Monday, June 13, 2016

உங்கள் வாசனை என்ன ?


இன்று மதுரையில் இருந்து நண்பர் திரு. செந்தில் phone செய்திருந்தார்.  என்ன sir உங்கள் blog-இல் ஒரு மாதமாக புதிதாக எதுவும் பதிவு செய்யவில்லையே. அடிக்கடி உங்கள் வலைதளத்தை எட்டிப் பார்த்து ஏமாந்து விடுகிறேன் என்று சொன்னார்.  நம்முடைய வலைதளத்தையும் தினமும் சிலர் பார்க்கின்றனர் என்பதே ஒரு பெருமைதானே.

நீங்கள் சொல்லும் விஷயம் எல்லோருக்கும் தெரிந்த பொதுவான விஷயமாக இருந்தாலும் உங்கள் எழுத்து நடை படிக்கும் போது சுவாரசியமாக இருக்கிறது என்றும் சொன்னார்.  இது போதாதா  நமக்கு.  ஒரு எழுத்தாளனுக்கு தேவையான அனைத்து சாமுத்ரிகா லட்சணங்கலுள் ஒரு சில நமக்கும் இருக்கிறது போலும் என்ற ஒரு சின்ன சந்தோஷம் எனக்கு. 

அவருக்காகவே இன்று ஒரு பதிவு.  

திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் "சிறிது வெளிச்சம்" என்ற நூலில் "வாசனையாக மாறுங்கள்" என்ற கட்டுரை ஞாபகம் வந்தது.  அதில் இருந்து சில வெளிச்சங்கள்.

"மனிதர்களின் தீராத வாசனையின் பெயர் சிரிப்பு.  குழந்தைகளின் சிரிப்பை பார்த்து இருக்கிறீர்களா ? காரணம் இல்லாத சிரிப்பு அது. குழந்தைக்கு நினைவுகள் இல்லை.  அது சிரிப்பை மட்டுமே தன் சந்தோஷத்தின் வெளிப்பாடாகக் கொண்டிருகிறது.

குழந்தைகள் சிரிக்கும்போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவில்லாதது. அப்படியான சிரிப்பு வளர வளரத் தேய்ந்து விடுகிறது.  பல நேரங்களில் சிரிப்பதற்காக இடம் தேடி, ஆள் தேடி அலைகிறோம்.  நடுத்தர வயதில் சிரிப்பை முழுமையாக கைவிட்டு விடுகிறோம்.

தீர்க்க  முடியாத நோய்களில் ஒன்று சிரிப்பை இழப்பது.  ஞானிகளும் குழந்தைகளும் சிரிப்பதற்கு காரணத்தை நாடுவதில்லை.   பனி உருகுவது போல சிரிப்பு அவர்களின் மனதில் இயல்பாக வெளிப்படுகிறது.

சிரிப்புக்கு ஒரு வாசனை இருக்கிறது.  அதை நுட்பமாக உணர்ந்தவர்கள் அறிந்து இருக்கிறார்கள்".   இப்படிப் போகிறது அந்தக் கட்டுரை.

இந்தக் கட்டுரையை படித்ததும் கண்ணை மூடி கொஞ்சம் சிந்தித்தேன். உண்மைதான் நாம் வாசனை என்று நினைப்பது எல்லாம் பொதுவாக அத்தர் ஜவ்வாது மற்றும் பல வாசனைத் திரவியங்களைத்தான்.  அதனால்தான் TMS கூட அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசியும் அங்கம் மணக்கவில்லையே என்று மனம் உருகப் பாடினார்.

இத்தகைய வாசனைத் திரவியங்கள் நம்முடைய வியர்வை நாற்றத்தில் இருந்து வேண்டுமானால் நம்மை கொஞ்சம் பாதுகாக்கலாம்.

ஆனால் நம்முடைய வாசனை என்பது அதற்கும் சற்று மேலே.

சிலர் ஏதோ ஒரு வகையில் நம்மை ஈர்த்துக் கொண்டிருப்பார்கள்.  சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அருகில் சென்று பழகும்போது விலகி ஓடும்படி செய்து விடுவார்கள்.  

யோசித்துப் பார்த்தால் நம்முடைய எண்ணங்கள் நம்மைச் சுற்றி ஒரு வாசனையை உருவாக்கி விடுகிறது.  மூக்கினால் நுகர முடியாத அந்த வாசனை பிறரை நம்மை நோக்கி இழுக்கிறது அல்லது நம்மிடம் இருந்து விலக வைக்கிறது.

ரமண மகரிஷி போன்ற மகான்களின் புன்முறுவல் பூக்கும் அந்த முகங்களின் வாசனை இன்றும் நம்மை அவர்கள் இருந்த இடங்களை நோக்கி இழுக்கிறது.

நாமும் அப்படிப்பட்ட வாசனையைப் பெற கொஞ்சமாவது முயற்சி செய்வோம்.  அதற்கு பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம்.  யாரிடமும் நெஞ்சில் வஞ்சம் இல்லாமல் பழகத் தெரிந்தால் போதும்.  உங்கள் புன்னகை தந்திரப் புன்னகையாக இல்லாமல் இருந்தால் மந்திரப் புன்னகையாக மாறும். (அடப் பாவி அதுதானே கஷ்டம் என்று சொல்கிறிர்களா ? அதுவும் சரிதான்).  ஆனால் முயற்சி திருவினையாக்கும்.





Wednesday, May 18, 2016

நல்லாட்சி அமையட்டும்

தேர்தல் நாளன்று நம் விரலில் வைக்கப்பட்டு மிச்சம் இருக்கும் மை பின் வரும் நாட்களில் பெரும்பாலும் நம் முகத்தில் .பூசப்பட்டு விடுகிறது அரசியல்வாதிகளால் / ஆட்சி செய்பவர்களால்.

ஆனால் இனிமேல் யார் ஆட்சிக்கு வந்தாலும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்க வேண்டியிருக்கும்.  ஏனென்றால் மக்களின் political awareness அதிகமாகிக்கொண்டே வருகிறது.  இது ஒரு நல்ல விஷயம்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மது விலக்கு என்று கூறியதற்கு மக்களின் இந்த awareness தான் காரணம்.  Social Media  கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் வைகோ விஜயகாந்த் என்று யாராக இருந்தாலும் மீம்ஸ் போட்டு நோகடித்து விடுகிறார்கள்.  மக்கள் நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே அரசியல்வாதிகளுக்கு ஒரு அச்சுறுத்தல்தான்.  

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தேனாறும் பாலாறும் ஓடப் போவதில்லை. நம் சோற்றுக்கு நாம்தான் உழைக்க வேண்டும்.  

நாம் எதிர்பார்ப்பது எல்லாம் ஊழலற்ற திறமையான நிர்வாகம்,  நீர்நிலை ஆதாரங்களைப் பெருக்கி சுத்தமான ஆரோக்கியமான நீர், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்புக்கள் அல்லது சுய தொழில் வாய்ப்புக்கள், அமைதியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் போன்றவைதான்.   இவற்றை ஒரு அரசாங்கத்தால்தான் கொடுக்க முடியும்.   இவற்றை அளிக்க முயன்றதால்தான் நாம் இன்னும் காமராஜர் ஆட்சியை நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

வரும் ஆட்சி இந்த அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று நம்புவோம்.

நம் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு ஒரு like வைப்போம். இவ்வளவு பண பலம், அதிகார பலம் மிக்க அரசியல்வாதிகளுக்கு இடையில் முடிந்த வரையில் தன்னுடைய கடமையை ஒழுங்காகவே செயதிருக்கிறார். அதற்கு அமைதியாக நடந்து முடிந்த தேர்தலே சாட்சி.  சபாஷ் லக்கானி.

நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்கு அளித்திருக்கலாம். ஆனால்  மீண்டும் துளிர்க்கப் போவது இலையோ  அல்லது மீண்டும்  உதிக்கப் போவது சூரியனோதான் .

நாளை சூரிய உதயத்தில் தெரிந்து விடும்.  பொறுத்திருப்போம்.




Saturday, May 7, 2016

பறவையின் நிழல்


நேற்று (6/05/2016) மயிலாப்பூர் CIT காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் திரைப்பட இயக்குனரும் வசனகர்த்தாவுமான திரு. பிருந்தா சாரதியின் இரு கவிதை நூல்கள் (ஞாயிற்றுக் கிழமைப் பள்ளிக்கூடம் மற்றும் பறவையின் நிழல்) வெளியீட்டு விழா Discovery Book Palace சார்பில் நடைபெற்றது.

பட்டிமன்ற பேச்சாளர் திரு கு. ஞானசம்பந்தன், எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன்,   இயக்குனர் திரு லிங்குசாமி, நடிகர் திரு நாசர், ஓவியர் ட்ராட்ஸ்கி திரு. மருது, இயக்குனர் திரு ராஜு முருகன், கவிஞர்கள் திரு அறிவுமதி, திரு யுக பாரதி மற்றும் பல கவிஞர்களும் அறிஞர்களும் கலந்து கொண்ட அறிவார்ந்த சபையாக இருந்தது.

விழா குறித்த நேரத்தில் துவங்கவில்லை என்ற குறையைத் தவிர (அதற்குக் தகுந்த காரணமும் இருந்தது) மற்ற எல்லா விஷயங்களும் மிகச் சிறப்பாக இருந்தன.  நிறைய பேர் பேசினாலும் வளவள என்று பேசாமல் சுவையாக பேசினார்கள்.  

சில சமயங்களில் (அல்லது பல சமயங்களில்) எதிர் பாராமல் நடக்கும் சில விஷயங்கள் மனதிற்கு மிகவும் திருப்தி அளிக்கும். அப்படி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்தி இருந்தது.  Discovery Book Palace திரு வேடியப்பனுக்கு நன்றி. அவர்தான் என்னை கட்டாயம் கலந்து கொள்ளச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்.

வேடியப்பன் பிருந்தா சாரதியை என்னிடம் அறிமுகம் செய்து வைத்த போது அவர் குறித்த எந்தத் தகவலும் என்னிடம் இல்லை.  அதனால் casual ஆக ஒரு ஹலோ சொல்லி அவரைக் கடந்து விட்டேன்.  ஆனால் அவரைக் குறித்து விழாவில் கலந்து கொண்ட எல்லா ஆளுமைகளும் உயர்வாக பேசியதும், அவரது கவிதைகளை புகழ்ந்ததும்  உடனே அவரது கவிதைகளைப் படிக்கத் தூண்டியது.

பறவையின் நிழல்  என்ற புத்தகத்திலிருந்துஅவரது ஒரு காதல் கவிதை :

என் எதிரி என்று ஒருவனைக் காட்டினார்கள் நண்பர்கள் 
புரியாமல் கேட்டேன் யார் அவன் என
உன்னைக் காதலிப்பவனாம்.
உன்னைக் காதலிப்பவன் எனக்கு எப்படி எதிரியாக முடியும் 
அவனிடம் அறிமுகம் செய்து கொண்டு 
அவனுக்கும் சேர்த்து நான் உன்னைக் காதலிப்பதாகக் கூறி 
விலகிக் கொள்ள வேண்டினேன் 
அவனும் அதையே கூறுகிறான் என்னிடம் 
எங்களிருவரில் நீ யாரைத் தேர்ந்தெடுத்தாலும் 
இருமடங்கு காதல் கிடைக்கும் உனக்கு.

இந்தக் கவிதையை விமர்சிக்கும் கவிஞர் ஜெயபாஸ்கரன் இப்படி சொல்கிறார்.  தனக்கு கிடைக்காத பெண் மீது ஆசிட் வீசும் கோட்பாடு நிலைபெற்று அது அவ்வப்போது ஆங்காங்கே கொடூரமாக நடக்கும் இந்தக் காலத்தில் அந்த இழிவு கலாசாரத்திற்கான ஓர் அறிவார்ந்த விடையாக இந்தக் கவிதையை நான் பார்க்கிறேன்  என்று.

உண்மைதான்.  நம் அன்பு பெரும்பாலும் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே அடங்கி விடுகிறது.  ஒருவர் மேல் நாம் கொள்ளும் அன்பு அவரின் மீதோ அல்லது தன்  மீதோ அல்லது அவரின் பொருட்டு வேறு ஒருவரின் மீதோ வெறுப்பை வளர்த்தால் அந்த அன்பினால் என்ன பயன் ?   கட்டிப் பிடித்துக் கொண்டு காறித் துப்பிக் கொள்வதற்குப் பதில், விலகி இருந்து நேசிப்பது உத்தமம்.

உடலைக் கொண்டாடும் காதல் கவிதைகளுக்கு இடையில் உள்ளங்களின் சிலிர்ப்பை கொண்டாடும் இத்தகைய காதல் கவிதைகள் மனதிற்கு இதமாக இருக்கின்றன.

வாழ்த்துக்கள் பிருந்தா சாரதி.  வேடியப்பன், இலக்கியத் தரமான இத்தகைய வெளியீடுகளை நம் Discovery Book Palace தொடர்ந்து செய்ய என் வாழ்த்துக்கள்.








Saturday, April 23, 2016

நம் ஓட்டு யாருக்கு ?


இன்று (23/04/2016) The Hindu நாளிதழில் திருச்சி லால்குடி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் திரு. ஜெயசீலன் அவர்களைப் பற்றிய ஒரு செய்தி வந்திருந்தது.

25 வருடங்களுக்கு மேல் கட்சியில் உறுப்பினராக இருக்கும் 49 வயதான திரு. ஜெயசீலன் வசிப்பது வெறும் 210 சதுர அடி வீடு. இது வரை அவரது பெயரில் வங்கிக் கணக்கு இல்லை.  அவரது 76 வயது தாயார் 100 நாள் தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் ஒரு சாதாரண தொழிலாளி.  மனைவி தனியார் பள்ளி ஆசிரியை.

இவரும் முதுகலை பட்டம்  பெற்று இருக்கிறார்.

இதுவரை லால்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கிறார்.

ஒரு கட்சியில் சேர்ந்து சில வருடங்களிலேயே சொகுசு கார், ஆடம்பர வீடு என்று ஊரை வளைத்து உலையில் போடும் "மாண்புமிகுக்கள்" மிகுதியாக இருக்கும் நம் ஊரில், இன்றும் கட்சி ஊதியமாக அளிக்கும் சில ஆயிரம் ரூபாயில் தன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

25 வருடங்களுக்கு மேலாக மிகவும் simple ஆக வாழ்ந்த ஒருவர் கண்டிப்பாக தன்னுடைய பதவியையும் மக்கள் சேவைக்காகவே பயன்படுத்துவாரே தவிர கொள்ளை அடிக்கும் வியாபாரமாக நினைக்க மாட்டார்.

நாம் எந்த ஒரு கட்சியையும் சாராத நடு நிலை (??) வாக்காளராக இருந்தாலும், பொதுவாக நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கட்சியின் மீது அபிமானம் இருக்கும்.  அல்லது யார் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதை வைத்து அவருக்கு ஓட்டு போடுவோம். 

இந்த முறையாவது நம்முடைய தொகுதியில் நிற்கும் ஒவ்வொரு வேட்பாளரையும் அலசி ஆராய்ந்து யார் உண்மையில் தகுதியானவர் என்று நினைக்கிறோமோ அவர்களுக்கு நம் வாக்கை செலுத்துவோம்.  அவர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் பரவாயில்லை அல்லது அவர்கள் வெற்றி அடைய வாய்ப்பு இல்லையென்றாலும் பரவாயில்லை. 

ஜெயசீலன் போன்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவது நாட்டுக்கும் நமக்கும் நல்லது.










Thursday, March 24, 2016

பாலில் விழுந்த பழங்களைப் போல

"பாலில் விழுந்த பழங்களைப் போல
பருவம் உருவம் நிறைந்தவள் நீயே
மனதில் மேடை அமைத்தவள் நீயே
மங்கல நாடகம் ஆடவந்தாயே"

தேன் நிலவு என்ற படத்தில் A.M. ராஜாவும் ஜானகியும் பாடிய இந்தக் காதல் பாடல் மிகவும் பிரபலம் (நீங்கள் 30 அல்லது 40 வயதைக் கடந்தவராக இருந்தால்).

ஆனால் சமீபமாக இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் கலைஞரும் கேப்டனும்தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.

மயக்கும் விழிகளைக் (அல்லது மயங்கிய விழிகளை) கொண்ட கருப்புக் கன்னி விஜியை (அப்படித்தான் கலைஞர் கேப்டனை அழைப்பார்) பழம் நழுவி பாலில் விழுகிறது என்று கலைஞர் சொல்ல அந்தப் பழம் பாலில் விழுவதற்குப் பதில் காலில் விழுந்துவிட்டது. 

கலைஞர் விஜயகாந்த் காலில் விழாத குறையாக கெஞ்சியது ஒருபக்கம் இருக்க, தலைவரும் தொண்டரும் என்று சகலமும் தானே இருக்கும் சரத்குமார் பாஜகவில் தான் கூட்டணி சேர்ந்து விட்டதாக அறிவித்த பிறகும் அவரை மீண்டும் இரும்புத் தலைவி (?) ஜெயலலிதா சேர்த்துக் கொண்டதைப் பார்க்கும் போது திமுக அதிமுக இரண்டும் மீண்டும் முதல்வர் நாற்காலிக்காக இன்னும் என்னவெல்லாம் செய்வார்கள் என்று தெரியவில்லை.

உண்மையில்  பழம் நழுவி பாலில் விழுந்தது விஜயகாந்துக்குதான்.  இந்த முறை தனியாக அவர் நின்று இருந்தால் அவர் டப்பா டான்ஸ் ஆடியிருக்கும். நல்ல வேளை  கம்யூனிஸ்ட் தோழர்களும், வைகோவும், திருமாவும் அவருக்கு பல்லக்கு தூக்க தயாராகிவிட்டார்கள்.  

எனக்கு வைகோவை நினைத்துத்தான் வருத்தமாக இருக்கிறது.  மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர், சிறந்த வழக்கறிஞர், என்று பல தகுதிகள் பெற்றவர். தமிழக அரசியலில் திமுக அதிமுக தலைமைகளைத் தவிர முதல்வர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளவர்.  அப்படிப் பட்டவர் தன்னை விட கொஞ்சம் கூட்டம் அதிகம் சேருகிறது என்பதற்காக விஜயகாந்த் காலில் விழுந்திருக்க வேண்டியதில்லை. 

இனி என்ன, பல்லக்கில் ஜாலியாக உட்கார்ந்து கொண்டு "த்தூ.... தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க" போன்ற கேப்டன் வசனத்தில் உருவான மீம்ஸ்களை அவரே ரசித்துக் கொண்டு ஊர் ஊராக  தேர்தல் சுற்றுப் பயணம் செய்யலாம்.

கேப்டன் என்ன பேசினார் என்று மறுநாள் செய்தித்தாளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இனி இல்லை.  வைகோவும் திருமாவும் நல்ல பேச்சாளர்கள்.  கேப்டன் தமிழில் பேசியதை அவர்கள் மீண்டும் தமிழில் மொழி பெயர்த்து (??) நமக்குச் சொல்லி விடுவார்கள்.

வாழ்க ஜனநாயகம். 






Friday, February 5, 2016

நம்பிக்கை நொடிகள்


சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளி இல்லாமலோ அல்லது மிகக் குறைவான இடைவெளியுடனோ இருப்பவர்கள் மிகச் சிலர்.

அதைப் போலவே தன்னுடைய பேச்சிலும் எழுத்திலும் காந்தம் கலந்து நம்மை ஏகாந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவரும் சிலர்தான்.

அப்படி ஒரு மனிதர்தான் திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள்.  அவருடைய பேச்சும் எழுத்தும் எனக்கு நல்ல பரிச்சயம். 

சமீபத்தில் "நமது நம்பிக்கை" என்ற மாத இதழில் "நம்பிக்கை நொடிகள்" என்ற தலைப்பில் வெளிவந்த அவருடைய கட்டுரையை படித்தால் நான் சொன்னது சரிதான் என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

இந்தக் கட்டுரையில் பாரதி கிருஷ்ணகுமார் தன்னுடைய தந்தை இறந்த போது இருந்த துக்கத்தில், ஆறுதல் சொல்ல வந்தவர்கள் எல்லாம் துக்கத்தை அதிகமாக்கிய வேளையில், அவருடைய நண்பர் ஒருவரின் இதய சுத்தமான வார்த்தைகள் அவருக்குள் எப்படி நம்பிக்கையை விதைத்தது என்று எழுதியிருக்கிறார்.

இதோ பாரதி கிருஷ்ணகுமாரின் வரிகள் :

"வந்தவர்கள் எல்லோரும் ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆறுதலாக சொல்லப்படும் சொ ற்கள் என் துயரத்தை ஏனோ குறைப்பதே இல்லை. அதிகரிக்கவே செய்கிறது. 

றுதல் சொல்ல வந்தவர்கள் கலங்கிக் , கரைந்து, தயங்கித் தயங்கி சொற்களை தேடித் பேசுகிற துயரம், மேலும் துயரப்படுத்துகிறது. ஒரு துளிக் கண்ணீர் கூட வராமல், உள்ளுக்குள் ஏதோ எடை கூடிக் கொண்டிருந்தது. 

பிற்பகல் ஒன்றரை மணிக்கு “காவன்னா” வந்தார். பக்கத்தில் அமர்ந்து கொண்டு, தடையின்றிப் பேச ஆரம்பித்தார். “அப்பாவுக்கு என்ன வயசு? உனக்கு என்ன வயசு? இன்னும் கல்யாணமாகாத தம்பி தங்கச்சி யாரும் இருக்காங்களா? அப்பா எதுவும் கடன் வச்சிட்டுப் போய் இருக்காரா?” விடை சொல்லிக் கொண்டே வந்தேன்.

ந்தக் கடமையும் அப்பா பாக்கி வைக்கல; அம்மா ஏற்கனவே போயிட்டாங்க...கடனும் எதுவுமில்லை...அப்புறமென்னப்பா?... பெரிய சாவு... கலங்கிப் போய் உட்காரக் கூடாது. சந்தோஷமா வழியனுப்பி வைக்கணும். எந்த வயசா இருந்தாலும் தகப்பன் போறது துயரந்தான்... ஆனா... மத்தவங்க துயரத்தோட ஒப்பிட்டுப் பார்த்துதான் நம்ம துயரத்தக் கணிக்கனும். “ என்னைய எடுத்துக்குங்க... பொறந்து வளந்தது ஒரு சின்னக் கிராமத்துல... நிலம் புலம் எதுவும் கெடையாது.. அன்னாடம் உழைச்சுப் பிழைச்ச குடும்பம்.. நான் ஒத்தப் பொறப்பு. எனக்கு மூணு வயசானப்ப எங்கம்மா செத்துருச்சு... அஞ்சு வயசுல எங்க அப்பனும் போய்ட்டாரு... எங்கேயோ கெடந்து எப்பிடியோ வளந்தேன் . பாருங்க... அப்பா போட்டோவும் இல்ல; அம்மா போட்டோவும் இல்ல; முகமும் ஞாபகத்துல இல்ல... இப்ப நெனச்சாலும் கண்ணீர் பொங்கும்... என்ன பண்ணுறது... உடம்பு பூரா எண்ணெய் பூசிக்கிட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணுதானே ஒட்டும்”. ஒரு கனத்த பெருமூச்சை மெலிதாக வெளியேற்றினார்.

ந்த இடைவெளியும் இன்றி, அவரே தொடர்ந்தார். “எத்தனை மணிக்கு எடுக்குறீங்க?” சாயங்காலம் ஆறு மணிக்கு என்றேன். ஆபிஸ்ல பெர்மிஷன் போட்டு வந்தேன்... சாயங்காலம் திரும்ப வர்றேன் என்று சொல்லி விட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தார் “காவன்னா”. நமது துயரம் தான் உலகிலேயே பெரியது என்று நம்பி நாம் மயங்கும்போது, ஒவ்வொரு பெரிய கோட்டுக்குப் பக்கத்திலும் இன்னுமொரு பெரிய கோட்டை வரைந்து, நாம் பெரியதென்று நம்பியதைச் சிறியதாக்கி, விசித்திரம் காட்டி விளையாடுகிறது வாழ்க்கை.

மூன்று வயதில் தாயையும், ஐந்து வயதில் தந்தையும் இழந்திருந்தால் ஒரு குழந்தை ஒவ்வொரு வேளை சோற்றுக்கும் எவ்வளவு போராடியிருக்கும்? ஒவ்வொரு குச்சிக்கும் சிலேட்டுக்கும் யார் யார் வாசலில் எல்லாம் நின்றிருக்கும்? கொடுங்கனவுகள் கண்டு கண் விழித்த இரவுகளில் எல்லாம் அருகே அரவணைக்க யாருமின்றி எப்படித் தவித்திருக்கும்?... ஓ... இதோ அந்தக் குழந்தை தன துயரங்களை எனக்கு உணர்த்தித், தன் சொற்களால் என் துயரங்களைத் துடைத்தெறிந்து விட்டுப்போகிறான். துயரங்களைக் கடந்து வாழ்வின்மீது பெரும் காதலும், நம்பிக்கையும் உண்டாக்கும் விதைகளை எனக்குள் விதைத்துப் விட்டுப் போய்க் கொண்டிருக்கிறான். என் துயரங்கள் அவருக்குப் பின்னே கைகட்டிப் பணிந்து போவதை நானே பார்த்தேன். இழவு வீட்டிலும் திருப்பணி செய்கிற ஆற்றல் சிலருக்குத்தான் இருக்கிறது"
.

------------ 

இதைப் படிக்கும் நாம் ஒவ்வொருவரும் கண்ணை மூடி ஒருகணம் யோசித்தால், துயரம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் எந்த ஒரு விஷயமும் ஒரு சிறிய கோடு கூட இல்லை - மிகச் சிறிய ஒரு புள்ளிதான் என்று புரியும்.  இந்தப் புரிதலுக்காகத்தான் பாரதி கிருஷ்ணகுமார் போன்றவர்களுடைய எழுத்தும் பேச்சும் தேவையாக இருக்கிறது.






Thursday, January 14, 2016

கலங்காதிரு மனமே


Positive-ஆன விஷயங்களை அவ்வளவு சுலபத்தில் ஏற்க மறுக்கும் நம் மனம் negative-ஆன விஷயங்களை மட்டும் உடனே உடும்புப் பிடியாய் பிடித்துக் கொள்கிறது.  யாரவது நம்மைப் பார்த்து "என்ன இன்றைக்கு smart-ஆக  இருக்கீங்க" என்றால், நம் மனம் அதை நம்ப மறுத்து, "நம்மை கலாய்க்கிறாங்களோ" என்று எண்ண வைக்கும் (சில நேரங்களில் அது உண்மையாகக் கூட இருக்கும் அது வேறு விஷயம்).  ஆனால் அதே நேரத்தில் நல்லா இருக்கும் நம்மைப் பார்த்து யாராவது என்ன dull-ஆ இருக்கீங்க என்று சொன்னால் உடனே ஆமாம் என்று அதற்கு ஒரு காரணம்  சொல்லி   நல்லா இருந்த நாம் dull-ஆக செல்வோம். 

நேற்று ஒரு வாரப் பத்திரிகையில் பெண்களுக்கு வரக் கூடிய ஒரு நோய் குறித்த ஒரு கட்டுரையைப் படித்தேன்.  அந்தக் கட்டுரையில் இந்த நோய் வரக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ள பெண்கள் என்று அவர்கள் குறிப்பிட்டது பின் வரும் பெண்கள்:

1.  உடல் பருமனாக இருப்பவர்கள்
2. 30 வயதைக் கடந்த பெண்கள்
3. மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லாதவர்கள்
4. மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள்
5. குடும்ப நபர்களில் யாருக்கேனும் இந்த நோய் இருந்தால்

யோசித்துப் பார்த்தால் - 10-ல் குறைந்தது 8 பேருக்காவது மேற்குறிப்பிட்ட 5 காரணங்களில் ஒன்றாவது இருக்க வாய்ப்புண்டு.  நாம் சும்மாவே பயந்து சாகிறவர்கள்.  இப்படி பிரபல பத்திரிகையில் வேறு வந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.  நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாகவே நம் மனம் நம்ப ஆரம்பித்து விடும்.  Awareness என்ற பெயரில் இப்போது பத்திரிகைகளும் டாக்டர்களும் நிறைய பயமுறுத்தி விடுகிறார்கள்.

சரி எதற்கும் ஒரு டெஸ்ட் எடுத்துப் பார்த்து விடலாம் என்று hospital போனால் அவ்வளவுதான்.  இல்லாத நோயை வரவழைத்து இருக்கும் நிம்மதியை பறித்துக் கொள்வார்கள்.  நம் உடல் நலனிலும் மன நலனிலும் அக்கறை செலுத்துவது என்பது வேறு.  இது வந்து விடுமோ அது வந்து விடுமோ என்று பயந்து கொண்டே இருப்பது வேறு. 

இந்த நோய் வந்து விடுமா அல்லது அந்த நோய் வந்து விடுமா அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வதாலேயே எந்த நோயையும் தடுத்து விட முடியாது.  எனக்குத் தெரிந்த சிலர் சீக்கிரம் hospital போகாமல் இருந்திருந்தால் கொஞ்சம் late ஆக late ஆகி இருப்பார்கள்.

நாம் மருத்துவத்தின் முக்கியதுவத்தை மறுக்கவும் வேண்டாம். அதே நேரத்தில்   நோயைக் கொண்டாடவும்  வேண்டாம்.  சிலர்  எப்போதும் "எனக்கு இரண்டு நாளா  தலை வலி.  நான்கு நாளா கழுத்து சுளுக்கு, கை பிசகு என்று ஏதாவது ஒரு உடல் உபாதையை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இதுவும் ஒரு வகையில் attention seeking தான்.  ஆனால் அப்படி சொல்லி சொல்லி கண்டிப்பாக அந்த நோயை வரவழைத்துக் கொள்வார்கள்.

நாம்  எதை அதிகம் எதிர்பார்க்கிறோமோ அதை நாம் ஈர்க்கிறோம் - அது நல்லதோ அல்லது கெட்டதோ. நம் வீட்டில் உள்ள குழந்தை  நடக்க ஆரம்பிக்கும்போதே "ஓடாதே, விழுந்துடுவே" என்றால் குழந்தை   விழுவதற்கான chance மிக மிக அதிகம்.   அதற்குப் பதில் "பார்த்து ஓடு" என்று சொல்லலாம். 

நான் பணி புரிந்த அலுவலகத்தில் ஒரு உயர் அதிகாரி இருந்தார்.  அவரிடம் சென்று sir நாளை திருப்பதிக்கு போகிறேன் என்று சொன்னால், பார்த்து போய் வாருங்கள்.  போன வாரம் கூட மலையில் ஒரு bus accident ஆகி விட்டது என்று சொல்வார்.  ஏண்டா இவரிடம் சொன்னோம்  என்று நினைக்க வைத்து விடுவார்.  திருப்பதி மலையின் ஒவ்வொரு  திருப்பத்திலும் "கோவிந்தா கோவிந்தா" என்று பக்தர்கள்  சொல்லும்போது அந்த உயர் அதிகாரி நம் கண் முன்னால் வந்து வந்து செல்வார்.  நாம் வேண்ட இருந்த எல்லா விஷயங்களும் மறந்து போய், ஒழுங்கா வீடு வந்து சேர்ந்தா போதும் சாமி என்று நினைக்க வைத்து விடுவார்.  அவர் சொன்ன ஒரு negative விஷயமே  நம் மனதில் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால், நாம் தினமும் படிக்கும், பார்க்கும் அல்லது கேட்கும் negative விஷயங்கள் நம் மனதை எவ்வளவு பாதிக்கும்.   அதனால் முடிந்த வரை negative விஷயங்களை avoid செய்வோம்.

"துன்பப் பறவைகள் நம் தலைக்கு மேல் பறப்பதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் அவை நம் தலைக்கு மேல் கூடு கட்டுவதை தவிர்க்க முடியும்" என்று ஒரு பழமொழி உள்ளது.  அதனால் நாம்  தினமும் negative-ஆன பல விஷயங்களை கடக்க வேண்டி இருந்தாலும், எதையும்  நம் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் நம் வேலையைப் பார்ப்போம்.

Again, பாரதி சொன்னதுதான் "தின்று விளையாடி இன்புற்று வாழ்வீர்" (தின்பதில் பிரச்சினை இல்லை - ஓடி ஆடி விளையாடமல் இருப்பதுதான் நம் பெரும்பாலோருடைய பிரச்சினை) .

அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.