Wednesday, July 15, 2020

காக்க காக்க




கந்த சஷ்டி பாடல் வரிகளை தரம் குறைந்து விமரிசித்து ஒருவர் பேச அது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பேசு பொருளாக ஆகியிருக்கிறது.

கந்த சஷ்டி கவசம் குறித்த அடிப்படை புரிதல் இன்றி அதன் பாடல் வரிகள் விமர்சிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழின் இலக்கிய அறிவு தேவைப்படாத சாதாரண மொழி அறிவு கொண்டவர் கூட ஒப்புக்கொள்வர்.

கந்த சஷ்டி கவசத்தை தொடர்ந்து படித்து வரும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அதனால்  பலன் அடைந்து இருப்பார்கள்.  இது தனிப்பட்ட ஒருவரின் நம்பிக்கை சார்ந்த விஷயம்.

கடந்த பல  ஆண்டுகளாக கந்த சஷ்டி கவசத்தை தொடர்ந்து படித்து பலன் பெற்றவன் என்ற வகையில் என் பார்வையில் கந்த சஷ்டி கவசம்  என்பது ஒரு மிகச் சிறந்த தன்னம்பிக்கை நூல்.

நான் பள்ளியில் படிக்கும் போது என் நண்பன் ஒருவன் "உனக்கு பயமாக இருக்கும்போது இதைப் படி" என்று என் கையில் ஒரு சிறிய கந்த சஷ்டி புத்தகத்தினை கொடுத்தான் (அவனுக்கு யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை).  அந்த வயதில் ஏதோ ஒரு காணத்திற்க்காக அடிக்கடி பயந்து அடிக்கடி கந்த சஷ்டி கவசம் படிக்க ஆரம்பித்தவன் இன்று பயப்படுவதற்கு ஒரு காரணம் இல்லை என்றாலும் தொடர்ந்து படித்து கொண்டிருக்கிறேன்.

நான் வளர்ந்து கந்த சஷ்டி கவசத்தினை முழுமையாக புரிந்து கொண்ட போதுதான் அது நம்பிக்கையுடன் படிப்பவர்களுக்கு எவ்வளவு தன்னம்பிக்கை கொடுக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.

கந்த சஷ்டி கவசத்தின் ஆரம்ப வரிகளை கவனித்தாலே அதன் நம்பிக்கை வார்த்தைகள் விளங்கும்.

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதங்களை எல்லாம் கடந்து நம்மில் பெரும்பாலோனர் நாம் செய்யும் நல்வினைகளும் தீவினைகளும் நம்மையும் நம் சந்ததியையும் பாதிக்கும் என்று அழுத்தமாக நம்புவர்கள் நாம்.  So ஆரம்ப வரிகளே நமக்கு நம்பிக்கை கொடுக்கிறது.  கந்த சஷ்டி கவசத்தை நாம் தொடர்ந்து சொன்னால் நம்முடைய வல்வினைகள் தீர்ந்து போய் விடும். நமக்கு செல்வம் கிடைக்கும்.  கண்ணை மூடி உட்கார்ந்தால் தியானம் சுலபமாக நமக்கு கை கூடும் என்று படிக்கும்போது உணமையில் நமக்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று ஆழ்ந்து அனுபவித்து சொன்னவர்கள் நம் முன்னோர்.  அந்த நோயற்ற வாழ்வை பிரார்த்திக்கும் வரிகள்தான் இந்த கந்த  சஷ்டி கவசத்தில் பெரும்பாலும் இருக்கும்.

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியாக காக்க வேண்டும் என்று வேண்டும் வரிகள் இதில் அதிகம். உதாரணத்திற்கு :

"நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க" 

சரி இப்படி ஒவ்வொரு உடலின் ஒவ்வொரு உறுப்பையும் காக்க காக்க என்று சொல்ல வேண்டுமா என்று கேட்கலாம்.

யோகாசன பயிற்சியின் கடைசியில் சாந்தி ஆசனம் செய்யும் போது கண்ணை மூடிக் கொண்டு உடலின் ஒவ்வொரு பாகமும் அமைதியும் ஓய்வும் அடைவது போல நினைக்கச் சொல்வார்கள்.  அதைத்தான் இந்த கந்த சஷ்டி படிக்கும் போதும் செய்கிறோம்.  

நாம் தொடர்ந்து எண்ணும் எண்ணங்கள் நமது ஆழ்மனதில் பதிந்து நமது உடலையும் நமது புறச்சூழலையம் மாற்றுகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமாக  பல விளக்கங்கள் உள்ளன.   கந்த சஷ்டி கவசம் அத்தகைய நேர்மறை எண்ணங்களைத்தான் நமக்குள் விதைக்கிறது.

கடவுளே இருக்கிறாரா இல்லையா என்பதே  விவாதத்துக்கு உரியது.  இதில் பேய் பூதம் என்றெல்லாம் தேவராய ஸ்வாமிகள் பயமுறுத்துகிறாரே - இது மூட நம்பிக்கை இல்லையா என்று சிலர்  கேட்கலாம்.  இதை நாம் வேறு கோணத்தில் சிந்திக்கலாம்.

பேய் பூதம் இருக்கிறதோ இல்லையோ - அது வேறு விஷயம் - நம்மில்  பலர் அத்தகைய விஷயங்களை நம்புகிறோமோ இல்லையா ?  அதெல்லாம் இருக்கிறதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்யத் தேவை இல்லை. அப்படி அவை இருந்தாலும் உன்னை எதுவும் செய்யாது என்று நம்மை தைரியமூட்டுகிறார்.

ஒரு தாய் தன் குழந்தைக்கு சாதம் ஊட்டும்போது "நீ சாப்பிடவில்லை என்றால் பூச்சாண்டி வந்துடுவான்" என்று சொல்லும் போது அந்த தாய்க்குக் தெரியும் பூச்சாண்டி என்று யாரும் இல்லை என்று.  குழந்தை சாப்பிட வேண்டும் என்பதற்க்காக சொல்லப்படும் வார்த்தைகள் அவை.

ரமண மகரிஷி அருணாச்சல அக்ஷரமணமாலையில் "என்போலும் தீனரை இன்புற காத்து நீ எந்நாளும் வாழ்ந்தருள் அருணாச்சலா" என்று இறைவனிடம் வேண்டுவார்.  ரமண மகரிஷியின் வாழ்வை அறிந்தவர்களுக்கு அவர் எவ்வளவு பெரிய ஞானி என்று தெரியும்.  அப்படிப்பட்டவர் தன்னை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்.  அந்த வார்த்தைகள் அவருக்காக எழுதப்பட்டவை அல்ல.  நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு எழுதப் பட்டவை.

அப்படித்தான் தேவராய ஸ்வாமிகளும் ஒரு சாதாரண பாமரன் பார்வையில் இருந்து இந்த கந்த சஷ்டி கவசத்தை நமக்கு கொடுத்திருக்கிறார்.  

ஒரு மனிதனுக்கு உடம்பில் ஒரு குறையும் இல்லை என்றாலும் தனக்கு ஏதோ ஒரு நோய் இருக்கின்றது என்று நினைத்து பயந்து கொண்டிருந்தால் ஒரு நல்ல டாக்டர் சில வைட்டமின் மாத்திரைகளை மட்டும் கொடுத்து இதை தொடர்ந்து சாப்பிட்டு வா உன் நோய் தீர்ந்து விடும் என்று சொன்னால் எப்படி அதை நம்பி சாப்பிட்டு தன் நோயிலிருந்து விடுபட்டதாக அந்த மனிதன் நினைப்பானோ, அத்தைகய ஒரு மருந்தைத்தான் தேவராய ஸ்வாமிகளும் நமக்குள் கொடுக்கிறார்.

Mind over Matter என்று ஆங்கிலத்தில் சொன்னால் புரிந்தது போல தலை ஆட்டுகிறோம்.  அதையே எளிய தமிழில் வேறு வார்த்தைகளில் சொன்னால் கிண்டல் செய்கிறோம்.

மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால் கந்த சஷ்டி கவசம் என்பது ஒரு Psychology based Motivational Book (மனித மனம் சார்ந்த ஒரு தன்னம்பிக்கை நூல்)  அவ்வளவுதான். 

மதம்  பெயரிலோ  அல்லது கடவுளின்  பெயரில்  சமூகத்துக்கு எதிரான சடங்குகளை எதிர்ப்பது என்பது வேறு, தனிப்பட்ட மனிதர்களின் காலம் காலமான நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது என்பது வேறு.

கந்த சஷ்டி கவசம் குறித்த அடிப்படை புரிதல் இல்லாமல் அருவருப்பான விளக்கம் அளிப்பது பகுத்தறிவில் விழுந்த பெரிய ஓட்டை.

ரங்கராஜ் பாண்டே "பெண் ஏன் அடிமையானாள் ?" என்ற பெரியாரின் புத்தகத்தை விமர்சித்து மக்கள் மறந்திருந்த அந்தப் புத்தகத்தை மீண்டும் ஆயிரக்கணக்கானவர் படித்து தெளிவு பெற்றதைப் போல இப்போது கந்த சஷ்டி கவசத்தையும் இதுவரை படிக்காத இளைஞர்களும் படித்து கந்தன் அருள் பெறுவார்களாக.



No comments:

Post a Comment