Friday, October 28, 2016

வலி இல்லாத வாழ்த்துக்கள்


இனிய "தீபாவலி" நல்வாழ்த்துக்கள் என்று ஒரு நண்பரிடம் இருந்து குறுந்தகவல் வந்திருந்தது. பாவம் என்ன வலியோ ??.  அந்த வலியிலும் வாழ்த்தை அனுப்பி இருக்கிறார். 

உண்மையில் யாருக்குத்தான் வலியில்லை.  Selfie புகைப்படத்தில் உறைந்திருக்கும் ஒவ்வொரு புன்னகைக்கு பின்னும் உறையாத, உலராத வலிகள் எல்லோருக்கும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

வாழ்க்கை எப்போதும் நமக்கு எதையாவது சொல்லிக் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது.  நாம்தான் கவனிக்க மறந்து விடுகிறோம் (அல்லது மறுத்து விடுகிறோம்).  

சென்ற வாரம் சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் போது விமானத்தில் கண்ட ஒரு காட்சி.

எனக்குப் பக்கத்தில் ஒருவர் தன் மகனுடன் அமர்ந்திருந்தார். அவர் மனைவியும் மகளும் ஒரு சில இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்தார்கள்.

மகன் தோளுக்கு மேல் வளர்ந்திருந்தான் - உடல் அளவில் மட்டும்தான்   மனதளவில் இன்னும் ஒரு குழந்தையாகவே இருந்தான்.  அவன் ஒரு குழந்தையைப் போலவே அடம் செய்து கொண்டும், ஒருமாதிரி சத்தம் எழுப்பிக் கொண்டும் இருந்தான்.  

சுற்றி இருந்த பயணிகள் அனைவரின் கவனமும் அந்தப் பையன் மீதே இருந்தது.  அந்தத் தந்தையின் முகம் ஒருவித பதட்டத்துடன்  இறுகி இருந்தது. யாரவது ஏதாவது சொல்லி விடுவார்களோ அல்லது விமானப் பணிப்பெண் ஏதாவது complaint செய்து விடுவாரோ என்று.  அவரும் ஏதேதோ செய்து அவனை சமாதானப்படுத்திகொண்டு இருந்தார்.

விமானம் take off ஆகும் போதும் landing ஆகும் போதும் ஜன்னல் ஷட்டரை திறந்து வைக்க வேண்டும் என்பது ஒரு பாதுகாப்பு விதி. Lift the window shades, fold up the tables, straighten the seat and fasten the seat belt இவையெல்லாம் விமானத்தில் அடிக்கடி சொல்லப்படும் பாதுகாப்பு மந்திரங்கள்.  ஏனென்றால் எந்த ஒரு அவசரக் காலத்திலும் பயணிகள் தப்பிப்பதற்கு மிகக் குறைந்த கால அவகாசமே இருக்கும்.  அதற்க்காகத்தான் இத்தனை விதிகள் (ஆனால் நம் விதி முடிந்து விட்டால் இந்த விதிகள் எதுவும் பயன்படாது என்பது வேறு விஷயம்).

மனிதர்கள் பொதுவாக மிகவும் நல்லவர்கள்.  தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி பொதுவான பிரச்சினை என்று வரும்போது தங்களால் முடிந்த அன்பையும் நேசத்தையும் காட்டிவிடுகிறார்கள்.  சென்னையின் பெரு மழையின் போது அந்த அன்பைத்தான் பார்த்தோம்.

இப்போதும் அந்த ஒரு அன்பைத்தான் அங்கே கண்டேன்.  விமானப் பணிப்பெண் ஒவ்வொரு பயணியிடமும் மேற்சொன்ன பாதுகாப்பு விதிகளை சொல்லிக் கொண்டே வந்தாலும், அந்த பையனிடம் எதுவும் சொல்லவில்லை. தன்னுடைய சக பணிப்பெண்ணிடமும் "கண்டுகொள்ளாதே" என்று சாடை காட்டிவிட்டார்.  Rule என்று இருந்தால் exception என்று இருக்கும்தானே.  அதை சரியாகக் கடைபிடித்தார் அன்று அந்தப் பெண்.    ஏனென்றால் பயணிகளின் அமைதியான பயணமும் அவரின் கடமைதானே.  சுற்றியிருந்த பயணிகளும் அந்தத் தந்தை மகன் மீது ஒருவித பரிவுடன்தான் இருந்தார்கள்.

எனக்கும் அந்தத் தந்தையின் மீது ஒரு அளவு கடந்த நேசம் ஏற்பட்டது. மனவளர்ச்சி இல்லாத அந்தக் குழந்தையை எவ்வளவு பாதுகாப்பாக கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறார்.  தாய் தந்தைக்குப் பிறகு அந்தக் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் ?  நமக்கே இந்தக் கேள்வி எழும்போது அந்தப் பெற்றவர்களுக்கு எண்ணம் எல்லாம் அதில்தானே இருக்கும். அவரின் கவனம் எல்லாம் அந்தப் பையன் மீதே இருந்தது. அந்த விமானப் பயணத்தைக் கொஞ்சமும் அவரால் அனுபவிக்க முடியவில்லை.

சாப்பாட்டில் காரம் இல்லை. அவர் என்னுடன் முன்பு போல அன்பு காட்டுவது இல்லை. நான் நம்பிக்கை வைப்பவர்கள் என்னை ஏமாற்றி விடுகிறார்கள்.  முடி அதிகம் உதிர்கிறது. எனக்கு colour கொஞ்சம் குறைவு. அவர் வைத்திருக்கும் car என்னிடம் இல்லை .......  இப்படி எத்தனை ஆயிரம் குறைகள் நம் மனதில் இருந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல்வோம். ஏனென்றால் அவர் நமக்கு உண்மையான பிரச்சினைகளை அளிக்கவில்லை என்று. அப்படி அவர் அளித்திருந்தால் நாம் இந்தக் குறைகளை எல்லாம் பெரிதாகவே நினைத்திருக்க மாட்டோம்.

எங்கோ படித்த சில வரிகள்.

உணவில் ருசி இல்லை என்று சொன்னேன். எனக்கு உணவே இல்லை என்று அவன் சொன்னான்.

என் உறவும் நட்பும் சரி இல்லை என்று சொன்னேன்.  நான் நட்பும் உறவும் எதுவும் இல்லாத அனாதை என்று அவன் சொன்னான்.

காலுக்கு சரியான செருப்பு இல்லை என்று சொன்னேன்.  எனக்கு காலே இல்லை என்று அவன் சொன்னான். 

எல்லாவற்றுக்கும் எதிர்ப்பாட்டு பாடுகிறாயே யார் நீ என்று கேட்டேன். வரங்களை சாபங்களாக மாற்றிக் கொள்ளும் சாதாரண மனிதன் நீ. சாபங்களை வரங்களாக மாற்றத் துடிக்கும் மாமனிதன் நான் என்று அவன் சொன்னான். 

உண்மையான பிரச்சினை இருப்பவர்கள் அதை தீர்க்க அல்லது சமாளிக்க முயல்கிறார்கள்.  அப்படி பிரச்சினை இல்லாத நாம், நாமாகவே பல பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு அல்லல் படுகிறோம்.

Blessing என்றால் என்ன என்று ஒரு குருவிடம் கேட்டார்கள்.  அவர் சொன்னார் "நாம் காலை கண் விழிப்பதே ஒரு blessing தான்.  ஏனென்றால் இரவு தூங்கச் சென்ற எத்தனையோ பேர் மறுநாள் காலை கண்விழிப்பதே இல்லை".

நாம் வாழும் ஒவ்வொரு நாளும் blessing தான் என்ற நினைவை கொஞ்சம் கொஞ்சமாக நம் எண்ணத்தில் பதிய வைப்போம்.  Then our life would be truly a  blessed one.

எல்லோருக்கும் வலி இல்லாத தீபாவளி நல்வாழ்த்துக்கள். 

Monday, October 10, 2016

பூட்ட ஒடச்சுடு


சென்ற வாரம் சாஸ்திரி பவன் செல்வதற்க்காக ஆட்டோவை எதிர்பார்த்து சூளைமேடு மேத்தா நகர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த நேரத்தில் சாஸ்திரி பவன் செல்லும் bus காலியாக வந்தது.  மாநகரப் பேருந்தில் பயணம் செய்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் பஸ்சிலேயே சென்று விடுவோம் என்று ஏறி விட்டேன்.  கண்டக்டரிடம் 50 ரூபாயை எடுத்து நீட்டி ஒரு சாஸ்திரி பவன் என்று சொன்னேன்.  அவர் வெறும் 5 ரூபாய்க்கு எனக்கு சாஸ்திரி பவனை கொடுத்துவிட்டார்.  மீட்டருக்கு மேலே குறைந்தது 20 ரூபாயாவது கொடுத்து பழக்கப்பட்ட என் கைகளுக்கு வெறும் 5 ரூபாயில் இது ஆடம்பர பயணமாகப் பட்டது.

ஆனால் நான் சொல்ல வந்த விஷயம் இதுவல்ல.  டிக்கெட்டை வாங்கிக்கொண்டு கண்டக்டர் இருக்கைக்கு எதிர்புறம் சென்று அமர்ந்தேன். அப்போது எனக்குப் பின்னால் ஒரு பெண்மணி தன் மகனிடம் பேசிய பேச்சு என் காதில் வந்து விழுந்தது (நான் ஒட்டுக் கேட்கவில்லை.  அவர் பேசியது முன்னால் இருந்த driver இருக்கை வரை நன்றாக கேட்டிருக்கும் - அவ்வளவு சத்தமாக பேசினார்).  அவர் பேசியதை அவர் வார்த்தைகளிலேயே கொடுக்கிறேன்.

"நீ எப்ப வூட்டுக்கு வர ?
இன்னாது  ஒரு மணிக்கு வந்துடுவியா ? நான் வர்றதுக்கு 3 மணி ஆவுமே.
சாவி என்கிட்டேதான் இருக்கு.  
சரி, வந்தா வெய்யில்லயா நிப்ப.
ஒன்னு பண்ணு.  சீக்கிரம் வந்துட்டா பூட்ட ஒடச்சுடு.
அதுக்கு இன்னா பண்றது. வேற பூட்டு போட்டுக்கலாம்"

எனக்கு stun ஆகிவிட்டது.  ஒரு சில மணி நேரம் கூட தன் மகன் வீட்டிற்கு வெளியே காத்திருப்பதை விரும்பாத ஒரு தாயின் மனம்.  "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்பது இதுதானோ.

"We are living in a world where we love things and use people" என்று சொல்வார்கள். ஆனால் அப்படி இல்லை.  Still many people love people and use things.  அதனால்தான் அப்படி உடனடியாக பூட்டை உடைத்து விடு என்று சொல்ல வைத்தது.

எல்லோரும் அப்படி பூட்டை உடைப்பது நடைமுறையில் சாத்தியமா என்றால் இல்லைதான். நாம் அன்பை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.  இந்த அம்மா பூட்டை உடைத்துவிட்டார்.  அவ்வளவுதான்.

இந்த நேரத்தில் முல்லா கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.  அவர் எப்போதும் வெளியில் செல்லும்போது கதவை திறந்து விட்டு செல்வாராம். வீட்டுக்குள் இருக்கும்போது பூட்டிக் கொள்வாராம்.  ஏன் முல்லா இப்படி செய்கிறீர்கள் ? என்று கேட்டால் "என் வீட்டில் நான்தான் விலை மதிப்பு மிக்க பொருள்" அதனால் தான் என்று சொன்னாராம்.

பொருள் தேடும் வாழ்க்கையிலே, வாழ்க்கையின் பொருளையும் தேட வேண்டிய நேரமாகப் பட்டது எனக்கு.