Friday, February 5, 2016

நம்பிக்கை நொடிகள்


சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளி இல்லாமலோ அல்லது மிகக் குறைவான இடைவெளியுடனோ இருப்பவர்கள் மிகச் சிலர்.

அதைப் போலவே தன்னுடைய பேச்சிலும் எழுத்திலும் காந்தம் கலந்து நம்மை ஏகாந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவரும் சிலர்தான்.

அப்படி ஒரு மனிதர்தான் திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள்.  அவருடைய பேச்சும் எழுத்தும் எனக்கு நல்ல பரிச்சயம். 

சமீபத்தில் "நமது நம்பிக்கை" என்ற மாத இதழில் "நம்பிக்கை நொடிகள்" என்ற தலைப்பில் வெளிவந்த அவருடைய கட்டுரையை படித்தால் நான் சொன்னது சரிதான் என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

இந்தக் கட்டுரையில் பாரதி கிருஷ்ணகுமார் தன்னுடைய தந்தை இறந்த போது இருந்த துக்கத்தில், ஆறுதல் சொல்ல வந்தவர்கள் எல்லாம் துக்கத்தை அதிகமாக்கிய வேளையில், அவருடைய நண்பர் ஒருவரின் இதய சுத்தமான வார்த்தைகள் அவருக்குள் எப்படி நம்பிக்கையை விதைத்தது என்று எழுதியிருக்கிறார்.

இதோ பாரதி கிருஷ்ணகுமாரின் வரிகள் :

"வந்தவர்கள் எல்லோரும் ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆறுதலாக சொல்லப்படும் சொ ற்கள் என் துயரத்தை ஏனோ குறைப்பதே இல்லை. அதிகரிக்கவே செய்கிறது. 

றுதல் சொல்ல வந்தவர்கள் கலங்கிக் , கரைந்து, தயங்கித் தயங்கி சொற்களை தேடித் பேசுகிற துயரம், மேலும் துயரப்படுத்துகிறது. ஒரு துளிக் கண்ணீர் கூட வராமல், உள்ளுக்குள் ஏதோ எடை கூடிக் கொண்டிருந்தது. 

பிற்பகல் ஒன்றரை மணிக்கு “காவன்னா” வந்தார். பக்கத்தில் அமர்ந்து கொண்டு, தடையின்றிப் பேச ஆரம்பித்தார். “அப்பாவுக்கு என்ன வயசு? உனக்கு என்ன வயசு? இன்னும் கல்யாணமாகாத தம்பி தங்கச்சி யாரும் இருக்காங்களா? அப்பா எதுவும் கடன் வச்சிட்டுப் போய் இருக்காரா?” விடை சொல்லிக் கொண்டே வந்தேன்.

ந்தக் கடமையும் அப்பா பாக்கி வைக்கல; அம்மா ஏற்கனவே போயிட்டாங்க...கடனும் எதுவுமில்லை...அப்புறமென்னப்பா?... பெரிய சாவு... கலங்கிப் போய் உட்காரக் கூடாது. சந்தோஷமா வழியனுப்பி வைக்கணும். எந்த வயசா இருந்தாலும் தகப்பன் போறது துயரந்தான்... ஆனா... மத்தவங்க துயரத்தோட ஒப்பிட்டுப் பார்த்துதான் நம்ம துயரத்தக் கணிக்கனும். “ என்னைய எடுத்துக்குங்க... பொறந்து வளந்தது ஒரு சின்னக் கிராமத்துல... நிலம் புலம் எதுவும் கெடையாது.. அன்னாடம் உழைச்சுப் பிழைச்ச குடும்பம்.. நான் ஒத்தப் பொறப்பு. எனக்கு மூணு வயசானப்ப எங்கம்மா செத்துருச்சு... அஞ்சு வயசுல எங்க அப்பனும் போய்ட்டாரு... எங்கேயோ கெடந்து எப்பிடியோ வளந்தேன் . பாருங்க... அப்பா போட்டோவும் இல்ல; அம்மா போட்டோவும் இல்ல; முகமும் ஞாபகத்துல இல்ல... இப்ப நெனச்சாலும் கண்ணீர் பொங்கும்... என்ன பண்ணுறது... உடம்பு பூரா எண்ணெய் பூசிக்கிட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணுதானே ஒட்டும்”. ஒரு கனத்த பெருமூச்சை மெலிதாக வெளியேற்றினார்.

ந்த இடைவெளியும் இன்றி, அவரே தொடர்ந்தார். “எத்தனை மணிக்கு எடுக்குறீங்க?” சாயங்காலம் ஆறு மணிக்கு என்றேன். ஆபிஸ்ல பெர்மிஷன் போட்டு வந்தேன்... சாயங்காலம் திரும்ப வர்றேன் என்று சொல்லி விட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தார் “காவன்னா”. நமது துயரம் தான் உலகிலேயே பெரியது என்று நம்பி நாம் மயங்கும்போது, ஒவ்வொரு பெரிய கோட்டுக்குப் பக்கத்திலும் இன்னுமொரு பெரிய கோட்டை வரைந்து, நாம் பெரியதென்று நம்பியதைச் சிறியதாக்கி, விசித்திரம் காட்டி விளையாடுகிறது வாழ்க்கை.

மூன்று வயதில் தாயையும், ஐந்து வயதில் தந்தையும் இழந்திருந்தால் ஒரு குழந்தை ஒவ்வொரு வேளை சோற்றுக்கும் எவ்வளவு போராடியிருக்கும்? ஒவ்வொரு குச்சிக்கும் சிலேட்டுக்கும் யார் யார் வாசலில் எல்லாம் நின்றிருக்கும்? கொடுங்கனவுகள் கண்டு கண் விழித்த இரவுகளில் எல்லாம் அருகே அரவணைக்க யாருமின்றி எப்படித் தவித்திருக்கும்?... ஓ... இதோ அந்தக் குழந்தை தன துயரங்களை எனக்கு உணர்த்தித், தன் சொற்களால் என் துயரங்களைத் துடைத்தெறிந்து விட்டுப்போகிறான். துயரங்களைக் கடந்து வாழ்வின்மீது பெரும் காதலும், நம்பிக்கையும் உண்டாக்கும் விதைகளை எனக்குள் விதைத்துப் விட்டுப் போய்க் கொண்டிருக்கிறான். என் துயரங்கள் அவருக்குப் பின்னே கைகட்டிப் பணிந்து போவதை நானே பார்த்தேன். இழவு வீட்டிலும் திருப்பணி செய்கிற ஆற்றல் சிலருக்குத்தான் இருக்கிறது"
.

------------ 

இதைப் படிக்கும் நாம் ஒவ்வொருவரும் கண்ணை மூடி ஒருகணம் யோசித்தால், துயரம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் எந்த ஒரு விஷயமும் ஒரு சிறிய கோடு கூட இல்லை - மிகச் சிறிய ஒரு புள்ளிதான் என்று புரியும்.  இந்தப் புரிதலுக்காகத்தான் பாரதி கிருஷ்ணகுமார் போன்றவர்களுடைய எழுத்தும் பேச்சும் தேவையாக இருக்கிறது.






No comments:

Post a Comment