ஆயிரம் பேர் புடைசூழ அலங்காரமாய்
வலம் வந்து ஆர்ப்பரித்த மனிதர்களைக் கூட
அனாதைகளாய் அனுப்பி விட்டாயே;
நடுவில் கொஞ்சம் பக்கத்தை மட்டும்
எடுத்து விடுவாய் என்று நினைத்தால்
இப்படி சில அத்தியாயங்களையே
பிடுங்கி எறிந்து விட்டாயே;
தலைக் கவசம் அணியாமல் போனாலும்
தப்பித்து விடலாம் - ஆனால்
முகக் கவசம் அணியாமல் போனால்
முடிவுரைதான் என்று முகத்தில் அடித்து
சொல்லிவிட்டாயே;
இரண்டு குழந்தைகளுக்கு இடையில்
மட்டும் அல்ல
இரண்டு மனிதர்களுக்கு இடையிலும்
இடைவெளி தேவை
என்று சொல்லி சொல்லி
social distancing-ஐ
untouchability லெவலுக்கு
மாற்றி விட்டாயே;
அலுவலக வேலையை வீட்டுக்கு எடுத்து
செல்லக் கூடாது என்று நினைப்பவர்களின்
வீட்டையே
அலுவலகமாக மாற்றி விட்டாயே;
ஆணும் பெண்ணுமாக களித்திருந்த
வாழ்க்கையை இப்போது
online - ம் pendrive - வுமாக
மாற்றி விட்டாயே;
அடம் பிடித்தவர்களை கொஞ்சம்
அப்படியும் இருக்கலாம் என்றும்
எப்படி வேண்டுமானாலும் இருப்பேன்
என்பவரை இப்படித்தான் இருக்க
வேண்டும் என்றும் ஒரே நேரத்தில்
கட்டிப் போட்டாயே;
அலோபதி, ஹோமியோபதி, சித்தா
ஆயுர்வேதா, யுனானி அனைத்தையும்
கலந்து அடித்தாலும் அடிநெஞ்சில்
ஒரு கலக்கத்தை அவ்வப்போது
மீட்டிச் செல்கிறாயே;
நாங்கள் இப்போதெல்லாம்
கனவிலும் அடிக்கடி கை கழுவிக்
கொண்டிருக்கிறோம் -
செல்போனில் பேசும்போது
இருமல் வந்தால் கூட
execuse me சொல்லி
கைக்குட்டையால் வாயை
மூடிக் கொள்கிறோம்
கிருமி நாசினியை
கிருமியைத் தவிர எல்லா
இடங்களிலும் தெளித்துக்
கொண்டிருக்கிறோம்.
கடைசியாக மனிதர்கள் சேர்ந்து
கொண்டாடியது 2020 புத்தாண்டு -
அடுத்த கொண்டாட்டம்
2021 புத்தாண்டாகவாவது
இருக்குமா ?
ஆண்டு பிறந்து ஆறு மாதங்களாகியும்
lock down என்று சொல்லியே எங்கள்
clock down ஆகி விட்டது
அடுத்த ஆறு மாதமாவது
வளர் பிறையாக மனித வாழ்வு இருக்கட்டும்.
உன்னை நினைத்து அலுத்துக் கொள்ள
ஆயிரம் விஷயம் இருந்தாலும்
ஆயிரத்து நூறு மீம்ஸ் போட்டு
வள்ளுவன் வழி நின்று
"இடுக்கண் வருங்கால் நகும்"
எங்கள் இளைஞர்கள் இருக்கும்வரை
இதையும் கடந்து செல்வோம்
எதிர்கால நம்பிக்கையுடன்.
No comments:
Post a Comment