Monday, January 7, 2019

எண்கள் தேவையற்ற உரையாடல்கள்




”எண்கள் தேவையற்ற உரையாடல்கள்” - வண்ணதாசன் எழுதிய ஒரு சிறுகதையின் தலைப்பு இது.  ஆனந்த விகடனில் வெளிவந்த இந்தச் சிறுகதை வண்ணதாசனின் சாகித்ய அகடமி விருது பெற்ற ”ஒரு சிறு இசை” என்ற புத்தகத்தில் உள்ளது.  நல்ல புத்தகம்.  புத்தக கண்காட்சி நடைபெறும் சமயம். சுலபமாக கிடைக்கும்.  முடிந்தால் வாங்கிப் படிக்கவும்.

ஆனால் இந்தப் பதிவுக்கும் இந்தப் புத்தகத்திற்கும் சம்பந்தமில்லை.  கதையின் தலைப்பு இன்றைய பதிவிற்கு பொருத்தமாக இருந்ததால் எடுத்துக் கொண்டேன்.  பொருத்தம்தானா என்பதை நீங்கள் இந்தப் பதிவை படித்துவிட்டு முடிவு செய்துகொள்ளுங்கள்.

ஒருவன் தன் இரு காதுகளிலும் தீக்காயத்துடன் டாக்டரிடம் வந்தானாம்.  டாக்டர் என்ன நடந்தது என்று கேட்டபோது அவன் சொன்னான்.  டாக்டர் நான் என்னுடைய துணியை அயர்ன் செய்து கொண்டிருந்தபோது ஒரு போன் வந்தது.  செல்போன் என்று நினைத்து அயர்ன் பாக்ஸை எடுத்து என் காதில் வைத்துக் கொண்டேன்.

டாக்டர் கேட்டாராம். சரி ஒரு காது ஓகே.  மற்றொரு காதை எப்படி சுட்டுக் கொண்டாய் ?

வந்தவன் சொன்னானாம்.  ”அந்தப் படுபாவி மீண்டும் போன் செய்து தொலைத்துவிட்டான்.

இது எப்போதோ ஒரு புத்தகத்தில் படித்த ஒரு ஜோக்.

இப்போது சொல்லும் ஒரு விஷயம் நான் சில நாட்களுக்கு முன் நேரில் கண்டது.  லயோலா கல்லூரியைத் தாண்டி நுங்கம்பாக்கம் சுரங்கப் பாதையில் இரவு 7.30 மணி போக்குவரத்து நெரிசலில் என்னுடைய கார் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.  எனக்கு சற்று முன்னால் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞன் சென்று கொண்டிருந்தார். அவருடைய செல்போன் அடித்திருக்க வேண்டும்.  ஒரு கையால் வண்டியை ஓட்டிக் கொண்டே தன்னுடைய சட்டைப்பையில் இருந்து செல்போனை எடுத்தார். எடுத்து யார் என்று பார்த்துக் கொண்டிருந்த சிலவினாடிகளில் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம் சட்டென்று பிரேக் பிடிக்க இவருடைய வண்டி அதில் லேசாக இடித்த மறுகணம் கையிலிருந்த செல்போன் தவறி கீழே விழுந்தது.  அடுத்த நொடி பக்கத்தில் சென்று கொண்டிருந்த இன்னொரு வாகனம் அந்த செல்போனில் ஏறி இறங்கியது.  அவ்வளவுதான்.  அந்த செல்போனின் விலை எத்தனை ஆயிரம் ரூபாயோ. ஒரு நொடியில் சல்லிக் காசுக்கும் உபயோகம் இல்லாமல் ஆகிவிட்டது.
பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அந்த இளைஞர் மீது கோபமாகவும் இருந்தது.  ஏனென்றால் இப்போதெல்லாம் பைக்கை ஓட்டிக் கொண்டே காதுக்கும் தோளுக்கும் இடையில் செல்போனை வைத்துக் கொண்டு ”வலிப்பு வந்தது போல்” பேசிக் கொண்டு செல்லும் பலரை பார்க்கின்றேன்.  இதனால் அவர்களுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் எவ்வளவு ஆபத்து என்பதை உணர்வதேயில்லை.

செல்போன் என்பது ஒரு இன்றைய அறிவியலின் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு.  ஒரு இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு வரையில்கூட ஒருவருக்கொருவர் நினைத்த நேரத்தில் பேசுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அறிவியல் இதனை இன்று மிகவும் சுலபமாக்கிவிட்டது.   வரங்களை எல்லாம் சாபங்களாக்கிக் கொள்ளும் திறமை படைத்த நாம் இன்று செல்போனையும் அப்படித்தான் சாபமாக்கிக் கொண்டு விட்டோமோ என்று சந்தேகமாக இருக்கிறது.

நம்மில் பெரும்பான்மையினருக்கு செல்போனை பயன்படுத்தத் தெரிவதில்லை.  எனக்கு ஒருமுறை என்னுடைய நண்பன் போன் செய்தான்.  நான் ஒரு மீட்டிங்கில் இருந்ததால் உடனே எடுக்க முடியவில்லை.  ஆனால் அவன் தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்ததால், ஏதாவது அவசரமாக இருக்கப் போகிறது என்று மீட்டிங் இடத்தில் இருந்து வெளியே வந்து எதாவது அவசரமாக என்று கேட்டேன். அதற்கு அவன் ஒன்றுமில்லை.  ஒரு சின்ன consulting தேவைப்படுகிறது.  நீ free ஆனபிறகு பேசினால் போதும் என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.  இப்படி சாதாரணமாகப் பேசுவதற்கே தொடர்ந்து போன் செய்தால், உண்மையிலேயே அவசரமாக போன் செய்தால்கூட நாம் எடுக்காமல் விட்டுவிடுவோம்.

நான் யாருக்காவது போன் செய்து அடுத்த முனையில் இருப்பவர் கொஞ்ச நேரம் எடுக்கவில்லை என்றால் கட் செய்து விட்டு  அவருக்கு என்ன காரணத்திற்காக போன் செய்தேன் அவசரமா இல்லையா என்று ஒரு சின்ன message அனுப்பிவிடுவேன்.  அவர்கள் அதைப் பார்த்து போன் செய்தால் சரி.  இல்லையென்றால் ஏதாவது அவசரமாக இருந்தால் தவிர மீண்டும் கால் செய்ய மாட்டேன்.

செல்போன் என்பது நாம் பேசுவதற்கான ஒரு உபகரணம் அவ்வளவுதான்.  அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.  முன்பெல்லாம் நான் சாப்பிட உட்காரும் நேரத்தில் என்னுடைய செல்போன் அடித்தால் உடனே சென்று எடுத்து பேசுவேன்.  உடனே எடுப்பதுதான் நாகரீகம் என்று நானாக நினைத்துக் கொள்வேன்.  பேசி முடித்தவுடன் சாப்பாடு ஆறியிருக்கும்.  மனைவிதான் சூடாக இருப்பார்.

ஆனால் இப்போதெல்லாம்  செல்போன் விஷயத்தில் நான் ஓரளவுக்கு கட்டுப்பாட்டை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டேன்.  செல்போனில் பொதுவாக யாருடன் பேசினாலும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பேசுவதில்லை.  அதற்கு மேல் பேசும் பேச்சு பெரும்பாலும் வெட்டிப் பேச்சாகத்தான் இருக்கும்.  இதில் விதிவிலக்குகள் கண்டிப்பாக உண்டு.  உண்மையிலேயே ஒரு பிரச்சனையில் அல்லது வேதனையில் இருப்பவர்களுக்கு நம்முடைய ஆறுதல் வார்த்தைகள் மிகப்பெரிய நம்பிக்கையாக அமையலாம்.  அந்த நேரத்தில் சரியாக பத்து நிமிடம் ஆனதும் சரி பிறகு பேசலாம் என்று வைத்துவிட முடியாது.  ஆனால் அந்த விதிவிலக்குகளை நாம்தான் முடிவு செய்யவேண்டும்.

நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளும் இன்னொரு விஷயம்.  இப்போது அலுவல் நிமித்தமாக பிசியாக இருக்கிறோம்.  ஒரு கால் பேசி முடிப்பதற்குள் நம் செல்போனில் பல missed கால்கள் வந்து விடுகின்றன.  இவர்களில் பெரும்பாலும் அவர்கள் அவசரத்திற்காக நம்மோடு பேசுபவர்கள். அவ்வளவுதான்.  உண்மையிலேயே நம்மீது அக்கரை கொண்டு எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உண்மையான அன்புடனும் அக்கரையுடனும் எத்தனை பேர் நம்மிடம் பேசுகிறதார்கள்.  அல்லது நாம்தான் அப்படி எத்தனை பேருடன் பேசுகிறோம்.  யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

அதனால் எல்லா கால்களையும் பாய்ந்து எடுக்க வேண்டிய அவசியமில்லை. எடுக்க முடியாத நிலையில் இருந்தால் ஒரு message அனுப்பிவிட்டு சிறிது நேரம் கழித்து பேசலாம்.  ஒரு விஷயம் உண்மையிலேயே அவசரமாக இருந்தால் எப்படியாவது நம்மை வந்து அடைந்துவிடும்.  செல்போனும் போனும் இல்லாத காலத்திலேயே நல்லதும் கெட்டதும் உரியவருக்கு உரிய நேரத்தில் சென்று சோ்ந்துகொண்டுதான் இருந்தது.

உரையாடல் என்பது ஒரு கலை.  அந்தக் கலையில் நாம் வல்லவர்களாகிவிட்டால் எவ்வளவு நேரம் பேசுகிறோம் என்பது முக்கியமல்ல.  பேசி முடித்தவுடன் உரையாடிய இருவருக்கும் ஒரு மன நிறைவு ஏற்பட வேண்டும்.  மீண்டும் அவருடன் பேச வேண்டும் என்ற விருப்பம் உருவாக வேண்டும்.

யோசித்துப் பார்த்தால் செல்போனில் பேசும் இந்தக் காலத்திலும் நேருக்கு நேர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மகிழ்ச்சியாக கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் உரையாடல்கள்தான் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.  செல்போன் just ஒரு மாற்றுக் கருவி. செல்போனுக்கு வெளியேயும் வாழ்க்கை இருக்கிறது.

எந்த உறவிலும் சிக்கலை ஏற்படுத்திக் கொள்ளாமல் நாம் ஆக்கபூர்வமான முறையில் பிறருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இனிமையாக உரையாடக் கற்றுக் கொண்டால் நாம் வாழ்க்கயைில் வெற்றி பெற்று விட்டோம் என்று எடுத்துக் கொள்ளலாம். 

உரையாடுவதற்கு எண்களைவிட நல்ல மனங்கள் இருந்தால் போதும்.

Sunday, December 30, 2018

ஜென்(னல்)



நேற்றுதான் 2018-ம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்து சொன்னதுபோல இருக்கிறது.  அதற்குள் 2019-ம் ஆண்டு வந்து விட்டது.  கடற்கரையில் நின்றுகொண்டிருக்கும்போது கடலின் அலைகள் நம் காலுக்கு அடியில் இருக்கும் மணலை அரித்துக்கொண்டு செல்வது போல் காலம் நம் கட்டளைக்கு காத்திருக்காமல் பறந்து கொண்டே இருக்கிறது.  “Miles to go before I sleep” என்று சொல்லிக்கொண்டே துாங்கிவிட்டு காலம் வீணாகிவிட்டதே என்று கவலைப்படுகிறோம்.

கஜா புயலின் சோகங்கள், தற்காப்புக்கு என்று சொல்லி நெற்றியை குறிவைத்து சுடப்பட்டு இறந்த ஸ்டெர்லைட் துயரங்கள், இட்லி சாப்பிட்ட பில்லாக 1.17 கோடி என்ற அப்போலோ அபத்தங்கள், இப்படி நம்மைச் சுற்றி நடக்கும் பல அவநம்பிக்கை சம்பவங்கள், இதைத் தவிர தனித்தனியாக நம்மைத் தாக்கும் அன்றாட அவஸ்தைகள் – இவற்றையெல்லாம் கடந்துதான் வாழ்க்கையை நாம் நம்பிக்கையுடன் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.  ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு புத்தாண்டையும் அப்படித்தான் நாம் எதிர்கொள்கிறோம்.  அந்த நம்பிக்கை மட்டுமே நம்மை கவலை என்னும் கடலில் முழுகிவிடாமல் காப்பாற்றி வருகிறது.

சமீபத்தில் “Mind Full to Mindful” என்ற புத்தகத்தினை படித்தேன். அதிலிருந்த சில நம்பிக்கை விதைகளை இந்தப் புத்தாண்டு தொடங்கும் நேரத்தில் நமக்குள் விதைக்கலாம் என்று நினைக்கிறேன் - அடுத்த ஆண்டுக்குள் இவற்றில் சில விதைகளாவது நம் வாழ்வில் சந்தோஷ தருணங்களாக துளிர்க்கும் என்ற நம்பிக்கையில்.

புத்தரின் முதல் ஜென் தத்துவமாக நம்பப்படுவது ”ஒரு பூ மலரும் கணத்தில் உலகம் முழுவதும் வசந்தம் உருவாகிறது” (A Single flower blooms, and throughout the world it is spring).

நம் ஒவ்வொருவரின் மனமும் ஒரு மலர்தான்.  நம் மனது அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது உலகமும் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்கிறோம்.  நம் மனது அமைதியற்று விரக்தியிலும் வேதனையிலும் இருக்கும்போது நம்மைச் சுற்றிய உலகத்தையும் அவநம்பிக்கையுடன் பார்க்கிறோம்.

புத்தர் சொல்கிறார்.  உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி என்பது வெளியில் தேடும் பொருள் அல்ல.  அது உங்களிடமே இருப்பதை நீங்கள் உணர்வதுதான்.

உங்களால் நீங்கள் நினைத்த ஒரு உணவகத்திற்குச் சென்று நீங்கள் விரும்பிய உணவை அதன் விலையைப் பற்றி கவலைப்படாமல் ஆர்டர் செய்து சாப்பிட முடியுமா ?  அப்படியென்றால் நீங்கள் இந்த உலகத்தில் உள்ள பல கோடிக்கணக்கான மக்களைவிட மிகமிக உயா்ந்த நிலையில் இருக்கிறீா்கள் என்று அர்த்தம்.  ஏனென்றால் இந்த உலகத்தில் இன்னமும் ஒரு வேளை உணவுகூட ஒழுங்காக சாப்பிட முடியாத வறுமையில் பல கோடி மனிதர்கள் உள்ளனர்.

எத்தனையோ பேருக்கு கிடைக்காத வசதியையும் வாய்ப்பையும் நாம் பெற்றிருந்தும் நம்மால் இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை என்றால், நமக்கு இன்னும் எவ்வளவு வசதிகள் கிடைத்தாலும் நம்மால் அதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

புத்தர் சொல்கிறார்.  இந்த கணத்தில் உங்களால் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ முடிந்தால் வாழ்க்கை உங்களுக்கு இன்னும் அதிக மகிழ்ச்சியை உருவாக்கும் தருணங்களை உங்கள் வாழ்வில் மலரச் செய்யும்.  இந்தக் கணத்தினை மகிழ்ச்சியாக அனுபவிக்காமல் ஏதோ ஒன்றிற்காக நீங்கள் குறைபட்டுக் கொண்டே இருந்தால் இந்த உலகமே உங்கள் வசமானாலும் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

ரோஜா மலர் தன்னைச் சுற்றி முட்களாக இருக்கிறதே என்று கவலைப்படாமல் தன்னுடைய நறுமணத்தினை பரப்பிக் கொண்டே இருக்கிறது.  தன்னை கடந்து செல்லும் எல்லோருக்கும் எந்த பாரபட்சமும் இல்லாமல் தன்னுடைய நறுமணத்தினை அளிக்கிறது. ஒரே ஒரு நாள்தான் தன்னுடைய வாழ்க்கை பிறகு தான் உதிர்ந்து விடுவோம் என்ற எந்தக் கவலையும் இல்லாமல் இந்தக் கணத்தில் முழுமையாக தன்னை வெளிப்படுத்துகிறது.

புத்தர் இதைத்தான் நமக்கும் சொல்கிறார்.   உங்கள் வாழ்க்கையில் உங்களைச் சுற்றி நிறைய முட்களும் தடைகளும் சூழ்ந்து இருந்தாலும் உங்கள் மனதில் அமைதியையும் மகிழ்ச்சியையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.  அந்த மகிழ்ச்சியை உங்களை கடந்து செல்லும் எல்லோருக்கும் அந்த மலரின் நறுமணத்தினைப் போல பரப்பிக் கொண்டே இருங்கள்.

நிகழ் கணத்தில் முழுமையாக வாழ்வதுதான் ஜென் தத்துவம்.  இது நம்ம ஊர் போதிதர்மர் உலகத்துக்கு சென்று பரப்பியதுதான். நாம்தான் பின்பற்றத் தவறிவிட்டோம்.

நாம் இந்தக் கணத்தில் வாழவில்லை என்பதற்கு மிகச்சாதாராண உதாரணம். வீட்டை நன்றாக பூட்டிவிட்டு வெளியே சென்றாலும், நன்றாகத்தான் பூட்டினோமா என்று ஒரு சந்தேகம் வருவது. கார் சாவியை எங்கே வைத்தோம் என்று அடிக்கடி தேடுவது - இப்படி பல சொல்லாம்.

நிகழ் கணத்தில் நம்மால் வாழ முடிந்தால் நம்முடைய விழிப்புணர்வு நிலை பலமடங்கு அதிகரிக்கும்.  வாழ்வில் நாம் தவற விட்டுக் கொண்டிருக்கும் பல தருணங்களை நம்மால் உணர முடியும். நாம் செய்யும் செயல்களில் ஒருவித ஒழுங்கும் அமைதியும் உருவாகும்.  பாரதி சொல்வது போல 

”தேடிச்சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்யும்
பல வேடிக்கை மனிதரைப்போலே”

நாமும் வீழாமல் இந்த மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.

நிகழ் கணத்தில் வாழ்வதை இந்தப் புத்தாண்டிலிருந்தாவது பின்பற்ற நினைக்கலாம் என்று இருந்துவிட வேண்டாம்.  அதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது.  இந்தக் கணத்திலிருந்து வாழத் தொடங்குவோம்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


Monday, November 5, 2018

பிரயாணம்



அசோகமித்திரன் ”பிரயாணம்” என்ற சிறுகதையை எழுதிய ஆண்டு 1969.  கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழிந்த பின்னும் யாரோ ஒருவர் இந்தக் கதையைப் படித்தும் அதுகுறித்து பேசியும் எழுதியும் வருகிறார்கள்.  அதுதான் ஒரு எழுத்தாளனின் வெற்றி.  அவனுக்கான வாசகர்கள் சமகாலத்தில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயமல்ல.  நல்ல எழுத்து என்பது ஒரு விதையைப் போன்றது.  எந்த வாசகனது மனதிலாவது எப்போதும் அது முளைத்துக் கொண்டுதான் இருக்கும்.

கதையின் சுருக்கம் இதுதான்.

தன்னுடைய வயதான குருவோடு மலையின் மீது தங்கியிருக்கிறார் அவரது சீடர்.  வயது முதிர்வின் காரணமாக அந்த குரு அங்கேயே இறந்து விடுகிறார்.  அந்த குருவின் கடைசி ஆசை (??) அவரது உடலை சமதளத்தில் புதைக்க வேண்டும்.  அதற்காக அந்த சீடன் அவரை எடுத்துக்கொண்டு மலையடிவாரத்திற்கு கொண்டுவருகிறார்.  அப்படி வரும்போது அந்த இரவில் அந்த குருவின் உடலை கவ்விக்கொண்டு போக வட்டமிடும் ஓநாய்கள்.  அந்த ஓநாய்களிடமிருந்து அவரால் தப்பிக்க முடிகிறதா ? அவரது குருவை அவர் ஆசைப்பட்டபடி சம தளத்தில் அடக்கம் செய்ய முடிந்ததா என்பதுதான் கதை.

ஒரு எழுத்தாளனின் வெற்றி என்பது அவர் கதையை சொல்லும் விதம் மட்டுமல்ல அவர் சொல்லாமல் விட்ட கதையை வாசகன் தன்னுடைய அறிவிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப புரிந்துகொள்ள விட்டுவிடுவதுதான். 

இந்தக் கதையின் கடைசியின் இப்படி முடியும்.

”ஓநாய்கள் என் குருதேவரின் வயிற்றுப் பாகத்தைக் குதறித் தள்ளியிருந்தன. தலையையே காணோம். உடலெல்லாம் இரத்தம் வெளிப்பட்டு உறைந்திருந்தது போல இருந்தது. கைக்கட்டை விரல்களைக் கட்டியிருந்த துணி அறுபட்டுக் கிடந்தது. ஒரு ஓநாயின் கால் அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு, என் குருதேவரின் வலது கைப்பிடியில் இருந்தது”.

இதைப் படித்ததும் நமக்கு திக்கென்று இருக்கும்.  இறந்துவிட்ட குருவின் கைப்பிடியில் எப்படி ஓநாயின் கால் இருக்க முடியும்.  அப்படியென்றால் அவர் இறக்கவில்லையா ? அப்படியே இறக்கவில்லையென்றாலும் வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்டு கிடக்கும் நேரத்தில் அவரால் ஒரு ஓநாயின் காலை அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்க முடியுமா ? அல்லது அந்த குரு தனது சீடனை அந்த ஓநாய்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக தான் இறந்த பிறகும் தனது அமானுஷ்ய சக்தியால் ஏதாவது செய்தாரா என்ற பல கேள்விகள் நமக்கு பிறக்கிறது.

சில விஷயங்களை அதனோடு சம்பந்தபட்ட அனுபவங்கள் நமக்கு ஏற்பட்டால் மட்டுமே முழுமையாக அதனை உணர முடியும். அந்த வகையில் இந்தக் கதை எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தினை நினைவுக்கு கொண்டுவந்தது.

நான் சில வருடங்கள் முன்பு வரை நினைத்த நேரத்தில் திருவண்ணாமலைக்கு கிளம்பிவிடுவேன்.  சில சமயங்களில் நண்பா்களுடன் சில சமயங்களில் தனியாக.  சுமார் 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வோம்.  பிறகு அந்த தினத்தில் கூட்டம் மிகவும் அதிகமாகிவிட்டதால், பௌர்ணமி தினத்தில் செல்வதை தவிர்த்துவிட்டேன்.

பொதுவாக நாம் தனியாக சென்றாலும், கிரிவலப் பாதையில் யாராவது நமக்கு முன்னாலோ பின்னாலோ வந்து கொண்டிருப்பார்கள்.  அதனால் நமக்கு தனியாகச் செல்கிறோம் என்ற உணர்விருக்காது. அதே நேரத்தில் யாருடனும் பேசாமல் மௌனமாக கிரிவலம் செல்லலாம்.  அப்படிச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒருமுறை அப்படிச் செல்லும் போது இரவு சுமார் ஒரு மணி இருக்கும்.  ரமணாஸ்ரமம் செல்லும் வரை ஒரு சிலர் முன்னும் பின்னும் வந்து கொண்டிருந்தனர். நான் சாலையின் வலதுபுறம் நடந்து கொண்டே சிங்க தீர்த்தம் உள்ள இடம் அருகில் வரும்போது கொஞ்ச துாரத்தில் சாலையின் இடதுபுறத்தில் ஒரு மனிதர் முழுநிர்வாணமாக நின்று கொண்டிருந்தார்.  

சாலையையொட்டி நான் நடந்து கொண்டிருந்த இடமோ ஒரு மயான பூமி. எனக்கு “பக்“கென்றது. இப்போது எனக்கு முன்னேயும் யாருமில்லை. பின்னே திரும்பி பார்த்தாலும் யாருமில்லை.

அந்த நிர்வாண மனதரைப் பார்த்ததும் எனக்குத் தோன்றிய முதல் சிந்தனை அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபராக இருக்கலாம் என்பதுதான்.  நான் தனியாக நடந்து கொண்டிருக்கிறேன்.  அவரைக் கடக்கும்போது அவர் என்னைத் தாக்கினால் எப்படி என்னால் தனியாக தற்காத்துக்கொள்ள முடியும் என்ற சிந்தனையே எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது.  திரும்பிவிடலாமா என்றுகூட நினைத்தேன். 

ஆனால் மீண்டும் கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டு அந்த நபரை மீண்டும் பார்த்தேன்.  அந்த மனிதரின் காலடியில் ஒரு நாய்.படுத்துக் கொண்டு இருந்தது.  அந்த மனிதர் மலையைப் பார்த்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுந்திருப்பதும், நின்று கொண்டே மலையை வணங்கிவிட்டு மீண்டும் விழுந்து வணங்குவதுமாக இருந்தார்.

இப்போது எனக்கு கொஞ்சம் தைரியம் வந்து விட்டது.  ஒருவேளை அவர் ஒரு சித்தராக இருக்கலாம் என்று தோன்றியது.  எனக்கு இப்போது தோன்றிய ஒரே எண்ணம் அந்த இடத்தைக் கடக்கும் வரை அவரை மீண்டும் பார்க்கக்காமல் கடந்துவிட வேண்டும் என்பதுதான்.  அவர் வேலையை அவர் செய்யட்டும் நம் வேலையை நாம் செய்யலாம் என்று நினைத்து நடக்க ஆரம்பித்தேன்.  அந்த இடத்தினைக் கடந்து செல்ல எனக்கு ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும்.  மீண்டும் அவரை நான் திரும்பிப் பார்க்கவேயில்லை.

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால். அது ஒரு நெடுஞ்சாலை.  திருவண்ணாமலையிலிருந்து கிருஷ்ணகிரி பெங்களுர் செல்லும் மாநில நெடுஞ்சாலை.  இரவு நேரத்திலும் வாகனக் போக்குவரத்து இருந்து கொண்டெ இருக்கும்.  ஆனால் நான் அந்த இடத்தை கடந்த அந்த 15 நிமிடங்களில் ஒரு வாகனம்கூட அந்த இடத்தினை கடக்கவில்லை அல்லது நான் என்னைச் சுற்றிய நிகழ்வுகளில் இருந்து விடுபட்டிருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

கதை இங்கே முடிந்து விட்டது என்று நினைக்காதீர்கள்.  அந்த நெடுஞ்சாலையில் இருந்து கிரிவலம் செல்ல நாம் வலப்பக்கமாக திரும்ப வேண்டும்.  அந்தத் திருப்பத்தில் ஒரு பத்து பதினைந்து நாய்கள் மொத்தமாக நின்று கொண்டிருந்தன.  அந்த நாய்களின் உறுமல் சத்தத்தில் எனது சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது. 

என் உள்மனது மட்டும் பயத்தில் ஓடிவிடாதே என்று சொல்லிக்கொண்டே இருந்தது.  ஓடினால் “பிரயாணம்” கதையில் குருவுக்கு ஏற்பட்ட நிலைதான் எனக்கும் ஏற்பட்டிருக்கும்.

நான் எனக்குத் தெரிந்த மந்திரங்களையெல்லாம் உச்சரித்துக் கொண்டே நடந்துகொண்டிருந்தேன். 

இப்போது அசோகமித்திரனின் வார்த்தைகளை படியுங்கள்.

”பகலெல்லாம் ஓநாய்களைக் கண்ணெதிரேபாராமல், ஆனால் அவை எங்களைத் தாக்க எங்கோ தூரத்தில் பின்தொடர்ந்து வருகின்றன என்ற உணர்வே என்னைப் பெரும் பீதியில் விறைப்பாக இருக்கச் செய்தது. இப்போது அவற்றை நேரே கண்டவுடன் என் ஆழ்ந்த அமைதி ஏற்பட்டது. அந்நேரத்தில் எனக்குச் சிந்தனைகளே அவ்வப்போது எழாமல் போவதையும் உணர்ந்தேன்.

நான் மிகவும் நிதானமாக என் கைகளை அசைத்துக்கொண்டிருந்தேன். ஓநாய்கள் எங்களை இன்னமும் சுற்றிச் சுற்றி வந்தவண்ணமிருந்தன. நான் முதலில் தாக்க வேண்டும் என்று அவை காத்திருந்ததுபோலத் தோன்றிற்று. எனக்கும் அந்த ஓநாய்க் கூட்டத்துக்குமிடையே எழுந்திருக்க ஒரு இக்கட்டு நிலையை இருவரும் தீவிரப்படுத்தாமல் இருந்தால் இரவின் எஞ்சிய நேரம் அப்படியே கழிந்துவிடும் என்றுகூடத் தோன்றிற்று. பகல் என்று  ஏற்பட்டவுடன் ஓநாய்கள் பின்வாங்கிவிடக்கூடும்.

நான் நிச்சயமாக இருந்தேன். அந்த ஓநாய்களின் அடக்கமான உறுமல் கூட அப்போது அப்பிரதேசத்தின் அமைதியோடு பொருந்திவிடக் கூடியதாகவே தோன்றியது தாமாகவே தங்களுக்குள்ளாக ஏற்படுத்திக்கொண்ட ஒரு நியதிக்கு அவை தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு அதிலிருந்து இம்மியளவு  பிறழத் தயாராக இல்லாதிருப்பதுபோல எங்களை வலம்வந்துகொண்டிருந்தன.

எனக்கு அந்த ஓநாய்கள் மீது பெரும் பரிவு ஏற்பட்டது. அவற்றைக் காலம் காலமாக நான் அறிந்து பழகியதுபோல ஒரு உணர்வு ஏற்பட்டது. ஒரு நிலையில் நானே அவற்றுடன் சேர்ந்து என்னையே சுற்றி வருவதுபோலத் தோன்றிற்று. அப்போது என் கையிலிருந்த கொள்ளிக் கட்டை சட்டென்று அணைந்துவிட்டது. ஜூவாலை எழுப்ப அதை நான் வேகமாக வீசினேன். அப்போது, அந்த மலைப் பிரதேசமே மூச்சு விடுவதை அப்படியே நிறுத்திக்கொண்டு ஸ்தம்பித்துக் கிடப்பதுபோலத் தோன்றிற்று. என் கைக்கட்டை முழுவதும் அணைந்துவிட்டது. அதைப் போட்டு விட்டுக் கீழே தணல் நுனிகளுடன் கிடந்த கட்டைகளில் ஒன்றைப் பொறுக்கி எடுக்க நான் தீயின் பக்கம் குனிந்தேன். ஒரு அரைக் கணம் ஓநாய்கள் உறுமுவதுகூட நின்றுவிட்டது. அடுத்துப் பேரிரைச்சலுடன் பெரிய ஓநாயாக ஒன்று என் மேல் பாய்ந்தது. என் முகத்திற்கு நேரே பயங்கரமாக விரிந்துவந்த ஓநாயின் வாயில் என் கை விறகுக் கட்டையைத் திணித்தேன். அது ஊளையிட்டுக் கொண்டு பின் வாங்கிற்று. அந்த நேரம் வேறு சில ஓநாய்கள் என் குருதேவரின் உடலைப் போர்த்தியிருந்த கம்பளப் பையைக் கடித்துக் கிழிக்க ஆரம்பித்தன.

அதுவரை நிலவிய அமைதி, நியதிக்குட்பட்ட கட்டுப்பாடு எல்லாம் நொடிப் பொழுதில் சிதறுண்டுபோயின. என்னை ஒவ்வொரு ஓநாயாகத்தான் தாக்கின ஆனால் உயிரற்றுக் கிடந்த என் குருதேவரின் சடலத்தின் மீதே கூட்டமாகப் பாய்ந்தன. நான் என் மூங்கில் கழியைச் சக்கரமாகச் சுற்றினேன். ஒவ்வொரு முறை என் கழி எதையாவது தாக்கும்போது என் தோள் பட்டை விண்டுவிடுவது போல நான் எதிரடி உணர முடிந்தது.

ஓநாய்கள் உறுமிக்கொண்டு பாய்ந்து வந்து, பிடுங்கி, அடிபட்டு, பின்வாங்கி, மீண்டும் பாய்ந்த வண்ணமிருந்தன. அப்போது இன்னொன்றையும் உணர்ந்தேன். என் சுயநினைவில் கற்பனை செய்தும் பார்க்க முடியாத ஒலிகளை, உரத்த ஒலிகளை, நான் எழுப்பிக்கொண்டிருந்தேன். அந்தப் போரில் நானும் ஒரு பயங்கர விலங்காக மாறிப்போயிருந்தேன். ஒரு நிலையில் நாங்கள் இரு தரப்பினரும் சம வலிமை பெற்றவர்களாகத் தோன்றினோம். ஓநாய்களுக்குள் ஓநாயாக நான் இருந்தேன்”.

கதையில் ஓநாய்கள் எனக்கு நேரில் நாய்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.  ஆனால் நான் அவைகளுடன் சமர் புரியவில்லை.  ஏனென்றால் அப்படி செய்தால் அதன் முடிவு என்ன என்று நிச்சயமாக எனக்குத் தெரிந்திருந்தது.

அதே நேரத்தில் நாம் எப்போது மிகப்பெரிய ஆபத்தான நிலையை சந்திக்கிறோமோ அந்த நேரத்தில் நமது மனம் மிகவும் விழிப்படைந்து விடுகிறது.  அந்த நேரத்தில் நமக்கு எது குறித்தும் - even மரணம் குறித்துகூட பயம் ஏற்படுவதில்லை. 

நான் நடக்க நடக்க நாய்களின் உறுமல் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது.  எனக்கு எந்தச் சேதாரமும் இல்லாமல் காப்பாற்றியது அந்த இறைதான் என்பதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என்ன ?