Wednesday, May 18, 2016

நல்லாட்சி அமையட்டும்

தேர்தல் நாளன்று நம் விரலில் வைக்கப்பட்டு மிச்சம் இருக்கும் மை பின் வரும் நாட்களில் பெரும்பாலும் நம் முகத்தில் .பூசப்பட்டு விடுகிறது அரசியல்வாதிகளால் / ஆட்சி செய்பவர்களால்.

ஆனால் இனிமேல் யார் ஆட்சிக்கு வந்தாலும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்க வேண்டியிருக்கும்.  ஏனென்றால் மக்களின் political awareness அதிகமாகிக்கொண்டே வருகிறது.  இது ஒரு நல்ல விஷயம்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மது விலக்கு என்று கூறியதற்கு மக்களின் இந்த awareness தான் காரணம்.  Social Media  கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் வைகோ விஜயகாந்த் என்று யாராக இருந்தாலும் மீம்ஸ் போட்டு நோகடித்து விடுகிறார்கள்.  மக்கள் நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே அரசியல்வாதிகளுக்கு ஒரு அச்சுறுத்தல்தான்.  

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தேனாறும் பாலாறும் ஓடப் போவதில்லை. நம் சோற்றுக்கு நாம்தான் உழைக்க வேண்டும்.  

நாம் எதிர்பார்ப்பது எல்லாம் ஊழலற்ற திறமையான நிர்வாகம்,  நீர்நிலை ஆதாரங்களைப் பெருக்கி சுத்தமான ஆரோக்கியமான நீர், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்புக்கள் அல்லது சுய தொழில் வாய்ப்புக்கள், அமைதியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் போன்றவைதான்.   இவற்றை ஒரு அரசாங்கத்தால்தான் கொடுக்க முடியும்.   இவற்றை அளிக்க முயன்றதால்தான் நாம் இன்னும் காமராஜர் ஆட்சியை நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

வரும் ஆட்சி இந்த அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று நம்புவோம்.

நம் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு ஒரு like வைப்போம். இவ்வளவு பண பலம், அதிகார பலம் மிக்க அரசியல்வாதிகளுக்கு இடையில் முடிந்த வரையில் தன்னுடைய கடமையை ஒழுங்காகவே செயதிருக்கிறார். அதற்கு அமைதியாக நடந்து முடிந்த தேர்தலே சாட்சி.  சபாஷ் லக்கானி.

நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்கு அளித்திருக்கலாம். ஆனால்  மீண்டும் துளிர்க்கப் போவது இலையோ  அல்லது மீண்டும்  உதிக்கப் போவது சூரியனோதான் .

நாளை சூரிய உதயத்தில் தெரிந்து விடும்.  பொறுத்திருப்போம்.




Saturday, May 7, 2016

பறவையின் நிழல்


நேற்று (6/05/2016) மயிலாப்பூர் CIT காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் திரைப்பட இயக்குனரும் வசனகர்த்தாவுமான திரு. பிருந்தா சாரதியின் இரு கவிதை நூல்கள் (ஞாயிற்றுக் கிழமைப் பள்ளிக்கூடம் மற்றும் பறவையின் நிழல்) வெளியீட்டு விழா Discovery Book Palace சார்பில் நடைபெற்றது.

பட்டிமன்ற பேச்சாளர் திரு கு. ஞானசம்பந்தன், எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன்,   இயக்குனர் திரு லிங்குசாமி, நடிகர் திரு நாசர், ஓவியர் ட்ராட்ஸ்கி திரு. மருது, இயக்குனர் திரு ராஜு முருகன், கவிஞர்கள் திரு அறிவுமதி, திரு யுக பாரதி மற்றும் பல கவிஞர்களும் அறிஞர்களும் கலந்து கொண்ட அறிவார்ந்த சபையாக இருந்தது.

விழா குறித்த நேரத்தில் துவங்கவில்லை என்ற குறையைத் தவிர (அதற்குக் தகுந்த காரணமும் இருந்தது) மற்ற எல்லா விஷயங்களும் மிகச் சிறப்பாக இருந்தன.  நிறைய பேர் பேசினாலும் வளவள என்று பேசாமல் சுவையாக பேசினார்கள்.  

சில சமயங்களில் (அல்லது பல சமயங்களில்) எதிர் பாராமல் நடக்கும் சில விஷயங்கள் மனதிற்கு மிகவும் திருப்தி அளிக்கும். அப்படி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்தி இருந்தது.  Discovery Book Palace திரு வேடியப்பனுக்கு நன்றி. அவர்தான் என்னை கட்டாயம் கலந்து கொள்ளச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்.

வேடியப்பன் பிருந்தா சாரதியை என்னிடம் அறிமுகம் செய்து வைத்த போது அவர் குறித்த எந்தத் தகவலும் என்னிடம் இல்லை.  அதனால் casual ஆக ஒரு ஹலோ சொல்லி அவரைக் கடந்து விட்டேன்.  ஆனால் அவரைக் குறித்து விழாவில் கலந்து கொண்ட எல்லா ஆளுமைகளும் உயர்வாக பேசியதும், அவரது கவிதைகளை புகழ்ந்ததும்  உடனே அவரது கவிதைகளைப் படிக்கத் தூண்டியது.

பறவையின் நிழல்  என்ற புத்தகத்திலிருந்துஅவரது ஒரு காதல் கவிதை :

என் எதிரி என்று ஒருவனைக் காட்டினார்கள் நண்பர்கள் 
புரியாமல் கேட்டேன் யார் அவன் என
உன்னைக் காதலிப்பவனாம்.
உன்னைக் காதலிப்பவன் எனக்கு எப்படி எதிரியாக முடியும் 
அவனிடம் அறிமுகம் செய்து கொண்டு 
அவனுக்கும் சேர்த்து நான் உன்னைக் காதலிப்பதாகக் கூறி 
விலகிக் கொள்ள வேண்டினேன் 
அவனும் அதையே கூறுகிறான் என்னிடம் 
எங்களிருவரில் நீ யாரைத் தேர்ந்தெடுத்தாலும் 
இருமடங்கு காதல் கிடைக்கும் உனக்கு.

இந்தக் கவிதையை விமர்சிக்கும் கவிஞர் ஜெயபாஸ்கரன் இப்படி சொல்கிறார்.  தனக்கு கிடைக்காத பெண் மீது ஆசிட் வீசும் கோட்பாடு நிலைபெற்று அது அவ்வப்போது ஆங்காங்கே கொடூரமாக நடக்கும் இந்தக் காலத்தில் அந்த இழிவு கலாசாரத்திற்கான ஓர் அறிவார்ந்த விடையாக இந்தக் கவிதையை நான் பார்க்கிறேன்  என்று.

உண்மைதான்.  நம் அன்பு பெரும்பாலும் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே அடங்கி விடுகிறது.  ஒருவர் மேல் நாம் கொள்ளும் அன்பு அவரின் மீதோ அல்லது தன்  மீதோ அல்லது அவரின் பொருட்டு வேறு ஒருவரின் மீதோ வெறுப்பை வளர்த்தால் அந்த அன்பினால் என்ன பயன் ?   கட்டிப் பிடித்துக் கொண்டு காறித் துப்பிக் கொள்வதற்குப் பதில், விலகி இருந்து நேசிப்பது உத்தமம்.

உடலைக் கொண்டாடும் காதல் கவிதைகளுக்கு இடையில் உள்ளங்களின் சிலிர்ப்பை கொண்டாடும் இத்தகைய காதல் கவிதைகள் மனதிற்கு இதமாக இருக்கின்றன.

வாழ்த்துக்கள் பிருந்தா சாரதி.  வேடியப்பன், இலக்கியத் தரமான இத்தகைய வெளியீடுகளை நம் Discovery Book Palace தொடர்ந்து செய்ய என் வாழ்த்துக்கள்.