சென்னை நகரின் நெரிசலில் தினமும் சிக்கித் தவிக்கும்போதெல்லாம் எப்போது இந்த மெட்ரோ ரயில் திட்டம் முடியும் என்று நினைக்கிறோமே தவிர அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களைப் பற்றி கவலைப் படுவதில்லை.
சில நாட்களுக்கு முன் ஹிந்து நாளிதழில் வந்த ஒரு செய்தியைப் படித்ததும் மனது கனத்தது. சியாம் - பர்மா (தாய்லாந்து - மியான்மர் ) - மரண ரயில் பாதை என்ற தலைப்பில் R. குறிஞ்சிவேந்தன் என்பவர் எடுத்த ஒரு டாக்குமெண்டரி படத்தைப் பற்றிய செய்தி அது.
1940-42 ம் ஆண்டுகளில் தாய்லாந்திற்கும் பர்மாவிற்கும் இடையில் கிட்டத் தட்ட 415 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை அமைக்க ஜப்பான் அரசால் பணியமர்த்தப் பட்ட தமிழர்களில் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்தக் குளிரிலும், பாம்பு மற்றும் இதர கொடிய விஷ ஜந்துக்கள் கடித்ததிலும் இறந்திருக்கிறார்கள். 1.5 லட்சம் என்பது இப்போதே மிகப் பெரிய எண்ணிக்கை. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு பெரிய எண்ணிக்கையாக இருந்திருக்கும்.
ஐந்து வருடங்களில் முடிக்க வேண்டிய திட்டத்தை ஜப்பான் 15 மாதங்களில் முடித்திருக்கறது. அப்படியென்றால் அந்தத் தொழிலாளர்கள் எப்படிப் பட்ட துயரங்களை அனுபவித்திருப்பார்கள் என்று யூகிக்க முடியும்.
வறுமை எத்தனை மனிதர்களின் வாழ்க்கையை மிக அனாசயமாக தூக்கி எறிந்து விடுகிறது.
உங்களுக்கு ஊட்டி பிறந்த கதை தெரியுமா ?
1820 ம் ஆண்டு கோவை கலெக்டராக இருந்த திரு. ஜான் சல்லிவன் என்ற ஆங்கிலேயர் ஊட்டி மலையைப் பற்றி கேள்விப் பட்டு ஆங்கில அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் இங்கிலாந்து சீதோஷண நிலைக்கு ஏற்ப ஒரு இடம் ஊட்டி என்றும் அங்கு இரவில் ஊற்றி வைத்தால் காலையில் அந்த தண்ணீர் பனிக் கட்டியாக உறைந்து விடுகிறது. அதனால் அந்த இடத்திற்கு செல்லவும் மக்கள் சென்று வர வசதியும் செய்வதற்க்கு அனுமதி வேண்டினார். முதலில் அனுமதி மறுக்கப் பட்டாலும் பிறகு அவருக்கு அனுமதி கிடைக்கிறது.
குதிரைகள், யானைகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் கோவையில் இருந்து ஊட்டிக்குப் புறப்பட்டார். பாதி வழியில் குதிரைகளாலும் யானைகளாலும் மலை ஏற முடியவில்லை. பிறகு அந்த மலைக்கு பாதை அமைத்ததெல்லாம் ஏழைத் தொழிலாளர்கள்தான்.
ஊட்டிக்கு தேன் நிலவு சென்ற முதல் தம்பதி ஜான் சல்லிவனும் அவரது மனைவியுமாகத்தான் இருப்பார்கள். ஏனென்றால் 1820 ம் ஆண்டுதான் அவருக்கு திருமணம் நடந்ததாகத் தெரிகிறது. இந்தத் தம்பதிக்கு 8 குழந்தைகள். ஜான் சல்லிவனின் மனைவியும் அவரது மூத்த மகனும் 1838 ம் ஆண்டு ஊட்டியில் ஏற்பட்ட தொற்று நோயால் இறந்துவிட ஜான் சல்லிவன் பிற குழந்தைகளை அழைத்துக் கொண்டு இங்கிலாந்து சென்றுவிட்டார்.
நாம் இன்று வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்து வசதி வாய்ப்புக்களுக்கும் முகம் தெரியாத எத்தனையோ மனிதர்களின் தியாகம் என்றால் அது மிகையாகாது.
"சித்திரச் சோலைகளே
உமை நன்கு திருத்த இப்பாரினிலே
முன்னம் எத்தனை தோழர்கள்
ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே"
என்ற பாரதிதாசனின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
அன்புடைய நண்பருக்கு
ReplyDeleteவணக்கம். இன்று என்னுடைய கட்டுரை ஒன்றைத் தேடிக் கொண்டிருந்த போது எதேச்சையாக உங்களுடைய வலைப்பக்கத்தினைப் பார்த்தேன். என்னுடைய ஆவணப்படத்தைப் பற்றி 5 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருக்கிறீர்கள். இப்போது தான் நான் பார்த்துள்ளேன் என்பது எனக்கே வருத்தமாக உள்ளது. தங்கள் பதிவிற்கு நெஞ்சார்ந்த நன்றி சார்.
அன்பன்
குறிஞ்சிவேந்தன்
9629662507
மிக்க மகிழ்ச்சி சார்.
ReplyDelete