ஆண்டன்
செகாவ் எழுதிய The Bet என்ற கதையின் தமிழாக்கம்தான் இந்த பந்தயம் என்ற கதை. இந்தக் கதை எழுத்ப்பட்ட ஆண்டு 1898. கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு பின்பும், இந்தக்
கதை இன்னமும் உயிரோட்டமாக இருப்பதற்கு முக்கிய காரணம், புறஉலகில் ஆயிரம் மாற்றங்கள்
ஏற்பட்டாலும் மனித மனமும் அதன் உள் உணர்வுகளும் கால வெளிகளுக்கு அப்பாற்பட்டு, தேசங்களைக்
கடந்து எப்போதும் மாறாமல் இருப்பதுதான். கதையின்
ஆசிரியர் ஆண்டன் செகாவும் ஒரு மனவியல் நிபுணர் என்பதால், மனித மனங்களின் இயல்புகளை
மிகவும் துல்லியமாகவும், வாழ்க்கையின் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் எப்படி மனிதனின்
விருப்பு வெறுப்புகள் மாறுகின்றன, எதை நோக்கி மனிதன் ஓடிக் கொண்டிருக்கிறான், அதன்
அர்த்தம் என்ன என்று பல விஷயங்களை கற்பனைத்
திறம் கொண்டு விவரித்திருக்கிறார் ஆசிரியர்.
கதைக்குள்
செல்வோம் இப்போது.
அது
ஒரு இலையுதிர் காலத்தின் இருண்ட இரவு. வயதான
அந்த செல்வந்தர் அந்தத் தோட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே 15 வருடங்களுக்கு
முன்பு நடந்த அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தார். அதுவும் ஒரு இலையுதிர் காலம். அங்கு பல மனிதர்கள் ஒன்றுகூடி சுவையான விஷயங்களைப்
பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்படி அவர்கள்
பேசிய விஷயங்களில் ஒன்று – மரண தண்டனை குறித்தது.
அங்கிருந்த பெரும்பாலனவர்கள் மரண தண்டனைக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். மரண தண்டனை என்பது காலத்திற்கு ஒவ்வாதது, மனித குலத்திற்கு
எதிரானது என்பது அவர்கள் கருத்து. அதில் சிலர்,
மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை வழங்கலாம் என்றனர்.
உங்களுடைய
இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்றார் அந்த செல்வந்தர். மரண தண்டனையா, ஆயுள் தண்டனையா என்று கேட்டால் நான்
மரண தண்டனையே பரவாயில்லை என்பேன். மரண தண்டனை
உடனடியாக மனிதனைக் கொன்று விடுகிறது. ஆனால்
ஆயுள் தண்டனை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறது.
ஒரு சில நொடிகளில் போக வேண்டிய உயிர் வருடக் கணக்கில் போகிறது என்று சொன்னார்.
என்னைப்
பொருத்தவரை இரண்டுமே தவறுதான் என்று இன்னொருவர் சொன்னார். இரண்டுமே மனிதனின் உயிரை எடுக்கிறது. அரசாங்கம் ஒன்றும் கடவுள் இல்லை. வேண்டும்போது திருப்பிக் கொடுக்க முடியாத ஒன்றை
எடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்று அவர் கூறினார்.
அப்போது அங்கிருந்த சுமார் 25 வயதுடைய ஒரு இளம் வழக்கறிஞரிடம் இது குறித்த கருத்து கேட்கப்பட்டது. அந்த இளைஞன் சொன்னான்.
மரண
தண்டனை அல்லது ஆயுள் தண்டனை இரண்டுமே தவறுதான், ஆனால் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க
வேண்டுமென்றால் நான் இரண்டாவதைத் தான் தேர்ந்தெடுப்பேன். இல்லாமல் போவதைவிட எப்படியாவது வாழ்வது எவ்வளவோ
மேல்.
இப்படி
இந்த விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியபோது, அந்த செல்வந்தர் – அப்போது இளமையும் துடிப்பும்
அதிகம் இருந்த காலம் – அங்கிருந்த மேஜையைத் தட்டி அந்த இளைஞனைப் பார்த்து கத்தினார். நீ சொல்வது உண்மையில்லை, உனக்கு சவால் விடுகிறேன்.
இரண்டு மில்லியன் தருகிறேன் – உன்னால் தனிமையாக
5 வருடங்கள்கூட இருக்க முடியாது.
நீங்கள்
சொன்ன பந்தயம் உண்மையென்றால், அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். 5 வருடம் இல்லை 15 வருடம் தனிமையில் இருக்கிறேன்
என்று அந்த இளைஞன் சொன்னான்.
15
வருடத்திற்கு நீ தயார் என்றால், 2 மில்லியன் தருவதற்கு நானும் தயார் என்றார் அந்த செல்வந்தர்.
உங்கள்
2 மில்லியனுக்கு என்னுடைய சுதந்திரத்தை பணயம் வைக்கிறேன் என்றான் அந்த இளைஞன்.
அன்று
இரவு அந்த செல்வந்தர் அந்த இளைஞனிடம் மீண்டும் பேசினார். இளைஞனே, நன்றாக யோசித்துச் சொல். எனக்கு 2 மில்லியன் என்பது பெரிய தொகை அல்ல. ஆனால் உன்னுடைய வாழ்க்கையில் ஒரு சில முக்கியமான
வருடங்களை நீ இழந்துவிடுவாய். நான் ஏன் ஒரு
சில வருடங்கள் என்று சொல்கிறேன் என்றால் உன்னால் அதற்கு மேல் கண்டிப்பாக இருக்க முடியாது.
அதுவும் நாமாக விரும்பி தனிமையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியே வந்து சுதந்திரக்
காற்றை அனுபவிக்கலாம் என்று இருக்கும்போது அந்த எண்ணமே உன்னை நீண்ட நாள் தனிமையில்
இருக்கவிடாது என்பதை நினைவில் கொள். உனக்காக
நான் வருத்தப்படுகிறேன்.
15
வருடங்கள் கழித்து இதையெல்லாம் நினைத்துப் பார்த்த போது, அந்த செல்வந்தர் தனக்குள்
கேட்டுக் கொண்டார் – எதற்காக இந்தப் பந்தயம்.
இதனால் யாருக்கு என்ன பயன். அந்த இளைஞனின்
15 இனிமையான வருடங்கள் பாழாகிவிட்டது. எனது
2 மில்லியன் வீணாகப் போகிறது. இதனால் மரண தண்டனை
அல்லது ஆயுள் தண்டனை இதில் எது மோசமானது என்று தெரிந்து விடப் போகிறதா. என்னிடம் இருந்த பணத் திமிரும் அந்த இளைஞனிடம் இருந்த
பேராசையும்தான் இதற்கு காரணமா ?
மீண்டும்
15 வருடங்களுக்கு முன் அந்த இளைஞனை தன்னுடைய தோட்டத்தில் உள்ள அறையில் அடைத்தது நினைவுக்கு
வந்தது. அந்தப் பந்தயத்தின் நிபந்தனைகள்
– 15 வருடங்கள் அந்த அறையில் இருந்து வெளியே வரக்கூடாது. எந்த மனிதரையும் பார்க்கக்
கூடாது. மனிதர்களின் சத்தத்தைக்கூட கேட்கக் கூடாது. யாரிடம் இருந்தும் கடிதமோ, செய்தித்
தாள்களோ அனுமதி இல்லை. ஒரு இசைக் கருவியை வைத்திருக்கலாம்.
வேண்டிய புத்தகங்கள் படிக்கலாம். மது அருந்தலாம். புகை பிடிக்கலாம். அந்த அறையில் இருக்கும் ஒரே ஜன்னல் வழியாக மட்டும்
தனக்கு வேண்டிய இவை அனைத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் – தனக்கு
என்ன வேண்டுமோ அதை அல்லது அவன் சொல்ல நினைப்பதை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி அந்த ஜன்னல்
வழியாக அனுப்ப வேண்டும். எல்லா விஷயங்களும்
துல்லியமாக திட்டமிடப்பட்டது. மிகச் சரியாக
15 வருடங்கள் – நவம்பர் 14, 1870 ம் ஆண்டு 12 மணி முதல் நவம்பர் 14, 1885 ம் ஆண்டு
12 மணி வரை அந்த தனியறையில் இருக்க வேண்டும்.
ஒரு சில நிமிடங்கள் முன்பாக வெளியே வந்தால்கூட பந்தயத்தில் தோற்றதாகக் கருதி,
2 மில்லியன் பந்தயத் தொகையை இழக்க வேண்டிவரும் என்ற ஒப்பந்தத்துடன் பந்தயம் தொடங்கியது.
பந்தயத்தின்
முதல் வருடம், அந்த இளைஞன் தனிமை தாங்காது மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆட்பட்டான். அந்த அறையில் இருந்து பியானோ கருவியின் இசை இரவு
பகலாகக் கேட்டுக் கொண்டே இருந்தது. அவன் மதுவையும்,
சிகரெட்டையும் மறுத்தான். மது ஆசைகளைத் துாண்டிவிடுவாதகவும்,
அந்த ஆசைகள் தனிமைக்கு பெரிய எதிரியாக இருப்பதாகவும், எழுதியிருந்தான். மேலும் மனிதர்கள் அருகில் இல்லாமல் நல்ல மதுவை அருந்துவதைவிடக்
கொடுமை ஒன்றுமில்லை என்றும் கூறியிருந்தான்.
தவிர புகை பிடிப்பதால் அந்த அறையின் காற்று கெட்டுவிடுவதால் புகைபிடிக்க விரும்பவில்லை
என்றும் எழுதியிருந்தான். சில நாவல்களையும்,
படிப்பதற்கு சுலபமான சில புத்தகங்களையும் கேட்டிருந்தான்.
இரண்டாவது
வருடம், பியானோ இசைக் கருவியில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இப்போது இலக்கிய புத்தகங்களை கேட்டிருந்தான்.
5
வது வருடம் மீண்டும் பியானோ இசைக்கத் துவங்கியது. இப்போது மதுவைக் கேட்டிருந்தான். அந்த ஜன்னல் வழியாக பார்த்தபோது, அவன் சாப்பிடுவதும்,
குடிப்பதும், அந்த கட்டிலில் படுப்பதுமாக இருந்தான். அவ்வப் போது கொட்டாவி விட்டுக் கொண்டும், தனக்குள்
கோபமாக ஏதோ பேசிக் கொண்டும் இருந்தான். இப்போது
அவன் புத்தகங்களை படிக்கவில்லை. இரவு முழுவதும்
ஏதோ எழுதிக் கொண்டும், காலையில் எழுதியதை எல்லாம் கிழித்துப் போட்டுக் கொண்டும் இருந்தான். அடிக்கடி அந்த அறையில் இருந்து அவனது அழுகுரல் கேட்டுக்
கொண்டிருந்தது.
ஆறாவது
வருடத்தின் பிற்பகுதியில், அந்த இளைஞன் மீண்டும் ஆர்வமாக படிக்க ஆரம்பித்தான். இப்போது அவன் படித்தது – பல மொழிகள், தத்துவம்,
வரலாறு போன்றவை. சுமார் நான்கு வருடங்களில்
கிட்டத்தட்ட 600 க்கும் அதிகமான புத்தகங்களை அந்த செல்வந்தர் அனுப்பியிருந்தார். இப்போது அந்த செல்வந்தருக்கு அவனிடமிருந்து ஒரு
கடிதம் வந்திருந்தது. அதில் எழுதியிருந்தது
எனதருமை
ஜெயிலருக்கு, நான் இந்தக் கடிதத்தை ஆறு மொழிகளில் எழுதியிருக்கிறேன். இந்த மொழிகள் தெரிந்தவரிடம் இந்தக் கடிதத்தைக்
காட்டுங்கள். அவர்கள் அதில் ஒரு தவறும் கண்டுபிடிக்கவில்லை
என்றால் உங்கள் துப்பாக்கியால் வானில் சுட்டு எனக்குத் தெரியப் படுத்துங்கள். அதில் இருந்து என்னுடைய முயற்சி எதுவும் வீணாகவில்லை
என்று தெரிந்து கொள்வேன். எல்லாக் காலங்களிலும்,
எல்லா நாடுகளிலும் அறிஞர்கள் வெவ்வேறு மொழிகள் பேசினாலும், அதில் எரியும் அறிவுச்சுடர்
ஒன்றுதான். அந்த செல்வந்தர் தன் தோட்டத்தில் இரண்டு முறை சுட்டு அந்த இளைஞன் சொன்னது சரியென்று அவனுக்கு வெளிப்படுத்தினார்.
பத்தாவது
வருடத்திற்குப் பிறகு, அந்த இளைஞன் அவனுடைய மேஜை நாற்காலியில் அசையாமல் அமர்ந்து பைபிளை
மட்டும் படித்துக் கொண்டிருந்தான். அந்த செல்வந்தருக்கு
மிகவும் ஆச்சரியமாக இருந்தது – நான்கு வருடங்களில் 600 க்கும் அதிகமான புத்தகங்களைப்
படித்தவன் இப்போது ஒரு வருடம் முழுவதும் ஒரே சின்ன புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறானே
என்று.
கடைசி
இரண்டு வருடங்களில் அந்த இளைஞன் மீண்டும் பலவகையான புத்தகங்களைப் படித்தான். ஒருமுறை இயற்கை அறிவியலைப் படித்தால் இன்னொரு முறை
பைரன், ஷேக்ஸ்பியர் என்று படித்தான். மற்றுமொரு முறை, வேதியியல், மருத்துவம், தத்துவம்
என்று படித்தான். அவன் அப்படி படித்தது, கடலில்
உடைந்த கப்பலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவன் கையில் கிடைக்கும் எதையாவது பற்றி
தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது போல இருந்தது.
15
வருடங்களுக்குப் பிறகு கடந்த கால சம்பவங்கள் ஒவ்வொன்றாய் அந்த செல்வந்தருக்கு நினைவில்
வந்தது.
நாளை
12 மணிக்கு அந்த இளைஞனுக்கு விடுதலை கிடைத்துவிடும். ஒப்பந்தப்படி நான் அவனுக்கு 2 மில்லியன் பணத்தை
கொடுக்க வேண்டும். அப்படி நான் கொடுத்தால், என்னிடம் மிச்சம் ஒன்றுமிருக்காது. என்னுடைய
வாழ்க்கை சூன்யமாகிவிடும்.
15 வருடங்களுக்கு முன் இந்தப் பணமெல்லாம் எனக்கு ஒன்றுமேயில்லை. ஆனால் இப்போது என்னுடைய சொத்து அதிகமா அல்லது கடன் அதிகமா என்று யோசிப்பதற்கே பயமாக இருக்கிறது. பங்குச் சந்தை சூதாட்டம், நிதானமில்லாத கணக்கு வழக்கில்லாத செலவுகள் என்று என்னுடைய செல்வம் எல்லாம் இன்று ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. ஏன் இந்த சபிக்கப்பட்ட ஒப்பந்தத்தை போட்டேன் என்று தனக்குள் முனகிக் கொண்டிருந்தார் அந்த மனிதர். ஏன் அந்த இளைஞன் இத்தனை ஆண்டுகளில் இறந்திருக்கக் கூடாது. அவனுக்கு இப்போது 40 வயதுதான் ஆகியிருக்கிறது. என்னிடம் மிச்சம் இருக்கும் பணத்தையும் எடுத்துக் கொள்வான். திருமணம் செய்து கொள்வான், வாழ்க்கையை முழுவதும் அனுபவிப்பான். ஆனால் நான் ஒரு பிச்சைக்காரனைப் போல் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அவனோ என்னைப் பார்த்து ”உங்களுக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன், உங்களுக்கு நான் உதவுகிறேன்” என்று சொல்வான். அதை என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. அந்த இளைஞன் இறந்தால்தான் நான் திவால் ஆகாமல் இருக்க முடியும்.
அப்போது
கடிகாரத்தில் 3 மணி அடித்தது. அந்த நேரத்தில்
எல்லோரும் துாங்கிக் கொண்டிருந்தார்கள். வெளியில்
காற்றில் அசையும் மரங்களின் ஓசையைத் தவிர வேறு ஒரு சத்தமும் இல்லை. மெதுவாக பெட்டியில் இருந்து, 15 வருடங்களாக திறக்கப்படாமல்
இருந்த அந்த இளைஞன் இருக்கும் அறையின் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே
வந்தார் அந்த செல்வந்தர்.
அந்த
தோட்டம் மிகவும் இருட்டாகவும், குளிராகவும் இருந்தது. மழையும் லேசாக பெய்து கொண்டிருந்தது. வீசிக் கொண்டிருந்த குளிர் காற்று, மரங்களுக்கு
ஓய்வு கொடுக்காமல் இருந்தது. செல்வந்தருக்கு
அந்த இருட்டில் எதுவும் தெரியவில்லை. அவர்
அங்கிருந்தபடியே, காவலாளியை இரண்டு முறை அழைத்தார். எந்த பதிலும் வரவில்லை. குளிருக்கு அடக்கமாக காவலாளி எங்கோ ஒரு மூலையில்
துாங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
நான்
நினைத்த காரியம் நடந்தால், முதலில் காவலாளி மீதுதான் எல்லோருடைய சந்தேகமும் இருக்கும்
என்று நினைத்துக் கொண்டார் அந்த செல்வந்தர்.
அந்த
இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அந்த அறைக்கு அருகில் சென்று ஒரு சின்ன விளக்கை
ஏற்றினார். அந்த சிறிய வெளிச்சத்தின் மூலமாக
அந்த அறையைப் பார்த்த போது சீலிடப்பட்ட அந்த அறையின் பூட்டு அப்படியே இருந்தது.
ஒருவித
நடுக்கத்துடன் அந்த ஜன்னல் வழியாக அந்த அறையை எட்டிப் பார்த்தார் அந்த மனிதர். அந்த அறையில் ஒரு சிறிய மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்த மேஜையின் மீது சாய்ந்தபடி அந்த இளைஞன்
இருந்தான். படித்து முடிக்கப்படாமல் திறந்தபடி
பல புத்தகங்கள் எல்லா இடங்களிலும் சிதறி இருந்தது.
கொஞ்சம்கூட
அசையாமல் அந்த இளைஞன் அப்படியே இருந்தான்.
15 வருட தனிமை அதற்கு அவனைப் பழக்கப்படுத்தி இருந்தது. அந்த ஜன்னலை லேசாக தட்டிப் பார்த்தார் அந்த மனிதர். ஆனாலும் அந்த இளைஞனிடம் இருந்து எந்தவிதமான அசைவும்
இல்லை. இப்போது மெதுவாக அந்தப் பூட்டிலிருந்த
சீலை உடைத்து கதவைத் திறந்து உள்ளே சென்றார்.
கதவு கிறீச்சிடும் ஒலியைக் கேட்டு அந்த அறையில் இருந்து ஏதோ ஒரு சலனத்தை எதிர்பார்த்தவருக்கு
அப்படி எதுவும் இல்லாமல் அந்த அறை அமைதியாகவே இருந்தது. இப்போது இன்னும் அருகில் அந்த இளைஞனுக்கு அருகில்
சென்றார்.
அந்த
இளைஞன் எந்த சலனமுமின்றி அந்த மேஜையில் அமர்ந்திருந்தான். கிட்டத்தட்ட அந்த இளைஞன் எலும்பும் தோலுமாக ஒரு
எலும்புக்கூடு மாதிரி இருந்தான். தலைமுடியும்
தாடியும் பெண்களின் கூந்தல் போன்று நீண்டு வளர்ந்திருந்தது வெளிரி இருந்த அவனது முகமும், ஒல்லியான கைகளும்
பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருந்தது.
அவனைப் பார்ப்பவர்களுக்கு அவனுக்கு 40 வயதுதான் இருக்கும் என்று சொல்ல மாட்டார்கள். அவன் நன்றாகத் துாங்கிக் கொண்டிருந்தான். அந்த மேஜையின் மீது அவனது அழகான கையெழுத்தில் ஒரு
கடிதம் இருந்தது.
பாவப்பட்ட
ஜென்மம் இந்த இளைஞன் என்று எண்ணிக் கொண்டார் அந்த மனிதர். இரண்டு மில்லியன் பணத்தைப் பற்றி கனவு கண்டு கொண்டிருப்பான். இந்த இளைஞன் ஏற்கனவே பாதி மரணத்தில் இருக்கிறான். அவன் மீது ஒரு தலையணையை வைத்து லேசாக அழுத்தினாலே
எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவன் உயிர் பிரிந்து விடும். எந்த நிபுணரும் அதை சந்தேகக் கண் கொண்டு பார்க்க
மாட்டார்கள். அதற்கு முன் அந்தக் கடிதத்தில்
என்ன இருக்கிறது என்று பார்த்து விடலாம்.
அந்தக்
கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தது.
”நாளை
12 மணிக்கு எனக்கான சுதந்திரம் மறுபடியும் கிடைத்து மற்ற மனிதர்களுடன் உறவாட முடியும். ஆனால் இந்த அறையில் இருந்து வெளியே சென்று சூரிய
ஒளியை காண்பதற்கு முன் சில வார்த்தைகளை கூற வேண்டியிருக்கிறது. என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன் – எனக்கு
இந்த சுதந்திரமும், வாழ்க்கையும் வெறுப்பாக இருக்கிறது.
நான்
இந்த 15 வருடங்களில் இந்த உலகத்தைப் பற்றி மிகவும் ஆழமாக படித்து வந்துள்ளேன். நான் இந்தக் காலத்தில் இந்த உலகத்தையும், மனிதர்களையும்
பார்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த
புத்தகங்களின் மூலமாக நான் நறுமணம் மிக்க மதுவை சுவைத்திருக்கிறேன். பாடல்கள் பாடியிருக்கிறேன். காட்டில் மான்களையும் மற்ற மிருகங்களையும் வேட்டையாடி
இருக்கிறேன். பெண்களை காதலித்து இருக்கிறேன்.
அழகை ஆராதித்து இருக்கிறேன். கவிஞர்களும்
அறிஞர்களும் இரவில் என்னைத் தேடி வந்து என் காதில் அருமையான கதைகளைச் சொல்லி என் சித்தத்தை
கலங்கடித்திருக்கிறார்கள். இந்த புத்தகங்களின்
மூலமாக மலையுச்சிகளையும் பள்ளத்தாக்குகளையும் தரிசித்து இருக்கிறேன். அந்த மலையுச்சியில்
இருந்து வானத்தையும், கடலையும், தகதகக்கும் சூரியனின் கதிர்கள் பட்டு ஜொலிக்கும் மேகங்களையும்
தரிசித்து இருக்கிறேன். மலைகளை, காடுகளை, நதிகளை,
ஏரிகளை, மனிதர்கள் வசிக்கும் பிரதேசங்களை, இப்படி எல்லாவற்றையும் தரிசித்து உள்ளேன்.
நீங்கள்
கொடுத்த புத்தகங்கள் எனக்கு அறிவைக் கொடுத்திருக்கிறது. காலம் காலமாக மனிதர்கள் இடைவிடாமல் யோசித்துக் கொண்டிருந்த
எண்ணங்கள் என் மூளையில் பதிந்திருக்கின்றன.
உங்கள் அனைவரையும் விட இப்போது நான் அதிக ஞானமும் அறிவும் கொண்டவன்.
ஆனால்
இப்போது உங்கள் புத்தகங்களையும், அறிவையும், இந்த உலகத்தின் அத்தனை ஆசிர்வாதங்களையும்
வெறுக்கிறேன். இவையெல்லாம் ஒன்றுக்கும் உதவாத,
பயனற்ற, கானல் நீர் போன்று ஏமாற்றக் கூடியது.
நீங்கள் உங்களைக் குறித்து பெருமை கொள்ளலாம், அறிவாளி என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் மரணம் எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு
சென்றுவிடும். உங்கள் வரலாறு, அறிவு எல்லாம்
இந்த உலகத்தின் சுழற்சியில் எரிந்துவிடும் அல்லது உறைந்துவிடும்.
நீங்கள்
இந்த உலகத்திற்கு எதற்காக வந்தீர்களோ அதை மறந்து தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டீர்கள். உண்மைக்கு பதில் பொய்மையை எடுத்துக் கொண்டீர்கள். அழகான வாழ்க்யைத் தேர்ந்தெடுப்பதற்கு பதில் அருவருப்பை
தேர்ந்தெடுக்கிறீர்கள். நீங்கள் அதிசயிக்கக்கூடும்
– சில விசித்திரமான சம்பவங்கள் மூலம், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு மரங்களில் பழங்களுக்கு
பதில் தவளைகளும், பல்லிகளும் வளரலாம். ரோஜா
மலரின் நறுமணம் குதிரையின் வியர்வை போல நாற்றமடிக்கலாம்.
அதைப் போன்றுதான் நீங்களும் வாழ்வின் சொர்கத்தினை அனுபவிப்பதற்கு பதில் ஒன்றுமில்லாத
சுவையற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களை நான் புரிந்து கொள்ள விரும்பவில்லை.
உங்களது
இந்த அர்த்தமற்ற வாழ்க்கையை நான் விரும்பவில்லை என்பதை உங்களுக்கு நிருபிக்கும்விதமாக,
ஒரு காலத்தில் எந்த இரண்டு மில்லியன் பணத்திற்காக கனவு கண்டேனோ அந்தப் பணத்தை துறக்க
முடிவு செய்துவிட்டேன். அதற்கு சாட்சியாக இந்த
ஒப்பந்தம் முடிவுக்கு வருவதற்கு சில மணிநேரம் முன்பாகவே இங்கிருந்து வெளியேறி இந்த
ஒப்பந்தத்தினை மீறுகிறேன்”.
கடிதத்தைப்
படித்து முடித்ததும் அந்த செல்வந்தர் அந்த இளைஞனின் தலையில் மெதுவாக முத்தமிட்டு கண்ணீருடன்
அந்த அறையைவிட்டு வெளியேறினார். சூதாட்டத்திலும், வேறு பல வழிகளிலும் அவர் தன்னுடைய
பெரும் சொத்தை இழந்தபோதுகூட இந்த அளவுக்கு மனதில் பாரமும், குற்ற உணர்ச்சியும் ஏற்பட்டதில்லை. தன்னுடைய அறைக்கு சென்று கட்டிலில் படுத்தாலும்,
அவருடைய கண்ணீரும், துயர உணர்வுகளும் அவரைத் துாங்கவிடாமல் செய்தது.
மறுநாள் காலை அந்தத் தோட்டத்து காவலாளி வெளிரிய முகத்துடன் பதட்டத்துடன் ஓடி வந்து தயங்கியபடியே அந்த செல்வந்தரிடம் சொன்னார் – அந்த இளைஞன் ஜன்னல் வழியாக தப்பித்துச் சென்றுவிட்டதாக. அந்தக் காவலாளியுடன் சென்று அந்த அறைக்குச் சென்று அந்த இளைஞன் சென்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டார் அந்த செல்வந்தர். யாருக்கும் தேவையில்லாத சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க அந்த இளைஞன் எழுதியிருந்த மில்லியன் பணத்தைத் துறக்கும் கடிதத்ததை தன் இரும்புப் பெட்டியில் பத்திரப்படுத்திக் கொண்டார்.
--------
இந்தக் கதையை படித்தவுடன் எனக்குத் தோன்றியது இதுதான். மனிதன் மனிதர்களுடன் பழகியே பழக்கப்பட்டவன். மனிதர்களுடன் பழகாமலேயே இருந்துவிட்டால், அவனால் இயல்பாக வாழ முடியாது. எல்லா வகைப்பட்ட மனிதர்களுடன் வாழ்ந்து கொண்டே, நமக்கான தனிமையை தேவைப்படும்போது ஏற்படுத்திக் கொண்டு வாழ முடிந்தால், அந்த வாழ்வு கண்டிப்பாக ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வாகத்தான் இருக்கும். அத்தகைய வாழ்வு நம் எல்லோருக்கும் அமையட்டும்.
நன்றி !!
ReplyDeleteஉங்கள் எழுத்தின் மூலமாக ஆன்டன் பாவ்லோவிச் செகாவ் போன்ற தலை சிறந்த எழுத்தாளுமையை அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. தனிமையின் உக்கிரம் காலப்போக்கில் என்ன மாற்றங்களை நெடுங்காலத்தில் நிகழ்த்தும் என்ற யாரும் அறிய முடியா மனதின் படிநிலைகளை அறிய முடிந்தது. ஒரு நெடுந்தொடருக்கான மொத்த த்ரில் அனுபவமும் உள்ளடக்கிய அருமையான சிறுகதை. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நீங்கள் ரசித்த, வியந்த இக்கதையை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி. இப்பகிர்வு நீங்கள் ஆசிரியருக்கு செய்த நன்றி.
முகவுரை !!
கதைக்கான நீங்கள் கொடுத்த முகவுரை கதைக்கான த்ரில்லை கூட்டுகிறது. தேர்ந்தெடுத்த சொல்லாடல். கதைக்கான அடித்தளமாக முகவுரை, கதை நோக்கின் தெளிவுரை.
மொழிபெயர்ப்பு !!
மொழிபெயர்ப்பு டப்பிங் படமாக இல்லாமல் நேரடி தமிழ் படமாக இருந்தது சுவாரஸ்யம். கதைக்கான கரு கலையாமல் ஆன்டன் அவர்களின் நேரடி சொற்களாக விரவி நிற்கிறது எங்கும். மொழிபெயர்த்த வாடையும் இல்லை தடயமும் இல்லை. தமிழில் கதையை படிக்கும் போது அதே பரவச நிலையை கொடுத்ததில் உங்கள் எழுத்துக்கும் பங்குண்டு.
உங்கள் எழுத்தின் வளம், ஆளுமை வளர பெறுக செழிக்க வாழ்த்துகிறேன். நன்றி
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
ReplyDelete