Tuesday, February 25, 2020

முன்றில்



சில விஷயங்களை ஆயிரம் முறை யோசித்து செய்தாலும் எங்கோ முட்டிக் கொண்டு நிற்கும்.  ஆனால் சில விஷயங்கள் அதிக மெனக்கெடல் இல்லாமல் மிகச் சரியாக தானாகவே அமைந்துவிடும்.

அப்படி அமைந்ததுதான் என்னுடைய இந்த "முன்றில்" வலைதளம்.  "எண்ணமே வண்ணமாய்" என்ற என்னுடைய வலைதளத்தை (Blog) இன்னும் சற்று மேம்படுத்தலாம் என்று நினைத்தபோது, அந்த வலைதளத்தின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராகவும்,  சிறியதாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.   அப்படி நினைத்தவுடன் என் நினைவுக்கு வந்த பெயர்களில் ஒன்றுதான் இந்த முன்றில்.

முன்றில் நினைவில் பதிந்த பெயராக இருந்தாலும் அதிகம் பரிச்சியப்பட்டது கவிஞர் நா.முத்துக்குமாரின் "அணிலாடும் முன்றில்" புத்தகத்தை வாசித்தபிறகுதான்.

அடுக்கு மாடி குடியிருப்புக்கள் அதிகம் இருக்கும் இந்தக் காலத்தில் முன்றில், முற்றம், தாழ்வாரம் போன்ற வார்த்தைகள் நம்முடைய புழக்கத்தில் இருந்து விலகிச் சென்று விட்டன.  முன்றில் என்றால் வீட்டின் முன்பக்கம் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

முன்றில் என்ற பெயரை வலைதளமாக பதிவு செய்த நினைத்தவுடன் இந்தப் பெயரில் ஏற்கனவே யாராவது பதிவு செய்திருக்கிறார்களா என்று நண்பர் Innoweb பாரதியிடம் கேட்டேன்.  அவரும் இந்தப் பெயரில் எந்த வலைதளமும் பதிவு செய்யப்படவில்லை  என்று சொல்லி முன்றில் வலைதளத்தை உடனே பதிவு செய்து கொடுத்ததுடன், ஏற்கனவே என்னுடைய 'எண்ணமே வண்ணமாய்'  வலைதளத்தில் இருந்த எல்லா பதிவுகளையும் இந்த முன்றில் தளத்தில் அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைத்து பதிவிறக்கம் செய்து கொடுத்துவிட்டார்.  அவருக்கு என் நன்றிகள் பல.

வலைதளத்தில் என்னுடைய நூறாவது பதிவு இந்த புதிய முன்றில் வலைதளத்தில் முதல் பதிவாக வருவது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியே.  நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல என்னுடைய பதிவுகளின் நோக்கம் “இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்” என்பதல்ல. பொருளாதாரத் தேவைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இந்த அவசர வாழ்வில், காலையில் செய்த தவற்றை நினைத்து மாலையில் மனம் வருந்தி மீண்டும் மறு நாள் காலையில் அதே தவற்றைச் செய்யும் நம்முடைய சராசரி மனித வாழ்வில் எப்படியாவது ஒரு படி மேலே வர வேண்டும் என்ற நம்முடைய இடையறாத போராட்டத்தில் கிடைக்கும் சில அனுபவங்களை குறித்து வைத்துக் கொள்ளும் ஒரு டைரிக் குறிப்பாகத்தான் இதை நினைத்துக் கொள்கிறேன்.

"பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்" இது ரமண மகரிஷியின் வார்த்தைகள்.  இந்த வார்த்தைகள் நாம் சொல்லும் எல்லா சொற்களுக்கும் நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும் பொருந்தும் - என்னுடைய இந்த வலைதளப் பதிவுகள் உட்பட.

இந்த முன்றில் குறித்து  வலைதளத்தில் கொஞ்சம் துழாவிக் கொண்டிருந்த போது மறைந்த எழுத்தாளர் திரு மா. அரங்கநாதன் அவர்கள்  முன்றில் என்ற பெயரில் ஒரு இதழ் நடத்தி வந்துள்ளார் என்பது தெரிய வந்தது.  இந்தப் பெயரில் இப்போதும் இந்த இதழ் வருகிறதா என்று தெரியவில்லை.

கல்யாண்ஜியின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது

தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் உங்களுடையது
என எழுதும் கவிதைக்கு
முன்பே  வரிகள் இருந்தன.

நீங்கள் அமிழ்கின்ற ஆறு
ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிறது.
நீங்கள் பார்க்கிற சூரியன்
பார்த்திருக்கிறது எண்ணற்றவர்களை.

உங்களுடைய சாப்பாட்டுத்
தட்டில் இருக்கிற பருக்கைகளில்
நேற்றின் எச்சில்.

உங்களுக்குத் பின்னாலும்
வர இருக்கிறார்கள்
நிறைய பேர்கள்
அடித்தல் திருத்தல் அற்று.

நாம் நம்முடைய வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு காரியமும் யாராலோ எப்போதோ செய்யப்பட்டவைதான். நேற்றின் தொடர்ச்சி நாம்.   நம்மைவிட சிறப்பாக செய்ய இன்னும் நிறைய பேர் வருவார்கள்.  அவர்களுக்கு இந்தப் பதிவுகள் ஒரு சிறு அகல் விளக்காக பயன்படலாம்.

"அணிலாடும் முன்றில்" கவிஞர் முத்துக்குமார் அவர்கள் ஒவ்வொரு உறவையும் பற்றி மிகவும் அழகாக எழுதி இருப்பார்.  அதில் நான் மிகவும் அதிகம் விரும்பியது அவர் தனது மகனுக்கு எழுதிய கடிதம்.  இந்த வார்த்தைகள் அவர் மகனுக்கு மட்டுமல்ல - எல்லா மனிதர்களுக்குமானது.

இதோ அவரது வீரியமான வார்த்தைகள்: 

கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்து தெரிந்து கொள்வதைவிட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக் கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, சூத்திரம் இது தான், கற்றுப் பார். உடலைவிட்டு வெளியேறி, உன்னை நீயே உற்றுப் பார். எங்கும், எதிலும், எப்போதும் அன்பாய் இரு. அன்பைவிட உயர்ந்தது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. 


உன் தாத்தா, ஆகாய விமானத்தை அண்ணாந்து பார்த்தார். அவரது 57-வது வயதில் தான் அதில் அமர்ந்து பார்த்தார். உன் தகப்பனுக்கு 27-வது வயதில் விமானத்தின் கதவுகள் திறந்தன. ஆறு மாதக் குழந்தைப் பருவத்திலேயே நீ ஆகாயத்தில் மிதந்தாய். நாளை உன் மகன் ராக்கெட்டில் பிறக்கலாம். இந்த மாற்றம் ஒரு தலைமுறையில் வந்தது அல்ல. இதற்குப் பின்னால் நெடியதொரு உழைப்பு இருக்கிறது. என் முப்பாட்டன் காடு திருத்தினான். என் பாட்டன் கழனி அமைத்தான். என் தகப்பன் விதை விதைத்தான். உன் தகப்பன் நீர் ஊற்றினான். நீ அறுவடை செய்து கொண்டு இருக்கிறாய். என் தங்கமே! உன் பிள்ளைக்கான விதையும் உன் உள்ளங்கையில் வைத்திரு. உழைக்கத் தயங்காதே. உழைக்கும் வரை உயர்ந்து கொண்டு இருப்பாய்.


நிறையப் பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத் திறந்து வைக்கின்றன. புத்தகங்களை நேசி. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள். உன் உதிரத்திலும் அந்தக் காகித நதி ஓடிக் கொண்டே இருக்கட்டும்.


கிடைத்த வேலையைவிட, பிடித்த வேலையைச் செய். இனிய இல்லறம் தொடங்கு.  உறவுகளிடம் நெருங்கியும் இரு. விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும் விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.

என்னுடைய இந்த முன்றில் வலைதளத்தின் முதல் பதிவை எழுத்தாளர் திரு மா. அரங்கநாதன் அவர்களுக்கும் கவிஞர் திரு நா. முத்துக்குமார் அவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.




2 comments: