சென்ற வாரத்தில் ஒரு நாள் வணிகமணி ஆசிரியா்
திரு. வீர ஆறுமுகம் அவா்கள் அலைபேசியில் அழைத்து ”சார் 9-ம் தேதி சென்னையில் இருக்கீங்களா
?” என்று கேட்டார். ”சென்னையில்தான் இருக்கிறேன்.
என்ன சார் விஷயம் ?” என்றேன். ”தமிழ்நாடு இதழ்கள்
வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் ”பயன் எழுத்துப் படைப்பாளி” என்ற விருதுக்கு உங்கள்
பெயரை பரிந்துரை செய்துள்ளேன்” என்று சொன்னார்.
நான் வணிகமணி இதழில் நிறுவன சட்டம் (Companies
Act) தொடா்பாக சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொடா் எழுதியுள்ளேன். அதைத் தவிர
என் நண்பர் வழக்கறிஞா் திரு சுரேஷ்குமாருடன் இணைந்து ரியல் எஸ்டேட் சம்பந்தமாகவும்,
இப்போது GST சம்பந்தமாகவும் தொடா் கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
இதைத்தவிர கைலாய மலை பயணம் குறித்த என்னுடைய
அனுபவத்தினை புத்தகமாகவும், தியானம் குறித்து ”மகிழ்ச்சியின மந்திரம்” என்ற புத்தகத்தையும்
எழுதியுள்ளேன்.
நிற்க.
இப்படி சில புத்தகங்களையும், சில தொடா்களையும் எழுதிவிட்டதால் நான் என்னை ஒரு
ஒரு படைப்பாளியாக இதுவரை நினைத்தது இல்லை.
ஏனென்றால் என்னை ஒரு முழுமை பெற்ற வாசகனாகவே இன்னும் கருதவில்லை. நான் படிக்க வேண்டும் என்று வாங்கி இன்னும் படிக்காமல்
இருக்கும் புத்கங்களை என்னுடைய வீட்டு அலமாரியில் பார்க்கும்போது படிப்பாளி ஆவதற்கே
“miles to go before I sleep” என்று இருக்கும்போது ”படைப்பாளி” ஆவதற்கு இன்னும் எத்தனை
மைல்கற்களை கடக்கவேண்டுமோ.
ஆனாலும் ”தமிழ்நாடு இதழ்கள் வெளியீட்டாளர்
சங்கம் வழங்கிய ”பயன் எழுத்துப் படைப்பாளி” என்ற விருதினை என் படைப்புக்கான அங்கீகாரமாக
இல்லாமல் இன்னும் நிறைய பயன் உள்ள படைப்புக்களை படைக்க வேண்டும் என்பதற்கான உத்வேகமாக
இந்த விருதினை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டேன்.
கடந்த 9-02-2018 அன்று சென்னை அண்ணாசாலையில்
உள்ள தேவநேய பாவாணா் நுாலக அரங்கில் ”பயன் எழுத்து படைப்பாளி” என்ற விருதினை தமிழக
அமைச்சா்கள் திரு. செங்கோட்டையன் மற்றும் திரு. கடம்பூா் ராஜு அவா்கள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய புலவா் திரு இராமலிங்கத்தின்
பேச்சு மிகவும் நகைச்சுவையாகவும் சிந்திக்க வைக்கும்படியும் இருந்தது. அமைச்சா்கள் வருவதற்கு கொஞ்சம் (நிறைய) தாமதமானதால்
அவரது பேச்சை நீட்டிக்க கேட்டுக்கொண்டபோது அதை அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் கையாண்டது
ரசிக்கும்படி இருந்தது.
அவரது பேச்சின் ஒரு பருக்கை.
ஒரு மாணவன் ஒருவன் தன்னுடைய பாட்டி இறந்து
விட்டார் என்று விடுப்புக் கடிதம் கொடுத்தானாம்.
ஆசிரியரும் சரி என்று விடுப்பு கொடுத்தார். அடுத்த மாதமும் அதே காரணத்தை சொல்லி விடுப்பு கேட்டானாம்
அந்த மாணவன். சரி பாட்டிக்கு சகோதரி யாராவது
இருக்கலாம் என்று மீண்டும் விடுப்பு கொடுத்தாராம். அதற்கு அடுத்த மாதமும் அதே காரணத்தைச் சொல்லி மீண்டும்
விடுப்பு கேட்டானாம் மாணவன். இப்போது ஆசிரியருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. ”டேய் என் கோபத்தை கிளராதே. என்னைப் பற்றி உனக்குத்
தெரியாது. உண்மையைச் சொல்” என்றாராம்.
மாணவன் பதட்டப்படாமல் சொன்னானாம் ”சார் உங்களுக்கும்தான்
என்னுடைய தாத்தாவைப் பற்றி தெரியாது” என்று.
எழுத்து அல்லது பேச்சு என்பது ஒரு சில வாக்கியங்களில்கூட
நம்முடைய பல சிந்தனைகளை கிளறிவிடக்கூடும்.
இதைக் கேட்டபோது கவிஞா் நா.முத்துக்குமார் எழுதிய
கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. அந்தக் கவிதையில் வரும் தாத்தா போட்டோ எடுத்தால் ஆயுள்
குறையும் என்ற நம்பிக்கை இருந்த காலத்தில் வாழ்ந்தவா். அதனால் அவருடைய புகைப்படம் ஒன்றுகூட இல்லாததால்,
அவருக்கு உடல்நலம் சரியில்லாதபோது எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படத்தை வைத்து பூஜை செய்து
வந்தார்கள் அவருடைய குடும்பத்தினா். இந்தக் கவிதையின் கடைசி வரியை மிகவும் ரசித்தேன். நாம் வாழும் (அல்லது active-ஆக வாழும்) 60 அல்லது
70 வருடங்களுக்குள் நாம் ஆடும் ஆட்டத்தின் அதிகப் பிரசங்கித்தனத்தை ஒரு சில வார்த்தைகளில்
நம் மனதில் தைத்துச் சென்று விட்டன இந்தக் கவிதை வரிகள். இதோ அந்தக் கவிதையின் சில வரிகள் உங்களுக்காக.
பாட்டியின்
நினைவில் மட்டுமே
உயிர்வாழும்
தாத்தா
நாங்கள்
பிறப்பற்கு முன்பே
இறந்து
போயிருந்தார்.
புகைப்படம்
எடுத்தால்
ஆயுள்
குறையுமென்று நம்பியதால்
அவரது
உருவம்
பாட்டியின்
கண்களைத்தாண்டி
எங்கள்
கண்களுக்கு வரவேயில்லை.
வேறு
வழியில்லாததால்
தாத்தா
நோயுற்றபோது எடுத்த
நெஞ்சுப்பகுதி
எக்ஸ்ரே படம்
செல்லரித்து
மங்கிய நிலையில்
சட்டமிடப்பட்டு
தலைமுறைகளைத்
தாண்டி
சுவரில்
தொங்கிக் கொண்டிருந்தது.
தாத்தாவின்
படம்
பரணுக்குப்
போவதற்கு முன்பு
நடந்த
சம்பவம் இது.
மரங்கள்
கறுப்பு உமிழ்ந்த
இரவின்
அகாலத்தில்
யாரோ
கோபமுடன் கத்தும்
சத்தத்தைக்
கேட்டு
எல்லோரும்
விழித்துப்
பார்த்தோம்.
நாங்கள்
இருப்பதை அறியாமல்
கூடத்தில்
பாட்டி
தாத்தா
படத்தைப் பார்த்து
சத்தம்
போட்டுக்கொண்டிருந்தாள்.
”இந்த
எலும்புக்கா
இத்தனை
ஆட்டம் ?
என்னைப்
பொருத்தவரை பயன் எழுத்து என்பது இதுதான். ஒரு
சில வரிகளும் வாழ்க்கை குறித்த நமது சிந்தனைப் போக்கை மாற்றலாம்.
”பயன்
எழுத்து படைப்பாளி” விருதுக்கு என்னை பரிந்துரை செய்த வணிகமணி ஆசிரியா் திரு. வீர ஆறுமுகம்
அவா்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
விருது
வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் (Photo Courtesy-S.Gokul)