Friday, January 1, 2021

மனம் உணர்தல்

 

 

 

 

கடந்த வெள்ளியன்று (25.12.2020) டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் படைப்புக்களின் பதிப்பு உரிமையை Discovery Book Palace பெறும் விழா எளிமையாக நடைபெற்றது.  திரை இயக்குநர்கள் திரு விஜய், திரு அஜயன் பாலா, வழக்கறிஞர் திருமதி சுமதி, மற்றும் Discovery Book Palace திரு வேடியப்பன் இவர்களுடன்  இணைந்து பதிப்பு உரிமைக்கான ஒப்பந்தத்தினை நா.முத்துக்குமாரின் மனைவி திருமதி ஜீவலஷ்மி முத்துக்குமார், அவரது குழந்தைகள் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் பெற்றுக் கொண்டது மிகவும் மனநிறைவான நிகழ்வாக எனக்கு அமைந்தது.

காரணம் நா. முத்துக்குமார் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கவிஞர்.  அவரது வாழ்க்கையைப் போலவே அவரது எழுத்திலும் பாசாங்கு இருக்காது.  இன்னும் ஒரு பத்து பதினைந்து வருடங்கள் அவர் வாழ்ந்திருந்தால் இன்னும் பல இனிமையான பாடல்களும் கவிதைகளும் நமக்கு கிடைத்திருக்கும். 

மற்றவர்களுக்காக இல்லையென்றாலும் அவரது மனைவி குழந்தைகளுக்காவது அவர் இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்திருக்கலாம்.  ஆனால் ஒரு கதவு மூடப்படும்போது வேறு பல கதவுகள் திறக்கத்தான் செய்கிறது.  முத்துக்குமாரின் மகன் ஆதவன் இன்னொரு சிறந்த கவிஞனாக வருவதற்கான எல்லா அம்சங்களும் அவன் தன் தந்தை குறித்து வாசித்த கவிதையில் தெரிந்தது.  வாழ்த்துக்கள் ஆதவன்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்.  முத்துக்குமார் போன்ற கவிஞர்களும் அப்படித்தான்.  கண்டிப்பாக அவரது குடும்பத்திற்கும் அவரது குழந்தைகளின் படிப்புக்கும் தேவையான வருமானத்தினை அவரது எழுத்துக்கள் பெற்றுத் தரும்.

நான் இந்தப் பதிவை எழுதும் இன்று (1.01.2021), நா. முத்துக்குமாரின் 11 புத்தகங்களின் முதல் பதிப்பு வந்து விட்டது.  மொத்த விலை ரூ.1500/-.  சிறப்பு தள்ளுபடி போக ரூ.1100/- மட்டும் தான்.  தனித்தனியாகவும் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.  www.discoverybookpalace.com என்ற வலைதளத்தில் உங்களுக்குத் தேவையான புத்தகங்களை தனித்தனியாகவோ அல்லது மொத்தமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

ஆயிரம் ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்க வேண்டுமா என்று கூட சிலர் நினைக்கலாம்.  ஆனால் ஒரு வேளை lunch அல்லது dinner-க்கே ஆயிரக்கணக்கில் செலவு செய்யத் தயங்காத நாம், கையில் எடுக்கும் போதெல்லாம் நம் அறிவுப் பசியைத் தீர்க்கும் புத்தகங்களுக்கு செலவு செய்ய தயங்கக் கூடாது என்பது என் எண்ணம்.   புத்தகங்களுக்கு நாம் செலவு செய்யும் பணம் expense அல்ல அதுவும் ஒரு investment தான்.  நாம் வாசிக்கும் புத்தகத்தின் ஏதோ ஒரு வரிகூட நம் வாழ்க்கையை மாற்றலாம் அல்லது சோர்ந்திருக்கும் நேரத்தில் நமக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கலாம்.  தொடர்ந்த வாசிக்கும் பழக்கம் நம்முடைய மன அழுத்தத்தை குறைத்து வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலைத் தரும் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

நா. முத்துக்குமாரின் புத்தகங்களை வாங்குவது நமக்காக மட்டுமல்ல அவரின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் சேர்த்து என்பதால் இந்தப் பதிவை படிக்கும் அன்பர்கள் தங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கு பரிசாக கொடுப்பதற்கோ நா. முத்துக்குமாரின் புத்தகங்களை வாங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

சரி இப்போது முத்துக்குமாரின் ஒரு கவிதையைப் பார்க்கலாம்.  இந்தக் கவிதையின் தலைப்பே கிட்டத்தட்ட ஒரு சென் கவிதையைப் போல இருக்கிறது.

 

மனம் உணர்தல்

 

பாறையில் மோதும் மேகங்கள்

நீர்த்துளியாகச் சிதறி

சூன்யத்திற்குள் பயணிக்கும்

மலைக்குடில் ஒன்றில்

சீடர்கள் மூவர்

குருவிடம் கேட்டனர்

கடவுளுக்கு அருகில்

செல்வது எப்படி ?

 

உள்ளிழுத்த காற்றை

லயமாக வெளியனுப்பி

சீடர்களின் கேள்விக்கு

குரு பதில் சொன்னார் –

உங்கள் மனதின் எண்ணங்களை

ஒரு சில நொடிகள் உற்றுப்

பார்த்து

தோன்றியவற்றை

எழுதிக் கொண்டு வாருங்கள்.

 

நொடிகள் கடந்தன.

முதல் சீடன் எழுதினான்

பலா மரத்திலிருந்து

உதிரும் இலைகள்

வருத்தம் எதுவிமில்லை.

 

இரண்டாம் சீடன் எழுதினான்

கதவு திறந்தபின்

அறையின் இருட்டிடம்

வெளிச்சம் பேசும் ஓசை.

 

மூன்றாம் சீடன் எழுதினான்

குளிர், தேநீர்

எதிர் வீட்டுப் பெண்

எப்போதோ குடித்த மது

தற்கொலை

மலைப்பாதை நாய்

குருவுக்கு ஒற்றைக்கண்

கூர் தீட்டாத பென்சில்.

 

மூன்றையும் படித்த குரு

புன்னகையுடன் சொன்னார்.

முதலிரண்டு சீடர்களுடையது

ஒழுங்குபடுத்தப்பட்டதாய்

காட்டிக்கொள்ளும் மனம்

நான் என்னும் அடையாளம்

அதில் இன்னும் அழியவில்லை.

மூன்றாம் சீடனின் மனமே

கடவுளின் பாதைக்கு ஏற்றது

மனம் என்பது

பைத்திய எண்ணங்களின்

தொகுப்பு.

காற்றில் மிதக்கும் துாசிகளுக்கு

திசை என்பது இல்லை.

 

இந்தக் கவிதையில் நான் மிகவும் ரசித்தது - காற்றில் மிதக்கும் துாசிகளுக்கு

திசை என்பது இல்லை என்ற வரிகளை.   நமது மனதின் எண்ணங்களும் அது போலத்தான்.  லா.ச.ரா. சொல்லுவார் மனம் என்பது சதா எண்ணங்களை உற்பத்தி செய்யும் எந்திரம் என்று.  அதில் நல்ல எண்ணங்கள் மட்டுமல்லாமல்  கேடுகெட்ட எண்ணங்களும் தோன்றிக் கொண்டே இருக்கும்.  நமது எண்ணங்களை பிற மனிதர்களிடமிருந்து மறைக்கலாம்.  ஆனால் கடவுளை நெருங்க நினைத்தால் நாம் நமக்கு உண்மையாக இருக்க வேண்டும்.  அங்கு எந்த பாசாங்கும் எடுபடாது என்பதை மிகச் சாதாரண வார்த்தைகளில் மிக அழகாக சொல்லி விடுகிறார் இந்தக் கவிஞர்.

இப்படி எத்தனையொ நல்ல கவிதைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.  வாங்கிப் படியுங்கள்.  நீங்களே நிறையப் பேருக்கு சொல்வீர்கள்.

2020-ன் பயங்கள் நீங்கிய இனிய ஆண்டாக 2021-ம் ஆண்டு அமையட்டும்.  அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.