Wednesday, December 18, 2019

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்


"நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவை நேரே இன்றெனக்குத் தருவாய்
எந்தன் முன்னைத் தீவினைப் பயன்கள்
இன்னும் மூளாது அழிந்திடல் வேண்டும்
என்னைப் புத்துயிராக்கி
எனக்கேதும் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்
செய்வாய்
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்
செய்வாய்".

நான் மகாகவி பாரதியிடம் எப்போதும் வியக்கும் விஷயமே அவர் வார்த்தைகளில் உள்ள sharpness தான்.  இந்தக் கவிதையில் அவர் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளுக்கு அதே பொருள் கொண்ட வேறு வார்த்தைகளைப் போட்டுப் பாருங்கள் - கவிதையின் வீரியம் குறைந்துவிடும்.

எந்த மொழியாக இருந்தாலும் மந்திரம் என்று நாம் சொல்வது என்ன ? வார்த்தைகள்தான். ஆனால் அந்த வார்த்தைகள் யாரிடம் இருந்து வருகின்றன என்பதைப் பொறுத்து அவை சாதாரண வார்த்தைகளாகவோ அல்லது வீரியம் மிக்க மந்திர வார்த்தைகளாகவோ மாறி விடுகின்றன.  ("மகிழ்ச்சியின் மந்திரம்" என்ற தலைப்பில் நான் ஆழ்நிலைத் தியானம் குறித்து எழுதிய புத்தகத்தில் இது குறித்து சற்று விளக்கமாக எழுதி இருக்கிறேன்). இப்போது இந்தக் கவிதைக்கு வருவோம்.

மகாகவி பராசக்தியிடம் சில வரங்களை கேட்கிறார்.  ஆனால் அதை அவருக்காக கேட்கவில்லை நமக்காக கேட்கிறார்.  அவருக்குத் தெரியும். தன்னைவிட தன எழுத்துக்கள் அதிக காலம் வாழும் என்று.  "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பது திருமூலர் வாக்கு.  ஆனால் தான் பெறாத இன்பத்தையும் இந்த உலகம் பெற வேண்டும் என்பது பாரதியின் நோக்கம். வாழ்க்கை முழுவதும் வறுமையை அனுபவித்தாலும் அவர் தன்னுடைய மனதிற்குள் வறுமையை விடவில்லை என்பது அவருடைய ஒவ்வொரு வரியிலும் தெரியும்.

மீண்டும் தலைப்புக்கு வருவோம்.  மந்திரம் என்பது ஒரு சக்தி மிக்க வார்த்தை. அந்த வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லும்போது அந்த வார்த்தைகள் நம் வாழ்க்கையையே மாற்றக்கூடிய வல்லமை பொருந்தியதாக இருக்கும். அது எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம்.  "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்" என்று அவ்வையார் சொல்வது போல வார்த்தைகள் நீண்டு அலங்காரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த வார்த்தைகள் அணுவைத் துளைத்து அதற்குள் ஏழு கடலையும் அடக்கக் கூடிய அளவிற்கு வல்லமை பெற்றதாக இருக்க வேண்டும். அதைத்தான் பாரதியின் சில வரிகளும் செய்கின்றன.

இப்போது பாரதியின் இந்தக் கவிதையைப்  பார்க்கலாம்.


நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவை நேரே இன்றெனக்குத் தருவாய்

பராசக்தியிடம் பாரதி சில வரங்களைக் கேட்கிறார். அதை தன்னிடம் நேரிடையாக இன்றே அளிக்க வேண்டும் என்று சொல்கிறார்.   தான் கேட்கும் வரங்கள் உடனே கிடைக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அதைத் தருவதற்கு "இடைத் தரகர்கள்" யாரும் தேவை இல்லை. இறைவனுக்கும் தனக்கும் இடையில் மூன்றாவது மனிதரின் தலையீட்டை அவர் விரும்பவில்லை.   தகுதியற்ற மனிதர்களை கடவளாக நினைத்து தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் நம்மில் பலரும் பாரதியின் இந்த வரிகளைப் படித்தாவது திருந்தினால் நல்லது.


எந்தன் முன்னைத் தீவினைப் பயன்கள்
இன்னும் மூளாது அழிந்திடல் வேண்டும்


தான் செய்த பாவத்தின் விளைவுகள் தொடராது முற்றிலுமாக அழிந்து விட வேண்டும் என்று வேண்டுகிறார்.  இதில் "மூளாது அழிந்திடல்" என்ற வார்த்தைகள் மிகவும் முக்கியமானது.  தீ பற்றிய இடத்தில முழுவதுமாக அணைக்கவில்லை என்றால் மீண்டும் அந்தத் தீ மூண்டு விடும் அபாயம் உள்ளது. அதனால்தான் ஒரு சிறு பொறி கூட மிச்சம் இல்லாமல் அழிந்துவிட வேண்டும் என்று வேண்டுகிறார்.

என்னைப் புத்துயிராக்கி
எனக்கேதும் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்
செய்வாய்


"ஒரே நதியில் இரண்டு முறை குளிக்க முடியாது" என்ற ஜென் பழமொழி ஒன்று உண்டு.   அதாவது நதி ஓடிக்கொண்டே இருப்பதால் நாம் ஒரு முறை தொட்ட நீரை மறுபடியும் தொட முடியாது.  நம் வாழ்க்கையும் அப்படிதான்.  ஒவ்வொரு கணமும் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது.  நம்முடைய பழைய கவலைகளையும் தோல்விகளையும் துன்பங்களையும் குப்பைகளாக மனதில் தேக்கி வைத்துக் கொண்டிருக்காமல்   தன்னை புதிய உயிராக்கி தன்னுடைய மதியை மிகவும் தெளிவு செய்து தன்னுடைய கவலைகளை எல்லாம் நீக்கி என்றும் மகிழ்ச்சியாக இருக்க. தனக்காக இல்லாமல் நமக்காக இறைவனிடம் பாரதி வேண்டுகிறார்.

இதுதான் மகிழ்ச்சியின் மந்திரம்.    பாரதி சொன்ன இந்த மந்திரத்தை மீண்டும் மீண்டும் சொன்னாலே நமக்குள் மகிழ்ச்சி தோன்றுவதை உணர முடியும்.


No comments:

Post a Comment