Monday, December 30, 2019

முதல் மொழி



"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே" - திருமூலர் 

தன்னை நன்றாகத்  தமிழ் செய்வதற்க்கு இறைவன் தன்னை வணங்கிய அடியவர்களுக்கு அருள் செய்திருக்கலாம்.  ஆனால் தமிழை நன்றாகச் செய்வதற்க்கு இறைவன் தன்னை நம்பாதவர்களுக்கும் அருள் செய்து வருகிறான்.  அதனால்தான் காலம்தோறும் ஆத்திக, நாத்திக, சாதி மத  வித்தியாசம் இல்லாமல் தமிழ் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போது தமிழ் என்னும் தேரின் வடம் பிடிக்க இன்னொரு கை சேர்த்திருக்கிறது.  

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் (Alumni) திரு. சிவ இளநகை அவர்களின் முன்முயற்சியில் "முதல் மொழி" என்ற தமிழ் வளர்ச்சிக்கான  அமைப்பை  உருவாக்கி இருக்கிறார்கள்.  முதல் மொழியின் தொடக்க விழா 28/12/2019 சனிக் கிழமை அன்று  அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் திரு வே. முருகேசன் தொடங்கி வைக்க, சிறப்பு விருந்தினராக IAS அதிகாரி திரு த. உதயசந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்.

திரு. முருகேசன் அவர்கள் தாய் மொழியில் நம் குழந்தைகளின் அடிப்படை கல்வி இருக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறித்திப் பேசினார்கள்.  

இதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.  தாய் மொழியில் ஆரம்பக் கல்வி கற்கும் குழந்தைகளின் சிந்திக்கும் திறன் கண்டிப்பாக அதிக அளவில் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.  இன்று 40 வயது முதல் 60 வயது வரை உள்ள தமிழர்களில் பெரும்பாலோனோர் பத்தாவது அல்லது பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களாகத்தான் இருப்பார்கள். திரு அப்துல் கலாம் தொடங்கி  ISRO திரு மயில்சாமி அண்ணாதுரை. திரு சிவன் உள்ளிட்டவர்களாக இருக்கட்டும் அல்லது மிகப் பெரிய மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்ட வல்லுநர்கள் அல்லது சுய தொழில் செய்து பெரிய அளவில் சாதித்தவர்கள் என்று யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் ஆரம்பக் கல்வி தங்கள் தாய் மொழியில்தான் இருந்திருக்கும்.

நம் குழந்தைகள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும். ஆனால் ஆரம்பம் தமிழாக இருக்கட்டும்.

சிறப்புரை ஆற்றிய திரு உதயசந்திரன் அவர்களது பேச்சும் சிறப்பாக அமைந்திருந்தது.  

தமிழக அரசின் உயர்பள்ளிக் கல்வி செயலராக இருந்த போது கல்வித் துறையில் இவர் முயற்சியால் கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம்.  கல்வித் துறைக்கு போதாத காலம் இவரை அங்கிருந்து மாற்றி விட்டார்கள்.  கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல இவர் வந்து சேர்ந்த இடம் கீழடி.  இவர் வராமல் இருந்திருந்தால் ஒருவேளை கீழடியை கீழேயே போட்டு அமுக்கி இருப்பார்கள்.  நல்ல வேளை.  இப்போது தமிழர்களின் தொன்மைக்கு ஆதாரம், சேதாரம் இல்லாமல் கிடைத்திருக்கிறது.

இவரது பேச்சில் கிடைத்த முக்கிய தகவல், இந்தியாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் 52% தமிழில்தான் இருக்கிறது.  அவற்றையெல்லாம் தற்காலத் தமிழில் மொழிபெயர்க்கவே இன்னும் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் ஆகுமாம்.  இது தவிர இந்த வேலையைச்  செய்வதற்கு தகுதியான ஆட்களும் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.  இதனால் இதனை தொழில்நுட்ப உதவியுடன் மொழி பெயர்க்க முயற்சி செய்து வருகிறார்கள்.

திரு உதயசந்திரன் சொன்ன இன்னொரு விஷயம் - பிற மொழிச் சொற்களை தமிழில் எளிய நடையில் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும்.  அப்போதுதான் அது மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.  உதாரணமாக bi-cycle என்பதை ஈருருளி என்று மொழி பெயர்த்திருந்தார்கள்.   ஆனால் யாரோ ஒரு சாமானியன் பயன்படுத்திய மிதிவண்டி மக்களிடம் சென்று சேர்ந்து விட்டது.

எனக்கும் இதில் முழு  உடன்பாடுதான்.  கார் என்ற வார்த்தையை கார் என்றே பயன்படுத்தலாம்.  மகிழ்வுந்து என்பது திணிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாக இருக்கிறது.  திணிப்பு எந்த வகையில் இருந்தாலும் நம் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  அதுவும் தவிர மகிழ்வுந்து மரத்தில் மோதி நான்கு பேர் மரணம் என்று படிக்கும்போது அந்த வார்த்தை பொருத்தமாகவே இல்லை.

மகாகவி பாரதியே Member என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் பதம் கிடைக்காமல் உறுப்பாளி என்று மொழி பெயர்த்து பின்னால் சரியான பதம் கிடைத்தால் மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தாராம்.  இப்போது நாம் உறுப்பினர் என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறோம்.  ஆங்கிலம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் அது பிரெஞ்சு இத்தாலி லத்தின் போன்ற பிற மொழிச் சொற்களை தாராளமாக உள்வாங்கிக் கொண்டதுதான்.  In fact ஆங்கிலத்தில் நிறைய தமிழ்ச் சொற்களும் இருக்கின்றன.

நாம்தான் அழகான அம்மா என்ற வார்த்தைக்குகூட பதப்படுத்திய பிணங்களின் பெயரான "மம்மி" என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.   தேவைப்படும் நேரங்களில் நம் குழந்தைகள் நன்றாக ஆங்கிலம் பேசட்டும் - வெறும் மம்மி டாடியில் ஆங்கிலம் இல்லை. 

தமிழக அரசு நிர்வாகத் துறையிலும் மற்றும் வேறு பல துறைகளிலும் மற்ற மாநிலங்களைவிட முன்னணியில் இருப்பதற்கு இத்தகைய அரசு அதிகாரிகளும் முக்கிய காரணம் என்பது மறுக்கவோ அல்லது மறைக்கவோ இயலாத உண்மை.   ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் இன்னும் தெளிவானவர்களாக தொலைநோக்கு பார்வையுடன் இருந்து இத்தகைய அதிகாரிகளை இன்னும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால்  தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும்.  நம்முடைய இப்போதைய சாதனைகள் எல்லாம் யானை படுத்தால் குதிரை மட்டம் என்ற அளவில்தான் உள்ளது.

முதல் மொழியின் தொடக்க விழா சில சிந்தனைக் கீற்றுகளை எல்லோர் மனதிலும் விதைத்திருக்கிறது.  

தமிழ் என்னும் தேர் நாம் இல்லாமலும் நகர்ந்து கொண்டேதான் இருக்கும்.  நாமும் வடம் பிடித்தோம் என்பதில் நமக்குத்தான் பெருமை. 

தன்னை நன்றாகத்  தமிழ் செய்வதற்க்கும் தமிழை நன்றாகச் செய்வதற்கும்  இறைவன் எப்போதும் அருளிக் கொண்டே இருப்பான். 

முதல் மொழி அமைப்பு சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.


No comments:

Post a Comment