Monday, November 5, 2018

பிரயாணம்



அசோகமித்திரன் ”பிரயாணம்” என்ற சிறுகதையை எழுதிய ஆண்டு 1969.  கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழிந்த பின்னும் யாரோ ஒருவர் இந்தக் கதையைப் படித்தும் அதுகுறித்து பேசியும் எழுதியும் வருகிறார்கள்.  அதுதான் ஒரு எழுத்தாளனின் வெற்றி.  அவனுக்கான வாசகர்கள் சமகாலத்தில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயமல்ல.  நல்ல எழுத்து என்பது ஒரு விதையைப் போன்றது.  எந்த வாசகனது மனதிலாவது எப்போதும் அது முளைத்துக் கொண்டுதான் இருக்கும்.

கதையின் சுருக்கம் இதுதான்.

தன்னுடைய வயதான குருவோடு மலையின் மீது தங்கியிருக்கிறார் அவரது சீடர்.  வயது முதிர்வின் காரணமாக அந்த குரு அங்கேயே இறந்து விடுகிறார்.  அந்த குருவின் கடைசி ஆசை (??) அவரது உடலை சமதளத்தில் புதைக்க வேண்டும்.  அதற்காக அந்த சீடன் அவரை எடுத்துக்கொண்டு மலையடிவாரத்திற்கு கொண்டுவருகிறார்.  அப்படி வரும்போது அந்த இரவில் அந்த குருவின் உடலை கவ்விக்கொண்டு போக வட்டமிடும் ஓநாய்கள்.  அந்த ஓநாய்களிடமிருந்து அவரால் தப்பிக்க முடிகிறதா ? அவரது குருவை அவர் ஆசைப்பட்டபடி சம தளத்தில் அடக்கம் செய்ய முடிந்ததா என்பதுதான் கதை.

ஒரு எழுத்தாளனின் வெற்றி என்பது அவர் கதையை சொல்லும் விதம் மட்டுமல்ல அவர் சொல்லாமல் விட்ட கதையை வாசகன் தன்னுடைய அறிவிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப புரிந்துகொள்ள விட்டுவிடுவதுதான். 

இந்தக் கதையின் கடைசியின் இப்படி முடியும்.

”ஓநாய்கள் என் குருதேவரின் வயிற்றுப் பாகத்தைக் குதறித் தள்ளியிருந்தன. தலையையே காணோம். உடலெல்லாம் இரத்தம் வெளிப்பட்டு உறைந்திருந்தது போல இருந்தது. கைக்கட்டை விரல்களைக் கட்டியிருந்த துணி அறுபட்டுக் கிடந்தது. ஒரு ஓநாயின் கால் அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு, என் குருதேவரின் வலது கைப்பிடியில் இருந்தது”.

இதைப் படித்ததும் நமக்கு திக்கென்று இருக்கும்.  இறந்துவிட்ட குருவின் கைப்பிடியில் எப்படி ஓநாயின் கால் இருக்க முடியும்.  அப்படியென்றால் அவர் இறக்கவில்லையா ? அப்படியே இறக்கவில்லையென்றாலும் வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்டு கிடக்கும் நேரத்தில் அவரால் ஒரு ஓநாயின் காலை அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்க முடியுமா ? அல்லது அந்த குரு தனது சீடனை அந்த ஓநாய்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக தான் இறந்த பிறகும் தனது அமானுஷ்ய சக்தியால் ஏதாவது செய்தாரா என்ற பல கேள்விகள் நமக்கு பிறக்கிறது.

சில விஷயங்களை அதனோடு சம்பந்தபட்ட அனுபவங்கள் நமக்கு ஏற்பட்டால் மட்டுமே முழுமையாக அதனை உணர முடியும். அந்த வகையில் இந்தக் கதை எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தினை நினைவுக்கு கொண்டுவந்தது.

நான் சில வருடங்கள் முன்பு வரை நினைத்த நேரத்தில் திருவண்ணாமலைக்கு கிளம்பிவிடுவேன்.  சில சமயங்களில் நண்பா்களுடன் சில சமயங்களில் தனியாக.  சுமார் 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வோம்.  பிறகு அந்த தினத்தில் கூட்டம் மிகவும் அதிகமாகிவிட்டதால், பௌர்ணமி தினத்தில் செல்வதை தவிர்த்துவிட்டேன்.

பொதுவாக நாம் தனியாக சென்றாலும், கிரிவலப் பாதையில் யாராவது நமக்கு முன்னாலோ பின்னாலோ வந்து கொண்டிருப்பார்கள்.  அதனால் நமக்கு தனியாகச் செல்கிறோம் என்ற உணர்விருக்காது. அதே நேரத்தில் யாருடனும் பேசாமல் மௌனமாக கிரிவலம் செல்லலாம்.  அப்படிச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒருமுறை அப்படிச் செல்லும் போது இரவு சுமார் ஒரு மணி இருக்கும்.  ரமணாஸ்ரமம் செல்லும் வரை ஒரு சிலர் முன்னும் பின்னும் வந்து கொண்டிருந்தனர். நான் சாலையின் வலதுபுறம் நடந்து கொண்டே சிங்க தீர்த்தம் உள்ள இடம் அருகில் வரும்போது கொஞ்ச துாரத்தில் சாலையின் இடதுபுறத்தில் ஒரு மனிதர் முழுநிர்வாணமாக நின்று கொண்டிருந்தார்.  

சாலையையொட்டி நான் நடந்து கொண்டிருந்த இடமோ ஒரு மயான பூமி. எனக்கு “பக்“கென்றது. இப்போது எனக்கு முன்னேயும் யாருமில்லை. பின்னே திரும்பி பார்த்தாலும் யாருமில்லை.

அந்த நிர்வாண மனதரைப் பார்த்ததும் எனக்குத் தோன்றிய முதல் சிந்தனை அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபராக இருக்கலாம் என்பதுதான்.  நான் தனியாக நடந்து கொண்டிருக்கிறேன்.  அவரைக் கடக்கும்போது அவர் என்னைத் தாக்கினால் எப்படி என்னால் தனியாக தற்காத்துக்கொள்ள முடியும் என்ற சிந்தனையே எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது.  திரும்பிவிடலாமா என்றுகூட நினைத்தேன். 

ஆனால் மீண்டும் கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டு அந்த நபரை மீண்டும் பார்த்தேன்.  அந்த மனிதரின் காலடியில் ஒரு நாய்.படுத்துக் கொண்டு இருந்தது.  அந்த மனிதர் மலையைப் பார்த்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுந்திருப்பதும், நின்று கொண்டே மலையை வணங்கிவிட்டு மீண்டும் விழுந்து வணங்குவதுமாக இருந்தார்.

இப்போது எனக்கு கொஞ்சம் தைரியம் வந்து விட்டது.  ஒருவேளை அவர் ஒரு சித்தராக இருக்கலாம் என்று தோன்றியது.  எனக்கு இப்போது தோன்றிய ஒரே எண்ணம் அந்த இடத்தைக் கடக்கும் வரை அவரை மீண்டும் பார்க்கக்காமல் கடந்துவிட வேண்டும் என்பதுதான்.  அவர் வேலையை அவர் செய்யட்டும் நம் வேலையை நாம் செய்யலாம் என்று நினைத்து நடக்க ஆரம்பித்தேன்.  அந்த இடத்தினைக் கடந்து செல்ல எனக்கு ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும்.  மீண்டும் அவரை நான் திரும்பிப் பார்க்கவேயில்லை.

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால். அது ஒரு நெடுஞ்சாலை.  திருவண்ணாமலையிலிருந்து கிருஷ்ணகிரி பெங்களுர் செல்லும் மாநில நெடுஞ்சாலை.  இரவு நேரத்திலும் வாகனக் போக்குவரத்து இருந்து கொண்டெ இருக்கும்.  ஆனால் நான் அந்த இடத்தை கடந்த அந்த 15 நிமிடங்களில் ஒரு வாகனம்கூட அந்த இடத்தினை கடக்கவில்லை அல்லது நான் என்னைச் சுற்றிய நிகழ்வுகளில் இருந்து விடுபட்டிருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

கதை இங்கே முடிந்து விட்டது என்று நினைக்காதீர்கள்.  அந்த நெடுஞ்சாலையில் இருந்து கிரிவலம் செல்ல நாம் வலப்பக்கமாக திரும்ப வேண்டும்.  அந்தத் திருப்பத்தில் ஒரு பத்து பதினைந்து நாய்கள் மொத்தமாக நின்று கொண்டிருந்தன.  அந்த நாய்களின் உறுமல் சத்தத்தில் எனது சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது. 

என் உள்மனது மட்டும் பயத்தில் ஓடிவிடாதே என்று சொல்லிக்கொண்டே இருந்தது.  ஓடினால் “பிரயாணம்” கதையில் குருவுக்கு ஏற்பட்ட நிலைதான் எனக்கும் ஏற்பட்டிருக்கும்.

நான் எனக்குத் தெரிந்த மந்திரங்களையெல்லாம் உச்சரித்துக் கொண்டே நடந்துகொண்டிருந்தேன். 

இப்போது அசோகமித்திரனின் வார்த்தைகளை படியுங்கள்.

”பகலெல்லாம் ஓநாய்களைக் கண்ணெதிரேபாராமல், ஆனால் அவை எங்களைத் தாக்க எங்கோ தூரத்தில் பின்தொடர்ந்து வருகின்றன என்ற உணர்வே என்னைப் பெரும் பீதியில் விறைப்பாக இருக்கச் செய்தது. இப்போது அவற்றை நேரே கண்டவுடன் என் ஆழ்ந்த அமைதி ஏற்பட்டது. அந்நேரத்தில் எனக்குச் சிந்தனைகளே அவ்வப்போது எழாமல் போவதையும் உணர்ந்தேன்.

நான் மிகவும் நிதானமாக என் கைகளை அசைத்துக்கொண்டிருந்தேன். ஓநாய்கள் எங்களை இன்னமும் சுற்றிச் சுற்றி வந்தவண்ணமிருந்தன. நான் முதலில் தாக்க வேண்டும் என்று அவை காத்திருந்ததுபோலத் தோன்றிற்று. எனக்கும் அந்த ஓநாய்க் கூட்டத்துக்குமிடையே எழுந்திருக்க ஒரு இக்கட்டு நிலையை இருவரும் தீவிரப்படுத்தாமல் இருந்தால் இரவின் எஞ்சிய நேரம் அப்படியே கழிந்துவிடும் என்றுகூடத் தோன்றிற்று. பகல் என்று  ஏற்பட்டவுடன் ஓநாய்கள் பின்வாங்கிவிடக்கூடும்.

நான் நிச்சயமாக இருந்தேன். அந்த ஓநாய்களின் அடக்கமான உறுமல் கூட அப்போது அப்பிரதேசத்தின் அமைதியோடு பொருந்திவிடக் கூடியதாகவே தோன்றியது தாமாகவே தங்களுக்குள்ளாக ஏற்படுத்திக்கொண்ட ஒரு நியதிக்கு அவை தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு அதிலிருந்து இம்மியளவு  பிறழத் தயாராக இல்லாதிருப்பதுபோல எங்களை வலம்வந்துகொண்டிருந்தன.

எனக்கு அந்த ஓநாய்கள் மீது பெரும் பரிவு ஏற்பட்டது. அவற்றைக் காலம் காலமாக நான் அறிந்து பழகியதுபோல ஒரு உணர்வு ஏற்பட்டது. ஒரு நிலையில் நானே அவற்றுடன் சேர்ந்து என்னையே சுற்றி வருவதுபோலத் தோன்றிற்று. அப்போது என் கையிலிருந்த கொள்ளிக் கட்டை சட்டென்று அணைந்துவிட்டது. ஜூவாலை எழுப்ப அதை நான் வேகமாக வீசினேன். அப்போது, அந்த மலைப் பிரதேசமே மூச்சு விடுவதை அப்படியே நிறுத்திக்கொண்டு ஸ்தம்பித்துக் கிடப்பதுபோலத் தோன்றிற்று. என் கைக்கட்டை முழுவதும் அணைந்துவிட்டது. அதைப் போட்டு விட்டுக் கீழே தணல் நுனிகளுடன் கிடந்த கட்டைகளில் ஒன்றைப் பொறுக்கி எடுக்க நான் தீயின் பக்கம் குனிந்தேன். ஒரு அரைக் கணம் ஓநாய்கள் உறுமுவதுகூட நின்றுவிட்டது. அடுத்துப் பேரிரைச்சலுடன் பெரிய ஓநாயாக ஒன்று என் மேல் பாய்ந்தது. என் முகத்திற்கு நேரே பயங்கரமாக விரிந்துவந்த ஓநாயின் வாயில் என் கை விறகுக் கட்டையைத் திணித்தேன். அது ஊளையிட்டுக் கொண்டு பின் வாங்கிற்று. அந்த நேரம் வேறு சில ஓநாய்கள் என் குருதேவரின் உடலைப் போர்த்தியிருந்த கம்பளப் பையைக் கடித்துக் கிழிக்க ஆரம்பித்தன.

அதுவரை நிலவிய அமைதி, நியதிக்குட்பட்ட கட்டுப்பாடு எல்லாம் நொடிப் பொழுதில் சிதறுண்டுபோயின. என்னை ஒவ்வொரு ஓநாயாகத்தான் தாக்கின ஆனால் உயிரற்றுக் கிடந்த என் குருதேவரின் சடலத்தின் மீதே கூட்டமாகப் பாய்ந்தன. நான் என் மூங்கில் கழியைச் சக்கரமாகச் சுற்றினேன். ஒவ்வொரு முறை என் கழி எதையாவது தாக்கும்போது என் தோள் பட்டை விண்டுவிடுவது போல நான் எதிரடி உணர முடிந்தது.

ஓநாய்கள் உறுமிக்கொண்டு பாய்ந்து வந்து, பிடுங்கி, அடிபட்டு, பின்வாங்கிமீண்டும் பாய்ந்த வண்ணமிருந்தன. அப்போது இன்னொன்றையும் உணர்ந்தேன். என் சுயநினைவில் கற்பனை செய்தும் பார்க்க முடியாத ஒலிகளை, உரத்த ஒலிகளை, நான் எழுப்பிக்கொண்டிருந்தேன். அந்தப் போரில் நானும் ஒரு பயங்கர விலங்காக மாறிப்போயிருந்தேன். ஒரு நிலையில் நாங்கள் இரு தரப்பினரும் சம வலிமை பெற்றவர்களாகத் தோன்றினோம். ஓநாய்களுக்குள் ஓநாயாக நான் இருந்தேன்”.

கதையில் ஓநாய்கள் எனக்கு நேரில் நாய்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.  ஆனால் நான் அவைகளுடன் சமர் புரியவில்லை.  ஏனென்றால் அப்படி செய்தால் அதன் முடிவு என்ன என்று நிச்சயமாக எனக்குத் தெரிந்திருந்தது.

அதே நேரத்தில் நாம் எப்போது மிகப்பெரிய ஆபத்தான நிலையை சந்திக்கிறோமோ அந்த நேரத்தில் நமது மனம் மிகவும் விழிப்படைந்து விடுகிறது.  அந்த நேரத்தில் நமக்கு எது குறித்தும் - even மரணம் குறித்துகூட பயம் ஏற்படுவதில்லை. 

நான் நடக்க நடக்க நாய்களின் உறுமல் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது.  எனக்கு எந்தச் சேதாரமும் இல்லாமல் காப்பாற்றியது அந்த இறைதான் என்பதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என்ன ?