Sunday, July 2, 2023

பாபிலோனின் செல்வந்தன்

 

சமீபத்தில் படித்த புத்தகம் ஜார்ஜ் எஸ் கிளாசன் (George S. Clason) என்பவர் எழுதிய “The Richest Man in Babylon” (பாபிலோனின் செல்வந்தன்) என்ற புத்தகம்.

பாபிலோனின் தொங்கும் தோட்டம் (Hanging Garden of Babylon) என்று பாடப்புத்தகத்தில் படித்திருப்போம்.  அதே பாபிலோன்தான்.  தற்போதைய ஈராக் நாடுதான் அந்த பாபிலோன். ஒரு காலத்தில் செல்வச் செழிப்புடன் இருந்திருக்கிறது.  அந்தத் தடயம் அந்த மனிதர்களிடம் இப்போதும் இருப்பதை காண முடியும்.   போரினால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் இப்போதும் ஈராக் ஒரு செழிப்பான நாடாகத்தான் இருந்திருக்கும்.

அந்த நகரில் ஆர்கட் என்ற ஒரு பெரும் செல்வந்தன் இருந்தான்.  அந்த நாட்டின் மன்னன் எப்படி ஆர்கட்டால் இந்த அளவுக்கு செல்வம் ஈட்ட முடிந்தது என்ற காரணங்களை அந்த ஊரில் இருக்கும் மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  அதற்கு இணங்க ”எப்படி ஒரு மனிதன் வளமாக வாழலாம்” என்பதற்கான அடிப்படை காரணங்களை ஆர்கட் விவரிப்பதுதான் இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகத்திலிருந்து சில முக்கியமான கருத்துக்களை நாமும் உள்வாங்கிக் கொண்டால் அது நமக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

இப்போது புத்தகத்திற்குள் செல்லாம்.

”இந்த உலகத்தில் பணத்தை வைத்துத்தான் ஒரு மனிதனின் வெற்றி கணக்கிடப்படுகிறது.  பணத்தைக் கொண்டுதான் இந்த உலகில் அனைத்து வசதி வாய்ப்புக்களையும் அனுபவிக்க முடியும்.  பணத்தை எப்படி சம்பாதிப்பது என்ற அடிப்படை விஷயத்தை புரிந்து கொண்டால் ஒருவருக்கு பணம் எப்போதும் தேவைக்கு அதிகமாகவே இருக்கும்.  ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாபிலோனில் வாழ்ந்த செல்வந்தர்கள் பணத்தை எவ்வாறு பெருக்கினார்களோ அதே வழிமுறைகள் இன்றைக்கும் பொருந்தும்.

எந்த ஒரு மனிதனும், தன்னுடைய அதிர்ஷ்டம் முழுவதையும் மற்றவருக்கு கொடுத்து விட முடியாது. 

ஒரு மனிதனின் செல்வம் என்பது அவன் வைத்திருக்கும் பணப்பையிலோ அல்லது பெட்டியிலோ மட்டும் இல்லை.  அதில் எவ்வளவு இருந்தாலும் அது மிக விரைவாக கரைந்துவிடும், அதை நிரப்பிக் கொண்டே இருக்கும் வழி தெரியாவிட்டால்.

வயதான நாக்கு எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டேதான் இருக்கும்.   ஆனால் ஒரு இளைஞன் வயதானவரிடம் வந்து ஆலோசனை கேட்கும்போது அவனுக்கு பல வருடங்களின் அனுபவப் பாடம் கிடைக்கக்கூடும்.  பல நேரங்களில் இளமைக்கு முதுமையின் அனுபவங்கள் புரிவதில்லை.  அதெல்லாம் அந்தக் காலம் என்று புறந்தள்ளிவிடுகின்றனர்.  அதனால் எந்தப் பயனும் இல்லை என்று நினைக்கின்றனர்.  ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.  இன்று பிரகாசமாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் இதே கதிரவன்தான் நம் முப்பாட்டன் இருந்தபோதும் ஒளிவீசிக் கொண்டிருந்தது.  நம்முடைய கொள்ளுப்பேரனோ அல்லது எள்ளுப்பேரனோ வாழும் காலத்திலும் வீசிக் கொண்டிருக்கப் போகிறது.

நீங்கள் செல்வந்தராக விரும்பினால், நீங்கள் எதை சேமிக்கின்றீர்களோ அந்தச் சேமிப்பும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கான வழிமுறையை நீங்கள் செய்தால்தான் நீங்கள் விரும்பிய வசதியை அடைய முடியும்.

செல்வம் என்பது ஒரு சிறிய விதையிலிருந்து ஒரு பெரிய மரம் வளர்வதைப் போல.  நீங்கள் அந்தச் சிறிய விதையை எவ்வளவு பொறுப்பாக நீர் ஊற்றி வளர்த்து மரமாக்குகிறீர்களோ அந்த அளவுக்கு அந்த மரத்தில் இருந்து பலன் பெற்று அந்த மரத்தின் நிழலில் இளைப்பாற முடியும்.

சந்தர்ப்பம் என்பது ஒரு திமிர் பிடித்த தேவதை (haughty goddess) – அவள் வாழ்க்கயில் முன்னேறத் தயாராக இல்லாதவர்களிடம் தன்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை.

செல்வம் ஈட்டுவதில் ஒருவன் எந்த அளவுக்கு தன்னுடைய சக்தியை பயன்படுத்துகின்றானோ அந்த அளவுக்கு செல்வம் சேரும்.  அப்படி உழைக்கும்போது, செல்வம் நாம் நினைப்பதைவிட பலமடங்கு நம்மிடம் வந்து சேரும். 

நான் ஈட்டும் பொருளின் ஒரு பகுதி எனக்கானது.  இதை காலை, மதியம், இரவு என்று முப்போதும் சொல்லுங்கள்.  இதன் பொருள் – நாம் ஈட்டும் பொருளை எல்லாம் செலவழித்துவிடாமல், நமக்காக கொஞ்சம் சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான்.

வாழ்க்கையை நன்றாக அனுபவியுங்கள்.  உங்களை அதிகம் வருத்திக் கொண்டு பொருள் சேர்க்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.  அதே நேரத்தில் பத்தில் ஒரு பகுதி வருவாயை உங்களால் கஷ்டப்படாமல் சேமிக்க முடியும் என்றால், அதை திருப்தியோடு செய்யுங்கள். 

வாழ்க்கையை இன்றும் நன்றாக அனுபவிக்க வேண்டும், எதிர்காலத்திற்குத் தேவையான செல்வத்தையும் சேர்க்க வேண்டும்.

நம்முடைய செல்வம் பெருக, கன்றாத வளமையுடன் வாழ, ஒரு ஏழு  வழிகளை ஆர்கட் கூறுவதாக இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 Start the purse fattening – உங்கள் பணப்பையை பெருக்கும் வழிகளை கண்டறிந்து கொண்டே இருங்கள்.

2. செலவுகளைக் குறைக்கவும் (Control the expenditures) – நம்முடைய அவசியமான செலவுகள் என்பது நமது வருமானத்திற்கு ஏற்ப அதிகரித்துக் கொண்டே வருவதை உணர்ந்திருப்பீர்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல.  நம்முடைய பல ஆசைகளையும் அவசியமான செலவுப் பட்டியலில் சேர்த்து விடுகிறோம்.  அதனால் அவதியும் படுகிறோம்.  நம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குள் நம்முடைய செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. Differentiate cherished desires from casual wishes என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.  அதாவது நாம் வாழ்க்கையில் அடைய விரும்பும் மிகவும் ஆசைப்படும் நியாயமான ஆசைகளுக்கும்  எல்லோரும் செய்வதை நாமும் செய்வோம் என்ற ஆசைகளுக்குமான வித்தியாசத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

3.     செல்வத்தை பெருக்கிக் கொண்டே இருக்கவும் – நம்முடைய செல்வம் என்பது இப்போது நம் கையில் இருக்கும் அல்லது வங்கியில் இருக்கும் பணம் மட்டுமல்ல.  எப்போதும் தொடர்ந்த வருமானம் இருக்கும்படியாக அதை சரியான வகையில் முதலீடு செய்வதும் முக்கியமானது.  அதைத்தான் நாம் துாங்கும் போதும் நம் பணம் வளர வேண்டும் என்று சொல்வார்கள்.

4.     ஈட்டிய செல்வத்தை அழிந்துவிடாமல் காத்தல் – நாம் உழைத்து ஈட்டிய பொருளை அழியாமல் காப்பது மிகவும் முக்கியம்.  எந்த வகையில் முதலீடு செய்தாலும், அசலாவது (principal) நமக்கு வரும்வகையில் நம் முதலீடு இருக்க வேண்டும்.  பேராசையால் அதிக லாபம் கிடைக்கும் என்று கடன் வாங்கியாவது முதலீடு செய்து, அசலும் இழந்து வருந்தும் பலரை நம் வாழ்க்கையில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

 5.     உங்கள் சேமிப்பை அசையா சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள்.  சொந்தமாக உங்களுக்கு ஒரு வீடோ அல்லது வேறுவகையில் அசையா சொத்துக்கள் இருந்தால், அதைக் கொண்டு வருவாயை பெருக்க முயற்சிக்க வேண்டும்.

 6.     வாழ்க்கையின் எதிர்காலத்திற்கு திட்டமிடுங்கள் – நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பது தெரியாது.  ஆனால் வாழும் காலம் வரையில் நம் சொந்த வருமானத்தில் வாழும்படி நம்முடைய வாழ்க்கையை திட்டமிடுவது மிகவும் முக்கியம்.

 7.     வருவாயை பெருக்கும் வழிகளை சிந்தித்து செயல்படுத்த வேண்டும் – நீங்கள் எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும்.  நீங்கள் இருக்கும் துறையில் நிபுணராக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கான வாய்ப்புக்கள் வந்து கொண்டே இருக்கும்.  உங்கள் கடனை எல்லாம் முடிந்தவரையில் சரியான நேரத்தில் திரும்பச் செலுத்திவிடுங்கள்.  திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால் கடன் வாங்காதீர்கள்.

எதையும் தள்ளிப்போடும் பழக்கம் (procrastination) இருந்தால் நம்மால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.  நம் எல்லோருக்கும் நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.  ஆனால் அதற்காக எத்தனை பேர் உழைக்கத் தயாராக இருக்கிறோம்.  நமக்கான எத்தனையோ வாய்ப்புக்களை நம்முடைய சோம்பல்தனத்தால் இழந்து கொண்டே இருக்கிறோம்.  அப்படி இழப்பதின் மூலம் நமக்கான எதிரியாக நாமே மாறிவிடுகிறோம்.

அதிர்ஷ்டம் என்பது நமக்கான வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்துவது. யார் அப்படி தனக்கான வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறார்களோ அவர்களிடம் அதிர்ஷ்ட தேவதை தானாக நெருங்கி வருவாள். தன்னை திருப்தியடைச் செய்யும் அத்தகைய மனிதர்களுக்கு எப்போதும் உதவ அந்த அதிர்ஷ்ட தேவதை தயாராகவே இருக்கிறாள்.  தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு, சலியாமல் உழைப்பவர்களிடம் அந்த அதிரஷ்ட தேவதை எப்போதும் வாசம் செய்வாள்.

நம் எல்லோருக்குமான வளம் இந்த உலகத்தில் நிறையவே இருக்கிறது.  அதை அனுபவிப்பதற்குத் தேவை நமது திறமையும், உழைப்பும்தான். 

இந்தப் புத்தகத்தை படித்தவுடன் என் நினைவுக்கு வந்த சில திருக்குறள்கள்:

”ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை  

போகாறு அகலாக் கடை” 

”வருமானம் வருகின்ற வழியானது சிறிதாக இருந்தாலும், அது செலவாகிப் போகும் வழியானது பெருகாதிருந்தால் அவனுக்குக் கேடில்லை”.

 ”நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்”.

”எதையும் காலம் கடந்து செய்யும் குணம், ஞாபக மறதி, சோம்பல், மிதமிஞ்சிய உறக்கம் ஆகிய நான்கும் கெட்டொழியும் இயல்புடையார் விரும்பி ஏறும் மரக்கலமாகும்”.

”இயற்றலும், ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லதரசு”.

”பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்” (இந்தக் குறள் நாட்டின் தலைவனுக்கு மட்டுமல்லாமல், குடும்பத் தலைவர்களுக்கும் பொருந்தும்).

No comments:

Post a Comment