Saturday, May 2, 2015

நேபாள மக்களுக்கு நமது பிரார்த்தனைகள்


ஒவ்வொரு மண்ணுக்கும் ஒருஅடிப்படை குணம் உண்டு என்று சொல்வார்கள். அப்படிப் பார்த்தால், நேபாள மக்களின் அடிப்படை குணம் பொறுமை அல்லது சாந்தம் என்று எடுத்துக் கொள்ளலாம்.  

நம் ஊரில் இருக்கும் கூர்காக்களையோ அல்லது சில ஹோட்டல்களில் வேலை செய்யும் நேபாளிகளையோ நீங்கள் கவனித்து இருக்கக் கூடும்.   நாம் திட்டினாலும் அல்லது பாராட்டினாலும் ஒரே மாதிரியான மோனாலிசா புன்னகையுடன் இருப்பார்கள்.  அப்படிப்பட்ட மக்களைப் புரட்டிப் போட்டு கதற வைத்து விட்டது இந்த நில நடுக்கம்.

எந்த இழப்பும் நமக்கு ஒரு செய்தியாகத்தான் இருக்கும், அது நம்மோடு சம்பந்தப் படாத வரையில்.  அப்படித்தான் பல செய்திகளை தினமும் கடந்து கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில்தான்  இந்த நேபாள நில நடுக்கம் எனக்குள் பல அதிர்வுகளை  ஏற்படுத்தியது.  நான் 2013 ம் வருடம் கைலாய யாத்திரை சென்ற போது சில நாட்கள் நேபாள் காத்மாண்டுவில் தங்கியிருந்தோம்.  அப்போது நாங்கள் பார்த்த பல நூற்றாண்டு கால கட்டிடங்கள் இன்று மண்ணோடு மண்ணாகிவிட்டது.

'காலத்தால் அழியாத' என்று சொல்லப்பட்ட பல நினைவுச் சின்னங்களை, காலம் ஒரு கணத்தில் கலைத்துப் போட்டுவிட்டது.  காலத்தால் அழியாத என்ற ஒன்று இல்லவே இல்லை என்று இயற்கை நமக்கு மீண்டும் உணர்த்திவிட்டது.  எவ்வளவு காலம் என்பதில்தான் வித்தியாசம்.

நேபாள நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடு.  அதனால்தான் நிவாரண உதவிகளில் கூட ஏகப்பட்ட சுணக்கம் மற்றும் தொய்வு.  ஆனால் நேபாள நாட்டிற்கு நமது இந்திய அரசின் உடனடி உதவிகளை நாம் கண்டிப்பாக பாராட்டலாம். பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

நெருங்கிய சொந்தங்களை இழந்த நேபாள மக்களின் வாழ்வில் மீண்டும் வசந்தம் எப்போது வரும் என்று சொல்ல முடியாது.   ஆனால் வேதனையின் உச்சத்தில் இருக்கும் அவர்களின் மன வலியை நம்முடைய பிரார்த்தனையும் நம்மால் முடிந்த உதவிகளும் கண்டிப்பாக குறைக்கும் என்று நம்பலாம்.

காலத்தால் அழியாத என்ற ஒன்று இல்லவே இல்லை இயற்கையில் - இந்த துயரம் உட்பட.