Monday, October 10, 2016

பூட்ட ஒடச்சுடு


சென்ற வாரம் சாஸ்திரி பவன் செல்வதற்க்காக ஆட்டோவை எதிர்பார்த்து சூளைமேடு மேத்தா நகர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த நேரத்தில் சாஸ்திரி பவன் செல்லும் bus காலியாக வந்தது.  மாநகரப் பேருந்தில் பயணம் செய்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் பஸ்சிலேயே சென்று விடுவோம் என்று ஏறி விட்டேன்.  கண்டக்டரிடம் 50 ரூபாயை எடுத்து நீட்டி ஒரு சாஸ்திரி பவன் என்று சொன்னேன்.  அவர் வெறும் 5 ரூபாய்க்கு எனக்கு சாஸ்திரி பவனை கொடுத்துவிட்டார்.  மீட்டருக்கு மேலே குறைந்தது 20 ரூபாயாவது கொடுத்து பழக்கப்பட்ட என் கைகளுக்கு வெறும் 5 ரூபாயில் இது ஆடம்பர பயணமாகப் பட்டது.

ஆனால் நான் சொல்ல வந்த விஷயம் இதுவல்ல.  டிக்கெட்டை வாங்கிக்கொண்டு கண்டக்டர் இருக்கைக்கு எதிர்புறம் சென்று அமர்ந்தேன். அப்போது எனக்குப் பின்னால் ஒரு பெண்மணி தன் மகனிடம் பேசிய பேச்சு என் காதில் வந்து விழுந்தது (நான் ஒட்டுக் கேட்கவில்லை.  அவர் பேசியது முன்னால் இருந்த driver இருக்கை வரை நன்றாக கேட்டிருக்கும் - அவ்வளவு சத்தமாக பேசினார்).  அவர் பேசியதை அவர் வார்த்தைகளிலேயே கொடுக்கிறேன்.

"நீ எப்ப வூட்டுக்கு வர ?
இன்னாது  ஒரு மணிக்கு வந்துடுவியா ? நான் வர்றதுக்கு 3 மணி ஆவுமே.
சாவி என்கிட்டேதான் இருக்கு.  
சரி, வந்தா வெய்யில்லயா நிப்ப.
ஒன்னு பண்ணு.  சீக்கிரம் வந்துட்டா பூட்ட ஒடச்சுடு.
அதுக்கு இன்னா பண்றது. வேற பூட்டு போட்டுக்கலாம்"

எனக்கு stun ஆகிவிட்டது.  ஒரு சில மணி நேரம் கூட தன் மகன் வீட்டிற்கு வெளியே காத்திருப்பதை விரும்பாத ஒரு தாயின் மனம்.  "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்பது இதுதானோ.

"We are living in a world where we love things and use people" என்று சொல்வார்கள். ஆனால் அப்படி இல்லை.  Still many people love people and use things.  அதனால்தான் அப்படி உடனடியாக பூட்டை உடைத்து விடு என்று சொல்ல வைத்தது.

எல்லோரும் அப்படி பூட்டை உடைப்பது நடைமுறையில் சாத்தியமா என்றால் இல்லைதான். நாம் அன்பை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.  இந்த அம்மா பூட்டை உடைத்துவிட்டார்.  அவ்வளவுதான்.

இந்த நேரத்தில் முல்லா கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.  அவர் எப்போதும் வெளியில் செல்லும்போது கதவை திறந்து விட்டு செல்வாராம். வீட்டுக்குள் இருக்கும்போது பூட்டிக் கொள்வாராம்.  ஏன் முல்லா இப்படி செய்கிறீர்கள் ? என்று கேட்டால் "என் வீட்டில் நான்தான் விலை மதிப்பு மிக்க பொருள்" அதனால் தான் என்று சொன்னாராம்.

பொருள் தேடும் வாழ்க்கையிலே, வாழ்க்கையின் பொருளையும் தேட வேண்டிய நேரமாகப் பட்டது எனக்கு.









No comments:

Post a Comment