ஆனந்த விகடனில் கடந்த சில வாரங்களாக தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் "மந்திரி தந்திரி" என்ற தலைப்பில் காய்ச்சிக் கொண்டு இருக்கிறார்கள். நானும் at least ஒரு மந்திரியாவது ஆனந்த விகடன் சொன்ன தகவல் தவறு என்று சொல்வார்கள் என்று பார்க்கிறேன். ஆனால் ஒன்றையும் காணோம்.
அதனால் பாதிக்கப் பட்ட மந்திரிகளின் சார்பில் ஆனந்த விகடனுக்கு ஒரு கடிதம் (இதற்கு ஆனந்த விகடன் கட்டுரையே பரவாயில்லை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல).
இனி கடிதம் .....
ஐயா ஆனந்த விகடனாரே உங்களுக்கு எங்கள் மேல் ஏன் இவ்வளவு கோபம் ? இப்படி "அபாண்டமான" உண்மைகளை போட்டு உடைத்து மக்களுக்கு எங்கள் மேல் இருக்கும் கொஞ்ச நஞ்சம் மரியாதையையும் கெடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்று தெரிந்த உங்களுக்கு மந்திரி மூலமும் பார்க்கக் கூடாது என்று தெரியாதா ?
எங்களில் பலர் படிக்காமல் பட்டம் வாங்கியதாக பெரிதாக குற்றம் சொல்லும் உங்களுக்குத் தெரியாதா நாமெல்லாம் (??) சிறு வயதில் படிக்கும் போதே பட்டம் வாங்கி விட்டவர்கள் என்று. அப்போது அத்தனை பட்டம் வாங்கிய எங்களுக்கு மந்திரியான பிறகு கேவலம் ஒரு பட்டத்தை வாங்கத் தெரியாதா. அப்படி என்ன நாங்கள் ஆசைப்பட்டா இந்த பட்டத்தினை வாங்கினோம். நாங்கள் தேர்தலில் நிற்பதற்கு அடிப்படைத் தகுதி என்று சொன்னதால் வாங்கினோம். வேண்டாம் என்று சொல்லுங்கள் வாங்கிய பட்டத்தை தூக்கி எறிந்து விட்டு எங்கள் உண்மையான "டிகிரியான" ஐந்தாவது அல்லது ஆறாவது என்று போட்டுக் கொள்கிறோம்.
நாங்கள் பலரையும் ஏறி மிதித்து இந்த இடத்தை அடைந்து இருக்கிறோம் என்றால் இன்றைய அரசியல்வாதிகளுக்குரிய அடிப்படை தகுதி எங்களுக்கு இருக்கிறது என்று அர்த்தம். உங்களுக்கு எங்களைப் பற்றிய அப்பட்டமான உண்மைகள் தெரிவதற்கு எங்களால் மிதிபட்டவர்கள்தான் காரணம் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். மிதி பட்டவர்கள் எந்த நேரம் எங்களை மீண்டும் மிதித்து விடுவார்களோ என்று ஒவ்வொரு கணமும் நாங்கள் தவித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?
உங்கள் மீது அவதூறு வழக்கு போடலாம் என்று கூட நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் அப்படி ஏதாவது வழக்குப் போட்டு மிச்சம் மீதி உண்மைகளும் நீதி மன்றத்தில் சந்தி சிரித்துவிடுமோ என்று அடங்கி விட்டோம்.
இப்போதெல்லாம் எங்களைப் பார்த்து யாராவது உண்மையிலேயே சிரித்தாலும், இவர்கள் இதை நினைத்து சிரிக்கிறார்களோ அல்லது அதை நினைத்து சிரிக்கிறார்களோ என்று நாங்களாகவே பலதையும் நினைத்துக் கொள்கிறோம். நீங்கள் எதிர்பார்த்தது இதைத்தானா ?
ஒவ்வொரு வாரமும் விகடனைப் படித்துவிட்டு எங்கள் மேலிடம் நாங்கள் காரில் ஏறும் போது மந்திரி இறங்கும் போது எந்திரி என்று சொல்லிவிடுவார்களோ என்று நாங்கள் பயந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா ? நாங்கள் கோவில் கோவிலாக சென்று பூஜை செய்வதும் மொட்டை போட்டுக் கொள்வதும் எங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டும்தான் என்பதை எங்களால் வெளிப்படையாக சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நடுநிலைப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் பல பத்திரிகைகளுக்கும் விளம்பரம் என்ற பெயரில் சொந்தச் செலவிலும் அரசு செலவிலும் லட்சக் கணக்கில் பணம் கொடுத்து அவர்கள் வாயை அடைத்து விட்டோம். உங்களைத்தான் எப்படி correct பண்ணுவது என்று தெரியவில்லை.
ஆனால் ஒன்று ஒவ்வொரு வாரமும் எங்கள் பெயர் கட்டுரையில் வந்த பிறகு ஆட்டத்தில் out ஆன பிறகு மற்றவர் ஆட்டத்தை ரசிக்கும் மனநிலைக்கு இப்போது வந்து விட்டோம்.
ஏதோ மக்கள் புண்ணியத்தாலும், மேலிடத்தின் ஆசியாலும் மந்திரி ஆகிவிட்டோம். இனி உங்கள் புண்ணியத்தில் மேலும் ஒரு முறை மந்திரி ஆக விட மாட்டிர்கள் என்று நினைக்கிறோம்.
வாழ்க உங்கள் தொண்டு.
இப்படிக்கு பாதிக்கப்பட்ட மந்திரிகள்
No comments:
Post a Comment