Tuesday, November 15, 2016

விடாத கறுப்பு


பத்து நாட்களுக்கு முன் வங்கியில் செலவுக்காக 10000 ரூபாய் எடுத்த போது ஒரு நூறு ரூபாய் கட்டை எடுத்து கொடுத்தார் வங்கி அதிகாரி.  500 அல்லது 1000 ரூபாயாக இருந்தால் கொடுங்கள் என்று சொல்ல நினைத்து, பரவாயில்லை அடிக்கடி 100 ரூபாயும் தேவைப் படுகிறது என்று வாங்கிக்   கொண்டேன். அன்று எனக்குத் தெரியாது - இன்னும் சில நாட்களில் இந்தியாவின் "மதிப்புமிக்க" பணக்காரர்களில் நானும் ஒருவனாக இருக்கப் போகிறேன் என்று.

இந்தப் பதிவை எழுதும் இந்த நேரம் வரை எந்த வங்கி வாசலிலும் நிற்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.  ஆனால் கையிருப்பு குறைந்து கொண்டே வருவதால் சீக்கிரம் நிற்க நேரிடலாம்.  அதற்குள் நிலைமை ஓரளவு சீராகும் என்று நம்புகிறேன்.

Demonetization எனப்படும் பணமதிப்பிறக்கம் (??) செய்வது இது முதல் முறை அல்ல.  மூன்றாவது முறை. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு வருடம் முன்பு அதாவது 1946 ம் ஆண்டில் முதல் முறையாக பணமதிப்பிறக்கம் செய்யப் பட்டது.  பிறகு 1978-ம் ஆண்டு ஜனதா ஆட்சிக் காலத்தில்  திரு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது இரண்டாவது முறையாக பணமதிப்பிறக்கம் செய்யப் பட்டது.  இப்போது மூன்றாவது முறையாக  நமது பிரதமர் மோடி அவர்களால் பணமதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 

As Indians we are good in planning but bad in implementation என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டோம்.  மிக நல்ல திட்டம் மிக மிக சொதப்பல் ஆகிக் கொண்டிருக்கிறது. 

1946-ம் ஆண்டிலும் 1978-ம் ஆண்டிலும் பணமதிப்பிறக்கம் செய்யப் பட்ட கரன்சிகள் ரூபாய் 1000, 5000 மற்றும் 10000. இப்போது 500 மற்றும் 1000 ரூபாய்கள்.  இதில் கவனிக்கப் வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் 1978-ம் ஆண்டில் 1000 ரூபாய் என்பது பொது மக்களிடம் புழக்கத்தில இல்லாத   பணம். அதனால் இந்த நடவடிக்கை பொது மக்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. ஆனால் இப்போது 500-ம் 1000-ம் சர்வ சாதாரணம். அதனால் திடீரென்று தகுந்த முன் ஏற்பாடுகள் ஏதுமின்றி இந்தக் கரன்சிகளை கழட்டி விட்டதால் பொது ஜனம் கால் கடுக்க கடுப்புடன் நின்று கொண்டிருக்கும் நிலை.

அதுவும் தவிர 500 மற்றும் 1000 ரூபாய் கறுப்பு பணம், சில வங்கி அதிகாரிகளின் துணையுடன் 2000 ரூபாய் கறுப்பு பணமாக மாறுவதாகத் தகவல்.  இப்படி நடப்பது நடந்து கொண்டே இருப்பதால் நிற்பவர்கள் நின்று கொண்டே இருக்கிறார்கள்.

நாங்க எல்லாம் வலது பக்கம் indicator  போட்டு இடது பக்கம் திரும்புவோம் என்று சொல்லி இடது பக்கம் திரும்பிய ஒருவன் முட்டு சந்தில் போய் முட்டிக்கொண்டானாம். அப்படி ஆகிவிடக் கூடாது கறுப்பு பண ஒழிப்பு திட்டம்.

அப்புறம் ஜோக்கர் படத்தில் வரும் "என்னங்க சார் உங்க திட்டம் என்னங்க சார் உங்க சட்டம்" என்ற யுக பாரதியின்  பாடல் வரிகளை போல ஆகிவிடக்கூடும். 

ஊழல் என்பது நாக்கில் ஊறும் உமிழ் நீர் போன்றது.  துப்பத் துப்ப ஊறிக் கொண்டேதான்  இருக்கும். மனிதனின் ஆசை இருக்கும் வரை ஊழல் ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் கண்ட இடங்களில் துப்பி அசிங்கம் செய்யாமல் இருந்தால் போதும்.

தவறுகளை மிக விரைவில் களைந்து ஊழலுக்கும் கறுப்பு பணத்துக்கும் எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்தால், மோடி Sir - You are going to be remembered forever in the Indian history.

Friday, October 28, 2016

வலி இல்லாத வாழ்த்துக்கள்


இனிய "தீபாவலி" நல்வாழ்த்துக்கள் என்று ஒரு நண்பரிடம் இருந்து குறுந்தகவல் வந்திருந்தது. பாவம் என்ன வலியோ ??.  அந்த வலியிலும் வாழ்த்தை அனுப்பி இருக்கிறார். 

உண்மையில் யாருக்குத்தான் வலியில்லை.  Selfie புகைப்படத்தில் உறைந்திருக்கும் ஒவ்வொரு புன்னகைக்கு பின்னும் உறையாத, உலராத வலிகள் எல்லோருக்கும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

வாழ்க்கை எப்போதும் நமக்கு எதையாவது சொல்லிக் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது.  நாம்தான் கவனிக்க மறந்து விடுகிறோம் (அல்லது மறுத்து விடுகிறோம்).  

சென்ற வாரம் சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் போது விமானத்தில் கண்ட ஒரு காட்சி.

எனக்குப் பக்கத்தில் ஒருவர் தன் மகனுடன் அமர்ந்திருந்தார். அவர் மனைவியும் மகளும் ஒரு சில இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்தார்கள்.

மகன் தோளுக்கு மேல் வளர்ந்திருந்தான் - உடல் அளவில் மட்டும்தான்   மனதளவில் இன்னும் ஒரு குழந்தையாகவே இருந்தான்.  அவன் ஒரு குழந்தையைப் போலவே அடம் செய்து கொண்டும், ஒருமாதிரி சத்தம் எழுப்பிக் கொண்டும் இருந்தான்.  

சுற்றி இருந்த பயணிகள் அனைவரின் கவனமும் அந்தப் பையன் மீதே இருந்தது.  அந்தத் தந்தையின் முகம் ஒருவித பதட்டத்துடன்  இறுகி இருந்தது. யாரவது ஏதாவது சொல்லி விடுவார்களோ அல்லது விமானப் பணிப்பெண் ஏதாவது complaint செய்து விடுவாரோ என்று.  அவரும் ஏதேதோ செய்து அவனை சமாதானப்படுத்திகொண்டு இருந்தார்.

விமானம் take off ஆகும் போதும் landing ஆகும் போதும் ஜன்னல் ஷட்டரை திறந்து வைக்க வேண்டும் என்பது ஒரு பாதுகாப்பு விதி. Lift the window shades, fold up the tables, straighten the seat and fasten the seat belt இவையெல்லாம் விமானத்தில் அடிக்கடி சொல்லப்படும் பாதுகாப்பு மந்திரங்கள்.  ஏனென்றால் எந்த ஒரு அவசரக் காலத்திலும் பயணிகள் தப்பிப்பதற்கு மிகக் குறைந்த கால அவகாசமே இருக்கும்.  அதற்க்காகத்தான் இத்தனை விதிகள் (ஆனால் நம் விதி முடிந்து விட்டால் இந்த விதிகள் எதுவும் பயன்படாது என்பது வேறு விஷயம்).

மனிதர்கள் பொதுவாக மிகவும் நல்லவர்கள்.  தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி பொதுவான பிரச்சினை என்று வரும்போது தங்களால் முடிந்த அன்பையும் நேசத்தையும் காட்டிவிடுகிறார்கள்.  சென்னையின் பெரு மழையின் போது அந்த அன்பைத்தான் பார்த்தோம்.

இப்போதும் அந்த ஒரு அன்பைத்தான் அங்கே கண்டேன்.  விமானப் பணிப்பெண் ஒவ்வொரு பயணியிடமும் மேற்சொன்ன பாதுகாப்பு விதிகளை சொல்லிக் கொண்டே வந்தாலும், அந்த பையனிடம் எதுவும் சொல்லவில்லை. தன்னுடைய சக பணிப்பெண்ணிடமும் "கண்டுகொள்ளாதே" என்று சாடை காட்டிவிட்டார்.  Rule என்று இருந்தால் exception என்று இருக்கும்தானே.  அதை சரியாகக் கடைபிடித்தார் அன்று அந்தப் பெண்.    ஏனென்றால் பயணிகளின் அமைதியான பயணமும் அவரின் கடமைதானே.  சுற்றியிருந்த பயணிகளும் அந்தத் தந்தை மகன் மீது ஒருவித பரிவுடன்தான் இருந்தார்கள்.

எனக்கும் அந்தத் தந்தையின் மீது ஒரு அளவு கடந்த நேசம் ஏற்பட்டது. மனவளர்ச்சி இல்லாத அந்தக் குழந்தையை எவ்வளவு பாதுகாப்பாக கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறார்.  தாய் தந்தைக்குப் பிறகு அந்தக் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் ?  நமக்கே இந்தக் கேள்வி எழும்போது அந்தப் பெற்றவர்களுக்கு எண்ணம் எல்லாம் அதில்தானே இருக்கும். அவரின் கவனம் எல்லாம் அந்தப் பையன் மீதே இருந்தது. அந்த விமானப் பயணத்தைக் கொஞ்சமும் அவரால் அனுபவிக்க முடியவில்லை.

சாப்பாட்டில் காரம் இல்லை. அவர் என்னுடன் முன்பு போல அன்பு காட்டுவது இல்லை. நான் நம்பிக்கை வைப்பவர்கள் என்னை ஏமாற்றி விடுகிறார்கள்.  முடி அதிகம் உதிர்கிறது. எனக்கு colour கொஞ்சம் குறைவு. அவர் வைத்திருக்கும் car என்னிடம் இல்லை .......  இப்படி எத்தனை ஆயிரம் குறைகள் நம் மனதில் இருந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல்வோம். ஏனென்றால் அவர் நமக்கு உண்மையான பிரச்சினைகளை அளிக்கவில்லை என்று. அப்படி அவர் அளித்திருந்தால் நாம் இந்தக் குறைகளை எல்லாம் பெரிதாகவே நினைத்திருக்க மாட்டோம்.

எங்கோ படித்த சில வரிகள்.

உணவில் ருசி இல்லை என்று சொன்னேன். எனக்கு உணவே இல்லை என்று அவன் சொன்னான்.

என் உறவும் நட்பும் சரி இல்லை என்று சொன்னேன்.  நான் நட்பும் உறவும் எதுவும் இல்லாத அனாதை என்று அவன் சொன்னான்.

காலுக்கு சரியான செருப்பு இல்லை என்று சொன்னேன்.  எனக்கு காலே இல்லை என்று அவன் சொன்னான். 

எல்லாவற்றுக்கும் எதிர்ப்பாட்டு பாடுகிறாயே யார் நீ என்று கேட்டேன். வரங்களை சாபங்களாக மாற்றிக் கொள்ளும் சாதாரண மனிதன் நீ. சாபங்களை வரங்களாக மாற்றத் துடிக்கும் மாமனிதன் நான் என்று அவன் சொன்னான். 

உண்மையான பிரச்சினை இருப்பவர்கள் அதை தீர்க்க அல்லது சமாளிக்க முயல்கிறார்கள்.  அப்படி பிரச்சினை இல்லாத நாம், நாமாகவே பல பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு அல்லல் படுகிறோம்.

Blessing என்றால் என்ன என்று ஒரு குருவிடம் கேட்டார்கள்.  அவர் சொன்னார் "நாம் காலை கண் விழிப்பதே ஒரு blessing தான்.  ஏனென்றால் இரவு தூங்கச் சென்ற எத்தனையோ பேர் மறுநாள் காலை கண்விழிப்பதே இல்லை".

நாம் வாழும் ஒவ்வொரு நாளும் blessing தான் என்ற நினைவை கொஞ்சம் கொஞ்சமாக நம் எண்ணத்தில் பதிய வைப்போம்.  Then our life would be truly a  blessed one.

எல்லோருக்கும் வலி இல்லாத தீபாவளி நல்வாழ்த்துக்கள். 

Monday, October 10, 2016

பூட்ட ஒடச்சுடு


சென்ற வாரம் சாஸ்திரி பவன் செல்வதற்க்காக ஆட்டோவை எதிர்பார்த்து சூளைமேடு மேத்தா நகர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த நேரத்தில் சாஸ்திரி பவன் செல்லும் bus காலியாக வந்தது.  மாநகரப் பேருந்தில் பயணம் செய்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் பஸ்சிலேயே சென்று விடுவோம் என்று ஏறி விட்டேன்.  கண்டக்டரிடம் 50 ரூபாயை எடுத்து நீட்டி ஒரு சாஸ்திரி பவன் என்று சொன்னேன்.  அவர் வெறும் 5 ரூபாய்க்கு எனக்கு சாஸ்திரி பவனை கொடுத்துவிட்டார்.  மீட்டருக்கு மேலே குறைந்தது 20 ரூபாயாவது கொடுத்து பழக்கப்பட்ட என் கைகளுக்கு வெறும் 5 ரூபாயில் இது ஆடம்பர பயணமாகப் பட்டது.

ஆனால் நான் சொல்ல வந்த விஷயம் இதுவல்ல.  டிக்கெட்டை வாங்கிக்கொண்டு கண்டக்டர் இருக்கைக்கு எதிர்புறம் சென்று அமர்ந்தேன். அப்போது எனக்குப் பின்னால் ஒரு பெண்மணி தன் மகனிடம் பேசிய பேச்சு என் காதில் வந்து விழுந்தது (நான் ஒட்டுக் கேட்கவில்லை.  அவர் பேசியது முன்னால் இருந்த driver இருக்கை வரை நன்றாக கேட்டிருக்கும் - அவ்வளவு சத்தமாக பேசினார்).  அவர் பேசியதை அவர் வார்த்தைகளிலேயே கொடுக்கிறேன்.

"நீ எப்ப வூட்டுக்கு வர ?
இன்னாது  ஒரு மணிக்கு வந்துடுவியா ? நான் வர்றதுக்கு 3 மணி ஆவுமே.
சாவி என்கிட்டேதான் இருக்கு.  
சரி, வந்தா வெய்யில்லயா நிப்ப.
ஒன்னு பண்ணு.  சீக்கிரம் வந்துட்டா பூட்ட ஒடச்சுடு.
அதுக்கு இன்னா பண்றது. வேற பூட்டு போட்டுக்கலாம்"

எனக்கு stun ஆகிவிட்டது.  ஒரு சில மணி நேரம் கூட தன் மகன் வீட்டிற்கு வெளியே காத்திருப்பதை விரும்பாத ஒரு தாயின் மனம்.  "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்பது இதுதானோ.

"We are living in a world where we love things and use people" என்று சொல்வார்கள். ஆனால் அப்படி இல்லை.  Still many people love people and use things.  அதனால்தான் அப்படி உடனடியாக பூட்டை உடைத்து விடு என்று சொல்ல வைத்தது.

எல்லோரும் அப்படி பூட்டை உடைப்பது நடைமுறையில் சாத்தியமா என்றால் இல்லைதான். நாம் அன்பை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.  இந்த அம்மா பூட்டை உடைத்துவிட்டார்.  அவ்வளவுதான்.

இந்த நேரத்தில் முல்லா கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.  அவர் எப்போதும் வெளியில் செல்லும்போது கதவை திறந்து விட்டு செல்வாராம். வீட்டுக்குள் இருக்கும்போது பூட்டிக் கொள்வாராம்.  ஏன் முல்லா இப்படி செய்கிறீர்கள் ? என்று கேட்டால் "என் வீட்டில் நான்தான் விலை மதிப்பு மிக்க பொருள்" அதனால் தான் என்று சொன்னாராம்.

பொருள் தேடும் வாழ்க்கையிலே, வாழ்க்கையின் பொருளையும் தேட வேண்டிய நேரமாகப் பட்டது எனக்கு.









Wednesday, September 21, 2016

நானும் இன்று எடிசன் ஆனேன்


தலைப்பைப் பார்த்துவிட்டு நானும் எதையோ கண்டுபிடித்து விட்டேன் என்று நினைத்துவிடாதீர்கள்.  

சில நாட்களுக்கு முன் என்னுடைய Laptop கொஞ்சம் மக்கர் செய்ய ஆரம்பித்தது.  சரி Service Engineer இடம் கொடுத்தால் சரியாகிவிடும் என்று கொடுத்துவிட்டேன்.  

அன்று இரவு ஒரு எண்ணம் மனதில் ஓடியது.  நம் கம்ப்யூட்டரில் இருக்கும் நம்முடைய  data எல்லாம் காலியாகிவிட்டால் என்ன செய்வது.  Office data வுக்கு back  up இருந்தது.  என்னுடைய personal data வுக்கு எந்த back up ம் இல்லை.  சரி நானும் இன்று எடிசன் ஆனேன் என்று blog எழுத வேண்டியதுதான் என்று கிண்டலாக நினைத்துக் கொண்டேன்.

மறுநாள் நான்  நினைத்தது போலவே நடந்தது.  Service Engineer என்னுடைய Laptop ஐ சுத்தமாக கொடுத்தார். அதாவது எந்த file ம் அதில் இல்லை.  கேட்டால் ஏதோ virus affect ஆகி விட்டது என்று casual ஆக சொல்லி விட்டார். நடந்து சென்று மருத்துவமனையில் admit ஆனவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மொத்தமாக அனுப்பி வைப்பது போல இருந்தது Service Engineer சொன்னது.

So கிண்டலாக முதல் நாள் நினைத்ததை இப்போது நிஜமாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அது சரி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு என்ன நடந்தது என்று உங்களில் சிலர் நினைக்கலாம்.

1914 ம் ஆண்டு டிசம்பர்  மாதம் 10 ம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் ஒரு பெரிய தீ விபத்து எடிசனின் தொழிற்சாலையில் ஏற்பட்டது.

எடிசனுக்கு அப்போது 67 வயது.  அவர் தன்னுடைய மகனை அழைத்து சொன்னார் "உன்னுடைய அம்மா மற்றும் அனைவரையும் உடனே அழைத்து வா.  அவர்கள் இப்படி ஒரு தீயை இதற்கு முன்னும் பின்பும் பார்க்கப் போவதில்லை. இந்தத் தீ தேவையில்லாத நிறைய விஷயங்களை எரித்து விட்டது".

இன்றைய தேதி மதிப்பில் எடிசன் இழந்தது சுமார் 15000 கோடி.  ஆனால் அவர் மிகவும் நம்பிக்கையுடன் சொன்னார் "Although I am over 67 years old, I'll start all over again tomorrow".

அந்த நம்பிக்கை பொய்யாகவில்லை.  அவர் விரைவில் அதில் இருந்து மீண்டு வந்தார்.  பல சாதனைகளை படைத்தார்.

உங்களுக்கு Stoic என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியுமா ?

Someone who "transforms fear into prudence, pain into transformation, mistakes into initiation, and desire into undertaking".

எடிசன் ஒரு Stoic.  அப்படி நாமும் நம்முடைய வலிகளையும், வேதனைகளையும், தோல்விகளையும், சோதனைகளையும் கடந்து வெற்றி கண்டால் நாமும் ஒரு Stoic தான்.

எடிசன் போன்ற மேதைகளின் வாழ்க்கையை அறிந்து கொண்டு  கூடவே, எதை கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு என்ற கீதையின் சாரத்தையும் அவ்வப் போது நினைத்துக் கொண்டால், பெரிய இழப்பிற்கு மனம் பக்குவப்படாமல் இருந்தாலும் இப்படி சின்னச் சின்ன இழப்புக்கெல்லாம் மனம் சோர்ந்து விடாது.






Friday, September 9, 2016

நடந்தாய் வாழி காவேரி


மழை வந்தால் வெள்ளம் வெள்ளம் என்று கூப்பாடு போடுவதும் வெயில் அடித்தால் கர்நாடகா தண்ணீர் தர வில்லை. ஆந்திரா தண்ணீர் தரவில்லை என்று புலம்புவதும் நம் வாடிக்கையாகி விட்டது.

நம்மில் எத்தனை பேர் நம் வீட்டுக் குழாயில் பக்கத்துக்கு வீட்டுக்காரர் வந்து ஒரு குடம் தண்ணீர் எடுத்தால் "வாங்க சார் தண்ணீதானே எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று மனமுவந்து சொல்வோம். சென்னைக்கு வீராணம் ஏரி தண்ணீர் தருவதற்கே கடலூர் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

So, மொழியால் பிரிவினை பேசி தகராறு செய்வதில் எந்த அர்த்தமும் கிடையாது.

மழை வரும்போது கர்நாடக மாநிலம் நினைத்தாலும் தண்ணீரை அடைத்து வைக்க முடியாது.  திறந்து விட்டுத்தான் ஆக வேண்டும்.  வரும் தண்ணீரை நாம் என்ன செய்கிறோம்.  அப்படியே கடலில் கலக்க விட்டு விடுகிறோம்.  Save it for the rainy day என்று சொல்வார்கள்.  ஆனால் தண்ணீரை பொறுத்தவரை save it for the summer day தான்.

காவிரி, தாமிரபரணி, பாலாறு என்று எத்தனை ஆறுகள் தமிழ்நாட்டில் உள்ளது. கடலில் கலக்கும் முன்  இவை கடக்கும் தூரம் எவ்வளவு ? இதில் எத்தனை இடங்களில் at  least  தடுப்பணையாவது  கட்டி இருக்கிறோம்.  கரிகாலன் கட்டிய கல்லணை என்று பழம் பெருமை பேசியே காலத்தைக் கழிக்கிறோம்.

நம்முடைய அரசியல்வாதிகள் மக்களின் உணர்ச்சியை தூண்டிவிட்டு அறிவை மழுங்கடித்து விடுகிறார்கள்.

சென்ற வருட சென்னை வெள்ளத்தில் நாம் என்ன பாடம் கற்றுக் கொண்டோம்?  சென்ற ஒரு வருடத்தில் எந்த ஒரு நீர் நிலையாவது தூர் வாரப் பட்டிருக்கிறதா ?  அடுத்த மழைக்கும் இதே நிலைதான் தொடரும்.  ஒரு வாரம் அல்லல் படுவோம். சில பல உயிர்களை இழப்போம்.  பிறகு அரசாங்கம் தரும் 5000 (இந்த முறை கொஞ்சம் அதிகப் படுத்தலாம்) பிச்சைக் காசைப் பெற்றுக் கொண்டு அடுத்த வேலையை பார்க்கப் போய் விடுவோம்.

50 ஆண்டுகளுக்கு முன் தண்ணீரை பாட்டில் அல்லது கேனில் வைத்து குடிப்போம் என்று யாரவது சொல்லி இருந்தால் அவரைப் பார்த்து சிரித்து இருப்பார்கள்.  அதைப் போல இன்னும் 50 ஆண்டுகள் கழித்து நம் சந்ததியினர் குளிக்க மாட்டார்கள்.  துணிகளை dry cleaning செய்வது போல் தங்களையும் dry cleaning செய்து கொள்வார்கள் என்று யாராவது சொன்னால் சிரிக்க வேண்டாம்.  இது நடக்க chance மிக அதிகம்.

சரி நம்மால் என்ன செய்ய முடியும்.  நாமே அன்றாட பொருளாதார நெருக்கடியில் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்து சும்மா இருந்து விடலாமா ?

முன்பெல்லாம் துவைக்கும் தண்ணீர், குளிக்கும் தண்ணீர் பாத்திரம் கழுவும் தண்ணீர் என்று எல்லா நீரும் மீண்டும் மண்ணுக்கே செல்லும்.  இப்போது ஒருமுறை bath room  சென்று flush செய்தால் சில லிட்டர் என்று எவ்வளவு நீர் நம் ஒவ்வொருவராலும் waste செய்யப் படுகிறது.  இவை மண்ணுக்கு செல்வதில்லை.  கழிவு நீராய் சென்று கடலில் கலந்து விடுகிறது.  இதை  recycle செய்தாலே எவ்வளோவோ நீரை மிச்சம் செய்ய முடியும்.  

இப்படி எத்தனையோ விஷயங்களில் நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பிப்பதே ஒரு நல்ல ஆரம்பம்தான்.

ஒவ்வொரு எண்ணமும் ஒரு விதைதான்.  நாம் ஒவ்வொருவரும் ஒரு நல்ல எண்ணத்தை விதைப்போம். அறுவடையை நாம் செய்தால் என்ன நம் சந்ததி செய்தால் என்ன.




Tuesday, August 30, 2016

சித்திரச் சோலைகளே


சென்னை நகரின் நெரிசலில் தினமும் சிக்கித் தவிக்கும்போதெல்லாம் எப்போது இந்த மெட்ரோ ரயில் திட்டம் முடியும் என்று நினைக்கிறோமே தவிர அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களைப் பற்றி கவலைப் படுவதில்லை.

சில நாட்களுக்கு முன் ஹிந்து நாளிதழில் வந்த ஒரு செய்தியைப் படித்ததும் மனது கனத்தது.  சியாம் - பர்மா (தாய்லாந்து - மியான்மர் ) - மரண ரயில் பாதை என்ற தலைப்பில் R. குறிஞ்சிவேந்தன் என்பவர் எடுத்த ஒரு டாக்குமெண்டரி படத்தைப் பற்றிய செய்தி அது.

1940-42 ம் ஆண்டுகளில் தாய்லாந்திற்கும் பர்மாவிற்கும் இடையில் கிட்டத் தட்ட 415 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை அமைக்க ஜப்பான் அரசால் பணியமர்த்தப் பட்ட தமிழர்களில்  சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்தக் குளிரிலும், பாம்பு மற்றும் இதர கொடிய விஷ ஜந்துக்கள் கடித்ததிலும் இறந்திருக்கிறார்கள்.   1.5 லட்சம் என்பது இப்போதே மிகப் பெரிய எண்ணிக்கை.  சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு பெரிய எண்ணிக்கையாக இருந்திருக்கும்.

ஐந்து வருடங்களில் முடிக்க வேண்டிய திட்டத்தை ஜப்பான் 15 மாதங்களில் முடித்திருக்கறது.  அப்படியென்றால் அந்தத் தொழிலாளர்கள் எப்படிப் பட்ட துயரங்களை அனுபவித்திருப்பார்கள் என்று யூகிக்க முடியும்.

வறுமை எத்தனை மனிதர்களின் வாழ்க்கையை மிக அனாசயமாக தூக்கி எறிந்து விடுகிறது.

உங்களுக்கு ஊட்டி பிறந்த கதை தெரியுமா ?

1820 ம் ஆண்டு கோவை கலெக்டராக இருந்த திரு. ஜான் சல்லிவன் என்ற ஆங்கிலேயர் ஊட்டி மலையைப் பற்றி கேள்விப் பட்டு ஆங்கில அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் இங்கிலாந்து சீதோஷண நிலைக்கு ஏற்ப ஒரு இடம் ஊட்டி என்றும் அங்கு இரவில் ஊற்றி வைத்தால் காலையில் அந்த தண்ணீர் பனிக் கட்டியாக உறைந்து விடுகிறது.  அதனால் அந்த இடத்திற்கு செல்லவும் மக்கள் சென்று வர வசதியும் செய்வதற்க்கு அனுமதி வேண்டினார்.  முதலில் அனுமதி மறுக்கப் பட்டாலும் பிறகு அவருக்கு அனுமதி கிடைக்கிறது.

குதிரைகள், யானைகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் கோவையில் இருந்து ஊட்டிக்குப் புறப்பட்டார்.  பாதி வழியில் குதிரைகளாலும் யானைகளாலும் மலை ஏற முடியவில்லை.  பிறகு அந்த மலைக்கு பாதை அமைத்ததெல்லாம் ஏழைத் தொழிலாளர்கள்தான்.

ஊட்டிக்கு தேன் நிலவு சென்ற முதல் தம்பதி ஜான் சல்லிவனும் அவரது மனைவியுமாகத்தான் இருப்பார்கள்.  ஏனென்றால் 1820 ம் ஆண்டுதான் அவருக்கு திருமணம் நடந்ததாகத் தெரிகிறது.  இந்தத் தம்பதிக்கு 8 குழந்தைகள். ஜான் சல்லிவனின் மனைவியும் அவரது மூத்த மகனும் 1838 ம் ஆண்டு ஊட்டியில் ஏற்பட்ட தொற்று நோயால் இறந்துவிட ஜான் சல்லிவன் பிற குழந்தைகளை அழைத்துக் கொண்டு இங்கிலாந்து சென்றுவிட்டார்.

நாம் இன்று வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்து வசதி வாய்ப்புக்களுக்கும் முகம் தெரியாத எத்தனையோ மனிதர்களின் தியாகம் என்றால் அது மிகையாகாது.

"சித்திரச் சோலைகளே 
உமை நன்கு திருத்த இப்பாரினிலே 
முன்னம் எத்தனை தோழர்கள் 
ரத்தம் சொரிந்தனரோ 
உங்கள் வேரினிலே" 

என்ற பாரதிதாசனின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

Wednesday, August 10, 2016

ஞானப் பல் தப்பிய கதை

"முப்பத்திரு பல் முனைவேல் காக்க" என்று கந்த சஷ்டி கவசத்தில் படிக்கும் போது பாலன் தேவராயன் ஸ்வாமிகள் ஏன் பல்லுக்கு கூட இவ்வளவு importance கொடுத்தார் என்று சிறுவயதில் புரியவில்லை - கிரிக்கெட் விளையாடும்போது என் நண்பன் கண்ணனுடன் மோதி முன் பல் damage ஆகும்வரை (அவன் முன் நெற்றியில் நாலு தையல் போட்டது வேறு விஷயம்). 

அதற்குப் பிறகு எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது.   சென்ற மாதத்தில் ஒரு  நாள் ஹோட்டலில் தோசை சாப்பிடும்போது கடைவாயில் இருந்து 'கடக்' என்று ஒரு சத்தம். இதற்குப் பெயர்தான் கல் தோசை போலும் என்று நினைத்து கல்லை வெளியில் எடுத்தால் அது கல் இல்லை, சாட்சாத் என் பல்லேதான். விண்ணில் இருந்து மண்ணில் விழும் எரி கல்லின் ஒரு சிதறல் போல ஒரு சின்ன piece தான்.  நாக்கைத் துழாவிப் பார்த்தால் மழைக்குப் பிந்தைய சென்னை நகரின் சாலையைப் போல ஒரு பெரிய பள்ளம் (அல்லது எனக்கு அப்படித் தோன்றியது).

வலியெல்லாம் ஒன்றுமில்லை.  ஆனாலும் என்ன சாப்பிட்டாலும் உணவுத் துகள்கள்  மாட்டிக் கொண்டு சாப்பிடுவதை விட அதை எடுப்பதற்கு அதிக நேரம் செலவு செய்ய வேண்டி இருந்தது (as a matter of hygienic also).

சரி பல் டாக்டரிடம் சென்று அடைத்து விடலாம் என்று நினைத்து casual ஆக தெரிந்த டாக்டரிடம் சென்று காண்பித்தேன் (தெரியாத doctor அனாவசியமாக பயமுறுத்திவிடலாம் என்பதால்).  ஆனால் தெரிந்த டாக்டரும் பயமுறுத்தலாம் என்று அன்று புரிந்து கொண்டேன்.

அவர் சொன்ன விஷயம் இதுதான்.  ஞானப் பல் என்று அழைக்கப் படும் wisdom tooth மற்ற பற்களைப் போல அல்ல. (Tooth  singular or plural ? - என்னைப் போல தமிழ் medium படித்த ஆட்களுக்கு  அடிக்கடி இப்படி basic doubts வந்து விடுகிறது. என்னைப் போலவே confuse ஆகிவிடும் ஆட்களுக்கு சொல்கிறேன்.  Tooth singular தான். ஆனாலும் திரும்பவும் அடுத்த வாரம் கேட்டால் மீண்டும் doubt வர chance அதிகம்). சரி மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன்.  இது தாடை எலும்போடு (jaw bone) ஒட்டியிருக்குமாம்.  அதனால் மற்றப் பற்களை போல சுலபமாக (??) பிடுங்கி விட முடியாதாம். இது கொஞ்சம் complicated.  கிட்டத் தட்ட ஒரு சின்ன surgery செய்துதான் எடுக்க முடியும் என்று சுலபமாக சொல்லிவிட்டார். சொத்தை எடுக்கப் போய் நம் சொத்தையே எடுத்துவிடுவாரோ என்று மனம் லேசாக கலங்கி விட்டது.  மீண்டும் பாலன் தேவராயன் ஸ்வாமிகள் நினைவுக்கு வந்து சென்றார். 

ஆனாலும் வேறு வழியில்லை.  மீண்டும் ஒரு நாள் appointment fix செய்து விட்டு சில நாட்களுக்கு முன் சென்று அவரைப் பார்த்தேன்.  முதலில் ஒரு Xray எடுத்துக் பார்த்துவிடலாம் என்று Xray எடுத்துப் பார்த்தவர் சொன்ன விஷயம் என் காதில் தேனாக விழுந்தது.  ஆமாம்.  ஞானப் பல் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.  குழி விழுந்த (??) இடத்தை fill செய்தால் போதும். பிரச்சினை ஏதும் வராது என்று.   அரை மணி நேரத்தில் treatment ஓவர். Complicated என்று நினைத்த விஷயம் மிகவும் easy ஆக முடிந்து விட்டது.

இந்தப் பதிவின் நோக்கம், என் ஞானப் பல் தப்பிய கதையை பீற்றிக் கொள்வதற்காக அல்ல.  நாம் பொதுவாக டாக்டர் நம் உடல்நிலை குறித்து ஏதாவது negative ஆக ஏதாவது சொன்னால் அதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு அதை நம்பி நம்பியே இல்லாத ஒன்றைக் கூட வரவழைத்துக் கொள்கிறோம்.  எனக்குப் பார்த்த ஒரே டாக்டர் ஒரே வாரத்தில் U turn அடித்து விட்டார்.  அதனால் உடல் நலன் குறித்து தேவையற்ற பயம் கொள்ளத் தேவை இல்லை.  டாக்டரும் நம்மைப் போல சக மனிதரே.  அவருக்கு கிடைக்கும் ரிப்போர்ட்டை வைத்து நம் உடல் நலனை கணிக்கிறார்.  Report எப்படி வேண்டுமானாலும் மாறும். இறைவன் மிகப் பெரியவன். அவனை நம்புவோம்.

பின்குறிப்பு : ஞானப் பல்லுக்கும் ஞானத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒரே ஒரு ஒற்றுமை ஞானமும் ஞானப் பல்லும் கடைசியில்தான் வரும்.