என்னுடைய முதல் சிறுகதை
முயற்சி
யானை
டேய்
பேசாம திரும்பிப் போயிடலாம்டா. மேலே போய்ச்
சேர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்னே தெரியல.
இப்பவே மணி 12 ஆகப் போகுது. இருட்ரதுக்குள்ளே திரும்பலேன்னா ரிஸ்க்குன்னு வேற
பயமுறுத்தி இருக்காங்க. சிவா சொன்னதைக் கேட்டதும்
எங்களுக்கும் கொஞ்சம் யோசனையாகத்தான் இருந்தது.
நானும்
எனது நண்பர்கள் சிலரும் அடிக்கடி ஏதாவது ஒரு மலைப்பயணம் கிளம்பிவிடுவோம். அப்படி இந்த முறை வந்திருக்கும் மலை, ஆரணி
- சந்தவாசலுக்கு அருகில் இருக்கும் ஒரு மலை. இந்த மலையின்மீது ஒரு கோவில் இருக்கிறது. அந்தக் கோவில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் திறந்து
இருக்குமாம். இன்று மூடியிருக்கும் என்று சொன்னார்கள். மலையில் நடக்கும் அனுபவத்திற்கு கோவில் திறந்திருந்தால்
என்ன மூடியிருந்தால் என்ன என்று கிளம்பிவிட்டோம்.
ஆனால்
இன்னும் எவ்வளவு துாரம் செல்ல வேண்டும் என்பதே தெரியாமல் இருந்ததால்தான் இந்த யோசனை. காட்டு வழியில் நடப்பதின் மிகப் பெரிய ஆபத்தே, வழி
தவறி போய்விடாமல் இருப்பதுதான். எந்த ஒற்றையடி
பாதை எங்கே கொண்டு செல்லும் என்று தெரியாது. மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புக்கள்
நுழையாத இடங்கள் இந்த உலகில் நமக்கு அருகிலேயே இன்னும் நிறைய இருக்கின்றன.
இப்படி
யோசித்துக் கொண்டிருந்தபோது, நல்ல வேளையாக எதிரில் ஒருவர் காய்ந்த மரச்சுள்ளிகளை தலையில்
சுமந்துகொண்டு வந்து கொண்டிருந்தார். மலை உச்சியை
அடைய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று அவரிடம் கேட்டோம். ”முக்கால்வாசி துாரம் வந்துட்டீங்க. இன்னும் கொஞ்சம் துாரம்தான். பாதையில் கவனம் வச்சு போனா, சீக்கிரமா போயிடலாம்”
என்று சொன்னார். அவர் வார்த்தைகள் தந்த நம்பிக்கையில்
மீண்டும் நடக்க ஆரம்பித்தோம்.
ஒரு
பத்து நிமிடம் நடந்திருப்போம். திடீரென்று
மேகக்கூட்டங்கள் சேர்ந்து சடசட வென்று மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. உண்மையில் அந்த மழை உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை
கொடுத்தாலும், ஈரமான அந்த மண் பாதை இப்போது வழுக்க ஆரம்பித்துவிட்டது. செருப்பை போட்டுக் கொண்டு நடக்க முடியவில்லை. எல்லோரும் செருப்பை கழட்டி விட்டு வெறுங்காலில்
நடக்க ஆரம்பித்தோம்.
கொஞ்ச துாரம்தான் நடந்திருப்போம். திடீரென்று என் காலில் சரக்கென்று ஏதோ ஒன்று குத்தியதுபோல இருந்தது. குனிந்து பார்த்தால் ஒரு கண்ணாடித் துண்டு காலை நன்றாக பதம் பார்த்திருந்தது. யாரோ எப்போதோ குடித்து போட்டிருந்த மது பாட்டிலின் உடைந்த சில்லு அது.
காலில்
இருந்து வழிந்த இரத்தத்தைப் பார்த்த தருணத்தில்தான் மூளைக்குள் வலி உணர்வை நரம்பு கடத்தியிருந்தது. வலி தாங்காமல் அப்படியே அந்த மழை பெய்து கொண்டிருந்த
ஈரமண் சாலையில் உட்கார்ந்து விட்டேன்.
காடு
மலைகளில் நடக்கும் யாராக இருந்தாலும் சில முதலுதவிப் பொருட்களை கைவசம் வைத்திருக்க
வேண்டும். நல்ல வேளையாக இப்போது அது மிகவும்
உதவியாக இருந்தது. கையில் இருந்த குடிதண்ணீரால்
காலை லேசாக கழுவிவிட்டு, துணியால் நன்றாக காலை சுற்றி கட்டிவிட்டேன். இரத்தம் வருவது நின்றுவிட்டது போல் இருந்தது. ஆனால்
எழுந்து ஒரு அடி வைப்பதற்குள் வலி உச்சந்தலையை தொட்டது.
நிஜத்தைவிட
நம்முடைய கற்பனையான எண்ணங்கள் நம்மை அதிகம் பாதிக்கும் என்பார்கள். இப்போது வழியெங்கும் கண்ணாடி சில்லுகள் சிதறியிருப்பது போன்ற பிரமையில் அடுத்த அடியை எடுத்து
வைப்பதற்கே மிகவும் தயக்கமாக இருந்தது. வழுக்கினாலும்
பரவாயில்லை என்று செருப்பை போட்டுக் கொண்டே நண்பர்கள் உதவியுடன் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.
நல்ல
வேளையாக மழை விட்டு காற்று கொஞ்சம் இதமாக வீசியதால் காலின் வலி குறைந்தது போல இருந்தது. மதியம் ஒரு மணிக்குள் மலை உச்சியை அடைந்துவிட்டோம்.
கோயில்
மூடியிருந்ததால் எங்களைத் தவிர யாரும் அங்கு இல்லை. இங்கு ஒரு சாமியார் மட்டும் தங்கியிருப்பதாக கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் அவரையும் அங்கு காணவில்லை.
நடந்த
களைப்பில், பசியும், தாகமும் அதிகரித்திருந்தது.
கோவிலின் மூலவர் சந்நிதிக்கு அருகில் ஒரு சின்ன குவளையில் தண்ணீர் இருந்தது. அந்த நேரத்துக்கு அது அமிர்தமாக இருந்தது.
தண்ணீரைக்
குடித்துக்கொண்டு இருந்தபோதே, ”எங்கே இருந்து வரீங்க எல்லாரும்” என்று பின்னால் இருந்து ஒரு குரல். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தால், இடுப்பில்
ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு, ஒல்லியான தேகத்தில் அந்த சாமியார் நின்று கொண்டிருந்தார். ஒரு மனிதரின் ஆன்ம பலம் அவர் கண்களில் தெரியும்
என்று சொல்வார்கள். அந்தக் கண்கள் நெருப்புப்
பழம் போல பிரகாசித்துக் கொண்டிரு்நதது.
எப்படி இந்த மனிதரால் தனியாக இப்படி இருக்க முடிகிறது ? இந்த வனாந்திரத்தில் எப்போது எந்த விலங்கு வரும் என்றுகூடத் தெரியாதே. மனதில் இருந்த கேள்வியை அவரிடமே கேட்டுவிட்டேன்.
சாமி,
உங்களுக்கு இங்கே தனியாக இருப்பது பயமாக இல்லையா ? அவர் சிரித்துக் கொண்டே சொன்னார் ”மனிதர்களிடம்
இருந்ததை விட இங்கே மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். தண்ணீர் குடிக்க இங்கு இருக்கும் சுனைக்கு பல விலங்குகள்
வந்து செல்லும். நாம் அவற்றை தொந்தரவு செய்யாத
வரை அவை நம்மை ஒன்றும் செய்வது இல்லை”.
”மனிதன்
நகரத்தின் இரைச்சலுக்குப் பழகியவன். அவன்
மனது அமைதிக்குப் பழகும்வரை இந்த வனாந்திரத்தின் ஏகாந்தம் அவனை பயமுறுத்திக் கொண்டே
இருக்கும். காற்றில் அசையும் இலைகளின் சலசலப்பும்,
சருகுகளின் ஓசையும்கூட உங்கள் மனதில் ஒருவித அச்சத்தினை ஏற்படுத்தும்.”
”அது
சரி. ரொம்ப துாரம் நடந்து வந்திருக்கீங்களே.
ஏதாவது சாப்பிட்டீங்களா. என்று கேட்டார் அந்தச் சாமியார். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். காலையில் சாப்பிட்டதுதான். நடந்து வந்த களைப்பில் பசியும் வயிற்றைக் கிள்ளியது. இல்லை சாமி.
கொஞ்சம் பிஸ்கட், ரொட்டி கைவசம் இருக்கிறது. அதை வைத்து சமாளித்துக் கொள்கிறோம் என்றோம்.
எங்களைப்
பார்த்து சிரித்தவர், அதை வைத்துக் கொள்ளுங்கள்.
இறங்கும்போது தேவைப்படும். கொஞ்சம்
கஞ்சி வச்சிக் கொடுக்கிறேன். சாப்பிடலாம் என்றார்.
அவரிடம் இருந்தது ஒரு சில பாத்திரங்கள்தான். அதில் கஞ்சி தயார் செய்ய ஆரம்பித்தார்.
”கஞ்சி
கொதிக்கட்டும். வாங்க இந்த இடத்தை சுத்திப்
பாக்கலாம்” என்று அந்தக் கோவிலின் மண்டபத்துக்கு வெளியே எங்களை அழைத்துச் சென்றார். அங்கிருந்து எந்தப் பக்கம் பார்த்தாலும் கண்ணுக்கு
எட்டிய துாரம் வரை பசுமை போர்த்திய மலைகள் தான் தெரிந்தன.
தம்பி
இந்த மலைகளுக்குள்ள பல கிராமங்கள் இருக்கு. இன்னும் வெளியுலக வாசனை அதிகம் இல்லாத பல மனிதர்கள்
அந்தக் கிராமங்கள்ள இருக்காங்க. பார்ப்பதற்கு
பக்கத்தில் இருப்பது போல இருக்கும் அந்த மலைகளுக்குப் போக ரெண்டு மூணு நாட்கள்கூட ஆகும். ஆனா தம்பி மனுசங்க எங்க அதிகம் வர ஆரம்பிக்கிறாங்களோ
அங்க காடுகள் தொலைய ஆரம்பிக்கின்றன.
காடுகள் தொலையத் தொலைய அங்க வாழுற எல்லா உயிரும் தொலைய ஆரம்பிக்கிது. மலைக்கு வர மனுசங்க அந்த அழகை ரசிக்காம, வாழ்க்கைய அனுபவிக்கிறோம்னு நல்லா குடிச்சுட்டு அந்த மது பாட்டில்களை இந்தக் காட்டுலேயே வீசிட்டுப் போயிடறாங்க.
ஒருமுறை
ஒடஞ்ச மது பாட்டில் ஒன்னு யானையின் காலில் நன்றாக சொருகிவிட்டது. அவ்வளவு பெரிய உடம்ப வச்சுக்கிட்டு அந்த யானையால்
எப்படி நடக்க முடியும். ஒரு யானை கொறஞ்சது
50 அல்லது 60 மைல் ஒரு நாளைக்கு நடக்கும்.
அப்படி நடந்தால்தான் அதுக்கான உணவும் கிடைக்கும். நடக்க முடியாமல் வலியாலும், பசியாலும் துடித்து
இறந்த அந்த யானையை பாக்குறப்போ சுயநலமான இந்த மனிதர்கள் மீது அளவில்லாத கோபம் வருகிறது.
அவர்
சொல்ல சொல்ல எனக்குள் மறந்திருந்த கால்வலி மீண்டும் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. ஒரு சின்ன பாட்டில் துண்டு குத்தியதற்கே உயிர் போகும்
அளவிற்கு வலி. இத்தனைக்கும் குத்திய அந்த
துண்டு வெளியில் வந்து விட்டது. அதற்கு மருந்தும்
இட்டு கட்டும் கட்டியாகிவிட்டது. ஊருக்கு போய்
ஒரு டிடி போட்டுக் கொண்டால் சில நாட்களில் சரியாகிவிடும். ஆனால் அந்த யானையைப் போல எத்தனை விலங்குகள் நம்முடைய
அகங்காரமான செயல்களால் பாதிக்கப்படுகின்றன.
சில நாட்கள் முன்புகூட செய்தித் தாள்களில் படித்தது ஞாபகத்திற்கு வந்தது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் குடித்து எறிந்த
ஆயிரக்கணக்கான டன் மது பாட்டில்கள் மலைகளின் பள்ளத்தாக்குகளில் சேர்ந்திருக்கின்றன
என்று.
இந்த
மலைக்கு வாகனங்களில் வருவதற்கு சரியான பாதைகள்
இல்லை. அப்படி இருந்துமே, யாரோ எப்போதோ குடித்துப்
போட்ட மது பாட்டிலின் உடைந்த சில்லு என் காலை பதம் பார்த்திருந்தது. இன்னும் வாகன வசதி இருந்தால் இந்த மலையிலும் எத்தனை
டன் குப்பை சேருமோ தெரியவில்லை.
”சாமி
மனிதன் இப்படி இயற்கையை அழித்துக் கொண்டே சென்றால் இதற்கு முடிவுதான் என்ன ?
”என்ன
தம்பி இயற்கையை அவ்வளவு சாதாரணமா எடைபோட்டுட்டே.
இது நம்மள மாதிரி கோடிக்கணக்கான பேரை, காலம் காலமா பாத்திக்கிட்டிருக்கு. மனிதனின் ஆட்டத்தை அது பார்த்துக் கொண்டே இருக்கும். கொஞ்சம் அதிகமாகிவிட்டது என்று தெரியும்போது மொத்தமாக
வாரிச் சுருட்டி போட்டுக் கொண்டு போய்க் கொண்டே இருக்கும். முடிஞ்சா நம்மள காப்பாத்திக்க முயற்சி பண்ணலாம்.
சொல்லிவிட்டு அந்தச் சாமியார் சிரித்த சிரிப்பும், ஆமாம் என்பது போல அந்த மலை அதை எதிரொலித்ததும் ஒருவித அச்சத்தை தருவதாக இருந்தது.
அந்த
அச்சத்தினை போக்கும் விதமாக அவரே ”சரி வாங்க தம்பீங்களா, கஞ்சி கொதிச்சிருக்கும்” என்று
உள்ளே அழைத்தார்.