Wednesday, September 21, 2016

நானும் இன்று எடிசன் ஆனேன்


தலைப்பைப் பார்த்துவிட்டு நானும் எதையோ கண்டுபிடித்து விட்டேன் என்று நினைத்துவிடாதீர்கள்.  

சில நாட்களுக்கு முன் என்னுடைய Laptop கொஞ்சம் மக்கர் செய்ய ஆரம்பித்தது.  சரி Service Engineer இடம் கொடுத்தால் சரியாகிவிடும் என்று கொடுத்துவிட்டேன்.  

அன்று இரவு ஒரு எண்ணம் மனதில் ஓடியது.  நம் கம்ப்யூட்டரில் இருக்கும் நம்முடைய  data எல்லாம் காலியாகிவிட்டால் என்ன செய்வது.  Office data வுக்கு back  up இருந்தது.  என்னுடைய personal data வுக்கு எந்த back up ம் இல்லை.  சரி நானும் இன்று எடிசன் ஆனேன் என்று blog எழுத வேண்டியதுதான் என்று கிண்டலாக நினைத்துக் கொண்டேன்.

மறுநாள் நான்  நினைத்தது போலவே நடந்தது.  Service Engineer என்னுடைய Laptop ஐ சுத்தமாக கொடுத்தார். அதாவது எந்த file ம் அதில் இல்லை.  கேட்டால் ஏதோ virus affect ஆகி விட்டது என்று casual ஆக சொல்லி விட்டார். நடந்து சென்று மருத்துவமனையில் admit ஆனவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மொத்தமாக அனுப்பி வைப்பது போல இருந்தது Service Engineer சொன்னது.

So கிண்டலாக முதல் நாள் நினைத்ததை இப்போது நிஜமாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அது சரி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு என்ன நடந்தது என்று உங்களில் சிலர் நினைக்கலாம்.

1914 ம் ஆண்டு டிசம்பர்  மாதம் 10 ம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் ஒரு பெரிய தீ விபத்து எடிசனின் தொழிற்சாலையில் ஏற்பட்டது.

எடிசனுக்கு அப்போது 67 வயது.  அவர் தன்னுடைய மகனை அழைத்து சொன்னார் "உன்னுடைய அம்மா மற்றும் அனைவரையும் உடனே அழைத்து வா.  அவர்கள் இப்படி ஒரு தீயை இதற்கு முன்னும் பின்பும் பார்க்கப் போவதில்லை. இந்தத் தீ தேவையில்லாத நிறைய விஷயங்களை எரித்து விட்டது".

இன்றைய தேதி மதிப்பில் எடிசன் இழந்தது சுமார் 15000 கோடி.  ஆனால் அவர் மிகவும் நம்பிக்கையுடன் சொன்னார் "Although I am over 67 years old, I'll start all over again tomorrow".

அந்த நம்பிக்கை பொய்யாகவில்லை.  அவர் விரைவில் அதில் இருந்து மீண்டு வந்தார்.  பல சாதனைகளை படைத்தார்.

உங்களுக்கு Stoic என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியுமா ?

Someone who "transforms fear into prudence, pain into transformation, mistakes into initiation, and desire into undertaking".

எடிசன் ஒரு Stoic.  அப்படி நாமும் நம்முடைய வலிகளையும், வேதனைகளையும், தோல்விகளையும், சோதனைகளையும் கடந்து வெற்றி கண்டால் நாமும் ஒரு Stoic தான்.

எடிசன் போன்ற மேதைகளின் வாழ்க்கையை அறிந்து கொண்டு  கூடவே, எதை கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு என்ற கீதையின் சாரத்தையும் அவ்வப் போது நினைத்துக் கொண்டால், பெரிய இழப்பிற்கு மனம் பக்குவப்படாமல் இருந்தாலும் இப்படி சின்னச் சின்ன இழப்புக்கெல்லாம் மனம் சோர்ந்து விடாது.






Friday, September 9, 2016

நடந்தாய் வாழி காவேரி


மழை வந்தால் வெள்ளம் வெள்ளம் என்று கூப்பாடு போடுவதும் வெயில் அடித்தால் கர்நாடகா தண்ணீர் தர வில்லை. ஆந்திரா தண்ணீர் தரவில்லை என்று புலம்புவதும் நம் வாடிக்கையாகி விட்டது.

நம்மில் எத்தனை பேர் நம் வீட்டுக் குழாயில் பக்கத்துக்கு வீட்டுக்காரர் வந்து ஒரு குடம் தண்ணீர் எடுத்தால் "வாங்க சார் தண்ணீதானே எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று மனமுவந்து சொல்வோம். சென்னைக்கு வீராணம் ஏரி தண்ணீர் தருவதற்கே கடலூர் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

So, மொழியால் பிரிவினை பேசி தகராறு செய்வதில் எந்த அர்த்தமும் கிடையாது.

மழை வரும்போது கர்நாடக மாநிலம் நினைத்தாலும் தண்ணீரை அடைத்து வைக்க முடியாது.  திறந்து விட்டுத்தான் ஆக வேண்டும்.  வரும் தண்ணீரை நாம் என்ன செய்கிறோம்.  அப்படியே கடலில் கலக்க விட்டு விடுகிறோம்.  Save it for the rainy day என்று சொல்வார்கள்.  ஆனால் தண்ணீரை பொறுத்தவரை save it for the summer day தான்.

காவிரி, தாமிரபரணி, பாலாறு என்று எத்தனை ஆறுகள் தமிழ்நாட்டில் உள்ளது. கடலில் கலக்கும் முன்  இவை கடக்கும் தூரம் எவ்வளவு ? இதில் எத்தனை இடங்களில் at  least  தடுப்பணையாவது  கட்டி இருக்கிறோம்.  கரிகாலன் கட்டிய கல்லணை என்று பழம் பெருமை பேசியே காலத்தைக் கழிக்கிறோம்.

நம்முடைய அரசியல்வாதிகள் மக்களின் உணர்ச்சியை தூண்டிவிட்டு அறிவை மழுங்கடித்து விடுகிறார்கள்.

சென்ற வருட சென்னை வெள்ளத்தில் நாம் என்ன பாடம் கற்றுக் கொண்டோம்?  சென்ற ஒரு வருடத்தில் எந்த ஒரு நீர் நிலையாவது தூர் வாரப் பட்டிருக்கிறதா ?  அடுத்த மழைக்கும் இதே நிலைதான் தொடரும்.  ஒரு வாரம் அல்லல் படுவோம். சில பல உயிர்களை இழப்போம்.  பிறகு அரசாங்கம் தரும் 5000 (இந்த முறை கொஞ்சம் அதிகப் படுத்தலாம்) பிச்சைக் காசைப் பெற்றுக் கொண்டு அடுத்த வேலையை பார்க்கப் போய் விடுவோம்.

50 ஆண்டுகளுக்கு முன் தண்ணீரை பாட்டில் அல்லது கேனில் வைத்து குடிப்போம் என்று யாரவது சொல்லி இருந்தால் அவரைப் பார்த்து சிரித்து இருப்பார்கள்.  அதைப் போல இன்னும் 50 ஆண்டுகள் கழித்து நம் சந்ததியினர் குளிக்க மாட்டார்கள்.  துணிகளை dry cleaning செய்வது போல் தங்களையும் dry cleaning செய்து கொள்வார்கள் என்று யாராவது சொன்னால் சிரிக்க வேண்டாம்.  இது நடக்க chance மிக அதிகம்.

சரி நம்மால் என்ன செய்ய முடியும்.  நாமே அன்றாட பொருளாதார நெருக்கடியில் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்து சும்மா இருந்து விடலாமா ?

முன்பெல்லாம் துவைக்கும் தண்ணீர், குளிக்கும் தண்ணீர் பாத்திரம் கழுவும் தண்ணீர் என்று எல்லா நீரும் மீண்டும் மண்ணுக்கே செல்லும்.  இப்போது ஒருமுறை bath room  சென்று flush செய்தால் சில லிட்டர் என்று எவ்வளவு நீர் நம் ஒவ்வொருவராலும் waste செய்யப் படுகிறது.  இவை மண்ணுக்கு செல்வதில்லை.  கழிவு நீராய் சென்று கடலில் கலந்து விடுகிறது.  இதை  recycle செய்தாலே எவ்வளோவோ நீரை மிச்சம் செய்ய முடியும்.  

இப்படி எத்தனையோ விஷயங்களில் நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பிப்பதே ஒரு நல்ல ஆரம்பம்தான்.

ஒவ்வொரு எண்ணமும் ஒரு விதைதான்.  நாம் ஒவ்வொருவரும் ஒரு நல்ல எண்ணத்தை விதைப்போம். அறுவடையை நாம் செய்தால் என்ன நம் சந்ததி செய்தால் என்ன.




Tuesday, August 30, 2016

சித்திரச் சோலைகளே


சென்னை நகரின் நெரிசலில் தினமும் சிக்கித் தவிக்கும்போதெல்லாம் எப்போது இந்த மெட்ரோ ரயில் திட்டம் முடியும் என்று நினைக்கிறோமே தவிர அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களைப் பற்றி கவலைப் படுவதில்லை.

சில நாட்களுக்கு முன் ஹிந்து நாளிதழில் வந்த ஒரு செய்தியைப் படித்ததும் மனது கனத்தது.  சியாம் - பர்மா (தாய்லாந்து - மியான்மர் ) - மரண ரயில் பாதை என்ற தலைப்பில் R. குறிஞ்சிவேந்தன் என்பவர் எடுத்த ஒரு டாக்குமெண்டரி படத்தைப் பற்றிய செய்தி அது.

1940-42 ம் ஆண்டுகளில் தாய்லாந்திற்கும் பர்மாவிற்கும் இடையில் கிட்டத் தட்ட 415 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை அமைக்க ஜப்பான் அரசால் பணியமர்த்தப் பட்ட தமிழர்களில்  சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்தக் குளிரிலும், பாம்பு மற்றும் இதர கொடிய விஷ ஜந்துக்கள் கடித்ததிலும் இறந்திருக்கிறார்கள்.   1.5 லட்சம் என்பது இப்போதே மிகப் பெரிய எண்ணிக்கை.  சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு பெரிய எண்ணிக்கையாக இருந்திருக்கும்.

ஐந்து வருடங்களில் முடிக்க வேண்டிய திட்டத்தை ஜப்பான் 15 மாதங்களில் முடித்திருக்கறது.  அப்படியென்றால் அந்தத் தொழிலாளர்கள் எப்படிப் பட்ட துயரங்களை அனுபவித்திருப்பார்கள் என்று யூகிக்க முடியும்.

வறுமை எத்தனை மனிதர்களின் வாழ்க்கையை மிக அனாசயமாக தூக்கி எறிந்து விடுகிறது.

உங்களுக்கு ஊட்டி பிறந்த கதை தெரியுமா ?

1820 ம் ஆண்டு கோவை கலெக்டராக இருந்த திரு. ஜான் சல்லிவன் என்ற ஆங்கிலேயர் ஊட்டி மலையைப் பற்றி கேள்விப் பட்டு ஆங்கில அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் இங்கிலாந்து சீதோஷண நிலைக்கு ஏற்ப ஒரு இடம் ஊட்டி என்றும் அங்கு இரவில் ஊற்றி வைத்தால் காலையில் அந்த தண்ணீர் பனிக் கட்டியாக உறைந்து விடுகிறது.  அதனால் அந்த இடத்திற்கு செல்லவும் மக்கள் சென்று வர வசதியும் செய்வதற்க்கு அனுமதி வேண்டினார்.  முதலில் அனுமதி மறுக்கப் பட்டாலும் பிறகு அவருக்கு அனுமதி கிடைக்கிறது.

குதிரைகள், யானைகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் கோவையில் இருந்து ஊட்டிக்குப் புறப்பட்டார்.  பாதி வழியில் குதிரைகளாலும் யானைகளாலும் மலை ஏற முடியவில்லை.  பிறகு அந்த மலைக்கு பாதை அமைத்ததெல்லாம் ஏழைத் தொழிலாளர்கள்தான்.

ஊட்டிக்கு தேன் நிலவு சென்ற முதல் தம்பதி ஜான் சல்லிவனும் அவரது மனைவியுமாகத்தான் இருப்பார்கள்.  ஏனென்றால் 1820 ம் ஆண்டுதான் அவருக்கு திருமணம் நடந்ததாகத் தெரிகிறது.  இந்தத் தம்பதிக்கு 8 குழந்தைகள். ஜான் சல்லிவனின் மனைவியும் அவரது மூத்த மகனும் 1838 ம் ஆண்டு ஊட்டியில் ஏற்பட்ட தொற்று நோயால் இறந்துவிட ஜான் சல்லிவன் பிற குழந்தைகளை அழைத்துக் கொண்டு இங்கிலாந்து சென்றுவிட்டார்.

நாம் இன்று வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்து வசதி வாய்ப்புக்களுக்கும் முகம் தெரியாத எத்தனையோ மனிதர்களின் தியாகம் என்றால் அது மிகையாகாது.

"சித்திரச் சோலைகளே 
உமை நன்கு திருத்த இப்பாரினிலே 
முன்னம் எத்தனை தோழர்கள் 
ரத்தம் சொரிந்தனரோ 
உங்கள் வேரினிலே" 

என்ற பாரதிதாசனின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

Wednesday, August 10, 2016

ஞானப் பல் தப்பிய கதை

"முப்பத்திரு பல் முனைவேல் காக்க" என்று கந்த சஷ்டி கவசத்தில் படிக்கும் போது பாலன் தேவராயன் ஸ்வாமிகள் ஏன் பல்லுக்கு கூட இவ்வளவு importance கொடுத்தார் என்று சிறுவயதில் புரியவில்லை - கிரிக்கெட் விளையாடும்போது என் நண்பன் கண்ணனுடன் மோதி முன் பல் damage ஆகும்வரை (அவன் முன் நெற்றியில் நாலு தையல் போட்டது வேறு விஷயம்). 

அதற்குப் பிறகு எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது.   சென்ற மாதத்தில் ஒரு  நாள் ஹோட்டலில் தோசை சாப்பிடும்போது கடைவாயில் இருந்து 'கடக்' என்று ஒரு சத்தம். இதற்குப் பெயர்தான் கல் தோசை போலும் என்று நினைத்து கல்லை வெளியில் எடுத்தால் அது கல் இல்லை, சாட்சாத் என் பல்லேதான். விண்ணில் இருந்து மண்ணில் விழும் எரி கல்லின் ஒரு சிதறல் போல ஒரு சின்ன piece தான்.  நாக்கைத் துழாவிப் பார்த்தால் மழைக்குப் பிந்தைய சென்னை நகரின் சாலையைப் போல ஒரு பெரிய பள்ளம் (அல்லது எனக்கு அப்படித் தோன்றியது).

வலியெல்லாம் ஒன்றுமில்லை.  ஆனாலும் என்ன சாப்பிட்டாலும் உணவுத் துகள்கள்  மாட்டிக் கொண்டு சாப்பிடுவதை விட அதை எடுப்பதற்கு அதிக நேரம் செலவு செய்ய வேண்டி இருந்தது (as a matter of hygienic also).

சரி பல் டாக்டரிடம் சென்று அடைத்து விடலாம் என்று நினைத்து casual ஆக தெரிந்த டாக்டரிடம் சென்று காண்பித்தேன் (தெரியாத doctor அனாவசியமாக பயமுறுத்திவிடலாம் என்பதால்).  ஆனால் தெரிந்த டாக்டரும் பயமுறுத்தலாம் என்று அன்று புரிந்து கொண்டேன்.

அவர் சொன்ன விஷயம் இதுதான்.  ஞானப் பல் என்று அழைக்கப் படும் wisdom tooth மற்ற பற்களைப் போல அல்ல. (Tooth  singular or plural ? - என்னைப் போல தமிழ் medium படித்த ஆட்களுக்கு  அடிக்கடி இப்படி basic doubts வந்து விடுகிறது. என்னைப் போலவே confuse ஆகிவிடும் ஆட்களுக்கு சொல்கிறேன்.  Tooth singular தான். ஆனாலும் திரும்பவும் அடுத்த வாரம் கேட்டால் மீண்டும் doubt வர chance அதிகம்). சரி மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன்.  இது தாடை எலும்போடு (jaw bone) ஒட்டியிருக்குமாம்.  அதனால் மற்றப் பற்களை போல சுலபமாக (??) பிடுங்கி விட முடியாதாம். இது கொஞ்சம் complicated.  கிட்டத் தட்ட ஒரு சின்ன surgery செய்துதான் எடுக்க முடியும் என்று சுலபமாக சொல்லிவிட்டார். சொத்தை எடுக்கப் போய் நம் சொத்தையே எடுத்துவிடுவாரோ என்று மனம் லேசாக கலங்கி விட்டது.  மீண்டும் பாலன் தேவராயன் ஸ்வாமிகள் நினைவுக்கு வந்து சென்றார். 

ஆனாலும் வேறு வழியில்லை.  மீண்டும் ஒரு நாள் appointment fix செய்து விட்டு சில நாட்களுக்கு முன் சென்று அவரைப் பார்த்தேன்.  முதலில் ஒரு Xray எடுத்துக் பார்த்துவிடலாம் என்று Xray எடுத்துப் பார்த்தவர் சொன்ன விஷயம் என் காதில் தேனாக விழுந்தது.  ஆமாம்.  ஞானப் பல் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.  குழி விழுந்த (??) இடத்தை fill செய்தால் போதும். பிரச்சினை ஏதும் வராது என்று.   அரை மணி நேரத்தில் treatment ஓவர். Complicated என்று நினைத்த விஷயம் மிகவும் easy ஆக முடிந்து விட்டது.

இந்தப் பதிவின் நோக்கம், என் ஞானப் பல் தப்பிய கதையை பீற்றிக் கொள்வதற்காக அல்ல.  நாம் பொதுவாக டாக்டர் நம் உடல்நிலை குறித்து ஏதாவது negative ஆக ஏதாவது சொன்னால் அதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு அதை நம்பி நம்பியே இல்லாத ஒன்றைக் கூட வரவழைத்துக் கொள்கிறோம்.  எனக்குப் பார்த்த ஒரே டாக்டர் ஒரே வாரத்தில் U turn அடித்து விட்டார்.  அதனால் உடல் நலன் குறித்து தேவையற்ற பயம் கொள்ளத் தேவை இல்லை.  டாக்டரும் நம்மைப் போல சக மனிதரே.  அவருக்கு கிடைக்கும் ரிப்போர்ட்டை வைத்து நம் உடல் நலனை கணிக்கிறார்.  Report எப்படி வேண்டுமானாலும் மாறும். இறைவன் மிகப் பெரியவன். அவனை நம்புவோம்.

பின்குறிப்பு : ஞானப் பல்லுக்கும் ஞானத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒரே ஒரு ஒற்றுமை ஞானமும் ஞானப் பல்லும் கடைசியில்தான் வரும். 










Wednesday, July 27, 2016

வஞ்சம் இல்லாமல் லஞ்சம் வாங்கினால் .......


B.K. Bansal என்ற பெயர் company secretary வட்டத்தில் நல்ல பரிச்சயமான பெயர். இவர் Ministry  of Corporate  Affairs-ல் Regional  Director ஆக சென்னையில் இருந்தார். மனிதர் அதிகம் பேச மாட்டார்.  அவர் அலுவலகத்தில் இருந்து எந்த file நகர வேண்டும் என்றாலும் ஒரு சிறிய காகிதத்தில் ஒரு தொகையை குறிப்பிடுவார். அதற்க்கு OK என்றால் மேற்கொண்டு பேசலாம். காரியம் நடக்கும். சட்டபூர்வமாக செய்யும் காரியங்களுக்கே இப்படி என்றால் சட்டத்தை மீறி என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளலாம்.

இவர் சமீபத்தில் டெல்லிக்கு பதவி உயர்வு பெற்று சென்றார்.  சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி - Bansal ஒரு corporate நிறுவனத்திடம் இருந்து 9 லட்சம் லஞ்சம் பெற்ற போது CBI அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்ப பட்டார்.

அவருடைய வீட்டில் கோடிக்கணக்கான பணமும், சொத்து ஆவணங்களும்  60 க்கும் அதிகமான வங்கி கணக்குகளும் பறிமுதல் செய்யப் பட்டன.

அதைவிட அதிர்ச்சியான செய்தி. அவருடைய வீட்டில் CBI  raid நடத்தப் பட்ட மறுநாள் அவருடைய மனைவியும், 27 வயதான அவருடைய மகளும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர்.

இன்னும் 3 மாதத்தில் ஓய்வு பெற இருக்கும் நிலையில் அவருக்கு இப்படி ஒரு அவலம்.

இந்த செய்தியைப் படித்ததும் மகாகவி பாரதியின் "படிச்சவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான்" என்ற வார்த்தைகள்தான் என் மனதில் தோன்றியது.

"அரசன் அன்று கொல்வான் - தெய்வம் நின்று கொல்லும்" என்று சொல்வார்கள்.  இப்போதெல்லாம் தெய்வத்திற்கும் பொறுமை இல்லை போலும்.

பொருள் ஈட்டுவதில் தவறில்லை.  ஆனால் அதை எந்த வகையில் ஈட்டுகிறோம் எனபதில்தான் பலர் தவறி விடுகின்றனர்.  நல்ல வழியில் சேர்க்கும் பொருள் நமக்கு வரமாக அமைகிறது என்றால் தவறான வழியில் சேர்க்கும் பொருள் சாபமாக அமைந்து விடுகிறது.  

Bansal தவறான வழியில் சேர்த்த பொருட்களை எல்லாம் திருப்பிக் கொடுத்தாலும் இழந்த அவருடைய மனைவியையும், மகளையும் திரும்ப பெற முடியுமா ?

இன்று அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள்.  அவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியே வந்த போது அவர் கொண்டு வந்தது அவர் உபயோகப் படுத்திய சில துணிமணிகளும் மற்ற சில பொருட்களும்தான். அவருக்கு முன்னாள் இருந்த பிரதிபா பாட்டில் வெளியேறும்போது சில லாரிகளில் அவருடைய பொருட்களை அள்ளிச் சென்றாராம்.

தன்னுடைய குடும்பத்தினர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து போன செலவையே திருப்பிக் கொடுத்தவர் அப்துல் கலாம் அவர்கள்.  அதனால்தான் அவர் மறைந்து ஒரு ஆண்டு ஆகியும் இந்தியாவே இன்னும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறது.

கலாம் போன்றவர்களின் வாழ்க்கையை நாம் அடிக்கடி நினைவு கொள்வது வாழ்க்கையின் வெற்றி என்பது வீண் ஆடம்பரத்திலும் வெறும் பகட்டு வாழ்க்கையிலும் இல்லை.  எத்தனை பேரின் இதயங்களை நாம் தொட்டிருக்கிறோம்  என்பதில்  உள்ளது என்று உணர்வதற்குத் தான்.

அப்துல் கலாம் அவரகளின் "Transcendence" என்ற புத்தகத்தில் இருந்து சில சிந்தனைகள்.

The senses are not always reliable. Infinite intelligence does not err. quiet time spent in reflection; a life of rigour and austerity; simple service done at any place to help the poor, the deprived, the disadvantaged and the disabled - and aiding animals and the environment - are methods by which infinite intelligence may be most readily contacted.

In the good of others lies our own 
In the progress of others lies our own 
In the joy of others lies our own.

Sunday, July 3, 2016

நம்மைச் சுற்றியும் நாம்தான்

"ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி" என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வெளிவரும் தொடரில் கட்டுரை ஆசிரியர் திரு. ம. செந்தமிழன் பின்வரும் அகநானுற்றுப் பாடல் காட்சி ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

காதலியைக் காம உணர்வுடன் தழுவுகிறான் காதலன்.  அவனைத் தடுத்து விலக்கும் அந்த இளம்பெண் கூறுகிறாள், "தலைவா, இதோ இந்தப் புன்னைமரம் என் சகோதரி. அவளுக்கு எதிரில் என்னால் உன்னைத் தழுவ இயலாது. ஆகவே வேறு இடம் செல்வோம்".

சமீபத்தில் கண்ட ஒரு காட்சி.  ஒரு இளம்பெண்ணும் ஒரு வாலிபனும் மக்கள் நடமாட்டம் அதிகம் ஒரு தெருவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். தன்னைச் சுற்றி மக்கள் கவனிக்கிறார்கள் என்ற எந்த உணர்வும் இல்லாமல் அந்தப் பையன் அந்தப் பெண்ணின் கையை பிடித்து இழுப்பதும் அந்தப் பெண் அதை விலக்குவதுமாக இருந்தார்கள்.  அதைப் பார்த்த ஒரு பெரியவர் அவர்களிடம் ஏதோ கேட்கப் போனார்.  அதற்கு அந்தப் பெண் கோபத்தில் சொன்ன பதில் "This is our personal matter. Mind your business. 

இன்னொரு காட்சி.  ஒரு ஆட்டோவில் ஒரு காதல் ஜோடி வண்டியை ஓட்டும் ஓட்டுனரும் எல்லா உணர்வுகளும் உள்ள சராசரியான மனிதன் என்ற எந்த உணர்வும் இல்லாமல் காதல் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

மரங்களைக் கூட சக மனிதர்களாக கருதிய சமூகத்தில் வந்தவர்கள் நாம். அதே நாம்தான் இப்போது சக மனிதர்களை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் நமக்கென்று ஒரு தனியான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முன்பெல்லாம் நமக்கு தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால் என்ற அச்ச உணர்வு காதலர்களுக்கு இருக்கும்.  ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் எல்லா ஊர்களில் இருந்தும் படிப்பதற்கும் வேலைக்கும் வருவதால் அந்த அச்ச உணர்வெல்லாம் இப்போது குறைந்து விட்டது.

காதலையும் காமத்தையும் சுமந்து கொண்டுதான் இளமையைக் கடக்க வேண்டும்.  ஆனால் அதில் ஒரு sensitivity இல்லாவிட்டால் அது சில சமயங்களில் நம் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடக் கூடும்.

முன்பெல்லாம் திருமணம் நிச்சயம் செய்யும் வரை பெண்ணின் புகைப் படத்தைக் கூட கொடுக்க மாட்டார்கள்.  அதை அவ்வளவு சென்சிட்டிவிட்டியான விஷயமாக நினைத்தார்கள்.

இன்று விதவிதமான போட்டோக்களை தினந்தோறும் whatsapp லும் facebook லும் upload செய்கிறோம்.  அது யார் யாரிடம் போய் சேருகிறது என்று கூட நமக்குத் தெரிவதில்லை.  Photoshop மூலம் நம் படத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும்.  இதில் பெண்கள்தான் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.  ஏனென்றால் பாதிக்கப் படுவது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களை நாம் மிகவும் கவனத்துடன் கையாளவேண்டும். இல்லையென்றால் ஸ்வாதிகளையும், வினுப் பிரியாக்களையும் நாம் அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஸ்வாதியின் குடும்பத்துக்காக அனுதாபப்படும் அதே நேரத்தில்,  ராம் குமாரின் குடும்பத்தை நினைத்தாலும் அதிக வேதனையாக இருக்கிறது.

வறுமையின் விளிம்பில் வாழும் ஒரு சாதாரண குடும்பம்.  தன் மகன் நன்றாக படித்து குடும்பத்தினை மேல் நிலைக்கு கொண்டு வருவான் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு இடி அவர்கள் வாழ்க்கையில் விழுந்திருக்கிறது. கொலைகாரன் குடும்பம் என்ற பழி வேறு.   அவர்கள் குடும்பத்தைப் பற்றியும் ராம் குமாரைப் பற்றியும் அவன் ஊரில் நல்லவிதமாகவே கூறுகிறார்கள்.

ஸ்வாதி நம்மில் ஒருவர் என்றால் ராம் குமாரும் நம்மில் ஒருவர்தான்.  ஆண் பெண் உறவு மிகவும் சிக்கலாக உள்ள காலக் கட்டம் இது.   ஆண் பெண் உறவை matured ஆக handle செய்ய நாமும் கற்றுக் கொண்டு நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.  இதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மிகவும் அதிகம்.

ராம்குமாரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை தருவதற்கு சட்டம் இருக்கிறது.  ஆனால் ராம்குமார்களை உருவாக்கும் இந்த சமூகத்தின் குற்றத்துக்கு யார் தண்டனை வழங்குவது ?

Monday, June 13, 2016

உங்கள் வாசனை என்ன ?


இன்று மதுரையில் இருந்து நண்பர் திரு. செந்தில் phone செய்திருந்தார்.  என்ன sir உங்கள் blog-இல் ஒரு மாதமாக புதிதாக எதுவும் பதிவு செய்யவில்லையே. அடிக்கடி உங்கள் வலைதளத்தை எட்டிப் பார்த்து ஏமாந்து விடுகிறேன் என்று சொன்னார்.  நம்முடைய வலைதளத்தையும் தினமும் சிலர் பார்க்கின்றனர் என்பதே ஒரு பெருமைதானே.

நீங்கள் சொல்லும் விஷயம் எல்லோருக்கும் தெரிந்த பொதுவான விஷயமாக இருந்தாலும் உங்கள் எழுத்து நடை படிக்கும் போது சுவாரசியமாக இருக்கிறது என்றும் சொன்னார்.  இது போதாதா  நமக்கு.  ஒரு எழுத்தாளனுக்கு தேவையான அனைத்து சாமுத்ரிகா லட்சணங்கலுள் ஒரு சில நமக்கும் இருக்கிறது போலும் என்ற ஒரு சின்ன சந்தோஷம் எனக்கு. 

அவருக்காகவே இன்று ஒரு பதிவு.  

திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் "சிறிது வெளிச்சம்" என்ற நூலில் "வாசனையாக மாறுங்கள்" என்ற கட்டுரை ஞாபகம் வந்தது.  அதில் இருந்து சில வெளிச்சங்கள்.

"மனிதர்களின் தீராத வாசனையின் பெயர் சிரிப்பு.  குழந்தைகளின் சிரிப்பை பார்த்து இருக்கிறீர்களா ? காரணம் இல்லாத சிரிப்பு அது. குழந்தைக்கு நினைவுகள் இல்லை.  அது சிரிப்பை மட்டுமே தன் சந்தோஷத்தின் வெளிப்பாடாகக் கொண்டிருகிறது.

குழந்தைகள் சிரிக்கும்போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவில்லாதது. அப்படியான சிரிப்பு வளர வளரத் தேய்ந்து விடுகிறது.  பல நேரங்களில் சிரிப்பதற்காக இடம் தேடி, ஆள் தேடி அலைகிறோம்.  நடுத்தர வயதில் சிரிப்பை முழுமையாக கைவிட்டு விடுகிறோம்.

தீர்க்க  முடியாத நோய்களில் ஒன்று சிரிப்பை இழப்பது.  ஞானிகளும் குழந்தைகளும் சிரிப்பதற்கு காரணத்தை நாடுவதில்லை.   பனி உருகுவது போல சிரிப்பு அவர்களின் மனதில் இயல்பாக வெளிப்படுகிறது.

சிரிப்புக்கு ஒரு வாசனை இருக்கிறது.  அதை நுட்பமாக உணர்ந்தவர்கள் அறிந்து இருக்கிறார்கள்".   இப்படிப் போகிறது அந்தக் கட்டுரை.

இந்தக் கட்டுரையை படித்ததும் கண்ணை மூடி கொஞ்சம் சிந்தித்தேன். உண்மைதான் நாம் வாசனை என்று நினைப்பது எல்லாம் பொதுவாக அத்தர் ஜவ்வாது மற்றும் பல வாசனைத் திரவியங்களைத்தான்.  அதனால்தான் TMS கூட அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசியும் அங்கம் மணக்கவில்லையே என்று மனம் உருகப் பாடினார்.

இத்தகைய வாசனைத் திரவியங்கள் நம்முடைய வியர்வை நாற்றத்தில் இருந்து வேண்டுமானால் நம்மை கொஞ்சம் பாதுகாக்கலாம்.

ஆனால் நம்முடைய வாசனை என்பது அதற்கும் சற்று மேலே.

சிலர் ஏதோ ஒரு வகையில் நம்மை ஈர்த்துக் கொண்டிருப்பார்கள்.  சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அருகில் சென்று பழகும்போது விலகி ஓடும்படி செய்து விடுவார்கள்.  

யோசித்துப் பார்த்தால் நம்முடைய எண்ணங்கள் நம்மைச் சுற்றி ஒரு வாசனையை உருவாக்கி விடுகிறது.  மூக்கினால் நுகர முடியாத அந்த வாசனை பிறரை நம்மை நோக்கி இழுக்கிறது அல்லது நம்மிடம் இருந்து விலக வைக்கிறது.

ரமண மகரிஷி போன்ற மகான்களின் புன்முறுவல் பூக்கும் அந்த முகங்களின் வாசனை இன்றும் நம்மை அவர்கள் இருந்த இடங்களை நோக்கி இழுக்கிறது.

நாமும் அப்படிப்பட்ட வாசனையைப் பெற கொஞ்சமாவது முயற்சி செய்வோம்.  அதற்கு பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம்.  யாரிடமும் நெஞ்சில் வஞ்சம் இல்லாமல் பழகத் தெரிந்தால் போதும்.  உங்கள் புன்னகை தந்திரப் புன்னகையாக இல்லாமல் இருந்தால் மந்திரப் புன்னகையாக மாறும். (அடப் பாவி அதுதானே கஷ்டம் என்று சொல்கிறிர்களா ? அதுவும் சரிதான்).  ஆனால் முயற்சி திருவினையாக்கும்.