Monday, December 30, 2019

முதல் மொழி



"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே" - திருமூலர் 

தன்னை நன்றாகத்  தமிழ் செய்வதற்க்கு இறைவன் தன்னை வணங்கிய அடியவர்களுக்கு அருள் செய்திருக்கலாம்.  ஆனால் தமிழை நன்றாகச் செய்வதற்க்கு இறைவன் தன்னை நம்பாதவர்களுக்கும் அருள் செய்து வருகிறான்.  அதனால்தான் காலம்தோறும் ஆத்திக, நாத்திக, சாதி மத  வித்தியாசம் இல்லாமல் தமிழ் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போது தமிழ் என்னும் தேரின் வடம் பிடிக்க இன்னொரு கை சேர்த்திருக்கிறது.  

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் (Alumni) திரு. சிவ இளநகை அவர்களின் முன்முயற்சியில் "முதல் மொழி" என்ற தமிழ் வளர்ச்சிக்கான  அமைப்பை  உருவாக்கி இருக்கிறார்கள்.  முதல் மொழியின் தொடக்க விழா 28/12/2019 சனிக் கிழமை அன்று  அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் திரு வே. முருகேசன் தொடங்கி வைக்க, சிறப்பு விருந்தினராக IAS அதிகாரி திரு த. உதயசந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்.

திரு. முருகேசன் அவர்கள் தாய் மொழியில் நம் குழந்தைகளின் அடிப்படை கல்வி இருக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறித்திப் பேசினார்கள்.  

இதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.  தாய் மொழியில் ஆரம்பக் கல்வி கற்கும் குழந்தைகளின் சிந்திக்கும் திறன் கண்டிப்பாக அதிக அளவில் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.  இன்று 40 வயது முதல் 60 வயது வரை உள்ள தமிழர்களில் பெரும்பாலோனோர் பத்தாவது அல்லது பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களாகத்தான் இருப்பார்கள். திரு அப்துல் கலாம் தொடங்கி  ISRO திரு மயில்சாமி அண்ணாதுரை. திரு சிவன் உள்ளிட்டவர்களாக இருக்கட்டும் அல்லது மிகப் பெரிய மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்ட வல்லுநர்கள் அல்லது சுய தொழில் செய்து பெரிய அளவில் சாதித்தவர்கள் என்று யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் ஆரம்பக் கல்வி தங்கள் தாய் மொழியில்தான் இருந்திருக்கும்.

நம் குழந்தைகள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும். ஆனால் ஆரம்பம் தமிழாக இருக்கட்டும்.

சிறப்புரை ஆற்றிய திரு உதயசந்திரன் அவர்களது பேச்சும் சிறப்பாக அமைந்திருந்தது.  

தமிழக அரசின் உயர்பள்ளிக் கல்வி செயலராக இருந்த போது கல்வித் துறையில் இவர் முயற்சியால் கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம்.  கல்வித் துறைக்கு போதாத காலம் இவரை அங்கிருந்து மாற்றி விட்டார்கள்.  கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல இவர் வந்து சேர்ந்த இடம் கீழடி.  இவர் வராமல் இருந்திருந்தால் ஒருவேளை கீழடியை கீழேயே போட்டு அமுக்கி இருப்பார்கள்.  நல்ல வேளை.  இப்போது தமிழர்களின் தொன்மைக்கு ஆதாரம், சேதாரம் இல்லாமல் கிடைத்திருக்கிறது.

இவரது பேச்சில் கிடைத்த முக்கிய தகவல், இந்தியாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் 52% தமிழில்தான் இருக்கிறது.  அவற்றையெல்லாம் தற்காலத் தமிழில் மொழிபெயர்க்கவே இன்னும் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் ஆகுமாம்.  இது தவிர இந்த வேலையைச்  செய்வதற்கு தகுதியான ஆட்களும் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.  இதனால் இதனை தொழில்நுட்ப உதவியுடன் மொழி பெயர்க்க முயற்சி செய்து வருகிறார்கள்.

திரு உதயசந்திரன் சொன்ன இன்னொரு விஷயம் - பிற மொழிச் சொற்களை தமிழில் எளிய நடையில் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும்.  அப்போதுதான் அது மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.  உதாரணமாக bi-cycle என்பதை ஈருருளி என்று மொழி பெயர்த்திருந்தார்கள்.   ஆனால் யாரோ ஒரு சாமானியன் பயன்படுத்திய மிதிவண்டி மக்களிடம் சென்று சேர்ந்து விட்டது.

எனக்கும் இதில் முழு  உடன்பாடுதான்.  கார் என்ற வார்த்தையை கார் என்றே பயன்படுத்தலாம்.  மகிழ்வுந்து என்பது திணிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாக இருக்கிறது.  திணிப்பு எந்த வகையில் இருந்தாலும் நம் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  அதுவும் தவிர மகிழ்வுந்து மரத்தில் மோதி நான்கு பேர் மரணம் என்று படிக்கும்போது அந்த வார்த்தை பொருத்தமாகவே இல்லை.

மகாகவி பாரதியே Member என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் பதம் கிடைக்காமல் உறுப்பாளி என்று மொழி பெயர்த்து பின்னால் சரியான பதம் கிடைத்தால் மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தாராம்.  இப்போது நாம் உறுப்பினர் என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறோம்.  ஆங்கிலம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் அது பிரெஞ்சு இத்தாலி லத்தின் போன்ற பிற மொழிச் சொற்களை தாராளமாக உள்வாங்கிக் கொண்டதுதான்.  In fact ஆங்கிலத்தில் நிறைய தமிழ்ச் சொற்களும் இருக்கின்றன.

நாம்தான் அழகான அம்மா என்ற வார்த்தைக்குகூட பதப்படுத்திய பிணங்களின் பெயரான "மம்மி" என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.   தேவைப்படும் நேரங்களில் நம் குழந்தைகள் நன்றாக ஆங்கிலம் பேசட்டும் - வெறும் மம்மி டாடியில் ஆங்கிலம் இல்லை. 

தமிழக அரசு நிர்வாகத் துறையிலும் மற்றும் வேறு பல துறைகளிலும் மற்ற மாநிலங்களைவிட முன்னணியில் இருப்பதற்கு இத்தகைய அரசு அதிகாரிகளும் முக்கிய காரணம் என்பது மறுக்கவோ அல்லது மறைக்கவோ இயலாத உண்மை.   ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் இன்னும் தெளிவானவர்களாக தொலைநோக்கு பார்வையுடன் இருந்து இத்தகைய அதிகாரிகளை இன்னும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால்  தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும்.  நம்முடைய இப்போதைய சாதனைகள் எல்லாம் யானை படுத்தால் குதிரை மட்டம் என்ற அளவில்தான் உள்ளது.

முதல் மொழியின் தொடக்க விழா சில சிந்தனைக் கீற்றுகளை எல்லோர் மனதிலும் விதைத்திருக்கிறது.  

தமிழ் என்னும் தேர் நாம் இல்லாமலும் நகர்ந்து கொண்டேதான் இருக்கும்.  நாமும் வடம் பிடித்தோம் என்பதில் நமக்குத்தான் பெருமை. 

தன்னை நன்றாகத்  தமிழ் செய்வதற்க்கும் தமிழை நன்றாகச் செய்வதற்கும்  இறைவன் எப்போதும் அருளிக் கொண்டே இருப்பான். 

முதல் மொழி அமைப்பு சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.


Wednesday, December 18, 2019

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்


"நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவை நேரே இன்றெனக்குத் தருவாய்
எந்தன் முன்னைத் தீவினைப் பயன்கள்
இன்னும் மூளாது அழிந்திடல் வேண்டும்
என்னைப் புத்துயிராக்கி
எனக்கேதும் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்
செய்வாய்
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்
செய்வாய்".

நான் மகாகவி பாரதியிடம் எப்போதும் வியக்கும் விஷயமே அவர் வார்த்தைகளில் உள்ள sharpness தான்.  இந்தக் கவிதையில் அவர் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளுக்கு அதே பொருள் கொண்ட வேறு வார்த்தைகளைப் போட்டுப் பாருங்கள் - கவிதையின் வீரியம் குறைந்துவிடும்.

எந்த மொழியாக இருந்தாலும் மந்திரம் என்று நாம் சொல்வது என்ன ? வார்த்தைகள்தான். ஆனால் அந்த வார்த்தைகள் யாரிடம் இருந்து வருகின்றன என்பதைப் பொறுத்து அவை சாதாரண வார்த்தைகளாகவோ அல்லது வீரியம் மிக்க மந்திர வார்த்தைகளாகவோ மாறி விடுகின்றன.  ("மகிழ்ச்சியின் மந்திரம்" என்ற தலைப்பில் நான் ஆழ்நிலைத் தியானம் குறித்து எழுதிய புத்தகத்தில் இது குறித்து சற்று விளக்கமாக எழுதி இருக்கிறேன்). இப்போது இந்தக் கவிதைக்கு வருவோம்.

மகாகவி பராசக்தியிடம் சில வரங்களை கேட்கிறார்.  ஆனால் அதை அவருக்காக கேட்கவில்லை நமக்காக கேட்கிறார்.  அவருக்குத் தெரியும். தன்னைவிட தன எழுத்துக்கள் அதிக காலம் வாழும் என்று.  "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பது திருமூலர் வாக்கு.  ஆனால் தான் பெறாத இன்பத்தையும் இந்த உலகம் பெற வேண்டும் என்பது பாரதியின் நோக்கம். வாழ்க்கை முழுவதும் வறுமையை அனுபவித்தாலும் அவர் தன்னுடைய மனதிற்குள் வறுமையை விடவில்லை என்பது அவருடைய ஒவ்வொரு வரியிலும் தெரியும்.

மீண்டும் தலைப்புக்கு வருவோம்.  மந்திரம் என்பது ஒரு சக்தி மிக்க வார்த்தை. அந்த வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லும்போது அந்த வார்த்தைகள் நம் வாழ்க்கையையே மாற்றக்கூடிய வல்லமை பொருந்தியதாக இருக்கும். அது எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம்.  "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்" என்று அவ்வையார் சொல்வது போல வார்த்தைகள் நீண்டு அலங்காரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த வார்த்தைகள் அணுவைத் துளைத்து அதற்குள் ஏழு கடலையும் அடக்கக் கூடிய அளவிற்கு வல்லமை பெற்றதாக இருக்க வேண்டும். அதைத்தான் பாரதியின் சில வரிகளும் செய்கின்றன.

இப்போது பாரதியின் இந்தக் கவிதையைப்  பார்க்கலாம்.


நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவை நேரே இன்றெனக்குத் தருவாய்

பராசக்தியிடம் பாரதி சில வரங்களைக் கேட்கிறார். அதை தன்னிடம் நேரிடையாக இன்றே அளிக்க வேண்டும் என்று சொல்கிறார்.   தான் கேட்கும் வரங்கள் உடனே கிடைக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அதைத் தருவதற்கு "இடைத் தரகர்கள்" யாரும் தேவை இல்லை. இறைவனுக்கும் தனக்கும் இடையில் மூன்றாவது மனிதரின் தலையீட்டை அவர் விரும்பவில்லை.   தகுதியற்ற மனிதர்களை கடவளாக நினைத்து தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் நம்மில் பலரும் பாரதியின் இந்த வரிகளைப் படித்தாவது திருந்தினால் நல்லது.


எந்தன் முன்னைத் தீவினைப் பயன்கள்
இன்னும் மூளாது அழிந்திடல் வேண்டும்


தான் செய்த பாவத்தின் விளைவுகள் தொடராது முற்றிலுமாக அழிந்து விட வேண்டும் என்று வேண்டுகிறார்.  இதில் "மூளாது அழிந்திடல்" என்ற வார்த்தைகள் மிகவும் முக்கியமானது.  தீ பற்றிய இடத்தில முழுவதுமாக அணைக்கவில்லை என்றால் மீண்டும் அந்தத் தீ மூண்டு விடும் அபாயம் உள்ளது. அதனால்தான் ஒரு சிறு பொறி கூட மிச்சம் இல்லாமல் அழிந்துவிட வேண்டும் என்று வேண்டுகிறார்.

என்னைப் புத்துயிராக்கி
எனக்கேதும் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்
செய்வாய்


"ஒரே நதியில் இரண்டு முறை குளிக்க முடியாது" என்ற ஜென் பழமொழி ஒன்று உண்டு.   அதாவது நதி ஓடிக்கொண்டே இருப்பதால் நாம் ஒரு முறை தொட்ட நீரை மறுபடியும் தொட முடியாது.  நம் வாழ்க்கையும் அப்படிதான்.  ஒவ்வொரு கணமும் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது.  நம்முடைய பழைய கவலைகளையும் தோல்விகளையும் துன்பங்களையும் குப்பைகளாக மனதில் தேக்கி வைத்துக் கொண்டிருக்காமல்   தன்னை புதிய உயிராக்கி தன்னுடைய மதியை மிகவும் தெளிவு செய்து தன்னுடைய கவலைகளை எல்லாம் நீக்கி என்றும் மகிழ்ச்சியாக இருக்க. தனக்காக இல்லாமல் நமக்காக இறைவனிடம் பாரதி வேண்டுகிறார்.

இதுதான் மகிழ்ச்சியின் மந்திரம்.    பாரதி சொன்ன இந்த மந்திரத்தை மீண்டும் மீண்டும் சொன்னாலே நமக்குள் மகிழ்ச்சி தோன்றுவதை உணர முடியும்.


Sunday, August 18, 2019

அப்பா – சில நினைவுகள் ……..




”ஆகாறு அளவிட்டதாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை”

பொருள் – வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை.  தேவையற்ற செலவுகளை குறைத்தாலே நிறைவாக வாழலாம்.

இந்தத் திருக்குறளை நினைக்கும் போதெல்லாம் என் அப்பாவின் நினைவு வரும் அல்லது அப்பாவை நினைக்கும்போதெல்லாம் இந்தத் திருக்குறளும் நினைவுக்கு வரும்.

என் தந்தை சில நுாறு ரூபாய் வருமானத்தில் தன்னுடைய பணியைத் தொடங்கி சில ஆயிரம் ரூபாய் வருமானத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.  இந்த சில ஆயிரம் மாத வருமானத்தில் தன்னுடைய ஆண் பெண் பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தவர்.  ஆனால் எனக்கு நினைவு தெரிந்து அவர் காசுக்கு கஷ்டப்பட்டு நான் பார்த்ததில்லை. யாரிடமும் கடன் பெற்றும் தன் வாழ்க்கையை நடத்தவில்லை.  அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தன் கைகளில் சில ஆயிரங்களும், தன் வங்கிக் கணக்கில் சில இலட்சங்களும் இருக்கும்படி பார்த்துக் கொண்டவர்.

கடந்த 30-07-2019 அன்று அவர் காலமான சமயத்தில்தான் ஃகாபி டே சித்தார்த் தற்கொலை செய்து கொண்ட செய்தியும் வந்தது.  நன்கு படித்த தொழிலதிபர். கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி, அரசியல் பின்புலமுள்ள மிகவும் செல்வாக்கான மனிதர் – ஆனால் வங்கிக் கடன் தொல்லையை சமாளிக்க முடியாமல் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்.   

ஆனால் வெறும் ஆறாவது வரை மட்டுமே படித்த, ஒரு தனியார் நிறுவனத்தில் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்ற ஒரு மனிதர் ஒரு பெரிய குடும்பத்தினை நன்கு நிர்வகித்து தன் பிள்ளைகளுக்கு எந்தக் கடனும் வைக்காமல் கொஞ்சம் சொத்தினையும் சேரத்து வைத்து தன்னுடைய 86-வது வயதில் முழுமையான வாழ்க்கை வாழ்ந்து இயற்கையான மரணம் அடைகிறார் என்றால் அதுதான் வெற்றிகரமான வாழ்க்கை.  

என் தந்தைக்கு Financial Management (நிதி மேலாண்மை) என்ற வார்த்தைக்கு பொருள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதைச் செயலில் முழுமையாக நடைமுறைப் படுத்தியவர்.

என்னுடைய தந்தைக்கு தினமும் டைரி எழுதும் பழக்கம் இருந்தது. ஒவ்வொரு நாளும் அன்றைய முக்கிய நிகழ்வுகளை எழுதிவிட்டு அந்தப் பக்கத்தில் அவருடைய கையெழுத்தினை இடுவார். இதில் இரண்டு நன்மைகள்.  ஒன்று அவருடைய நினைவாற்றலுக்கும், தேவைப்படும்போது refer செய்வதற்கும் அது மிகவும் உதவியாக இருந்தது.  இரண்டாவது அவருடைய கையெழுத்து பல வருடங்களாக மாறாமல் ஒரே மாதிரி இருந்தது.  பொதுவாக நாம் போடும் கையெழுத்து சில வருடங்களில் கொஞ்சமாவது மாறியிருக்கும். ஆனால் அவர் கையெழுத்து மாறாமல் இருந்ததற்கு  தினமும் அவர் டைரியில் போட்ட கையெழுத்துக்கூட ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கக் கூடும்.

அடுத்து என் அப்பாவிடம் நான் வியந்த விஷயம் அவரிடம் இருந்த ஒரு ஒழுங்குத் தன்மை. காபி, சாப்பாடு என்று எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட அளவு என்று இருந்தவர்.  தேவைக்கு அதிகமாக எதையும் இழுத்துப் போட்டுக்கொள்வதில்லை - கடவுள் உட்பட. ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற திருமூலரின் சொல்லை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்ற அண்ணாவின் சீடர் அவர்.  அதனால் கடவுளை கும்பிடுவதில்கூட அவர் ஒரே கடவுளைத்தான் கும்பிட்டுக் கொண்டிருந்தார். வருடம் தவறாமல் திருப்பதி திருமலைக்கும், வாரம் தவறாமல் தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.  இதைத் தவிர எந்த கோவிலுக்கும் அவராகக் சென்றதில்லை (அவருக்கு வயதான பிறகு நாங்கள் அழைத்துச் சென்றதால் வேறு சில கோவில்களுக்கு வந்திருக்கிறார் அவ்வளவுதான்).

என் அப்பா ஒரு மிகச் சிறந்த Carpenter (தச்சர்).  அவர் வேலை செய்த டிவிஎஸ் நிறுவனத்தில் அந்த நிறுவனத்தின் முதலாளிகள் பலரின் வீட்டு பூஜையறையில் இன்றும் அவர் செய்த கலைநயம் மிக்க பூஜை மண்டபம் இருக்கும்.  ஆனாலும் அவர் தன்னுடைய வீட்டுக்காக ஒரு மனையைகூட செய்ததில்லை என்று என் அம்மா வருத்தப்பட்டாலும் எங்கள் வீட்டு மனையையே அவர் கட்டியவர் என்பதால் எங்களுக்கு எந்த வருத்தமுமில்லை.

அதைப்போலவே டிவிஎஸ் நிறுவனத்தின்மீது அவரது விசுவாசம் மிக அதிகம்.  அவரைப் பொருத்தவரையில் டிவிஎஸ் நிறுவனம்தான் மிகச் சிறந்த நிறுவனம்.  தன்னுடைய ரிட்டையர்மெண்ட் சேவிங்ஸ் மற்றும் இதர வருமானத்தினைகூட அவர் வேலை செய்த வீல்ஸ் இந்தியா நிறுவனத்தில்தான் முதலீடு செய்திருந்தார்.  ஏன் என்று கேட்டால்  அங்கு போடும் பணம்தான் மிகவும் பாதுகாப்பானது.  நான் எடுக்கவில்லை என்றால்கூட என்னைக் கூப்பிட்டுக் கொடுப்பார்கள்.  ஏனென்றால் நான் 35 வருடங்களுக்கு மேல் வேலை செய்த இடம் அது என்பார்.  அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.   சரியாக அவர் இறந்த நாளன்று எனக்கு வீல்ஸ் இந்தியா நிறுவனத்தில் இருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.  அவர்கள் சொன்ன விஷயம் இதுதான்.  என் அப்பா டெபாசிட் செய்திருந்த ஒரு FD முதிர்ந்து விட்டதாகவும், உரிய ஆவணங்களை கொண்டு வந்து பணத்தினை பெற்றுக் கொண்டு செல்லும்படி கூறினார்கள்.

அதைப்போலவே என் அப்பா மறைந்த சில நாட்களில் டிவிஎஸ் நிறுவன இயக்குநர் திரு. எச். லஷ்மணன் அவர்கள் எனக்கு போன் செய்து என் அப்பாவின் பெருமைகளைச் சொன்னபோது, ஒரு சாதாரணத் தொழிலாளியைப் புகழ்ந்த அந்த இயக்குநரின் பெருந்தன்மையும், உயர் பதவியில் இருக்கும் ஒரு மனிதரின் இதயத்தில் இடம் பிடித்திருந்த என் தந்தையின் பண்பும் ஒரு சேர வெளிபட்டது.

இதையெல்லாம்விட நான் அதிகம் என் அப்பாவிடம் வியந்திருந்தது அவரின் பொறுப்பு (responsibility). என் தந்தை வாழ்க்கையில் சந்தித்த சில சோதனைகளை வேறு பலர் சந்தித்திருந்தால் மது போன்ற சில விஷயங்களில் தங்களை மூழ்கடித்துகொண்டிருப்பார்கள்.   ஆனால் தன் ஒருவனுடைய தவறான முடிவு தன்னுடைய மொத்த குடும்பத்தினையே பாதிக்கும் என்று உணர்ந்து தன்னுடைய குடும்பத்தினை நிலை நிறுத்தியவர்   இந்தப் பொறுப்புணர்வு நம் ஒவ்வொருக்குள்ளும் இருந்தால் பல தவறான முடிவுகளையும் தவறான பழக்கங்களையும் தவிர்க்க முடியும் என்பது என் ஆழமான கருத்து.

அதேபோல அவர் charity என்று தனியாக எதுவும் செய்ததில்லை.  ஆனால் தன்னை நாடி உதவி என்று வருபவர்களுக்கு வேலை வாங்கித் தருவது, தன்னால் இயன்ற நிதியுதவி என்று எப்போதும் செய்திருக்கிறார். அவரால் பலன் அடைந்த குடும்பங்கள் பல இன்றும் அவரை நன்றியோடு நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தன்னுடைய பேரப் பிள்ளைகள் வரும்போதெல்லாம் அவர்களுக்கு சில நுாறு ரூபாய்கள் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தவர்.  அதனால்தான் அவர் போட்டோவிற்கு மாலை போட்டு கும்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு பேரன் ”தாத்தா ஏன் இன்றைக்கு காசு தரவில்லை” என்று சொன்னபோது எல்லோர் கண்களும் கலங்கியது.

தனிப்பட்ட முறையில் அவர் உலகம் என்பது அவரது குடும்பம், பேரப்பிள்ளைகள், குறிப்பிட்ட நட்பு வட்டம் இவற்றைச் சுற்றியே இயங்கி வந்தது.  பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் ஒன்றாகக்கூடும் எல்லா நாட்களுமே அவருக்கு விஷேச நாட்கள்தான்.

எனக்கும் என் அப்பாவிற்குமான உறவு பொதுவாக எல்லா அப்பா பிள்ளைகளுக்குமான உறவாக இருந்தாலும், என் குடும்பத்தில் நன்கு படித்து ஒரு நல்ல நிலையில் வாழ்க்கையில் உயர்ந்ததால் என் மீது என் அப்பாவிற்கு கொஞ்சம் பிடிப்பு அதிகம்.  அதுவும் தவிர அவர் தன்னுடைய ஒரு மகனை 5 வயதில் இழந்த சோகத்தில் இருந்த சில மாதங்களில் நான் பிறந்ததால் நான் அவருக்கு அந்த நேரத்தில் மிகப்பெரிய ஆறுதலாக இருந்ததும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கும்.

ஒரு தந்தைக்கும் மகனுக்குமான சில உரசல்களில் நான்கூட அவரிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் என்னிடம் ஒருமுறைகூட கடுமையாக நடந்துகொண்டதில்லை.

என் அப்பாவிடம் எனக்கு இருக்கும் அன்பைவிட வெளிப்படுத்தியது கொஞ்சம்தான்.  அதற்கு ஆயிரம் காரணங்கள்.  ஆனால் அவர் தன்னுடைய அன்பை எப்போதும் ஏதாவது ஒரு வகையில் என்னிடம் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்திருக்கிறார்.  அன்பை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகள் மட்டுமே தேவையில்லையே.

நான் எட்டாவது முடித்தபோது எனக்கு மிதிவண்டி வாங்கிக் கொடுத்தார். 3500 விலையுள்ள அந்த சைக்கிள் அப்போது மிகப்பெரிய தொகை. ஆனால் வாங்கிய முதல் நாளே எதிர்வீட்டு நண்பன் ஒரு ரவுண்ட் அடித்து தருகிறேன் என்று சொல்லி எடுத்துச் சென்று சுவற்றில் முட்டி சைக்கிளை் முன்பக்க டயரை வளைத்துவிட்டான். எதிர்வீட்டுப் பையன் வண்டியை இடித்துவிட்டான் என்று சொல்வதற்கு பயந்து அந்தப் பழியை நானே எடுத்துக் கொண்டேன்.  என்னை அப்பா திட்டுவாரோ என்று பயந்து கொண்டு அவர் வீட்டுக்கு மாலை வரும்வரை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தேன்.  வீட்டுக்கு வந்து விஷயத்தினை கேள்விப்பட்டு என் அப்பா என்னிடம் சொன்ன வார்த்தைகள் ”உனக்கு ஒன்றும் ஆகவில்லையே, சரி விடு சைக்கிளை சரி செய்து விடலாம்”.  இந்த மாதிரியான ஒரு சம்பவத்தில் நான்கூட என் மகனை திட்டாமல் இருந்திருப்பேனா என்று தெரியவில்லை.

நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது என் உடம்பெல்லாம் திடீரென்று வீங்கிவிட்டது.  பயந்துபோய் என்னை விஜயா மருத்துவனையில் சேர்த்து வைத்தியம் பார்த்தீர்கள். நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்த செலவு 5000-க்கும் அதிகம்.  30 வருடங்களுக்கு முன்பு இந்தத் தொகை உங்கள் சக்திக்கு மீறிய மிகப்பெரிய தொகை. ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு எப்போதுமே நீங்கள் உங்கள் சக்திக்கு அதிகமாகவே செய்திருக்கிறீர்கள்.

நீங்கள் உடல் நலமிலலாமல் உங்களை விஜயா மருத்துவமனையிலும் காவிரி மருத்துவமனையிலும் சேர்த்து செலவு செய்தபோது நான் என் சக்திக்கு மீறி எதுவும் செய்துவிடவில்லை. 

கடைசியாக இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு உங்கள் உடல் நலிவடைந்து மருத்துவமனையில் சேர்த்தபோது நீங்கள் என்னிடம் சொன்ன வார்த்தைகள் ”நான் இந்த மருத்துவமனையில் நோயாளியாக உணர்கிறேன்.  என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடு”  நீங்கள் ஒவ்வொரு செங்கல்லாக எடுத்துக் கட்டிய வீடுதான் உங்களுக்கு சொர்கம்.  யார் வீட்டிலும் இரவு தங்குவதை விரும்பமாட்டீர்கள். வீட்டிற்கு வந்து விடுவீர்கள். இப்போதும் நீங்கள் உங்கள் கடைசி நாட்களை உணர்ந்து விட்டதால் வீட்டில் இருப்பதையே விரும்பியுள்ளீர்கள்.  

இருக்கும்போது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இருப்பது நம் கையில் உள்ளது.  ஆனால் இறக்கும்போது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இறப்பது என்பது ஒரு கொடுப்பினை.  அந்தக் கொடுப்பினை உங்களுக்கு வாய்த்தது.  ஒரு பழுத்த இலை மரத்தில் இருந்து உதிர்வதைப் போல இந்த உலகத்தில் இருந்து உதிர்ந்து விட்டீர்கள்.

ஒரு அப்பாவாக நீங்கள் நான் ஆசைபட்டதையெல்லாம் எனக்கு செய்யாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் எனக்குத் தேவையானதை எப்போதும் செய்திருக்கிறீர்கள்.  அதைப்போலவே ஒரு மகனாக நீங்கள் ஆசைப்பட்டதையெல்லாம் நான் செய்யாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் உங்களுக்கு தேவையானதை கடைசிவரை உங்கள் அருகிலேயே இருந்து நான் செய்திருக்கிறேன்.  அந்தத் திருப்தி எனக்கு எப்போதும் இருக்கிறது.

நான் உங்களிமிருந்து பெற்றுக் கொண்ட பாடங்கள் நிறைய.  அதில் முக்கியமானது நன்றியுணர்வு.  நீங்கள் உங்கள் குடும்பம், வேலை பார்த்த இடம், நட்பு என்று எல்லா இடங்களிலும் மிகுந்த நன்றியுணர்வோடு இருந்தீர்கள்.  அதனால்தானோ என்னவோ உங்களைப் பற்றி நான் நினைக்க நினைக்க எனக்கு துக்கத்தால் கண்கள் பனிக்கவில்லை.  ஆனால் உங்கள் மீதுள்ள நன்றியுணர்வில் என் கண்கள் பனிக்கின்றன. 

You lived your life well.  Thank you so much அப்பா.


Saturday, June 15, 2019

மழை வரம்



கே. பாலசந்தரின், தண்ணீர் பஞ்சத்தை மையமாக வைத்து வந்த ”தண்ணீர் தண்ணீர்” திரைப்படம் வந்த ஆண்டு 1981.  அதற்குப் பிறகு தமிழகம் எத்தனையோ புயல் மழை பெருவெள்ளம் என்று பார்த்துவிட்டது.  ஆனால் இந்த 2019-ம் ஆண்டும் ”தவிக்கும் தமிழகம்” என்று தண்ணீருக்கு தவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு சில நாட்கள் பெய்யும் பெருமழையில் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடும். இயற்கை அந்தக் கருணையை கண்டிப்பாகச் செய்யும். ஆனால் நமக்கு ஏற்பட்ட இந்த கதிக்கு காரணம் இயற்கையின் சதியல்ல.  நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதுதான். 

படிக்கும் காலத்தில் படிக்காமல் தேர்வுக்கு முன்தினம் கோவில் கோவிலாக சுற்றினால் மட்டும் அதிக மதிப்பெண் வந்து விடாது. அப்படித்தான் ”மழை வேண்டி” இப்போது யாகம் நடத்தச் சொல்லி அரசு அறிவுறுத்துவதும் (யாகம் கோவில் நிர்வாகம் தானாக செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டியது. அரசாங்கம் சொல்லவேண்டிய அவசியமில்லை).

கொடுக்கிற காசையெல்லாம் ”தான்தோன்றித்தனமாக” செலவு செய்துவிட்டு மீண்டும் மீண்டும் பணம் தேவைப்படுகிறது என்று சொன்னால் நமக்கு பணம் கொடுப்பவர்கள் எப்படி நம்மீது ”கடுப்பாவார்களோ” அதைவிட அதிகமான ”கடுப்பில்” நம்மீது கடவுள் இருக்கிறார்.   

நம்முடைய தண்ணீர் பிரச்சனைக்கு தனிமனிதர்களான நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருந்தாலும், இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பெரும் பொறுப்பு அரசாங்கத்திற்குத்தான் உள்ளது.

ஷவரில் குளிக்க வேண்டாம், Shave செய்யும் போதும் தண்ணீரை save செய்யுங்கள் என்று பொதுமக்களுக்கு ஆயிரம் advice செய்யும் அரசாங்கம், நீர் மேலாண்மையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தாலும் பிரச்சனை இந்த அளவுக்கு தீவிரம் ஆகியிருக்காது.

சென்னையைப் பொருத்தவரையில் இயற்கை எப்போதும் வஞ்சனை செய்ததே கிடையாது. பொதுவாக பெரிய புயலும் தாக்காது. பெரிய வறட்சியும் ஏற்படாது. நீர்நிலைகள் அதிகம் சூழ்ந்த ஊர் சென்னை. வளரும் சென்னையின் தேவைக்கேற்ப சரியான திட்டமிடல் இல்லாத ஆட்சியாளர்களால் ஏற்பட்ட அவலம் இது.   இந்த விஷயத்தில் ”திருட்டு திராவிடம்” ”பாசிச பாஜக” என்றெல்லாம் ஒருவர் மீது மற்றவர் பழி போட்டுக் கொண்டிருக்காமல் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு நீண்ட காலத் தீர்வு ஏற்பட வழிவகை செய்யவேண்டும்.  ஏனென்றால் இது சென்னைக்கோ அல்லது தமிழகத்திற்கோ மட்டுமான பிரச்சனை அல்ல.  இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இந்த தண்ணீர்ப் பிரச்சனை உள்ளது.

சரி அரசாங்கம் செய்வது இருக்கட்டும்.  தனிமனிதராக நம்மால் இந்தப் பிரச்சனையில் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டிய நேரம் இது.  ”நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர். நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்.  அதுவுமற்றவர் வாய்ச் சொல் அருளுவீர்” என்று பாரதி கூறியதுபோல நாம் ஒவ்வொருவரும் அவரவர் வசதி வாய்ப்புக்கு ஏற்ப கண்டிப்பாக இந்தப் பிரச்சனை தீர்வதற்கு நம் பங்கை அளிக்கலாம்.

தனிமனிதராக நம்மால் செய்யக் கூடியவைகளில் சில:

நம் வீட்டில் வசதிக்கேற்ப ஒரு சில மரங்களையாவது நட்டு வளர்க்கலாம்.

ஒரு மரம் வளர்வதற்கு பல வருடங்கள் தேவைப்படுகிறது.  ஆனால் அதை வெட்டுவதற்கு சில மணித்துளிகள் போதும்.  முடிந்த வரையில் எந்த மரம் வெட்டப்படுவதற்கும் நாம் நேரிடையான காரணமாக இருக்க வேண்டாம். அப்படி வெட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒரு மரத்திற்கு குறைந்தது இரு மரம் என் வாழ்நாளுக்குள் வளர்ப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.


நம் வீட்டில் மழைநீர் சேமிப்பு பெயரளவிற்கு இல்லாமல் அதிக அளவு மழையை சேமிக்கக்கூடிய வகையில் இருக்கும்படி பார்த்துக் கொள்வோம்.


தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வை நமது குழந்தைகளிடம் ஏற்படுத்துவோம் (அதற்கு முதலில் விழிப்புணர்வை நமக்கு ஏற்படுத்திக் கொள்வோம்).

எங்கெல்லாம் நாம் பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோமோ அங்கெல்லாம் அதற்கான மாற்று என்ன என்று யோசிப்போம்.

இதைப்போல இன்னும் பல சிந்திக்கலாம். 

ஆனால் இப்போது உடனடியாக நாம் எல்லோரும் செய்யக்கூடிய ஒன்று  மழை வேண்டி பிரார்த்தனை செய்வதுதான்.  இது மதம் சம்பந்தப் பட்டது அல்ல மனம் சம்பந்தப்பட்டது.  கடவுள் நம்பிக்கை இருப்பவர் இல்லாதவர் என்று யார் வேண்டுமானாலும் ”மழை வேண்டும்” என்று ஆழ்ந்து சிந்திக்கலாம். 

உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஆண்டாளின் இந்தப் பாசுரத்தினை ஒரு தடவை படிக்கலாம் -  மழை சீக்கிரம் வந்து நம் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையுடன்.  நம்பிக்கை இல்லையென்றாலும் நல்ல தமிழை வாசித்த திருப்தி உங்களுக்கு ஏற்படும்.

ஆழி மழைக் கண்ணா – ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு. ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கருத்து
பாழியந்தோளுடை பத்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் – நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

மாமழை போற்றுதும் – மாமழை போற்றுதும்.

Monday, January 7, 2019

எண்கள் தேவையற்ற உரையாடல்கள்




”எண்கள் தேவையற்ற உரையாடல்கள்” - வண்ணதாசன் எழுதிய ஒரு சிறுகதையின் தலைப்பு இது.  ஆனந்த விகடனில் வெளிவந்த இந்தச் சிறுகதை வண்ணதாசனின் சாகித்ய அகடமி விருது பெற்ற ”ஒரு சிறு இசை” என்ற புத்தகத்தில் உள்ளது.  நல்ல புத்தகம்.  புத்தக கண்காட்சி நடைபெறும் சமயம். சுலபமாக கிடைக்கும்.  முடிந்தால் வாங்கிப் படிக்கவும்.

ஆனால் இந்தப் பதிவுக்கும் இந்தப் புத்தகத்திற்கும் சம்பந்தமில்லை.  கதையின் தலைப்பு இன்றைய பதிவிற்கு பொருத்தமாக இருந்ததால் எடுத்துக் கொண்டேன்.  பொருத்தம்தானா என்பதை நீங்கள் இந்தப் பதிவை படித்துவிட்டு முடிவு செய்துகொள்ளுங்கள்.

ஒருவன் தன் இரு காதுகளிலும் தீக்காயத்துடன் டாக்டரிடம் வந்தானாம்.  டாக்டர் என்ன நடந்தது என்று கேட்டபோது அவன் சொன்னான்.  டாக்டர் நான் என்னுடைய துணியை அயர்ன் செய்து கொண்டிருந்தபோது ஒரு போன் வந்தது.  செல்போன் என்று நினைத்து அயர்ன் பாக்ஸை எடுத்து என் காதில் வைத்துக் கொண்டேன்.

டாக்டர் கேட்டாராம். சரி ஒரு காது ஓகே.  மற்றொரு காதை எப்படி சுட்டுக் கொண்டாய் ?

வந்தவன் சொன்னானாம்.  ”அந்தப் படுபாவி மீண்டும் போன் செய்து தொலைத்துவிட்டான்.

இது எப்போதோ ஒரு புத்தகத்தில் படித்த ஒரு ஜோக்.

இப்போது சொல்லும் ஒரு விஷயம் நான் சில நாட்களுக்கு முன் நேரில் கண்டது.  லயோலா கல்லூரியைத் தாண்டி நுங்கம்பாக்கம் சுரங்கப் பாதையில் இரவு 7.30 மணி போக்குவரத்து நெரிசலில் என்னுடைய கார் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.  எனக்கு சற்று முன்னால் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞன் சென்று கொண்டிருந்தார். அவருடைய செல்போன் அடித்திருக்க வேண்டும்.  ஒரு கையால் வண்டியை ஓட்டிக் கொண்டே தன்னுடைய சட்டைப்பையில் இருந்து செல்போனை எடுத்தார். எடுத்து யார் என்று பார்த்துக் கொண்டிருந்த சிலவினாடிகளில் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம் சட்டென்று பிரேக் பிடிக்க இவருடைய வண்டி அதில் லேசாக இடித்த மறுகணம் கையிலிருந்த செல்போன் தவறி கீழே விழுந்தது.  அடுத்த நொடி பக்கத்தில் சென்று கொண்டிருந்த இன்னொரு வாகனம் அந்த செல்போனில் ஏறி இறங்கியது.  அவ்வளவுதான்.  அந்த செல்போனின் விலை எத்தனை ஆயிரம் ரூபாயோ. ஒரு நொடியில் சல்லிக் காசுக்கும் உபயோகம் இல்லாமல் ஆகிவிட்டது.
பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அந்த இளைஞர் மீது கோபமாகவும் இருந்தது.  ஏனென்றால் இப்போதெல்லாம் பைக்கை ஓட்டிக் கொண்டே காதுக்கும் தோளுக்கும் இடையில் செல்போனை வைத்துக் கொண்டு ”வலிப்பு வந்தது போல்” பேசிக் கொண்டு செல்லும் பலரை பார்க்கின்றேன்.  இதனால் அவர்களுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் எவ்வளவு ஆபத்து என்பதை உணர்வதேயில்லை.

செல்போன் என்பது ஒரு இன்றைய அறிவியலின் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு.  ஒரு இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு வரையில்கூட ஒருவருக்கொருவர் நினைத்த நேரத்தில் பேசுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அறிவியல் இதனை இன்று மிகவும் சுலபமாக்கிவிட்டது.   வரங்களை எல்லாம் சாபங்களாக்கிக் கொள்ளும் திறமை படைத்த நாம் இன்று செல்போனையும் அப்படித்தான் சாபமாக்கிக் கொண்டு விட்டோமோ என்று சந்தேகமாக இருக்கிறது.

நம்மில் பெரும்பான்மையினருக்கு செல்போனை பயன்படுத்தத் தெரிவதில்லை.  எனக்கு ஒருமுறை என்னுடைய நண்பன் போன் செய்தான்.  நான் ஒரு மீட்டிங்கில் இருந்ததால் உடனே எடுக்க முடியவில்லை.  ஆனால் அவன் தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்ததால், ஏதாவது அவசரமாக இருக்கப் போகிறது என்று மீட்டிங் இடத்தில் இருந்து வெளியே வந்து எதாவது அவசரமாக என்று கேட்டேன். அதற்கு அவன் ஒன்றுமில்லை.  ஒரு சின்ன consulting தேவைப்படுகிறது.  நீ free ஆனபிறகு பேசினால் போதும் என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.  இப்படி சாதாரணமாகப் பேசுவதற்கே தொடர்ந்து போன் செய்தால், உண்மையிலேயே அவசரமாக போன் செய்தால்கூட நாம் எடுக்காமல் விட்டுவிடுவோம்.

நான் யாருக்காவது போன் செய்து அடுத்த முனையில் இருப்பவர் கொஞ்ச நேரம் எடுக்கவில்லை என்றால் கட் செய்து விட்டு  அவருக்கு என்ன காரணத்திற்காக போன் செய்தேன் அவசரமா இல்லையா என்று ஒரு சின்ன message அனுப்பிவிடுவேன்.  அவர்கள் அதைப் பார்த்து போன் செய்தால் சரி.  இல்லையென்றால் ஏதாவது அவசரமாக இருந்தால் தவிர மீண்டும் கால் செய்ய மாட்டேன்.

செல்போன் என்பது நாம் பேசுவதற்கான ஒரு உபகரணம் அவ்வளவுதான்.  அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.  முன்பெல்லாம் நான் சாப்பிட உட்காரும் நேரத்தில் என்னுடைய செல்போன் அடித்தால் உடனே சென்று எடுத்து பேசுவேன்.  உடனே எடுப்பதுதான் நாகரீகம் என்று நானாக நினைத்துக் கொள்வேன்.  பேசி முடித்தவுடன் சாப்பாடு ஆறியிருக்கும்.  மனைவிதான் சூடாக இருப்பார்.

ஆனால் இப்போதெல்லாம்  செல்போன் விஷயத்தில் நான் ஓரளவுக்கு கட்டுப்பாட்டை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டேன்.  செல்போனில் பொதுவாக யாருடன் பேசினாலும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பேசுவதில்லை.  அதற்கு மேல் பேசும் பேச்சு பெரும்பாலும் வெட்டிப் பேச்சாகத்தான் இருக்கும்.  இதில் விதிவிலக்குகள் கண்டிப்பாக உண்டு.  உண்மையிலேயே ஒரு பிரச்சனையில் அல்லது வேதனையில் இருப்பவர்களுக்கு நம்முடைய ஆறுதல் வார்த்தைகள் மிகப்பெரிய நம்பிக்கையாக அமையலாம்.  அந்த நேரத்தில் சரியாக பத்து நிமிடம் ஆனதும் சரி பிறகு பேசலாம் என்று வைத்துவிட முடியாது.  ஆனால் அந்த விதிவிலக்குகளை நாம்தான் முடிவு செய்யவேண்டும்.

நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளும் இன்னொரு விஷயம்.  இப்போது அலுவல் நிமித்தமாக பிசியாக இருக்கிறோம்.  ஒரு கால் பேசி முடிப்பதற்குள் நம் செல்போனில் பல missed கால்கள் வந்து விடுகின்றன.  இவர்களில் பெரும்பாலும் அவர்கள் அவசரத்திற்காக நம்மோடு பேசுபவர்கள். அவ்வளவுதான்.  உண்மையிலேயே நம்மீது அக்கரை கொண்டு எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உண்மையான அன்புடனும் அக்கரையுடனும் எத்தனை பேர் நம்மிடம் பேசுகிறதார்கள்.  அல்லது நாம்தான் அப்படி எத்தனை பேருடன் பேசுகிறோம்.  யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.

அதனால் எல்லா கால்களையும் பாய்ந்து எடுக்க வேண்டிய அவசியமில்லை. எடுக்க முடியாத நிலையில் இருந்தால் ஒரு message அனுப்பிவிட்டு சிறிது நேரம் கழித்து பேசலாம்.  ஒரு விஷயம் உண்மையிலேயே அவசரமாக இருந்தால் எப்படியாவது நம்மை வந்து அடைந்துவிடும்.  செல்போனும் போனும் இல்லாத காலத்திலேயே நல்லதும் கெட்டதும் உரியவருக்கு உரிய நேரத்தில் சென்று சோ்ந்துகொண்டுதான் இருந்தது.

உரையாடல் என்பது ஒரு கலை.  அந்தக் கலையில் நாம் வல்லவர்களாகிவிட்டால் எவ்வளவு நேரம் பேசுகிறோம் என்பது முக்கியமல்ல.  பேசி முடித்தவுடன் உரையாடிய இருவருக்கும் ஒரு மன நிறைவு ஏற்பட வேண்டும்.  மீண்டும் அவருடன் பேச வேண்டும் என்ற விருப்பம் உருவாக வேண்டும்.

யோசித்துப் பார்த்தால் செல்போனில் பேசும் இந்தக் காலத்திலும் நேருக்கு நேர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மகிழ்ச்சியாக கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் உரையாடல்கள்தான் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.  செல்போன் just ஒரு மாற்றுக் கருவி. செல்போனுக்கு வெளியேயும் வாழ்க்கை இருக்கிறது.

எந்த உறவிலும் சிக்கலை ஏற்படுத்திக் கொள்ளாமல் நாம் ஆக்கபூர்வமான முறையில் பிறருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இனிமையாக உரையாடக் கற்றுக் கொண்டால் நாம் வாழ்க்கயைில் வெற்றி பெற்று விட்டோம் என்று எடுத்துக் கொள்ளலாம். 

உரையாடுவதற்கு எண்களைவிட நல்ல மனங்கள் இருந்தால் போதும்.