Saturday, March 17, 2018

ஸ்டீபன் ஹாக்கிங்


ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கரு. பழனியப்பனின் கருநீலம் யூடியுப் வீடியோவை பார்த்தவுடன் ரஜினியின் அரசியல் குறித்த என்னுடைய எண்ணங்களை எழுதலாம் என்று உட்கார்ந்தேன். மணி என்னவென்று கைக்கடிகாரத்தை பார்த்தவுடன் என் மனதில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் ”A Brief Hisory of Time” என்ற புத்தகத்தின் பெயா் ஓடியது.  ரஜினி இமயமலையில் இருந்து திரும்பி வரட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது ஸ்டீபன் ஹாக்கிங் பற்றி எழுதலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.  ஏனென்றால் சில மனிதா்கள் மனித குலத்திற்குப் பொதுவானவா்கள்.  அவா்களைப் பற்றி ஆழ்ந்து நினைப்பதே நம்மை ஒரு அங்குலமாவது நம் வாழ்வில் உயா்த்தும்.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கையைப் பற்றி நினைக்கும்போது எனக்கு நினைவுக்கு வந்த திருக்குறள் – ”தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்”.  எவ்வளவு பொருத்தமான வார்த்தைகள் பாருங்கள்.  In fact  ஸ்டீபன் ஹாக்கிங் கடவுள் நம்பிக்கை இல்லாதவா்.

தன்னுடைய 21-வது வயதில் நரம்பு முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு உடல் முழுவதும் செயல் இழந்து இன்னும் ஒரு சில வருடங்களுக்கு மேல் உயா் வாழ்வது கடினம் என்று மருத்துவா்கள் அறிவித்தபிறகு, கிட்டத்தட்ட 55 வருடங்கள் வாழ்ந்து தன்னுடை 76-வது வயதில் மரணத்தினை தழுவியிருக்கிறார்.  முழுமையற்ற உடலில் ஒரு முழுமையான வாழ்வு.

நாம் சின்னதாக ஒரு தலைவலி அல்லது உடல்வலி வந்தாலே ஒரு வேலையும் செய்யாமல் அப்படியே முடங்கிவிடுகிறோம்.  ஆனால் உடல் முழுதும் முடங்கிப் போன ஒருவா் தன் வாழ்நாள் முழுவதும் அதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் வாழ்ந்தது மட்டுமல்லாமல் இந்த நுாற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானிகளுள் ஒருவராகவும் தன்னை நிருபித்துவிட்டுப் போயிருக்கிறார்.

நான் அடிக்கடி நினைத்துக் கொள்ளும் ஒரு வாசகம் – ”வரங்களையே சாபங்களாகிக் கொண்டு கஷ்டப்படும் மனிதா்கள் பலா் உள்ள இந்த உலகில் சிலர் மட்டும் சாபங்களைக்கூட வரங்களாகக் மாற்றி வாழ்க்கையில் மட்டுமல்லாமல் வாழ்க்கையையே ஜெயித்துக் காட்டுகின்றனா்”.  

நம் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு ஒரு நாள் வாழ்ந்து பார்த்தால் புரியும் உடல் முழுவதும் இயங்காத ஸ்டீபனின் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது என்றும் நம்முடைய வாழ்க்கை எப்படி ஒரு வரமாக நமக்கு இருக்கிறது என்றும்.
  
ஆனால் ஸ்டீபன் அது குறித்த எந்தக் கவலையுமின்றி இந்தப் பிரபஞ்சத்தினை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.  புத்தகங்கள் எழுதிக்கொண்டிருந்தார். நாடு நாடாக பயணம் செய்து கொண்டிருந்தார். 

சில வருடங்களில் இறந்துவிடுவீா்கள் என்று மருத்துவா்கள் கூறிய உண்மையை சிறிதளவுகூட மனதில் ஏற்றிக் கொள்ளாமல் தொடா்ந்து இயங்கிக் கொண்டே இருந்ததுதான் அவர் இத்தனை வருடங்கள் வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் என்று அவரது வாழ்வை ஆராய்ந்தவா்கள் கூறுகிறார்கள்.  ஆனால் நாமோ இல்லாத சுமையை இருப்பதாக மனதில் ஏற்றிக் கொண்டு அல்லல் பட்டு வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

கண்ணதாசன் அா்த்தமுள்ள இந்து மதம் (ஆறாவது பாகம் – நெஞ்சுக்கு நிம்மதி) என்ற புத்தகத்தில் எழுதியிருப்பார் – நம்பிக்கைதான் வாழ்க்கை.  இன்றைய பொழுது நன்றாக இருக்கும் என்று நம்பு. நன்றாகவே இருக்கும்.  தண்ணீரில் விழுந்து விட்டால் நீந்தத்  தெரியும் என்று நம்பு. நீந்தத் தெரிந்து விடும்.  கடன் வந்துவிட்டால் கட்ட முடியம் என்று நம்பு. கட்டிவிட முடியும்.

அப்படி நம்பிக்கை என்ற துடுப்பை மட்டுமே பற்றிக் கொண்டு தான் மட்டுமே கரை சேராமல் இந்த மானுடம் முழுவதற்கும் நம்பிக்கையை ஊட்டிய ஸ்டீபன் ஹாக்கிங் போன்றவர்களின் வாழ்க்கையை நாமும் அறிந்து கொண்டு நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியது நம் கடமை.

விஞ்ஞானியும் மெய்ஞானியும் இணையும் இடம் ஒன்று இருக்கிறது என்றால் அது இந்த அண்ட சராசரங்களை அறியும் ஆவல்தான்.  அந்த வகையில் ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கும் நம் நாட்டின் பெரும் சித்தா்களும் ஒரே நோ்க்கோட்டில்தான் நிற்கிறார்கள்.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் வார்த்தைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான சில வரிகள் –

”வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், உங்களால் ஏதோ ஒன்றை செய்து இந்த வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெறமுடியும்”.

”தலை நிமிர்ந்து வானில் உள்ள நட்சத்திரங்களைப் பாருங்கள்.  தலை குனிந்து உங்கள் பாதங்களை பார்த்துக் கொண்டிருக்காதீா்கள்.  உங்களைச் சுற்றி நீங்கள் காணும் காட்சிகளின் உண்மைத் தன்மையை அறிவதில் ஆா்வம் கொள்ளுங்கள். இந்தப் பிரபஞ்சம் இயங்குவதின் காரணத்தினை அறிவதில் முனைப்புடன் இருங்கள்.

Sunday, February 11, 2018

பயன் எழுத்துப் படைப்பாளி


சென்ற வாரத்தில் ஒரு நாள் வணிகமணி ஆசிரியா் திரு. வீர ஆறுமுகம் அவா்கள் அலைபேசியில் அழைத்து ”சார் 9-ம் தேதி சென்னையில் இருக்கீங்களா ?” என்று கேட்டார்.  ”சென்னையில்தான் இருக்கிறேன். என்ன சார் விஷயம் ?” என்றேன்.  ”தமிழ்நாடு இதழ்கள் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பில் வழங்கப்படும்  ”பயன் எழுத்துப் படைப்பாளி” என்ற விருதுக்கு உங்கள் பெயரை பரிந்துரை செய்துள்ளேன்” என்று சொன்னார். 
நான் வணிகமணி இதழில் நிறுவன சட்டம் (Companies Act) தொடா்பாக சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொடா் எழுதியுள்ளேன். அதைத் தவிர என் நண்பர் வழக்கறிஞா் திரு சுரேஷ்குமாருடன் இணைந்து ரியல் எஸ்டேட் சம்பந்தமாகவும், இப்போது GST சம்பந்தமாகவும் தொடா் கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

இதைத்தவிர கைலாய மலை பயணம் குறித்த என்னுடைய அனுபவத்தினை புத்தகமாகவும், தியானம் குறித்து ”மகிழ்ச்சியின மந்திரம்” என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளேன். 

நிற்க.  இப்படி சில புத்தகங்களையும், சில தொடா்களையும் எழுதிவிட்டதால் நான் என்னை ஒரு ஒரு படைப்பாளியாக இதுவரை நினைத்தது இல்லை.  ஏனென்றால் என்னை ஒரு முழுமை பெற்ற வாசகனாகவே இன்னும் கருதவில்லை.  நான் படிக்க வேண்டும் என்று வாங்கி இன்னும் படிக்காமல் இருக்கும் புத்கங்களை என்னுடைய வீட்டு அலமாரியில் பார்க்கும்போது படிப்பாளி ஆவதற்கே “miles to go before I sleep” என்று இருக்கும்போது ”படைப்பாளி” ஆவதற்கு இன்னும் எத்தனை மைல்கற்களை கடக்கவேண்டுமோ.

ஆனாலும் ”தமிழ்நாடு இதழ்கள் வெளியீட்டாளர் சங்கம் வழங்கிய ”பயன் எழுத்துப் படைப்பாளி” என்ற விருதினை என் படைப்புக்கான அங்கீகாரமாக இல்லாமல் இன்னும் நிறைய பயன் உள்ள படைப்புக்களை படைக்க வேண்டும் என்பதற்கான உத்வேகமாக இந்த விருதினை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டேன்.

கடந்த 9-02-2018 அன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணா் நுாலக அரங்கில் ”பயன் எழுத்து படைப்பாளி” என்ற விருதினை தமிழக அமைச்சா்கள் திரு. செங்கோட்டையன் மற்றும் திரு. கடம்பூா் ராஜு அவா்கள் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய புலவா் திரு இராமலிங்கத்தின் பேச்சு மிகவும் நகைச்சுவையாகவும் சிந்திக்க வைக்கும்படியும் இருந்தது.  அமைச்சா்கள் வருவதற்கு கொஞ்சம் (நிறைய) தாமதமானதால் அவரது பேச்சை நீட்டிக்க கேட்டுக்கொண்டபோது அதை அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் கையாண்டது ரசிக்கும்படி இருந்தது.

அவரது பேச்சின் ஒரு பருக்கை.

ஒரு மாணவன் ஒருவன் தன்னுடைய பாட்டி இறந்து விட்டார் என்று விடுப்புக் கடிதம் கொடுத்தானாம்.  ஆசிரியரும் சரி என்று விடுப்பு கொடுத்தார்.  அடுத்த மாதமும் அதே காரணத்தை சொல்லி விடுப்பு கேட்டானாம் அந்த மாணவன்.  சரி பாட்டிக்கு சகோதரி யாராவது இருக்கலாம் என்று மீண்டும் விடுப்பு கொடுத்தாராம்.  அதற்கு அடுத்த மாதமும் அதே காரணத்தைச் சொல்லி மீண்டும் விடுப்பு கேட்டானாம் மாணவன். இப்போது ஆசிரியருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது.  ”டேய் என் கோபத்தை கிளராதே. என்னைப் பற்றி உனக்குத் தெரியாது. உண்மையைச் சொல்” என்றாராம்.

மாணவன் பதட்டப்படாமல் சொன்னானாம் ”சார் உங்களுக்கும்தான் என்னுடைய தாத்தாவைப் பற்றி தெரியாது” என்று.

எழுத்து அல்லது பேச்சு என்பது ஒரு சில வாக்கியங்களில்கூட நம்முடைய பல சிந்தனைகளை கிளறிவிடக்கூடும். 

இதைக் கேட்டபோது கவிஞா் நா.முத்துக்குமார் எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. அந்தக் கவிதையில் வரும் தாத்தா போட்டோ எடுத்தால் ஆயுள் குறையும் என்ற நம்பிக்கை இருந்த காலத்தில் வாழ்ந்தவா்.  அதனால் அவருடைய புகைப்படம் ஒன்றுகூட இல்லாததால், அவருக்கு உடல்நலம் சரியில்லாதபோது எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படத்தை வைத்து பூஜை செய்து வந்தார்கள் அவருடைய குடும்பத்தினா். இந்தக் கவிதையின் கடைசி வரியை மிகவும் ரசித்தேன்.  நாம் வாழும் (அல்லது active-ஆக வாழும்) 60 அல்லது 70 வருடங்களுக்குள் நாம் ஆடும் ஆட்டத்தின் அதிகப் பிரசங்கித்தனத்தை ஒரு சில வார்த்தைகளில் நம் மனதில் தைத்துச் சென்று விட்டன இந்தக் கவிதை வரிகள்.  இதோ அந்தக் கவிதையின் சில வரிகள் உங்களுக்காக.

பாட்டியின் நினைவில் மட்டுமே
உயிர்வாழும் தாத்தா
நாங்கள் பிறப்பற்கு முன்பே
இறந்து போயிருந்தார்.

புகைப்படம் எடுத்தால்
ஆயுள் குறையுமென்று நம்பியதால்
அவரது உருவம்
பாட்டியின் கண்களைத்தாண்டி
எங்கள் கண்களுக்கு வரவேயில்லை.

வேறு வழியில்லாததால்
தாத்தா நோயுற்றபோது எடுத்த
நெஞ்சுப்பகுதி எக்ஸ்ரே படம்
செல்லரித்து மங்கிய நிலையில்
சட்டமிடப்பட்டு
தலைமுறைகளைத் தாண்டி
சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது.

தாத்தாவின் படம்
பரணுக்குப் போவதற்கு முன்பு
நடந்த சம்பவம் இது.

மரங்கள் கறுப்பு உமிழ்ந்த
இரவின் அகாலத்தில்
யாரோ கோபமுடன் கத்தும்
சத்தத்தைக் கேட்டு
எல்லோரும் விழித்துப்
பார்த்தோம்.

நாங்கள் இருப்பதை அறியாமல்
கூடத்தில் பாட்டி
தாத்தா படத்தைப் பார்த்து
சத்தம்
போட்டுக்கொண்டிருந்தாள்.
”இந்த எலும்புக்கா
இத்தனை ஆட்டம் ?

என்னைப் பொருத்தவரை பயன் எழுத்து என்பது இதுதான்.  ஒரு சில வரிகளும் வாழ்க்கை குறித்த நமது சிந்தனைப் போக்கை மாற்றலாம்.

”பயன் எழுத்து படைப்பாளி” விருதுக்கு என்னை பரிந்துரை செய்த வணிகமணி ஆசிரியா் திரு. வீர ஆறுமுகம் அவா்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

விருது வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் (Photo Courtesy-S.Gokul)

Saturday, January 27, 2018

கால்டாக்சி டிரைவா்நேற்று என்னுடைய காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் “U Turn” செய்தேன்.  அந்த இடத்தில் “U Turn” செய்யக் கூடாது என்று திரும்பியவுடன் நான்கைந்து போக்குவரத்துக் காவலா்கள் ”வா ராஜா வா” என்று கை காட்டியவுடன்தான் தெரிந்தது.  அருகில் சென்றதும் அவா்களிடம் சாரி சார் தெரியாமல் திரும்பிவிட்டேன் என்று சொன்னேன்.  அதற்குள் அவா்கள் என் காரின் முன்புறம் இருந்த அட்வகேட் ஸ்டிக்கரைப் பார்த்துவிட்டு ”சார் தப்பா நினைச்சுக்காம, வண்டியை ஓரமா நிறுத்தி முன்னாடி வண்டியிலே இருக்கிற இன்ஸ்பெக்டா் அய்யாகிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிடுங்க.  எல்லோரையும் பிடிச்சுட்டு இருக்கப்ப  உங்களை மட்டும் அப்படியே விட்டுட்டா நல்லா இருக்காது” என்றார்.  எனக்கு அவா் சொன்னது மிகவும் நியாயமாகப் பட்டது. 

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ”ஜீப்பில் உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்து மீண்டும் அவரிடம் ”சாரி சார் இந்த இடத்தில் “U Turn” இல்லை என்று தெரியாமல் திரும்பிவிட்டேன். Fine வேண்டுமானால் கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னேன்.  அவா் என்னைப் பார்த்து புன்முறுவல் செய்துவிட்டு ”பரவாயில்லை சார்” என்று சொல்லிவிட்டு ”சார் என்ன பண்றீங்க ?” என்று கேட்டார்.  ”அட்வகேட் சார், identity card காட்டவா” என்றேன்.  ”வேண்டாம் சார் போயிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டார்.

வீட்டுக்கு வந்து TV-யை  ஆன் செய்ததும், போக்குவரத்து காவலா்கள் அவதுாறாக பேசியதாலும் அத்துமீறி நடந்ததாலும் தீக்குளித்த கால் டாக்சி டிரைவா் மணிகண்டன் இறந்துவிட்டார் என்ற செய்தி ஓடிக்கொண்டிருந்தது.  மணிகண்டனும் என்னைப் போலவேதானே ஏதோ ஒரு போக்குவரத்து விதியை மீறி இருப்பார்.  அப்படியென்றால் எனக்கு கிடைத்த ஏதோ ஒரு சலுகை ஏன் மணிகண்டனுக்கு கிடைக்கவில்லை.  அட சலுகைகூட வேண்டாம்.  அபராதத்தோடு நிறுத்தியிருக்கலாமே.  ஏன் ஒருவரை தற்கொலை செய்யுமளவுக்கு அவமரியாதை செய்ய வேண்டும்.

நான் ஒரு அட்வகேட் என்று தெரிவதற்கு முன்பேதான் இன்ஸ்பெக்டா் என்னை அபராதம்கூட கட்டத்தேவையில்லை என்று போகச்சொன்னார்.  ஒருவேளை நானும் ஒரு கால் டாக்சி ஓட்டுனராக இருந்தால் நான் சாரி கேட்டதும்  என்னைப் பார்த்து சிரித்துவிட்டு பரவாயில்லை சார் என்று சொல்லியிருப்பாரா.

உண்மையில் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இல்லை.  சமூகத்தில் நாம் இருக்கும் நிலையை பொறுத்து நமக்கான மரியாதை கூடுகிறது அல்லது குறைகிறது.  இதுதான் யதார்த்தம்.

அதே சமயம் நாம் காவல்துறையை பொத்தாம்பொதுவாக குற்றம் சாட்டுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.  என்னுடைய நண்பன் சரவணன் இன்ஸ்பெக்டராக இருந்தவன். சென்ற வருடம் திடீரென உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டான்.  சென்னைக்கு மாறுதல் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவனை சந்தித்தபோது சென்னைக்கு வருவதையே அவன் விரும்பாமல் இருந்தான்.  ”அங்க வந்தா நாய் பொழப்புடா.  எப்ப எங்க பிரச்சனை வரும்னே தெரியாது. சின்ன விஷயம்கூட மீடியால வந்து பெரிசாயிடும்.  எப்பவும் டென்ஷன்தான் என்றான்.  அந்த டென்ஷன் தாங்காமல்தான் போய்விட்டான் போல.

நாம் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ சில மணிநேரங்கள்கூட ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை.  அந்த நேரத்தில் தேவையில்லாமல்கூட யாரையாவது எரிந்து விழுகிறோம்.  ஆனால் நாளெல்லாம் வெயில், மழை, traffic, pollution என்று காய்ந்து கொண்டிருப்பவா்கள், தங்கள் மீது செலுத்தப்படும் அதிகார வா்கத்தின் மீதான கோபங்களை எல்லாம் அதிகாரம் அற்றவா்கள் மீது மொத்தமாக செலுத்திவிடுகிறார்கள். 

சென்னை போன்ற பெரு நகரங்கிளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது.  சந்தர்ப்பம் கிடைத்தால் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு எல்லோருமே தயாராக இருக்கிறார்கள்.  அந்த அளவுக்கு அவசரமான உலகமாக இருக்கிறது.  இதில் மணிகண்டன் மாதிரியான இழப்புகளை தவிர்க்க, தவறு செய்த போக்குவரத்து காவலா்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மட்டும் தீா்வாகாது.  போக்குவரத்து காவலா்களின் பணிச்சுமையை குறைத்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க நீண்டகால செயல்திட்டங்களை உடனே ஆரம்பிக்க வேண்டும்.

நான் சொல்வதை கிண்டலாக நினைக்க வேண்டாம்.  முதல்வர் மற்றும் அமைச்சா்களின் வீடுகளை சிறுசேரி, கூவத்துார் போன்ற இடங்களுக்கு மாற்றினாலே இங்கு பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும். தேவைப்பட்டால் அவா்களால் தலைமைச் செயலகத்துக்கு ஒரு மணி நேரத்திற்குள் வந்துவிட முடியும்.


இதைப்போல எவ்வளவோ சிந்திக்கலாம்.  செயல்படலாம்.  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

Thursday, December 28, 2017

ஓடி ஓடி .......


சென்ற சனிக்கிழமை (23/12/2017) அன்று மாலை அண்ணாமலை பல்கலை கழக முன்னாள் மாணவா் சங்கத்தின் விழாவின் ஒரு பகுதியாக திரு. வெ. இறையன்பு IAS அவா்கள்  ”அறுபது வயதிற்குப் பின் வாழ்க்கை” (“Life after 60”) என்ற தலைப்பில் பேசினார்.  அவா் பேச்சின் மையக் கருத்தானது, பொதுவாக ஒரு மனிதன் 60 வயதிற்கு மேல் தனக்கு, தன் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இந்த தேசத்திற்கே பாரமாகிவிடுகிறார்.  சென்ற நுாற்றாண்டில் 40 அல்லது 50 வயதானாலேயே அவா்களை வயதானவா்கள் என்று சொல்லிவிடுவார்கள்.  60 வயதைக் கடந்து வாழ்ந்தவா்கள் சிலரே.  ஆனால் இப்போது 80 வயதைக் கடந்தும் ஆரோக்கியமாக இருக்கும் பலரை நாம் பார்க்கிறோம்.  அதிலும் அரசாங்கத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவா்கள் தாங்கள் சம்பளமாக வாங்கிய தொகையை விட கூடுதலாக ஓய்வூதியம் பெறுகிறார்கள்.  இது அரசாங்கத்திற்கு கூடுதல் நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது.  இதைத் தவிர ஒருவா் 60 வயதிற்கு மேல் தன்னுடைய வாழ்க்கையை முறையாக நிர்வகிக்க வேண்டியதின் அவசியத்தையும் இல்லையென்றால் அவருக்கு ஏற்படும் நிதி மற்றும் மன அழுத்தங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

திரு. இறையன்பு அவா்கள் கடைசியாக சொன்ன விஷயம் இதுதான்.  வயதாகிவிட்டது என்று சோர்ந்து விடாமல் யார் தங்களை புதுப்பித்து கொண்டே இருக்கிறார்களோ அவா்களுக்கு வயதாகலாம் ஆனால் வயோதிகம் வருத்தாது.  நம் மூளையில் சுரக்கும் சில செல்கள் (நியுரான்கள்) வயதாக வயதாக குறைந்து கொண்டே இருக்கும்.  அதனால்தான் வயதானவா்களுக்கு மறதி போன்ற நோய்கள் வருகின்றன.  ஆனால் வயதானாலும் சோர்ந்து விடாமல் படிப்பது, எழுதுவது, இசை, சமையல், அழகுக் கலை இப்படி தொடா்ந்து ஏதாவது ஒரு துறையில் இயங்கிக் கொண்டே இருப்பவா்களுக்கு மூளையில் சுரக்கும் நியுரான்கள் குறைவதே இல்லையாம்.  அதனால் நாம் நம்மை புதுப்பித்துக் கொண்டே இருப்போம் – வயோதிகத்தை வெல்வோம் என்றார்.

ஒரு நல்ல பேச்சை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைப்பதற்கு காரணமாக இருந்த திரு. இளநகை (சங்கத்தின் தலைவா்) அவா்களுக்கு என் நன்றிகள்.

இறையன்பு அவா்களின் பேச்சு எனக்கு இது தொடா்பான வேறு சில சிந்தனைகளையும் கிளறிவிட்டது.

சில மாதங்களுக்கு முன் என் குடும்பத்துடன் கோவை அருகில் உள்ள ஆனைக்கட்டி என்ற சுற்றுலா தலத்திற்கு சென்றிருந்தேன்.  நாங்கள் தங்கிய ரிசார்ட்டில் ஒரு வயதான தம்பதியை சந்தித்தோம்.  கணவா் ஒரு டாக்டா்.  வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு வகையிலோ உலகம் சுற்றியவா்கள். அவா்களுடனான உரையாடல் எனக்கும் சில தெளிவுகளைத் தந்தது.

அந்த டாக்டா் தன்னுடைய தொழிலின் மூலம் நிறைய சம்பாதித்தவா். பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்துள்ளார்.  தன்னுடைய சேமிப்பின் மூலம் நிறைய நிலபுலன்களையும் வாங்கி வைத்துள்ளார்.  இப்போதைய அவரின் பிரச்சினை என்னவென்றால் அவருடைய மகனும் மகளும் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள்.  மீண்டும் இந்தியாவிற்கு இப்போதைக்கு வரும் எண்ணம் இல்லை. இவா்களுக்கோ வயதாகிக் கொண்டிருக்கிறது.  தங்களுடைய சொத்துக்களைப் பராமரிப்பது மிகவும் கடினமாக உள்ளது.  விற்பதாக இருந்தால்கூட அது அவ்வளவு சுலபமாக இல்லை.  அப்படியே நீண்ட நாட்களுக்கு இருந்தாலும் அதை யாராவது அபகரிக்க முயற்சி செய்வார்களோ என்ற பயம் உள்ளது.  அவா்களது பிள்ளைகளும் அதுகுறித்து கவலைப்படுவதாக இல்லை. 

இதற்கு இடையில் சில காலம் அவரும் அவா் மனைவியும் IAS ஆபிசா்களாக வெளிநாட்டில் வேலை பார்த்ததாக வேடிக்கையாகச் சொன்னார். அது வேறு ஒன்றும் இல்லை.  வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட பிள்ளைகள் அங்கேயே குழந்தை பெற்றுக் கொள்ளும்போது அவா்களுக்கு மிகவும் நம்பிக்கையான, ஊதியம் இல்லாத ”ஆயா” வேலை செய்பவா்கள் அவா்களது பெற்றோர்கள்தாம்.  இப்படி வெளிநாடுகளுக்குச் செல்லும் பெற்றவா்கள்தான் தங்களை ”பெருமையாக” (??) IAS (Indian Aaya Service) ஆபிசா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.

கடைசியாக அவா் சொன்ன விஷயம் இதுதான்.  நாம் நன்றாக இருக்கும்போது பிள்ளைகள் நம் கூடவே இருப்பார்கள் என்று நினைத்து அவா்களுக்குத் தேவைப்படும் என்று நிறைய அசையா சொத்துக்களை சோ்த்து விடுகிறோம்.  ஆனால் காலம் மாறிவிட்டது.  அந்தக் காலத்தின் கூட்டுக் குடும்ப கலாசாரம் மறைந்து விட்டது.  பிள்ளைகள் அவரவா் வாழ்க்கை என்று பறந்து விடுகின்றனா்.  நாம் Assets என்று நினைப்பது வயதாகும் போது உண்மையிலேயே Liability ஆகி விடுகிறது.  இன்னும் சில வருடங்கள் கழித்து எங்கள் உடல்நிலை வெளிநாடு சென்று எங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவதற்கும் இடம் கொடுக்காது.  எங்களையே பார்த்துக்கொள்வது கடினமாக இருக்கும்போது இந்தச் சொத்துக்களை எப்படி பாதுகாப்பது ?.

இப்படி பல உதாரணங்களை நாம் தினமும் பார்க்கலாம்.

உண்மைதான்.  நாம் நம் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டியது நல்ல வருங்காலத்தைதான்.  அதை ஒழுங்காக கொடுத்துவிட்டால் நாம் சம்பாதித்தை விட பல மடங்கு அவா்கள் சம்பாதிப்பார்கள்.

நாம் நம் குடும்பத்தையும், இளமையையும் மறந்து ஓடிக்கொண்டே இருந்தால் ஓட்டம் நின்று திரும்பிப் பார்க்கும்போது நாம் மட்டும் தனியாகத்தான் நின்று கொண்டிருப்போம்.

அதற்காக நாம் சோம்பேறியாகவும் ஊதாரியாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை.  60 வயதுக்கு முன் மட்டுமல்ல அதற்குப் பிறகும் நாம் நம் சொந்தக் காலில் நிற்கக்கூடிய பொருளாதாரச் சுதந்திரம் நமக்கு இருக்க வேண்டும்.  அதற்காகக் கண்டிப்பாக ஓடத்தான் வேண்டும்.  ஆனால் அந்த ஓட்டம் யாரையும் முந்தியடித்துச் சென்று முதலிடம் பெற வேண்டும் என்ற ஓட்டமாக இல்லாமல், நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் வலு சேர்க்கும் ஆரோக்கிய ஓட்டமாக இருந்தால் போதும்.  ஓடி ஓடி களைக்க வேண்டாம். நான் கடவுளை வேண்டுவதும் அந்த ஓட்டம்தான்.

திரு. இறையன்பு அவா்கள் சொன்னது போல் நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்கலாம் – இருக்கும்வரை….

Thursday, December 14, 2017

கொடுப்பது எல்லாம் கொடையல்ல ....


எனக்கு கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைகளை மிகவும் பிடிக்கும்.  காரணம் நாம் மிகவும் சுலபமாகப் புாிந்துகொள்ளக்கூடிய வகையில் சிக்கல் இல்லாத வாா்த்தைப் பிரயோகம்தான்.  சிலருடைய கவிதைகளைப் படித்தால் அது ஒரு மாடா்ன் ஆா்ட் போல இருக்கும்.  நாமாக ஒன்றைப் புரிந்துகொண்டு ஆகா அபாரம் என்று சொல்ல வேண்டும்.  இல்லையென்றால் நம்மை கவிதை ரசனை இல்லாதவா் என்று சொல்லிவிடுவாா்கள். 

கீழே உள்ள இந்தக் கவி்தையைப் படித்துப் பாருங்கள்.  உங்களுக்கே புரியும்.  நாம் சக மனிதா்களுக்கு செய்யும் உதவியைப் பற்றிய கவிதை இது.  ஒரு tube light வாங்கிக் கொடுத்துவிட்டு அதன் ஒளியை மறைத்து, உபயம் இன்னாா் என்று எழுதி வைக்கும் இந்தக் காலத்தில், கொடுப்பது எல்லாம் கொடையல்ல என்று நம் பொட்டில் அறைந்தது போல சொல்லி இருக்கிறது இந்தக் கவிதை.  அதேபோல் கொடுப்பது என்றால் பணம் மட்டுமில்லை என்பதை அழகான கவிதை வரிகளில் நமக்கு சொல்லியிருக்கிறாா் கவிக்கோ.  

கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது
நீ ஒரு கருவியே
இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை
இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே
இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை
தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்
நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே
உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்
ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை
கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை
நியாயப்படுத்தும்.

Friday, October 6, 2017

சுபம் உண்டாக. சுபம்


நேற்று மதுரையிலிருந்து நண்பா் செந்தில் அழைத்திருந்தார்.  என்ன சார் Blog எழுதுவதையே விட்டுவிட்டீா்களா ? கடைசியாக மே மாதம் 2-ம் தேதி எழுதியிருக்கிறீா்கள்.  அதற்குப் பிறகு ஒன்றையும் காணோம் என்று மாதம் தேதியுடன் குறிப்பிட்டிருந்தார்.  பிறகுதான் நானே கவனித்தேன்.  நாட்கள் வாரங்களாகவும் மாதங்களாகவும் பறந்து கொண்டிருப்பதை.

ஏன் எழுதவில்லை என்று என்ன காரணம் சொன்னாலும் அது வெறும் lame excuse தான்.  மாதத்தில் ஒரு சில மணி நேரங்களை இதற்காக செலவிடுவது என்பது ஒரு பெரிய விஷயமில்லை.  நம் எழுத்தை பின் தொடா்ந்து படிக்கும் செந்தில் போன்ற நண்பர்களுக்காகவாவது தொடா்ச்சியாக நிறைய இடைவெளி இல்லாமல் எழுத வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.  ஏற்கனவே ஒரு தடவை இப்படி முடிவெடுத்திருக்கிறேன்.  அதனால் என்ன – முடிவு என்பதும் முடிவில்லாமல் இருப்பதுதானே ?

எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.  கமலின் அரசியல் பிரவேசம், கழக ஆட்சி கவிழுமா ? என்பதில் இருந்து நம்மை சுற்றி நடக்கும் ஆயிரம் விஷயங்களை எழுதலாம்.  ஆனால் அதில் what is our intake? என்பதுதான் மிக முக்கியம்.

நேற்று செந்தில் அழைத்து முடித்தவுடன், வள்ளலாரின் 195 வது அவதார தினம் என்ற செய்தி கண்ணில் பட்டது.  அதனால் வள்ளலாரின் சில சிந்தனைகளையே இன்று பதிவு செய்யலாம் என்று தோன்றியது.

”வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் பிறந்த ஊரில், பயிர் வாடியவுடன் அதை பிளாட் போட்டு அதற்கு வள்ளலார் நகர் என்றே பெயர் வைக்கும் மனிதர்கள் இருக்கும் இன்றைய சமூகத்தின்  நிலையைப் பற்றி எழுத்தாளரும் பேச்சாளருமான பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் கருத்தை என்னுடைய கட்டுரை ஒன்றி்ல் பதிவு செய்திருந்தேன்.  டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் மூலமாக அதை அறிந்த பாரதி கிருஷ்ணகுமார் அவா்கள் உடனே என்னை அலைபேசியில் அழைத்துப் பாராட்டினார். 

அவர் பாராட்டியது இதுதான்.  நீங்கள் நான் சொன்ன கருத்தை சொன்னது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால், அதை நான்தான் சொன்னேன் என்று என்னுடைய பெயரையும் சோ்த்து எழுதியது அதைவிட மகிழ்ச்சி.  காரணம் கருத்துத் திருட்டு (knowledge theft) அதிகம் இருக்கும் காலம் இது.  பல நேரங்களில் மற்றவர் கருத்தையே (அவா்கள் இருக்கும்போதே) தன் கருத்தாக பலரிடம் சொல்லி பாராட்டு பெறும் மனிதர்கள் அதிகம் வாழும் உலகம் இது.  அதனால் என் பெயரை மறக்காமல் சொன்ன உங்கள் நோ்மை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.  அதனால்தான் உடனடியாக உங்களை அழைத்துப் பாராட்டினேன் என்று சொன்னார்.  இதைச் சொல்லுவதன் நோக்கம் என்னுடைய நோ்மையை அவர் பாராட்டினார் என்பதால் (மட்டும்) அல்ல, அந்தப் பாராட்டில் அவருடைய பெருந்தன்மைதான் அதிகம் வெளிப்பட்டது.  வஞ்சம் இல்லாமல் பாராட்டும் நெஞ்சம் இருந்துவிட்டால் நாம் வாழ்க்கையில் பக்குவப்பட்டுவிட்டோம் என்று அா்த்தம்.

இந்த சம்பவத்தினை நினைவு கூறுவதற்கு மற்றொரு காரணம் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் அவருடைய நண்பா்களுக்கு எழுதிய பல கடிதங்கள் இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

”சுபம் உண்டாக. சுபம்
அன்பு அறிவு ஒழுக்கம் கருணை முதலிய நன்மைகளாற் சிறந்து சிவத்தைப் பொருளென் றுணர்ந்து சன்மார்க்கத்தில் விளங்குகின்ற தங்கட்கு வந்தனம் வந்தனம்.

தங்கள் சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விருப்பமுடையவனாக விருக்கிறேன்.”

மேற்கூறிய வார்த்தைகளில் வள்ளலாரின் நண்பர்களுடைய புகழை விட அதை அகமகிழ்ந்து பாராட்டிப் பேசும் வள்ளலாரின் பெருங்கருணைதான் நமக்குத் தெரிகிறது.

மேலும் பல கடிதங்களில் அவா் தன்னுடைய நண்பர்களின் ஆரோக்கியத்தில் மிகவும் அக்கரையுடன் இருந்தது தெரிய வருகிறது. அவருடைய நண்பருக்கு அவர் எழுதிய கடிதத்தில் அவா் இப்படிச் சொல்கிறார் – ”தாங்கள் தங்கள் தேகத்தை பொன்போல சர்வ சாக்கிரதையோடு பாராட்டிக் கொண்டு வரவேண்டும்.

இதில் நமக்கான செய்தியும் இருக்கிறது.  நாமும் பொதுவாக நம்முடைய  ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வண்டி ஓடிக்கொண்டிருக்கும் வரை ஒன்றும் தெரிவதில்லை.  ஒரு சில நாட்கள் படுத்துவிட்டால்தான் தெரிகிறது ”உடலினை உறுதி செய்” என்று பாரதி சொன்னதும், ”உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்று திருமூலா் சொன்னதும் எவ்வளவு சத்தியமான வாா்த்தைகள் என்று.  வள்ளலாரின் ”பொன் போல நமது உடலினை பார்த்துக்கொள்ள வேண்டும்” என்ற வார்த்தைப் பிரயோகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  இத்தகைய வார்த்தைகளுக்காகவது திருஅருட்பாவை முழுமையாக படிக்க வேண்டும்.

1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் நாள் பிறந்து 1874-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் நாள் மறைந்தவர் வள்ளலார்.  உண்மையிலேய ”மறைந்த” என்ற சொல் இவருக்குத்தான் பொருந்தும்.  இவர் மறைந்த நாள் தைப்பூசத் திருநாளாகும். அன்று அவர் தன்னுடைய அறைக்குள் சென்று உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு தன்னுடைய சீடர்களிடம் அறையைத் திறக்க வேண்டாம்.  திறந்தாலும் தன்னுடைய சரீர உடம்பில் இருக்கமாட்டேன். இறைவனுடன் கலந்து விடுவேன் என்று சொல்லிவிட்டார்.

கடைசியாக அன்றைய ஆங்கில அரசாங்கம் 1874-ம் ஆண்டு மே மாதம் அந்த அறையின் கதவைத் திறக்க ஆணையிட்டார்கள்.  திறந்து உள்ளே சென்றால் அங்கே வள்ளலாரின் உடல் இருந்ததற்கான எந்தத் தடயமும் இல்லை.

அதுதான் வடலுாரில் தற்போதுள்ள ”சித்தி வளாகம்” என்றழைக்கப்படும் ஆலயமாகும்.

வள்ளலாரைப் போன்ற பல மகான்கள் வாழும்போது மற்றுமொரு மனிதராய் தம்மைக் காட்டிக்கொண்டாலும் அவா்களின் ஆன்ம ஒளி அவா்களின் மறைவிற்குப் பின்னும் தம்முடைய இருப்பை நமக்கு உணா்த்திக் கொண்டே இருக்கும்.

சுமார் 51 ஆண்டுகளே வாழ்ந்து உடலால் மறைந்தாலும் இன்னும் அருட்பெரும் சோதியாய் தனிப் பெருங் கருணையாய் வாழ்ந்து கொண்டிருக்கும் வள்ளலாரின் நினைவைத் துாண்டிய செந்திலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


Tuesday, May 2, 2017

மானுடம் வென்றது


The touch of grace என்று சொல்வார்கள்.  எந்த ஒரு விஷயமும் சிறப்பாக அமைய நமது முயற்சி மட்டும் போதாது.  அதற்கும் மேல் ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அது எப்போதும் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.  ஆனால் எழுத்தாளர் திரு. பிரபஞ்சனுக்கு சென்ற சனிக்கிழமை அது அழகாக அமைந்தது.

சென்ற பதிவில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவா்களுக்கான விழாவைப் பற்றி எழுதியிருந்தேன்.  அதில் அவருக்கு அளிக்கப்படவிருந்த ரூபாய் பத்து இலட்சம் நிதி உதவிபற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.  விழா நடைபெற்ற தினமான ஏப்ரல் 29-ம் தேதி சனிக்கிழமைக்கு முன்னதாகவே பத்து இலட்சம் நிதி சேர்ந்த தகவலை திரு. வேடியப்பன் என்னிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பத்து இலட்சம் என்பது இந்த மகத்தான எழுத்தாளனுக்கு பெரிய தொகை அல்ல.  ஏன் தமிழ் வாசகர்களுக்குக் கூடத்தான் என்று சென்ற பதிவில் எழுதியிருந்தேன்.  தமிழ் வாசகர்கள் அதை மெய்ப்பித்துவிட்டார்கள்.

பொதுவாக தமிழ் எழுத்தாளர்களை தமிழ்நாட்டைவிட வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள்தான் அதிகம் பெருமைப்படுத்துகிறார்கள் என்று சொல்வார்கள்.  அது ஓரளவுக்கு உண்மையும்கூட.  நம் ஊரில் இருக்கும்போதைவிட வெளிநாடுகளில் வசிக்கும்போதுதான் நமது தாய்மொழி மீதான பற்று அதிகரிக்கிறது.

ஆனால் முதல்முறையாக ஒரு எழுத்தாளருக்கு அரசு சார்பில்லாத தனி நபா்களின் முயற்சியால் நடத்தப்பட்ட ஒரு விழாவில் புதுவை முதல்வர் திரு நாராயணசாமி, கனிமொழி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், நடிகர் திரு. சிவகுமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள், பிரபல எழுத்தாளர்கள், பிரபஞ்சனை கொண்டாடும் வாசகர்கள் என்று பலரும் கலந்து கொண்ட விழாவில், ஒரு நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பாக செய்த முடித்த எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர் திரு. பவா செல்லத்துரை, பதிப்பாளர் திரு. வேடியப்பன் அவர்களுக்கு எவ்வளவு வாழ்த்துக்கள் சொன்னாலும் தகும்.

விழாவில் பேசிய அனைவரும் பிரபஞ்சன் அவர்களின் எழுத்தில் இழையோடும் அன்பையும் வாழ்க்கை குறித்த நம்பிக்கையையும்தான் அதிகம் சிலாகித்துப் பேசினார்கள். 

விழாவில் ஏற்புரை அளித்த பிரபஞ்சன் ”என் வாழ்க்கையில் அன்பையும் நியாய உணர்வையும் அடிநாதமாக கொண்டு வாழ்ந்து வருகிறேன்.  அதனால் வாழ்க்கையில் ஏற்பட்ட வறுமை என்னை வருத்தவில்லை. என்ன - இருவேளை சோற்றுக்கு உத்திரவாதம் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகம் எழுதியிருப்பேன்” என்று சொன்னபோது மிகவும் கஷ்டமாக இருந்தது.  தன்னுடைய வறுமையை வெளிக்காட்டாத அவரது கம்பீரமும், தன்னுடைய சொந்த வாழ்க்கையின் அவலங்கள் குறித்த சுய பச்சாதாபம் எதுவும் இன்றி வாழ்வு குறித்த நம்பிக்கையையும், அன்பையும் வெளிப்படுத்தும் அவரது எழுத்துக்கள் இன்னும் பல ஆண்டுகள் தமிழ் உலகில் நிலைத்து இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த விழாவின் வெற்றி பிரபஞ்சனுக்கான வெற்றி மட்டுமல்ல.  மொத்த தமிழ் சமூகத்திற்கான வெற்றியாகும்.

விழா ஏற்பாட்டாளா்களுக்கு மீண்டும் ஒருமுறை தமிழ் வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

பிரபஞ்சன் அவா்களின் சில எழுத்துச் சிதறல்கள்

”மனசை போஷி. ஆனால் கடிவாளத்தை உன் கையில் வைத்துக் கொள். அதுபோதும். நிம்மதி பெறு. நீ உத்தமனடா குழந்தை. நீ தொட்டதெல்லாம் துலங்கும்.”

”குற்றம் எது. சரி எது ?. எல்லாம் பிரமைதானேடா குழந்தை.  மனசை அடிக்கடித் துடைத்துச் சுத்தம் செய்துகொள். அது போதும்.”

”தரிசு மண்ணில் விதைச்சவனும் தாசிக்கு கொடுத்தவனும் எந்தக் காலத்திலும் சுகம் பெறப் போவதில்லை.  தமிழ் மொழியில்தான் எத்தனைப் பழமொழிகள்.”

”இந்நேரம் நீ கல்யாணம் பண்ணிட்டு இருந்தா, நாலு புள்ளைகளைப் பெத்துக்கிட்டு இருப்பே.  என்னத்துக்கு இந்த மாதிரி ஊா் சுமையைத் தோள்லே போட்டுக்கிட்டு திரியறே சாமி? எதுக்கு மனுஷர் குடும்பத்தை துறக்கணும் ? பொண்டாட்டி புள்ளை சுகத்தை இழக்கணும் ? எனக்குத் தெரியும் – சாமியார்னு ஒரு மனுஷன் என்னத்துக்குப் புறப்படணும்? எல்லோரையும் அன்பு பண்ணனும்.  பொண்டாட்டி புள்ளைன்னு ஆயிட்டா, எல்லாத்தையும் சமமா பார்க்க முடியாதே.  அதான் வீட்டைவிட்டு புறப்பட்டுட்டியாக்கும்.  அதுவும் சரிதான்”

”மற்றவா்களுக்கு காட்டும் முகம் அழகாக புத்துணா்ச்சியோடு இருக்கணும்.  நம் கஷ்டம் நம்ம கிட்டயே இருக்கட்டும்.  அதை எதுக்கு மற்றவங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டணும் ?”

”பிறருக்குக் காட்டும் முகம், அது அசல் முகமாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.  அதே சமயம் அது பொய்யாகவும் இருந்துவிடக்கூடாது. தன் அசல் முகத்தில் இருக்கும் சந்தோஷமான பகுதிகளை மட்டும் பிறருக்கு அன்பளிப்பாக, ஒரு “பொக்கே“வாக அளிப்பது.”


இன்னும் நிறையச் சிதறல்கள் இருக்கிறது. அதற்கான நேரமும் இன்னும் இருக்கிறது.