Saturday, June 20, 2020

குறைவற்ற செல்வம்





கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறவில்லை என்று அரசாங்கம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தாலும், இப்போது அது சமூகத்தில் பரவலாக உள்ளது என்பதே உண்மை.   எப்போது கொரோனா நம்மை விட்டு முழுமையாக விலகும் என்பதை இப்போது வரை யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. சென்ற மாதம் வரை இன்னும் 3 நாட்களில் கொரோனா நம்மை விட்டு முழுமையாக விலகி விடும் என்று ஆருடம் சொல்லிக் கொண்டிருந்த நம்முடைய முதல்வரும் இப்போது செய்தியாளர் சந்திப்பில் இறைவனுக்குத்தான் தெரியும் கையைத் தூக்கிவிட்டார்.  

அரசியல் ரீதியாக அவர் சொன்னதற்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் உண்மையில் மனிதன் தம்முடைய சக்தியால் முடியாது என்ற நிலையில் இறைவனிடம்தான் சரணாகதி அடைகிறான்.  இறைவன் இருக்கின்றானா இல்லையா எனபதில் தர்க்க வாதங்கள் இருக்கலாம்.  ஆனால் இயற்கை இல்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த இயற்கையைத்தான் நம் முன்னோர்கள் இறை என்று நம்பி வழிபட்டார்கள்.

நம் வாழ்க்கையில் எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்கும் வரை நமது உடல் பலம் மீதும் அறிவின் ஆற்றல் குறித்தும் அளவுக்கு அதிகமாக நம்பிக்கை கொண்டு தன் சக்திக்கு மீறி ஒன்றும் இல்லை என்று மார் தட்டிக் கொண்டிருக்கும் மனிதர்கள் பலரும் வாழ்க்கை ஒரு சின்ன ஷாக் கொடுத்தாலும் ஆடிப்போய் விடுவார்கள்.   ஆனால் வாழ்க்கை இப்போது கொரோனா என்ற வடிவில் மிகப் பெரிய ஷாக் கொடுத்து மண்ணை ஆளும் அரசர்களையும் மண்டியிட வைத்திருக்கிறது.

ஆழிப் பேரலையில் மிகப் பெரிய கப்பல் கூட கவிழ்ந்து விடும்.  ஆனால் அதே நேரத்தில் சாதாரண கட்டுமரம் தட்டுத் தடுமாறியாவது கரை சேர்ந்து விடக் கூடும். அதைப் போல உலகின் மிகச் சிறந்த மருத்துவ வசதி கிடைத்தும் மனிதர்கள் கொத்துக் கொத்தாக இறந்து கொண்டிருக்கும் நிலையிலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத பலர் நம் ஊரில் இந்தக் கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கின்றனர்.

Survival of the fittest என்று சொல்வார்கள்.  இப்போது கொரோனா அந்த டெஸ்ட்டைதான் நமக்கு வைத்திருக்கிறது.

பொதுவாக நாம் பிறக்கும்போது fit ஆகத்தான் பிறக்கிறோம்.  ஆனால் வளர வளர மெதுவாக நம்முடைய fitness ஐ இழக்க ஆரம்பிக்கிறோம்.  பிறகு அதை Fitness Centre சென்றும் மீட்க முடியாமல் திண்டாடுகிறோம். 

Self Immunity எனப்படும் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திதான் இப்போதைக்கு கொரோனவுக்கான மருந்து.  இந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ள அனைவரும் கொரோனவை வெற்றி கொண்டு மீண்டு வந்திருக்கிறார்கள்.

நம் முன்னோர்கள் நமக்கு இயற்கையுடன் வாழும் வாழ்க்கையை சொல்லிக் கொடுத்ததன் நோக்கமே நாம் நம்மைத் தாக்கும் நோயை வெற்றி கொண்டு உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்பதுதான்.  நோயற்ற வாழ்வே குறைவற்ற  செல்வம்  என்றால் என்ன என்று மருந்துக்கும் மாத்திரைக்கும் மருத்துவமனைக்கும் கொட்டிக் கொடுப்பவர்களை கேட்டுப் பாருங்கள்.  புட்டு புட்டு வைப்பார்கள்.

திருமூலர் சொல்கிறார் :

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே‘

இதன் பொருள் :


நமது உள்ளம் ஒரு பெரிய கோவில்.  நமது உடம்பு ஒரு ஆலயம்.  நமது வாய்தான் அந்தக் கோவிலின் கோபுர வாசல்.  இதைச் சந்தேகம் இல்லாமல் தெளிந்தவர்களுக்கு, நம் உள்ளத்தின் உயிரே (ஜீவன்) சிவலிங்கம்.  கள்ளத் தன்மை  உடைய நம்முடைய புலன்கள் ஐந்தும் (கண், காது, மூக்கு, வாய், மெய்) நம்முடைய அறியாமை என்னும் இருட்டைப் போக்கும் விளக்கு.
இந்தப் பாடலின் ஆன்மிகப் பொருள் குறித்து இப்போது அதிகம் ஆராய வேண்டாம்.  நம்முடைய அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு இதில் இருந்து என்ன தெரிந்து கொள்ளலாம் என்று மட்டும் இப்போது பார்க்கலாம்.

நமக்கு கோவில் என்பது ஒரு புனிதமான இடம்.  நாம் அங்கு செல்லும்போது உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்போம்.  அத்தகைய கோவிலை நமது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒப்பிடுகிறார் திருமூலர்.  மலமும், சிறுநீரும், எச்சிலும், வியர்வையும் எப்போதும் சுரந்து கொண்டிருக்கும் உடலையும், யாருக்கும் தெரியாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கேவலமான எண்ணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் உள்ளத்தையும் எப்படி கோவில் அல்லது ஆலயம் என்றும் ஏற்றுக் கொள்ள முடியும் ?  முடியும் என்கிறார் திருமூலர்.

எப்படி கோவிலை புனிதமான இடம் என்று எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள நினைக்கிறோமோ அப்படி நமது உடலையும் உள்ளத்தையும் கோவிலாக நினைத்தால் நாம் தானாகவே அதை ஒழுங்காக கவனிக்க ஆரம்பித்து விடுவோம்.  சரி practical ஆக மனிதர்கள் திடிரென்று புனிதர்கள் ஆகிவிட முடியுமா ? அது அவ்வளவு சுலபம் இல்லைதான்.  அது தெரிந்துதான் திருமூலரும் கள்ளப் புலன்கள் அதாவது திருட்டுத்தனம் செய்யும் புலன்கள் என்று குறிப்பிடுகிறார்.  அனால் அதே நேரத்தில் சரியான தொடர்ந்த பயிற்சியின் மூலம் அந்தக் கள்ளப்புலன்கள் ஐந்தும் நமது வாழ்வில் நமக்கு வழி காட்டும் விளக்காக மாறிவிடும் என்றும் சொல்கிறார்.

அப்படி உடலையும் உள்ளத்தையும் ஒழுங்காக கவனித்துக் கொள்வதற்கு நமது முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்து சென்ற பயிற்சிகள்தான்  யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி என்பதெல்லாம்.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் கையையும் காலையும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆட்டிவிட்டு யோகாசனம் செய்து விட்டோம் என்றும், கண்ணை மூடிக் கொண்டு ஒரு பத்து நிமிடம் கண்டதையும் நினைத்து விட்டு தியானம் செய்து விட்டோம் என்றும் நம்மில் பெரும்பாலோர் நினைத்துக் கொள்வதுதான்.

அப்படி பேருக்காக அல்லது ஊருக்காக செய்யாமல், யோகாவை ஒழுங்காக கற்றுக் கொண்டு பொறுமையாக ஒரு சில மணி நேரமாவது தினமும் நம் உடல் என்னும் ஆலயத்துக்கு நாம் முதலீடு செய்தால் guaranteed குறைவற்ற செல்வம்தான்.

யோகா நம் நாட்டின் சொத்து.  இன்று அதை International Yoga Day என்று உலகம் கொண்டாடுகிறது.  நம் வரும் தலைமுறைக்கு யோகாவை முறையாக சொல்லிக் கொடுத்தால் கண்டிப்பாக வருங்கால இந்தியா இன்னும் அதிக வளமுடன் இருக்கும்.

சீக்கிரம் கொரோனாவின் தாக்கத்தில்  இருந்து விடுபட்டு எல்லோரும் நோயற்ற வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறையை வேண்டுவோம்.

அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்.








No comments:

Post a Comment