Sunday, October 3, 2021

அப்பத்தா – பாரதி கிருஷ்ணகுமார்

 

”வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய வள்ளலார் பிறந்த ஊரில், பயிர் வாடிய உடனே அந்த நிலத்தினை வீட்டு மனைகளாக்கி, அதற்கு வள்ளலார் நகர் என்று பெயரும் வைக்கும் ஊர் இது என்ற திரு. பாரதி கிருஷ்ணகுமாரின் வரிகளை மேற்கோள் காட்டி ”ரியல் எஸ்டேட்” தொடர்பான அடிப்படை சட்ட விளக்கங்கள் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.   நண்பர் திரு. வேடியப்பன் (டிஸ்கவரி புக் பேலஸ்) அவர்கள் அந்தக் கட்டுரையை பாரதி கிருஷ்ணகுமார் அவர்களிடம் ஒரு சந்திப்பில் காட்ட, பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் உடனே என்னை அலைபேசியில் அழைத்து ”யார் யார் சொன்ன கருத்தையோ தன் கருத்தாகவே சொல்லிக் கொள்ளும் மனிதர்கள் இருக்கும் உலகில், என்னுடைய வார்த்தைகளை என் பெயரிலேயே சொல்லி இருக்கும் உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்” என்று சொல்லி அந்தக் கட்டுரையை மனதாரப் பாராட்டினார்.   முன்பின் தெரியாதவர்களைக்கூட மனதாரப் பாராட்டும் பண்பு கொண்டவர்தான் பாரதி கிருஷ்ணகுமார்.   அவரிடம் இருந்து சில நாட்கள் முன்பு ஒரு செய்தி வந்திருந்தது.  அந்த செய்தி இதுதான்.  கொரோனா தீநுண்மிகளின் கொடுங்காலம் உண்டாக்கிய பேரிழப்பை ஈடு செய்யும் முயற்சியாக தன்னுடைய புத்தகங்களை வாங்கி படிப்பதற்கும் பரிசளிப்பதற்கும் வேண்டி அந்தப் புத்தகங்கள் குறித்த விவரங்களை அனுப்பியிருந்தார்.

செய்தியைப் படித்ததும் அவரிடமிருந்து சில புத்தகத் தொகுதிகளைப் பெற்று நண்பர்களுக்கு பரிசளித்தேன்.  அவரின் பாரதி குறித்த ”அருந்தவப்பன்றி” என்ற புத்தகத்தினை ஏற்கனவே படித்து அது குறித்து என்னுடைய வலைதளத்தில் 2014-ம் ஆண்டு பதிவு செய்துள்ளேன்.

ஆனால் ”அப்பத்தா” என்ற அவரின் சிறுகதை தொகுப்பை இப்போதுதான் படித்தேன்.

பாரதி கிருஷ்ணகுமாரின் நாவன்மையை பலரும் அறிந்திருக்கக் கூடும்.  தனது கரகரப்பான காந்தக் குரலால் அவர் பேசும் போது கேட்பவர்களின் கவனம் சிதறுவது மிகவும் குறைவாகவே இருக்கும்.  அவரது பேச்சின் இடையில் உங்களது உதடுகளில் புன்னகையும், கண்களில் நீரும் வந்து போவது ஒரு அனிச்சை செயலாக இருக்கும்.  அந்த அளவு மனம் உருகும் அளவு பேசுவார்.

பாரதி கிருஷ்ணகுமாரின் பேச்சுக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல அவரது எழுத்துக்கள்.   அவரது ஒரு பத்து சிறுகதைகளைத் தொகுத்து ”அப்பத்தா” என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார்.  பத்துக் கதைகளும் முத்துக் கதைகள்.  அவரது நண்பர் திரு. சுதா. இளங்கோவன் குறிப்பிடுவது போல ”அன்னைத்தமிழ் தன்னிடம் உள்ள வசீகர வார்த்தைகளை எல்லாம் இவருக்கு தாராளமாக அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறாள்”.

ஏன் மிகச் சிறந்த எழுத்தாளர்களை படிக்க வேண்டும் என்றால். அவர்கள்தான் நாம் படிக்காத பல புத்தகங்களைப் படித்து, கற்ற அந்த அறிவையும், தங்கள் அனுபவங்கள் மூலம் பெற்ற அறிவையும் கலந்து நமக்கு சுவையாக பரிமாறக் கூடியவர்கள்.  ஒரு புத்தகத்தினை படித்ததும் ஒரு அங்குலமாவது நம்மை மேம்படுத்த அந்தப் புத்தகம் உதவி புரிந்தால் அந்த எழுத்தும் எழுத்தாளனும் அந்தப் புத்தகத்தின் பயனை அடைந்து விட்டதாகத்தான் அர்த்தம்.  அப்பத்தாவைப் படிப்பவர்கள் அந்த அனுபவத்தினை உணர்வார்கள். 

எனக்கு எப்போதும் வாசிக்கும்போது எனக்குப் பிடித்த வரிகளை குறித்து வைத்துக் கொள்வது வழக்கம்.  அப்படி பிடித்த வரிகளை அடிக்கோடிடுவது என்பது அந்த எழுத்தாளனைப் பாராட்டி கைகுலுக்குவது போன்றது என்று கவிஞர் நா. முத்துக்குமார் அவர்கள் தனது தந்தை சொல்வதாக குறிப்பிட்டு இருப்பார்.

அப்படி நான் பாரதி கிருஷ்ணகுமாரோடு கைகுலுக்கிய சில வரிகள் உங்கள் பார்வைக்கு -

”வலி என்பது வலியைப் பற்றிய ஒரு உயிர்த்துடிப்புள்ள எண்ணமே ஆகும்.  மனவலிமையின் துணை கொண்டு அந்த எண்ணத்தை விட்டொழித்தால் வலி மறைந்து போகும்” என்று அறிந்து உணர்ந்த டாக்டர் ஆந்திரேய் எபிமிச்சும்….

”பெண்ணுடம்பின் நுட்பங்களை ஆணால் எப்போதும் அறிந்து கொள்ளவே இயலாது.  அவளுள் நிகழும் மாற்றத்தின் வேகத்திற்கு ஓடிவரும் ஓர் ஆண் இன்றுவரை பிறப்பிக்கப்படவேயில்லை”

”எல்லாக் காயங்களையும் மருந்தின்றி குணப்படுத்தும் மருத்துவம் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எப்போதும் இருக்கிறது”

”உயிரின் சுழற்சியைத் தன் வாலால் உணர்த்தியபடி, கனத்த மரப் பல்லியொன்று பட்டுவை மென்று விழுங்கியது.  உயிர் உருவாவதும், விடுபடுவதும் நொடிகளுக்கும் குறைவான நேரம்தான் போலும்”

”தன் வஞ்சகமெல்லாம் சாதுர்யமென்றும், பொய்களெல்லாம் உபாயங்களென்றும் பொருத்திக் கொண்டார் அப்பா.  அப்பாவின் மூர்க்கங்களுக்குப் பின்னே ஒரு குழந்தைத்தனமும் நிதானங்களுக்குப் பின்னே ஒரு பசித்த விலங்கும் இருந்தது”.

நீ சம்பாதிச்சு என்னைக் காப்பாத்த வேணாம்.  உன்னக் காப்பாத்திக்கிட்டா போதும் என்று எல்லா அப்பாக்களும் சொல்லும் வார்த்தையைக் கடைசியாகக் கண் கலங்கச் சொல்லிவிட்டு ஊருக்குப் போனார்.

ஒரு கை மணல் அள்ளினாலும் அதை ஆற்றில் எடுத்த இடத்திலேயே போடணும் என்பாள்.  மணல் ஆற்றுத்தாயின் மேலாடை என்றும் ஆற்றில் தண்ணீர் வருகிறபோது அவள் மேலாடை விலக்கி நமக்கு அமுதுாட்டுகிறாள் என்றும் அம்மா சொல்வாள்.

இப்படி இன்னும் நிறைய கைகுலுக்கிக் கொண்டே இருக்கலாம்.  கொரோனா காலம் என்பதால் அதிகம் கைகுலுக்குவதைத் தவிர்க்கிறேன் :)

நண்பர் பாரதி கிருஷ்ணகுமாருக்கு என்னுடைய ஒரு வேண்டுகோள்.   உங்கள் பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல மாட்டேன்.  ஆனால் உங்கள் எழுத்தை அதிகமாக்குங்கள்.  உங்களிடமிருந்து மிகச் சிறந்த நாவலையும் மேலும் பல சிறுகதைகளையும் எதிர்பார்க்கிறேன்.  நீங்கள் அடைய வேண்டிய உயரம் இன்னும் நிறைய இருக்கிறது.

வார்த்தைகளில் அலங்காரமான அறத்தினை போதித்துவிட்டு வாழ்க்கையில் பொய்களுக்கு சாமரம் வீசி பணத்துக்கு பஞ்சமில்லாமல் வாழும் பல எழுத்துப் பிழைப்பாளிகளுக்கு மத்தியில் தன் வார்த்தைகளிலும் வாழ்க்கையிலும் பாசாங்கு இல்லாமல் வாழும் பாரதி கிருஷ்ணகுமார் போன்றவர்கள் போற்றப் பட வேண்டியவர்கள் மட்டுமல்ல பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள.

பாரதி வாழ்ந்த காலத்தில் தமிழ்ச் சமூகம் பொருளாதார ரீதியாக அந்தக் கவிஞனுக்கு அதிகம் உதவவில்லை. அந்தக் காலத்தில் நிலவிய சூழலும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.   ஆனால் பாரதி கிருஷ்ணகுமார் வாழும் இந்தக் காலத்தில் தமிழ்ச் சமூகம் கண்டிப்பாக எல்லா வகையிலும் திரு. பாரதி கிருஷ்ணகுமாருக்கான அங்கீகாரத்தினை அளிக்கும் என்ற பெருநம்பிக்கை எனக்கு இருக்கிறது.


No comments:

Post a Comment