Sunday, August 18, 2019

அப்பா – சில நினைவுகள் ……..




”ஆகாறு அளவிட்டதாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை”

பொருள் – வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை.  தேவையற்ற செலவுகளை குறைத்தாலே நிறைவாக வாழலாம்.

இந்தத் திருக்குறளை நினைக்கும் போதெல்லாம் என் அப்பாவின் நினைவு வரும் அல்லது அப்பாவை நினைக்கும்போதெல்லாம் இந்தத் திருக்குறளும் நினைவுக்கு வரும்.

என் தந்தை சில நுாறு ரூபாய் வருமானத்தில் தன்னுடைய பணியைத் தொடங்கி சில ஆயிரம் ரூபாய் வருமானத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.  இந்த சில ஆயிரம் மாத வருமானத்தில் தன்னுடைய ஆண் பெண் பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தவர்.  ஆனால் எனக்கு நினைவு தெரிந்து அவர் காசுக்கு கஷ்டப்பட்டு நான் பார்த்ததில்லை. யாரிடமும் கடன் பெற்றும் தன் வாழ்க்கையை நடத்தவில்லை.  அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தன் கைகளில் சில ஆயிரங்களும், தன் வங்கிக் கணக்கில் சில இலட்சங்களும் இருக்கும்படி பார்த்துக் கொண்டவர்.

கடந்த 30-07-2019 அன்று அவர் காலமான சமயத்தில்தான் ஃகாபி டே சித்தார்த் தற்கொலை செய்து கொண்ட செய்தியும் வந்தது.  நன்கு படித்த தொழிலதிபர். கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி, அரசியல் பின்புலமுள்ள மிகவும் செல்வாக்கான மனிதர் – ஆனால் வங்கிக் கடன் தொல்லையை சமாளிக்க முடியாமல் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்.   

ஆனால் வெறும் ஆறாவது வரை மட்டுமே படித்த, ஒரு தனியார் நிறுவனத்தில் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்ற ஒரு மனிதர் ஒரு பெரிய குடும்பத்தினை நன்கு நிர்வகித்து தன் பிள்ளைகளுக்கு எந்தக் கடனும் வைக்காமல் கொஞ்சம் சொத்தினையும் சேரத்து வைத்து தன்னுடைய 86-வது வயதில் முழுமையான வாழ்க்கை வாழ்ந்து இயற்கையான மரணம் அடைகிறார் என்றால் அதுதான் வெற்றிகரமான வாழ்க்கை.  

என் தந்தைக்கு Financial Management (நிதி மேலாண்மை) என்ற வார்த்தைக்கு பொருள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதைச் செயலில் முழுமையாக நடைமுறைப் படுத்தியவர்.

என்னுடைய தந்தைக்கு தினமும் டைரி எழுதும் பழக்கம் இருந்தது. ஒவ்வொரு நாளும் அன்றைய முக்கிய நிகழ்வுகளை எழுதிவிட்டு அந்தப் பக்கத்தில் அவருடைய கையெழுத்தினை இடுவார். இதில் இரண்டு நன்மைகள்.  ஒன்று அவருடைய நினைவாற்றலுக்கும், தேவைப்படும்போது refer செய்வதற்கும் அது மிகவும் உதவியாக இருந்தது.  இரண்டாவது அவருடைய கையெழுத்து பல வருடங்களாக மாறாமல் ஒரே மாதிரி இருந்தது.  பொதுவாக நாம் போடும் கையெழுத்து சில வருடங்களில் கொஞ்சமாவது மாறியிருக்கும். ஆனால் அவர் கையெழுத்து மாறாமல் இருந்ததற்கு  தினமும் அவர் டைரியில் போட்ட கையெழுத்துக்கூட ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கக் கூடும்.

அடுத்து என் அப்பாவிடம் நான் வியந்த விஷயம் அவரிடம் இருந்த ஒரு ஒழுங்குத் தன்மை. காபி, சாப்பாடு என்று எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட அளவு என்று இருந்தவர்.  தேவைக்கு அதிகமாக எதையும் இழுத்துப் போட்டுக்கொள்வதில்லை - கடவுள் உட்பட. ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற திருமூலரின் சொல்லை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்ற அண்ணாவின் சீடர் அவர்.  அதனால் கடவுளை கும்பிடுவதில்கூட அவர் ஒரே கடவுளைத்தான் கும்பிட்டுக் கொண்டிருந்தார். வருடம் தவறாமல் திருப்பதி திருமலைக்கும், வாரம் தவறாமல் தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.  இதைத் தவிர எந்த கோவிலுக்கும் அவராகக் சென்றதில்லை (அவருக்கு வயதான பிறகு நாங்கள் அழைத்துச் சென்றதால் வேறு சில கோவில்களுக்கு வந்திருக்கிறார் அவ்வளவுதான்).

என் அப்பா ஒரு மிகச் சிறந்த Carpenter (தச்சர்).  அவர் வேலை செய்த டிவிஎஸ் நிறுவனத்தில் அந்த நிறுவனத்தின் முதலாளிகள் பலரின் வீட்டு பூஜையறையில் இன்றும் அவர் செய்த கலைநயம் மிக்க பூஜை மண்டபம் இருக்கும்.  ஆனாலும் அவர் தன்னுடைய வீட்டுக்காக ஒரு மனையைகூட செய்ததில்லை என்று என் அம்மா வருத்தப்பட்டாலும் எங்கள் வீட்டு மனையையே அவர் கட்டியவர் என்பதால் எங்களுக்கு எந்த வருத்தமுமில்லை.

அதைப்போலவே டிவிஎஸ் நிறுவனத்தின்மீது அவரது விசுவாசம் மிக அதிகம்.  அவரைப் பொருத்தவரையில் டிவிஎஸ் நிறுவனம்தான் மிகச் சிறந்த நிறுவனம்.  தன்னுடைய ரிட்டையர்மெண்ட் சேவிங்ஸ் மற்றும் இதர வருமானத்தினைகூட அவர் வேலை செய்த வீல்ஸ் இந்தியா நிறுவனத்தில்தான் முதலீடு செய்திருந்தார்.  ஏன் என்று கேட்டால்  அங்கு போடும் பணம்தான் மிகவும் பாதுகாப்பானது.  நான் எடுக்கவில்லை என்றால்கூட என்னைக் கூப்பிட்டுக் கொடுப்பார்கள்.  ஏனென்றால் நான் 35 வருடங்களுக்கு மேல் வேலை செய்த இடம் அது என்பார்.  அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.   சரியாக அவர் இறந்த நாளன்று எனக்கு வீல்ஸ் இந்தியா நிறுவனத்தில் இருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.  அவர்கள் சொன்ன விஷயம் இதுதான்.  என் அப்பா டெபாசிட் செய்திருந்த ஒரு FD முதிர்ந்து விட்டதாகவும், உரிய ஆவணங்களை கொண்டு வந்து பணத்தினை பெற்றுக் கொண்டு செல்லும்படி கூறினார்கள்.

அதைப்போலவே என் அப்பா மறைந்த சில நாட்களில் டிவிஎஸ் நிறுவன இயக்குநர் திரு. எச். லஷ்மணன் அவர்கள் எனக்கு போன் செய்து என் அப்பாவின் பெருமைகளைச் சொன்னபோது, ஒரு சாதாரணத் தொழிலாளியைப் புகழ்ந்த அந்த இயக்குநரின் பெருந்தன்மையும், உயர் பதவியில் இருக்கும் ஒரு மனிதரின் இதயத்தில் இடம் பிடித்திருந்த என் தந்தையின் பண்பும் ஒரு சேர வெளிபட்டது.

இதையெல்லாம்விட நான் அதிகம் என் அப்பாவிடம் வியந்திருந்தது அவரின் பொறுப்பு (responsibility). என் தந்தை வாழ்க்கையில் சந்தித்த சில சோதனைகளை வேறு பலர் சந்தித்திருந்தால் மது போன்ற சில விஷயங்களில் தங்களை மூழ்கடித்துகொண்டிருப்பார்கள்.   ஆனால் தன் ஒருவனுடைய தவறான முடிவு தன்னுடைய மொத்த குடும்பத்தினையே பாதிக்கும் என்று உணர்ந்து தன்னுடைய குடும்பத்தினை நிலை நிறுத்தியவர்   இந்தப் பொறுப்புணர்வு நம் ஒவ்வொருக்குள்ளும் இருந்தால் பல தவறான முடிவுகளையும் தவறான பழக்கங்களையும் தவிர்க்க முடியும் என்பது என் ஆழமான கருத்து.

அதேபோல அவர் charity என்று தனியாக எதுவும் செய்ததில்லை.  ஆனால் தன்னை நாடி உதவி என்று வருபவர்களுக்கு வேலை வாங்கித் தருவது, தன்னால் இயன்ற நிதியுதவி என்று எப்போதும் செய்திருக்கிறார். அவரால் பலன் அடைந்த குடும்பங்கள் பல இன்றும் அவரை நன்றியோடு நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தன்னுடைய பேரப் பிள்ளைகள் வரும்போதெல்லாம் அவர்களுக்கு சில நுாறு ரூபாய்கள் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தவர்.  அதனால்தான் அவர் போட்டோவிற்கு மாலை போட்டு கும்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு பேரன் ”தாத்தா ஏன் இன்றைக்கு காசு தரவில்லை” என்று சொன்னபோது எல்லோர் கண்களும் கலங்கியது.

தனிப்பட்ட முறையில் அவர் உலகம் என்பது அவரது குடும்பம், பேரப்பிள்ளைகள், குறிப்பிட்ட நட்பு வட்டம் இவற்றைச் சுற்றியே இயங்கி வந்தது.  பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் ஒன்றாகக்கூடும் எல்லா நாட்களுமே அவருக்கு விஷேச நாட்கள்தான்.

எனக்கும் என் அப்பாவிற்குமான உறவு பொதுவாக எல்லா அப்பா பிள்ளைகளுக்குமான உறவாக இருந்தாலும், என் குடும்பத்தில் நன்கு படித்து ஒரு நல்ல நிலையில் வாழ்க்கையில் உயர்ந்ததால் என் மீது என் அப்பாவிற்கு கொஞ்சம் பிடிப்பு அதிகம்.  அதுவும் தவிர அவர் தன்னுடைய ஒரு மகனை 5 வயதில் இழந்த சோகத்தில் இருந்த சில மாதங்களில் நான் பிறந்ததால் நான் அவருக்கு அந்த நேரத்தில் மிகப்பெரிய ஆறுதலாக இருந்ததும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கும்.

ஒரு தந்தைக்கும் மகனுக்குமான சில உரசல்களில் நான்கூட அவரிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் என்னிடம் ஒருமுறைகூட கடுமையாக நடந்துகொண்டதில்லை.

என் அப்பாவிடம் எனக்கு இருக்கும் அன்பைவிட வெளிப்படுத்தியது கொஞ்சம்தான்.  அதற்கு ஆயிரம் காரணங்கள்.  ஆனால் அவர் தன்னுடைய அன்பை எப்போதும் ஏதாவது ஒரு வகையில் என்னிடம் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்திருக்கிறார்.  அன்பை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகள் மட்டுமே தேவையில்லையே.

நான் எட்டாவது முடித்தபோது எனக்கு மிதிவண்டி வாங்கிக் கொடுத்தார். 3500 விலையுள்ள அந்த சைக்கிள் அப்போது மிகப்பெரிய தொகை. ஆனால் வாங்கிய முதல் நாளே எதிர்வீட்டு நண்பன் ஒரு ரவுண்ட் அடித்து தருகிறேன் என்று சொல்லி எடுத்துச் சென்று சுவற்றில் முட்டி சைக்கிளை் முன்பக்க டயரை வளைத்துவிட்டான். எதிர்வீட்டுப் பையன் வண்டியை இடித்துவிட்டான் என்று சொல்வதற்கு பயந்து அந்தப் பழியை நானே எடுத்துக் கொண்டேன்.  என்னை அப்பா திட்டுவாரோ என்று பயந்து கொண்டு அவர் வீட்டுக்கு மாலை வரும்வரை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தேன்.  வீட்டுக்கு வந்து விஷயத்தினை கேள்விப்பட்டு என் அப்பா என்னிடம் சொன்ன வார்த்தைகள் ”உனக்கு ஒன்றும் ஆகவில்லையே, சரி விடு சைக்கிளை சரி செய்து விடலாம்”.  இந்த மாதிரியான ஒரு சம்பவத்தில் நான்கூட என் மகனை திட்டாமல் இருந்திருப்பேனா என்று தெரியவில்லை.

நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது என் உடம்பெல்லாம் திடீரென்று வீங்கிவிட்டது.  பயந்துபோய் என்னை விஜயா மருத்துவனையில் சேர்த்து வைத்தியம் பார்த்தீர்கள். நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்த செலவு 5000-க்கும் அதிகம்.  30 வருடங்களுக்கு முன்பு இந்தத் தொகை உங்கள் சக்திக்கு மீறிய மிகப்பெரிய தொகை. ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு எப்போதுமே நீங்கள் உங்கள் சக்திக்கு அதிகமாகவே செய்திருக்கிறீர்கள்.

நீங்கள் உடல் நலமிலலாமல் உங்களை விஜயா மருத்துவமனையிலும் காவிரி மருத்துவமனையிலும் சேர்த்து செலவு செய்தபோது நான் என் சக்திக்கு மீறி எதுவும் செய்துவிடவில்லை. 

கடைசியாக இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு உங்கள் உடல் நலிவடைந்து மருத்துவமனையில் சேர்த்தபோது நீங்கள் என்னிடம் சொன்ன வார்த்தைகள் ”நான் இந்த மருத்துவமனையில் நோயாளியாக உணர்கிறேன்.  என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடு”  நீங்கள் ஒவ்வொரு செங்கல்லாக எடுத்துக் கட்டிய வீடுதான் உங்களுக்கு சொர்கம்.  யார் வீட்டிலும் இரவு தங்குவதை விரும்பமாட்டீர்கள். வீட்டிற்கு வந்து விடுவீர்கள். இப்போதும் நீங்கள் உங்கள் கடைசி நாட்களை உணர்ந்து விட்டதால் வீட்டில் இருப்பதையே விரும்பியுள்ளீர்கள்.  

இருக்கும்போது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இருப்பது நம் கையில் உள்ளது.  ஆனால் இறக்கும்போது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இறப்பது என்பது ஒரு கொடுப்பினை.  அந்தக் கொடுப்பினை உங்களுக்கு வாய்த்தது.  ஒரு பழுத்த இலை மரத்தில் இருந்து உதிர்வதைப் போல இந்த உலகத்தில் இருந்து உதிர்ந்து விட்டீர்கள்.

ஒரு அப்பாவாக நீங்கள் நான் ஆசைபட்டதையெல்லாம் எனக்கு செய்யாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் எனக்குத் தேவையானதை எப்போதும் செய்திருக்கிறீர்கள்.  அதைப்போலவே ஒரு மகனாக நீங்கள் ஆசைப்பட்டதையெல்லாம் நான் செய்யாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் உங்களுக்கு தேவையானதை கடைசிவரை உங்கள் அருகிலேயே இருந்து நான் செய்திருக்கிறேன்.  அந்தத் திருப்தி எனக்கு எப்போதும் இருக்கிறது.

நான் உங்களிமிருந்து பெற்றுக் கொண்ட பாடங்கள் நிறைய.  அதில் முக்கியமானது நன்றியுணர்வு.  நீங்கள் உங்கள் குடும்பம், வேலை பார்த்த இடம், நட்பு என்று எல்லா இடங்களிலும் மிகுந்த நன்றியுணர்வோடு இருந்தீர்கள்.  அதனால்தானோ என்னவோ உங்களைப் பற்றி நான் நினைக்க நினைக்க எனக்கு துக்கத்தால் கண்கள் பனிக்கவில்லை.  ஆனால் உங்கள் மீதுள்ள நன்றியுணர்வில் என் கண்கள் பனிக்கின்றன. 

You lived your life well.  Thank you so much அப்பா.