Saturday, April 23, 2016

நம் ஓட்டு யாருக்கு ?


இன்று (23/04/2016) The Hindu நாளிதழில் திருச்சி லால்குடி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் திரு. ஜெயசீலன் அவர்களைப் பற்றிய ஒரு செய்தி வந்திருந்தது.

25 வருடங்களுக்கு மேல் கட்சியில் உறுப்பினராக இருக்கும் 49 வயதான திரு. ஜெயசீலன் வசிப்பது வெறும் 210 சதுர அடி வீடு. இது வரை அவரது பெயரில் வங்கிக் கணக்கு இல்லை.  அவரது 76 வயது தாயார் 100 நாள் தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் ஒரு சாதாரண தொழிலாளி.  மனைவி தனியார் பள்ளி ஆசிரியை.

இவரும் முதுகலை பட்டம்  பெற்று இருக்கிறார்.

இதுவரை லால்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கிறார்.

ஒரு கட்சியில் சேர்ந்து சில வருடங்களிலேயே சொகுசு கார், ஆடம்பர வீடு என்று ஊரை வளைத்து உலையில் போடும் "மாண்புமிகுக்கள்" மிகுதியாக இருக்கும் நம் ஊரில், இன்றும் கட்சி ஊதியமாக அளிக்கும் சில ஆயிரம் ரூபாயில் தன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

25 வருடங்களுக்கு மேலாக மிகவும் simple ஆக வாழ்ந்த ஒருவர் கண்டிப்பாக தன்னுடைய பதவியையும் மக்கள் சேவைக்காகவே பயன்படுத்துவாரே தவிர கொள்ளை அடிக்கும் வியாபாரமாக நினைக்க மாட்டார்.

நாம் எந்த ஒரு கட்சியையும் சாராத நடு நிலை (??) வாக்காளராக இருந்தாலும், பொதுவாக நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கட்சியின் மீது அபிமானம் இருக்கும்.  அல்லது யார் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதை வைத்து அவருக்கு ஓட்டு போடுவோம். 

இந்த முறையாவது நம்முடைய தொகுதியில் நிற்கும் ஒவ்வொரு வேட்பாளரையும் அலசி ஆராய்ந்து யார் உண்மையில் தகுதியானவர் என்று நினைக்கிறோமோ அவர்களுக்கு நம் வாக்கை செலுத்துவோம்.  அவர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் பரவாயில்லை அல்லது அவர்கள் வெற்றி அடைய வாய்ப்பு இல்லையென்றாலும் பரவாயில்லை. 

ஜெயசீலன் போன்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவது நாட்டுக்கும் நமக்கும் நல்லது.