்பு இருந்தது.

அதற்குப் பிறகு சுமார் 18 வருடங்கள் கழித்து இப்போதுதான் அந்தக் குரல்.  அனால் 18 வருடங்கள் கழித்து பேசினாலும் அந்தப் பழைய நட்பு மீண்டும் பச் என்று ஒட்டிக் கொண்டது.  பழைய நினைவுகளில் மூழ்கி மீண்டும் நிகழ் காலத்துக்கு வந்து பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம்.  நான் என்னுடைய குடும்ப விவரங்களை சொல்லிவிட்டு "குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்" என்று கேட்டேன்.  மறுமுனையில் சற்று அமைதி.  "இன்னும் இல்லைடா" என்றது அவனது குரல்.  எனக்கு தர்ம சங்கடமாக ஆகிவிட்டது.  உடனே வேறு விஷயத்திற்கு பேச்சை மாற்றி சென்னை வந்து சந்திக்கலாம் என்று பேச்சை முடித்தோம்.

பிறகு சென்னை வந்ததும் நானும் அவனும் வேறு சில கல்லூரி நண்பர்களும் சந்தித்து எங்கள் நட்பை புதிப்பித்துக் கொண்டோம்.

நானும் அவனும் அவரவர் பணியில் busy ஆக இருப்பதால் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் நாங்கள் constant தொடர்பில் இருந்தோம்.  மீண்டும் ஒரு முறை அவனிடமிருது அலைபேசி அழைப்பு.  இந்த முறை வார்த்தைகளில் ஆனந்தம் பொங்கியது.  விஷயம் இதுதான்.  நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவனுக்கு மழலை பாக்கியம் உண்டாகி இருந்தது. குழந்தை பிறந்ததும், போய்ப் பார்த்ததும், அந்தக் குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் பங்கெடுத்துக் கொண்டதும் எங்கள் நட்பின் ஆழத்தைக் கொஞ்சம் அதிகமாக்கியது.

அவனை கடந்த நவம்பர் மாதம் என் Partner Suresh உடன் சென்று காஞ்சிபுரத்தில் சந்தித்தேன்.  அங்குதான் அவன் பணியில் இருந்தான்.  குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டி இருப்பதால் சென்னைக்கு மாற இருப்பதாகச் சொன்னான்.  சென்னை வருவதற்கு அவனுக்கு விருப்பமே இல்லை.  சென்னையில் கடலில் கரைத்த பெருங்காயமாக காணமல் போய் விடுவோம் என்று சொன்னான்.

நான் காஞ்சிபுரத்தில் இருக்கும்போதே family ஐ கூட்டிகொண்டு வாடா.  இங்கிருக்கும் எல்லா கோயில்களுக்கும் எல்லோரும் ஒன்றாக போய் வரலாம் என்று சொன்னான்.  நானும் சரி என்று சொல்லி இருந்தேன்.

இரண்டு நாட்களுக்கு முன் என்னுடைய mail box இல் 'Saravanan updated his status' facebook message வந்திருந்தது.   நான் facebook அடிக்கடி பார்ப்பவன் இல்லை.  இப்படி ஏதாவது message வந்தால் மட்டுமே உள்ளே சென்று பார்ப்பேன்.

Facebook  ஓபன் செய்ததும் "This is Ramani. How are you ? என்று பூங்கொத்துடன் ஒரு message இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக scroll down செய்தேன். "Saro அண்ணா miss You",  "மாமா miss you", 'Saravanan Sir RIP" - படிக்கப் படிக்க தொண்டைக் குழியை ஏதோ ஒன்று அடைத்தது.  கண்களில் நீர் வழியத் தொடங்கியது.  என்னால் நம்ப முடியவில்லை.   என் நண்பர்கள் யாருக்கும் விஷயம் தெரியவில்லை.  எனக்கு அவன் அலைபேசி எண்னை அழைத்து உறுதி செய்வதற்கும் தைரியம் இல்லை.  இருந்தாலும் ஒரு முறை அழைத்தேன்.  Ring அடித்துக் கொண்டே இருந்ததால் கட் செய்துவிட்டேன். பிறகு என் நண்பர் Suresh மூலமாக விஷயத்தை உறுதி செய்துகொண்டேன்.  கடந்த February மாதம் heart attack ஏற்பட்டு இறந்து விட்டான் என்று.


அவன் இறந்த செய்தி கூட அவன் மூலமாகவே தெரிய வந்தது என்ன காரணத்தினால் என்று தெரியவில்லை.  Mobile, Whatsapp என்ற இந்தக் காலத்தில் கூட ஒரு நெருங்கிய நண்பனின் மரணம் ஒரு மாதம் கழித்து தெரிய வந்தது என்னை மிகவும் பாதித்தது.  யாரும் சொல்லவில்லை என்று நீயே சொல்லிவிட்டாயா  சரவணா ?


சில மாதங்களுக்கு முன்புதான் முகநூலில் ஒரு உருவகக் கதையை share செய்திருந்தாய்.  ஒருவனுக்கு 4 மனைவிகள்.  முதல் மனைவி நம் உடல். இரண்டாவது மனைவி நம் மனைவி மக்கள். மூன்றாவது மனைவி நம் சொத்து சுகம்.  நான்காவது மனைவி நம் ஆன்மா.  நாம் நம்முடைய முதல் மூன்று மனைவிகளையும் நன்றாக கவனிக்கிறோம். அவர்கள் நம் கூட வருவதில்லை.  ஆனால் நம் கூடவே வரும் நம் நான்காவது மனைவியான நம்முடைய ஆன்மாவை நாம் இருக்கும்போது நாம் கவனிப்பதே இல்லை என்று.  உன்னுடைய முடிவை நீ தெரிந்துதான் வைத்திருந்தாயோ ?

சரவணா நீ உன்னுடைய ஆன்மாவை நன்றாகத்தான் கவனித்திருக்கிறாய். உடலைத்தான் விட்டுவிட்டாய்.

2009 ம் ஆண்டு அலைபேசியில் உன் அழைப்பு வந்து நம் நட்பு புதிப்பிக்கப்படாமல் இருந்திருந்தால் உன்னுடைய இழப்பு என்னை இந்த அளவு பாதித்திருக்காது.

சரவணா, உன் மரணம் மீண்டும் ஒரு விஷயத்தை எனக்கு வலியுறித்துச்  சென்று இருக்கிறது.  ஆறுதலான வார்த்தைகளையும் அன்பான புன்னகையையும் அடுத்த வேளைக்கு தள்ளி வைத்துவிடாதே என்று.

Saturday, March 14, 2015

தேவை - கவனம்


நான் சமீபத்தில் Osho Tamil என்ற முகநூல் வலைதளத்தில் படித்ததில் பிடித்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க ஓஷோ சொல்லும் வழிமுறை :-

அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.
அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.
ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.
ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.
''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?'' என்றார் அமைச்சர்.
உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்;இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை. நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்!
நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன...பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!''என்றார் ஓஷோ.
'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!
''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.
ஓஷோ நமக்குச் சொல்கிறார்: ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.

இதைப் படித்ததும் என் நண்பன் மகேஷ் தன்னுடைய சிறு வயதில் ஏற்பட்ட நாய்க்கடி அனுபவத்தை சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.  அவன் (இப்போது அவராகி விட்டார். சிறு வயது என்பதால் அவன் என்றே குறிப்பிடலாம்) சின்னப் பையனாக இருந்த போது ஒரு நாய் அவனைக் கடித்துவிட்டது.  

என்னடா செய்தாய் நாயை என்று கேட்டேன்.    

ஒன்றுமில்லை. அந்த நாய் என்னைப் பார்த்து பல்லை இளித்து சிரித்தது. அதனால் கிட்டே போய் நானும் சிரித்தேன். கடித்த பிறகுதான் தெரிந்தது அது சிரிக்கவில்லை. என்னைப் பார்த்து முறைத்தது என்றான்.

யோசித்துப் பார்த்தால் சின்ன வயதில் அவனுக்கு நாயுடன் ஏற்பட்ட அனுபவம் வயதான பிறகும் நமக்கு பல மனிதர்களுடன் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் அடுத்தவர் முறைப்பது  தெரியாமல் சிரிக்கிறார் என்று நினைத்து நெருங்கி கடி வாங்கி வந்து விடுகிறோம்.
  
ஓஷோ சொன்னது போல முடிந்தவரை எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்க முயலுவோம்.

Monday, February 2, 2015

The Pilgrimage


I have just finished reading a book “The Pilgrimage” by Paulo Coelho.  It was a sheer co-incidence that I read this book at a time when my book on “Mount Kailash” (in Tamil) got published.

In his book “The Pilgrimage”, the Author is narrating his Pilgrimage experience to a Sacred Place called the ‘Road to Santiago’ in Spain and I was amazed to note that the experiences portrayed by the Author are universal and applicable to every one of us.

I am just capturing some of the thoughts in the book which fascinated me.  Hope you like it.

‘We must never stop dreaming. Dreams provide nourishment for the soul, just as a meal does for the body. Many times in our lives we see our dreams shattered and our desires frustrated, but we have to continue dreaming.  If we don’t, our soul dies’.

‘The good fight is the one that’s fought in the name of our dreams. When we’re young and our dreams first explode inside us with all of their force, we are very courageous, but we haven’t yet learned how to fight. With great effort, we learn how to fight, but by then we no longer have the courage to go into combat. So we turn against ourselves and do battle within. We become our own worst enemy. We say that our dreams were childish, or too difficult to realize, or the result of our not having known enough about life. We kill our dreams because we are afraid to fight the good fight.’

‘The first symptom of the process of our killing our dreams is the lack of time.  The  busiest people always have time enough to do everything. Those who do nothing are always tired and pay no attention to the little amount of work they are required to do. They complain constantly that the day is too short. The truth is, they are afraid to fight the good fight.’

‘The second symptom of the death of our dreams lies in our certainties. Because we don’t want to see life as a grand adventure, we begin to think of ourselves as wise and fair and correct in asking so little of life. We look beyond the walls of our day-to-day existence, and we hear the sound of lances breaking, we smell the dust and the sweat, and we see the great defeats and the fire in the eyes of the warriors. But we never see the delight, the immense delight in the hearts of those who are engaged in the battle. For them, neither victory nor defeat is important; what’s important is only that they are fighting the good fight.’

‘And, finally, the third symptom of the passing of our dreams is peace. Life becomes a Sunday afternoon; we ask for nothing grand, and we cease to demand anything more than we are willing to give. In that state, we think of ourselves as being mature; we put aside the fantasies of our youth, and we seek personal and professional achievement. We are surprised when people of our age say that they still want this or that out of life. But really, deep in our hearts, we know that what has happened is that we have renounced the battle for our dreams – we have refused to fight the good fight.’

 ‘When we renounce our dreams and find peace, we go through a short period of tranquility. But the dead dreams begin to rot within us and to infect our entire being. We become cruel to those around us, and then we begin to direct this cruelty against ourselves. That’s when illnesses and psychoses arise. What we sought to avoid in combat – disappointment and defeat – come upon us because of our cowardice.’

And one day, the dead, spoiled dreams make it difficult to breathe, and we actually seek death. It’s death that frees us from our certainties, from our work, and from that terrible peace of our Sunday afternoons.’

‘The only way we can rescue our dreams is by being generous with ourselves. Any attempt to inflict self punishment – no matter how subtle it may be – should be dealt with rigorously.’

‘Of all the ways we have found to hurt ourselves, the worst has been through love. We are always suffering because of someone who doesn’t love us, or someone who has left us, or someone who won’t leave us. If we are alone, it is because no one wants us; if we are married, we transform the marriage to slavery. What a terrible thing!’

‘In order to fight the good fight, we need help. We need friends, and when the friends aren’t nearby, we have to turn solitude into our main weapon. We need the help of everything around us in order to take the necessary steps toward our goal.

‘Trust in what your intuition is going to tell you.’

‘Conversation is useful, when people want to convince themselves that what they are saying is right.’

‘Today, you are seeing a manifestation of eros, the feeling of love that exists between two people.’ The bride and groom were smiling for the photographers and accepting congratulations. ‘It appears that these two really do love each other.’ ‘And they believe that their love will grow. But shortly, they will be alone with each other, struggling to earn a living, build a house, and share their adventure.  He will do his time in his work. She is probably a good cook and will be an excellent housewife, because she has been trained since she was a child for that role. She will be good company for him, they’ll have children, and they will feel that they are building something together. They’ll be fighting the good fight. So even if they have problems, they will never be really unhappy.

 ‘However, this story that I am telling you could go a very different way. He might begin to feel that he’s not free enough to express all of the eros, all of the love that he has for other women. She might begin to feel that she gave up a brilliant career in order to be with her husband. So instead of creating something together, each could begin to feel robbed of a means of expressing love. Eros, the spirit that unites them, would begin to reveal only its negative side. And what God had provided to humans as their noblest sentiment would become a source of hatred and destructiveness.

‘Philos is love in the form of friendship. It’s what I feel toward you and others. When the flame of eros stops burning, it is philos that keeps a couple together.’

‘Agape is total love. It is the love that consumes the person who experiences it. Whoever knows and experiences agape learns that nothing else in the world is important – just love. Be kind. ‘

(Eros, Philos and Agage – all are Greek words – meaning love in different forms).

‘A threat leads to nothing if it is not accepted. In fighting the good fight, you should never forget that. Just as you should never forget that both attacking and fleeing are part of the fight. What isn’t a part of the fight is becoming paralyzed by fear.’

‘When you sensed the presence of something positive, your imagination concluded that someone had arrived to help you. And this, your faith, saved you. Even though it was based on an assumption that was absolutely false.’

‘Human beings are the only ones in nature who are aware that they will die. For that reason and only for that reason, I have a profound respect for the human race, and I believe that its future is going to be much better than its present. Even knowing that their days are numbered and that everything will end when they least expect it, people make of their lives a battle that is worthy of a being with eternal life.’

 ‘Teaching is only demonstrating that it is possible. Learning is making it possible for yourself.’

‘The only way to make the right decision is to know what the wrong decision is.’
  
‘Everything is contained in sounds – the past, the present, and the future. The person who does not know how to listen will never hear the advice that life offers us all the time. And only the person who listens to the sounds of the moment is able to make the right decisions.’

 ‘People always arrive at the right moment at the place where someone awaits them.’

Monday, January 12, 2015

விவேகானந்தர் பாறை

இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள். தேசிய இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் அவரைப் பற்றிய சில சிந்தனைகள்.
நமெக்கல்லாம் விவேகானந்தர் பாறை கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவில் உள்ளது என்று மட்டும்தான் தெரியும் (என்று நினைக்கிறன்).  அதன் வரலாற்றை கொஞ்சம் சுருக்கமாக தெரிந்து கொள்வோமா ?
துறவியாக இந்தியா முழுவதும் வலம்  வந்த விவேகானந்தர் கடைசியாக 1892 ம் ஆண்டு டிசம்பர் மாதம்  வந்து சேர்ந்த இடம் கன்னியாகுமரி. இங்கு வந்து சேர்ந்த போது அவரிடம் கையில் ஒரு பைசா கூட இல்லை. கடற்கரையில் இருந்து கொஞ்ச தூரத்தில் தெரிந்த அந்த ஒற்றைப் பாறையை பார்த்ததும் அதில் சென்று அமைதியாக தியானம் செய்ய விரும்பினார்.  ஆனால் அவரிடம் காசில்லாததால் படகோட்டி அவரை அழைத்து செல்ல முடியாது என்று கூறிவிட்டான்.
உடனே விவேகானந்தர் கொஞ்சமும் கவலைபடாமல் திமிங்கலங்களும் சுறா மீன்களும் நிறைந்த அந்த கடலில் குதித்து நீச்சல் அடித்துச் செல்லத் தொடங்கிவிட்டார்.  இங்கு ஒரு பெரிய படிப்பினையை சொல்லாமல் சொல்கிறார் சுவாமி விவேகானந்தர்.  வாழ்க்கையில் நாம் பிறருடைய உதவியை பெற்றுக் கொள்ளலாம்.  ஆனால் அப்படி உதவுவதற்கு யாரும் இல்லை என்றாலும்கூட தன்  கையே தனக்குதவி என்று தன்னம்பிக்கையுடன் நம் வாழ்க்கையில் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கவேண்டும். படகோட்டி மட்டும் என்னை அழைத்துச் சென்று இருந்தால் நான் சூப்பர் ஆக தியானம் செய்திருப்பேன் என்று சொல்லவில்லை.
அப்படி அவர் அந்த பாறைக்குச் சென்று சேர்ந்த நாள் ஒரு  Chiristmas தினம் - 25 டிசம்பர் 1892.  அந்த பாறையில் தொடர்ந்து 3 நாட்கள் தியானம் செய்து 28 ம் தேதியன்றுதான் கரைக்குத் திரும்பினார்.  
1970 ம் ஆண்டு திறக்கப்பட்ட விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டத் தொடங்கப்பட்ட ஆண்டு 1964.
சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, திரு ஏக்நாத் ரானடே என்பவற்றின் பெருமுயற்சியால் இந்த நினைவு மண்டபம் உருவானது.
இன்று எனக்கு என் நண்பர் சசி (Company Secretary) ஒரு மெயில் அனுப்பி இருந்தார்.   அதன் content கீழே.  தேங்க்ஸ் சசி.  
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்...
சுவாமி விவேகானந்தர் : நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பத்தையே நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை.
சுவாமி விவேகானந்தர் : நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும் துன்பம் ஏன்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : உரசாமல் வைரத்தை பட்டை தீட்டமுடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள். (By experience their life becomes better, not bitter!)
சுவாமி விவேகானந்தர் : அப்போது, சோதனைகள் நன்மைக்கு என்று சொல்கிறீர்களா?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஆம். அனுபவத்தை விட பெரிய ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை கொடுத்துவிட்டு பிறகு தான் பாடத்தை போதிக்கும்.
சுவாமி விவேகானந்தர் : கணக்கற்ற பிரச்னைகளில் மூழ்கி தவிப்பதால் நாங்கள் எங்கே போகிறோம் தெரியவில்லை….
இராமகிருஷ்ண பரமஹம்சர் : வெளியே பார்த்தால் எங்கே போகிறோம் என்று உனக்கு புரியாது. உனக்குள்ளே பார். புரியும். கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான் வழியை காட்ட முடியும். (Eyes provide sight. Heart provides the way.)
சுவாமி விவேகானந்தர் : சரியான பாதையில் போகும்போதும் தோல்வி அடிக்கடி ஏற்படுகிறதே?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : செல்லும் பாதையில் வெற்றி என்பது பிறரால் அளக்கப்படுவது. ஆனால் அதில் கிடைக்கும் திருப்தி என்பது உன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது.
சுவாமி விவேகானந்தர் : கடினமான சூழ்நிலைகளில் எப்படி நீங்கள் உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : எப்பொழுதும், இனி எப்படி போகப்போகிறோம் என்று அச்சப்படுவதைவிட இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார். உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல.
சுவாமி விவேகானந்தர் : இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பப்படும்போதுஎனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்??” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.
சுவாமி விவேகானந்தர் : வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை நான் அடைவது எப்படி?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற கடைபிடிக்கவேண்டிய நியதி.
சுவாமி விவேகானந்தர் : கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில நேரங்களில் என்னுடைய பிரார்த்தனைகளை இறைவன் கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை. (There are no unanswered prayers!) அச்சத்தை விடு. நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பது தீர்வு காணப்படவேண்டிய ஒரு புதிர் தானே தவிர பிரச்னை அல்ல. எப்படி வாழவேண்டும் என்று மட்டும் நாம் அறிந்து கொண்டால் வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறிவிடும். என்னை நம்பு



Sunday, December 21, 2014

ஆழி மழைக் கண்ணா


"ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்து
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்சங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்"

மேலே சொன்ன ஆண்டாள் திருப்பாவையின் பொருள் :

"மேகத்திற்கு அதிபதியான கண்ணா, கடல் நீர் முழுவதையும் எடுத்துக் கொண்டு மேலே செல். கண்ணனின் நிறம் போல் கருத்து, பத்மநாபன் கையில் உள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல மின்னலை வீசு.  வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலி எழுப்பி அவனது   வில்லில் இருந்து வெளிப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக.  மார்கழி நீராடுலக்காக எல்லா நீர் நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சி அடையச் செய்வாயாக".

கடல் நீர் ஆவியாகி பிறகு மேகமாகி மழை பொழிகிறது என்று இன்றைய அறிவியல் சொல்வதை போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகிறாள் ஆண்டாள்.  இப்படி பல விஷயங்களை நம்முடைய முன்னோர் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர்.  நாம்தான் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றோம்.

திருப்பாவையின் ஒவ்வொரு பாடலின் வரிகளும் positive vibration அளிப்பது என்பது என் கருத்து.  உதாரணத்திற்கு திருப்பாவையின் 3 வது பாசுரத்தில் வரும் சில வரிகள் "தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து",  "வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்" , "நீங்காத செல்வம்". இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.     

ஆண்டாளின் திருப்பாவையை நாம்தான் கல்யாணமாகாத கன்னிப் பெண்கள் (அது என்ன கல்யாணமாகாத கன்னிப் பெண்கள் என்று கேட்காதீர்கள் - but  ஆனா, நடு  centre  என்ற வகையில் புரிந்து கொள்ளவும்) மட்டும் நல்ல கணவன் கிடைப்பதற்காக படிக்க வேண்டும் என்று சுருக்கி விட்டோம்.

என்னைப் பொறுத்த வரை திருப்பாவையை ஆண்  பெண் என்று எல்லோரும் படிக்க வேண்டும்.

கல்யாணம் ஆகாத பெண்கள் (ஆண்களும்தான்) தினமும் திருப்பாவை பாசுரம் படித்தால் நல்ல வாழ்க்கைத் துணையும், நிறைந்த செல்வமும் கிடைக்கும் என்பது நம் பெரியவர்களின் நம்பிக்கை.

"நாம் கூட திருப்பாவை பாசுரங்கள் படித்திருந்தால் நமக்குக் கூட .........." என்று மணமான (I mean கல்யாணமான) சிலபேர் நினைக்கக் கூடும். கவலையே படாதீர்கள்.  இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை.  இப்போதாவது ஒழுங்காகப் படித்தால், கொஞ்சம் ஏடாகூடமாக வாழ்க்கை (துணை) இருந்தால் கூட, தட்டி சரி செய்துவிடுவார் நம் ஆண்டாள்.