நேற்று (6/05/2016) மயிலாப்பூர் CIT காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் திரைப்பட இயக்குனரும் வசனகர்த்தாவுமான திரு. பிருந்தா சாரதியின் இரு கவிதை நூல்கள் (ஞாயிற்றுக் கிழமைப் பள்ளிக்கூடம் மற்றும் பறவையின் நிழல்) வெளியீட்டு விழா Discovery Book Palace சார்பில் நடைபெற்றது.
பட்டிமன்ற பேச்சாளர் திரு கு. ஞானசம்பந்தன், எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன், இயக்குனர் திரு லிங்குசாமி, நடிகர் திரு நாசர், ஓவியர் ட்ராட்ஸ்கி திரு. மருது, இயக்குனர் திரு ராஜு முருகன், கவிஞர்கள் திரு அறிவுமதி, திரு யுக பாரதி மற்றும் பல கவிஞர்களும் அறிஞர்களும் கலந்து கொண்ட அறிவார்ந்த சபையாக இருந்தது.
விழா குறித்த நேரத்தில் துவங்கவில்லை என்ற குறையைத் தவிர (அதற்குக் தகுந்த காரணமும் இருந்தது) மற்ற எல்லா விஷயங்களும் மிகச் சிறப்பாக இருந்தன. நிறைய பேர் பேசினாலும் வளவள என்று பேசாமல் சுவையாக பேசினார்கள்.
சில சமயங்களில் (அல்லது பல சமயங்களில்) எதிர் பாராமல் நடக்கும் சில விஷயங்கள் மனதிற்கு மிகவும் திருப்தி அளிக்கும். அப்படி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்தி இருந்தது. Discovery Book Palace திரு வேடியப்பனுக்கு நன்றி. அவர்தான் என்னை கட்டாயம் கலந்து கொள்ளச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்.
வேடியப்பன் பிருந்தா சாரதியை என்னிடம் அறிமுகம் செய்து வைத்த போது அவர் குறித்த எந்தத் தகவலும் என்னிடம் இல்லை. அதனால் casual ஆக ஒரு ஹலோ சொல்லி அவரைக் கடந்து விட்டேன். ஆனால் அவரைக் குறித்து விழாவில் கலந்து கொண்ட எல்லா ஆளுமைகளும் உயர்வாக பேசியதும், அவரது கவிதைகளை புகழ்ந்ததும் உடனே அவரது கவிதைகளைப் படிக்கத் தூண்டியது.
பறவையின் நிழல் என்ற புத்தகத்திலிருந்துஅவரது ஒரு காதல் கவிதை :
என் எதிரி என்று ஒருவனைக் காட்டினார்கள் நண்பர்கள்
புரியாமல் கேட்டேன் யார் அவன் என
உன்னைக் காதலிப்பவனாம்.
உன்னைக் காதலிப்பவன் எனக்கு எப்படி எதிரியாக முடியும்
அவனிடம் அறிமுகம் செய்து கொண்டு
அவனுக்கும் சேர்த்து நான் உன்னைக் காதலிப்பதாகக் கூறி
விலகிக் கொள்ள வேண்டினேன்
அவனும் அதையே கூறுகிறான் என்னிடம்
எங்களிருவரில் நீ யாரைத் தேர்ந்தெடுத்தாலும்
இருமடங்கு காதல் கிடைக்கும் உனக்கு.
இந்தக் கவிதையை விமர்சிக்கும் கவிஞர் ஜெயபாஸ்கரன் இப்படி சொல்கிறார். தனக்கு கிடைக்காத பெண் மீது ஆசிட் வீசும் கோட்பாடு நிலைபெற்று அது அவ்வப்போது ஆங்காங்கே கொடூரமாக நடக்கும் இந்தக் காலத்தில் அந்த இழிவு கலாசாரத்திற்கான ஓர் அறிவார்ந்த விடையாக இந்தக் கவிதையை நான் பார்க்கிறேன் என்று.
உண்மைதான். நம் அன்பு பெரும்பாலும் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே அடங்கி விடுகிறது. ஒருவர் மேல் நாம் கொள்ளும் அன்பு அவரின் மீதோ அல்லது தன் மீதோ அல்லது அவரின் பொருட்டு வேறு ஒருவரின் மீதோ வெறுப்பை வளர்த்தால் அந்த அன்பினால் என்ன பயன் ? கட்டிப் பிடித்துக் கொண்டு காறித் துப்பிக் கொள்வதற்குப் பதில், விலகி இருந்து நேசிப்பது உத்தமம்.
உடலைக் கொண்டாடும் காதல் கவிதைகளுக்கு இடையில் உள்ளங்களின் சிலிர்ப்பை கொண்டாடும் இத்தகைய காதல் கவிதைகள் மனதிற்கு இதமாக இருக்கின்றன.
வாழ்த்துக்கள் பிருந்தா சாரதி. வேடியப்பன், இலக்கியத் தரமான இத்தகைய வெளியீடுகளை நம் Discovery Book Palace தொடர்ந்து செய்ய என் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment