Thursday, March 12, 2020

ஆன்மீக அரசியல்

ஆன்மீக அரசியல்


திரு. ரஜினிகாந்த் அவர்களின் ஆன்மீக அரசியல் உதயத்திற்கு முன்பே அஸ்தமனமாகிவிட்டதா என்று நினைக்க வைத்தது அவரின் இன்றைய (12/03/2020) பிரஸ் மீட்.  பத்திரிகையாளர்களை அழைத்து தன்னுடைய ரசிகர்   மன்ற நிர்வாகிகளிடம்  பேசுவது போல பேசியதற்கு பிரஸ் மீட் என்பதற்கு பதில் பிரஸ் டாக் என்று பெயர் வைக்கலாம் (Press என்பதற்கு  அழுத்தம் என்றும் அர்த்தம் என்பது  நமக்குத் தெரியும். பாவம் அவருக்கு என்ன அழுத்தமோ ?).

நான் ரஜினியின் தீவிர ரசிகன் கிடையாது.  ஆனால் பஸ் கண்டக்டர் போன்ற சராசரி மனிதர்கள்கூட வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதற்கு என்னைப் போல பலருக்கும் மிகப் பெரிய inspiration ஆக இருந்தவர் - இருப்பவர்.

அவர் அரசியலில் முழுமையாக இறங்கி மக்களுக்கு சேவை செய்வார் என்று கனவிலும் நினைக்காத லட்சக்கணக்கான (அல்லது ஆயிரக்கணக்கான) மக்களில் நானும் ஒருவன்.

ரஜினிீ அவர்கள் தன்னுடைய ஆன்மீக அரசியலைத் தானே ஒழுங்காக புரிந்து வைத்துள்ளாரா என்பதே மிகப் பெரிய சந்தேகம் உள்ளது. நம்முடைய மக்கள் ஆன்மிகம் என்ற வார்த்தைக்கே ஆத்திகம், பக்தி, மதம் என்று பலவாறு குழப்பிக் கொள்கின்றனர்.  

"நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?"

என்று சொன்ன சிவவாக்கிய சித்தர் நாத்திகரா ஆத்திகரா ?

உண்மையான ஆன்மீகம் என்பது  தன் உள் இருக்கும் இறைவனே எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறான் என்று உணர்ந்து உள்ளத்தை விரிவடையச் செய்வதே என்று பல அருளாளர்கள் சொல்லி இருக்கின்றனர்.  அதனால்தான் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரை மிகப் பெரிய ஆன்மீக வாதியாக நாம் கொண்டாடுகிறோம்.  

இந்த ஆன்மீகத்தை கொஞ்சம் அப்படியே அரசியலுக்கு மடை மாற்றுவோம்.  அரசியலில் ஆன்மீகத்தை கலக்க முடியுமா ?  கண்டிப்பாக முடியும்.  அதற்கு அடிப்படை மூன்று விஷயங்கள்தான் - 1) தனிமனித வாழ்வில் எளிமை 2) பொது வாழ்வில் தூய்மை 3) மக்களிடம் மாறாத அன்பு.

தமிழக அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில் இந்த மூன்று அம்சங்களையும் கொண்டிருந்த தலைவர்களாக நான் நினைப்பது. காமராஜர் மற்றும் அண்ணா அவர்களைத்தான். அண்ணா கூட ஆட்சி அதிகாரத்தில் அதிக காலம் இல்லை.  அதனால் காமராஜர் அவர்களைத்தான் முழுமையான ஆன்மீக அரசியல் செய்தவர் என்று சொல்வேன்.  

சரி ரஜினியும் இப்படிப் பட்ட சில விஷயங்களைத்தானே முன் வைக்கிறார் என்று சிலர் நினைக்கலாம்.  ஆனால் சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.  நாம் சொல்லும் அல்லது நினைக்கும் எத்தனை கருத்துக்களை நம் வாழ்வில் கடைபிடிக்கிறோம் என்பதில்தான் சராசரி வாழ்விற்கும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குமான வித்தியாசம் இருக்கிறது.

இந்த நேரத்தில் காமராஜர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களையும் ரஜினி அவர்களின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமாகிறது.

காமராஜர் திருமணமாகாதவர்.  அவர் முதல்வரான பிறகு அவருடைய தாயார் தன் மகனுடன் இருந்து அவருக்குத் தேவையானதை சமைத்துப் போடலாம் என்று ஆசைப்பட்டார்.  அதற்கு காமராஜர் சொன்ன பதில் "நீங்கள் வந்தால் உங்களைத் தேடி நாலு பேர் வருவார்கள்.  அவர்களில் சிலர் என்னுடைய முதல்வர் பதவியை தவறாகப் பயன்படுத்தலாம்.  எதற்கு அதெற்கெல்லாம் இடம் கொடுக்க வேண்டும்.  தேவைப் படும்போது நானே வந்து உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லி விட்டார்.

அவர்தான் தமிழகம் எங்கும் பல தொழிற்சாலைகளை உருவாக்கி தொழிற்துறையில் தமிழகத்தை முன்னணியில் கொண்டு வந்தவர்.  அதில் கொஞ்சம் கமிஷன் வாங்கியிருந்தாலும் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்திருப்பார்.   ஆனால் அவர் இறந்த பொது அவரிடம்  இருந்தது ஒரு சில ஆயிரங்கள்கூட கிடையாது. 

அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றான் பாரதி.   ஆனால் அன்னத்தையும் அளித்து பல ஏழைகளுக்கு கல்வியையும் இலவசமாக அளித்து ஒரு அறிவார்ந்த சமூகத்தினை உருவாக்கியவர் காமராஜர்.

அந்த மாமனிதர் தேர்தலில் தோற்றபோது சொன்ன வார்த்தைகள் "காமராஜரும் தோற்பதுதான் ஜனநாயகம்".   

காமராஜருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா என்பது தெரியாது.  ஆனால் அவர் செய்ததுதான் உண்மையான ஆன்மீக அரசியல்.  அவர்  தேர்தலில் தோற்றும் இருக்கலாம்.  ஆனால் தனி மனித வாழ்வில் எளிமை, பொது வாழ்வில் தூய்மை, சக மனிதர்களிடம் மாறாத அன்பு என்று வாழ்ந்து காட்டியதின்  மூலம் இன்றும் அத்தகைய ஆன்மீக அரசியல் சாத்தியம்தான் என்று நமக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டிருப்பவர்.

ஆனால் திரு ரஜினி அவர்களால் அத்தகைய ஆன்மீக அரசியலை முன்னெடுக்க முடியாது.  அதற்கு அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களே உதாரணம்.

ரஜினியின் மனைவி தன்னுடைய வியபாரத்திற்கு வாடகை எடுத்திருந்த மாநகராட்சி கட்டிடத்தின் வாடகை பல வருடங்களுக்குப் பிறகு சில ஆயிரங்கள் உயர்த்தப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அதற்கு அவர் சொன்ன காரணம் தொழில் நலிவுற்ற நிலையில் உள்ளதால் அவரால் அந்த சில ஆயிரம் உயர்வைக் கூட தாங்க முடியவில்லையாம்.  பாவம்.  உயர்நீதிமன்றம் அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது. 

அதைப் போலவே அவரது பள்ளி நடக்கும் கட்டடத்திற்கு வாடகை சரியாக கொடுக்காமல் அந்த வழக்கும் நீதிமன்றம் சென்றது (இந்தப் பள்ளியில் சேர்வதற்கான கட்டணம் சில ஆயிரங்கள் அல்ல.  பல லட்சங்கள்).

பொது வாழ்வில் இருக்கும் ரஜினி அவர்கள் தன்னுடைய மனைவிக்கு சரியான அறிவுரை வழங்கி இதை தடுத்து இருக்க முடியாதா ?   

திரு சூர்யா போன்ற இளம் நடிகரே "அகரம் பவுண்டேஷன்" என்ற தொண்டு நிறுவனத்தினைத் தொடங்கி ஆயிரக்கணக்கான ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருக்கும்போது, உங்கள் ஒவ்வொரு துளி வியர்வைக்கும் தங்க காசுகளை கொடுத்த தமிழ் மக்களுக்கு நீங்கள் இதுவரை என்ன கொடுத்தீர்கள் ?

சிஸ்டம் சரியில்லை என்று சொல்லும் நீங்கள் உங்கள் வருமானத்திற்கு இதுவரை சரியான வரியை செலுத்தியுள்ளீர்கள் என்று மனசாட்சியுடன் பதில் சொல்ல முடியுமா ?  அப்படி இருந்தால் ஏன் வருமான வரித்துறை உங்கள் மேல் வழக்கு போட வேண்டும் ?   அல்லது நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் உங்கள் சொத்து விவரங்களை ஒளிவு மறைவு இன்றி சொல்ல முடியுமா ?

இப்போதும் உங்கள் பேச்சில் உங்கள் ரசிகர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் வார்த்தைகள்தான் அதிகம் தெரிகிறது.  உங்கள் தொண்டன் என்பவன் கல்யாண வைபவத்தில் வேலை செய்யும் சமையல்காரர்கள் மற்றும் வேலைக்காரர்கள் போன்று தேர்தலுக்கு வேலை செய்துவிட்டு நீங்கள் பதவியில் அமர்ந்ததும் விலகிவிட வேண்டும்  என்ற ரீதியில் உதாரணம் சொல்லி இருக்கிறீர்கள்.  அதை நீங்கள் உதாரணத்திற்கே சொல்லி இருந்தாலும் அதில் உங்கள் ஆதிக்க மனப்பான்மையை அம்பலப்படுத்திவிட்டிர்கள்.

நான் உங்களின் ஒரு படத்தைக் கூட பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்த ரசிகன் இல்லை. அதனால் என்னைப் போன்றவர்களுக்கு  நீங்கள் இப்படிச் சொன்னதில் எந்த வருத்தமும் இல்லை.  ஆனால் உங்களை தெய்வமாக நினைக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களை நீங்கள் அவமரியாதை செய்து விட்டீர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

நீங்களே சொன்னது போல உங்களால் சராசரி அரசியல்வாதியாக இருக்க முடியாது.  ஆன்மீக அரசியல் செய்வதற்கு உங்களுக்கு இன்னமும் அதிக தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.  அந்த தூரத்தைக் கடக்க உங்கள் ஆன்மீக குருக்களின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்.

அதுவரை ஊடகங்களின் "Breaking News" க்கு மட்டும் வந்து செல்லுங்கள்.