Sunday, June 24, 2018

வழி



மனதின் பலவீனமான நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் அல்லது நமது செயல்கள் எப்படி நம்மை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுவிடும் என்பதை அடிநாதமாக  கொண்டு சொல்லப்பட்ட கதைதான் சுந்தர ராமசாமியின் ”வழி” என்ற சிறுகதை.

இந்தக் கதையின் நாயகன் ஒரு மலையருவியில் குளித்துவிட்டு வரும்போது பக்கத்தில் எங்கோ மிருகங்கள் புணரும் சத்தம் கேட்டவுடன் அந்தக் காட்சியை காணும் ஆவலுடன் அந்த சத்தம் வரும் திசையை நோக்கி செல்லத் துவங்குவான்.

எப்போதும் நாம் ஒரு தவறான வழியில் செல்ல முற்படும்போது, இயற்கை அதை ஏதோ ஒரு வகையில் நமக்கு உணா்த்த முயலும்.  நமது மனதின் பலவீனத்திலிருந்து அப்போது நம்மால் வெளியே வர முடிந்தால் நமக்கு வரக்கூடிய ஆபத்திலிருந்து நம்மால் தப்பித்துக் கொள்ள முடியும்.

இந்தக் கதையிலும் கதையின் நாயகனுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.  இவனுடன் அருவியில் குளித்துவிட்டு தலை துவட்டிக் கொண்டிருந்த பெரியவா் ஒருவர், இவன் அருவியின் பின்பக்கம் செல்வதைப் பார்த்துவிட்டு ”வேண்டாம் ஐயா” என்பார்.

”அந்தக் குரலும் அதில் தோய்ந்திருந்த வேண்டுதலும் அன்பும் இப்போதும் என் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.  அந்தக் குரலைத் தாண்டி நான் சென்ற நிமிஷத்தில் பிசகு நிகழ்ந்தது.  அதன் பின் என் அடிச்சுவடுகள் குரங்குகள் விளையாடிய நுால் கண்டு மாதிரி சிடுக்காகி விட்டன.

ஒரு சில எட்டுகளில் புணர்ச்சியின் காட்சி சொரூபம் கிடைத்துவிடும் என்ற கிளுகிளுப்பின் எச்சிலை மனது நக்கியது எவ்வளவு தவறு என்பது இப்போது தெரிகிறது”.

காடு எந்த அளவுக்கு அழகானதோ, அதை விட அதிகம் ஆபத்துக்கள் நிறைந்தது.

நம் மலைப்பயணங்களில் தூரத்தில் யானைக்கூட்டம் பார்ப்பதற்கு எவ்வளவு பரவசம் தருமோ அதை விட அதிக கிலியை தரும் அவை நாம் செல்லும் பாதையின் குறுக்கே வந்து நம்மை பயமுறுத்தினால்.  மழைக்காற்றின் சுகத்தினை அனுபவிக்க கீழே இறங்கி நின்ற நேரத்தில் காலில் ஏறி நம் இரத்தத்தினை உறிஞ்சம் ஒரு அட்டைகூட நமக்கு மரணபயத்தினை கொடுக்கலாம்.

காட்டில் வழி தவறி சிக்கிக் கொண்டால் அதிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதல்ல.  நாம் நன்கு பழகிய நம் வீட்டிலேயே திடீரென்று மின்சாரம் தடைப்பட்டால் வாசல் என்று நினைத்து சுவற்றில் முட்டிக் கொள்வோம். மனித நடமாட்டமே இல்லாத மிருகங்கள் மட்டுமே சஞ்சரிக்கும் காட்டில் எப்படி இருக்கும். நகரமே பகலில் ஒரு மாதிரியும் இரவில் வேறுமாதிரியும் இருக்கும்.  காட்டின் இரவு இன்னும் அதிக ஆபத்துக்கள் நிறைந்தது.

இந்தக் கதையின் நாயகன் வெளியே வரும் பாதை என்று நினைத்து அடா்ந்த காட்டின் உள்ளே சென்று மாட்டிக்கொள்வான். அவனுக்கு இருப்பது பகலின் சில மணிநேரங்கள்தான்.  அதற்குள் அந்தக் காட்டிலிருந்து வெளிவரா விட்டால் அவனுடைய உயிருக்கே அது மிகவும் ஆபத்தாகிவிடும். அந்த அவஸ்தைகளை விளக்குவதும் பின் அதிலிருந்து மீண்டு வருகிறானா என்பதும்தான் கதை.

இந்தக் கதையில் காட்டின் வர்ணணைகளும், கதையின் இடையிடையே கதை நாயகனின் எண்ண ஓட்டங்களுமே கதையினை நகர்த்திச் செல்கிறது.

மிருகங்கள் வாழும் காட்டையும், மனிதா்கள் வாழும் நாட்டையும் ஒப்பிட்டுச் சொல்லுமிடத்தில் நான் சுந்தர ராமசாமியை ரசித்தேன்.

”காடு அந்தகாரத்தின் அடா்த்தி கொண்டிருந்தாலும், ஆபத்துக்களின் களி நிலம் என்றாலும், ஊா்களை விட அவை மோசமானவை என்று சொல்ல முடியாது.  அறிய அறிய மிருகங்களும் பறவைகளும் நியதிகளும் ஒழுக்கங்களும் நோ்மையும் கொண்டவையாக மாறும்போது, அறிய அறிய மனிதர்கள் அறிய முடியாத சிக்கல்களை கொண்டிருக்கிறார்கள் என்றுதான்படுகிறது.  மிருகங்களுக்கு வழிவிட்டு மனிதன் வாழத் தெரிந்துகொள்ளும்போதுகூட, மனிதர்களுக்கு வழிவிட்டு ஊர்களில் எப்படி வாழ்வது என்பது மனிதனுக்குத் தெரியவில்லை.”

அதைப்போலவே எப்படியும் பிழைத்து அந்தக் காட்டிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற தீராத மன உறுதியை கதையின் நாயகன் வெளிப்படுத்தும் இடத்தையும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளில் எழுத்தாளர் வெளிப்படுத்தியிருப்பார்.

”என் உள்மனதில் எரிந்துகொண்டிருக்கும் ஜ்வாலை அணையாமல் இருந்தால் உணவற்ற நிலையிலும் உடல் வலியிலும் ரணங்களிலும் நான் நடந்து கொண்டுதான் இருப்பேன். நான் வாழ்ந்தாக வேண்டும்.  நான் யாருக்காகவும் என் வாழ்க்கையை இழக்க முடியாது”.

எழுத்தின் வலிமை என்பது இதுதான்.  இந்தக் கதை 1986-ம் ஆண்டு கொல்லிப்பாவை என்ற இதழில் வெளிவந்தது.  ஆனால் இப்போதும் எப்போதும் எங்கோ படிக்கும் வாசகனுக்கும் அதிலிருந்து ஒரு நம்பிக்கை கீற்று வெளிப்படலாம்.