சில நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். நிறைய பேர் பேசினார்கள். ஆனால் மனதுக்கு நிறைவாக பேசியவர்கள் மிகச் சிலரே. சில "பெரிய மனிதர்கள்" கூட பார்வையாளர்கள் தங்கள் பேச்சை ரசிக்கவில்லை என்று தெரியாமலேயே (அல்லது தெரிந்தும்கூட) குறித்த நேரம் கடந்தும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் மிகச் சிலர் அவை அறிந்து பேச வேண்டிய கருத்துக்களை மிகவும் சுவையாக பேசி குறித்த நேரத்தில் பேசி அமர்ந்தார்கள். இதன் நீட்சியாக எனது சிந்தனைகள் சில.
நாம் வாழ்கையில் நிறைய சந்தர்ப்பங்களில் நிறைய செய்ய ஆசைப்படுகிறோம். ஆனால் நிறைவாகச் செய்கிறோமா என்று யோசித்தால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. நாம் பொதுவாக செய்யும் கீழ்க்கண்ட சில விஷயங்களை யோசித்துப் பாருங்கள், உங்களுக்கே புரியும்.
- நிறைய படிக்கிறோம் - நிறைவாக படிக்கிறோமா ?
- நிறைய சாப்பிடுகிறோம் - நிறைவாக சாப்பிடுகிறோமா ?
- நிறைய தூங்குகிறோம் - நிறைவாக தூங்குகிறோமா ?
- நிறைய பேசுகிறோம் - நிறைவாக பேசுகிறோமா ?
- நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் - நிறைவான நண்பர்களாக இருக்கிறார்களா ?
- நிறைய செலவு செய்கிறோம் - நிறைவாக செய்கிறோமா ?
- நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறோம் - நிறைவாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறோமா ?
- நிறைய வருடங்கள் வாழ்கிறோம் - நிறைவான வாழ்க்கை வாழ்கிறோமா ? (ஆதி சங்கரரும், விவேகானந்தரும் நிறைய வருடங்கள் வாழவில்லை - 40 வருடங்கள் கூட இந்த பூமியில் இல்லை - ஆனால் நிறைவான வாழ்வு வாழ்ந்தார்கள்).
உங்களுக்கும் நான் மேலே சொன்னது போல நிறைய விஷயங்கள் தோன்றக்கூடும்.
யோசித்துப் பார்த்தால் நாம் வாழ்கையின் மதிப்பை பெரும்பாலும் எண்ணிக்கையில் அடக்கி விடுகிறோம். நம்மை சுற்றியுள்ள வாழ்வின் ஒப்பிடுகளால் (comparisons) நம் மன அமைதியை கெடுத்துக் கொள்கிறோமா என்று கூட தோன்றுகிறது.
உடுத்திக்கொள்ள இரண்டு set உடைக்கு மேல் இல்லாத கக்கனும், இறக்கும்போது சில நூறு ரூபாய் கூட தன்னுடைய சொத்தாக வைத்துக் கொள்ளாத நம் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரும் நிறைவான வாழ்க்கை வாழவில்லையா ?
அதே சமயத்தில் இன்றைய சூழலில் நாம் கக்கனைப் போல, காமராஜரைப் போல வாழ்ந்தால் நம்மை மன நிலை சரியில்லாதோர் பட்டியலில் உலகம் சேர்த்துவிடக் கூடும்.
ஆனால் நம் மன அமைதிக்கு எது சரி என்று நினைக்கிறோமோ அதன் படி நம் வாழ்கையை அமைத்துக் கொண்டால் நம்மால் நிறைவான வாழ்கை வாழ முடியும் என்பதுதான் நமது முப்பாட்டன் வள்ளுவன் காலத்தில் இருந்து நமக்கு சொல்லி கொடுக்கபட்டிருக்கும் பாடம். நாம்தான் அடிப்படையை மறந்து விட்டு அந்தரத்தில் திண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
சரி சரி நான் நிறைய எழுதிக் கொண்டே போகிறேன் என்று நினைத்துவிடப் போகிறிர்கள். அதனால் இத்துடன் நிறைவு செய்கிறேன்.
No comments:
Post a Comment