பத்து நாட்களுக்கு முன் வங்கியில் செலவுக்காக 10000 ரூபாய் எடுத்த போது ஒரு நூறு ரூபாய் கட்டை எடுத்து கொடுத்தார் வங்கி அதிகாரி. 500 அல்லது 1000 ரூபாயாக இருந்தால் கொடுங்கள் என்று சொல்ல நினைத்து, பரவாயில்லை அடிக்கடி 100 ரூபாயும் தேவைப் படுகிறது என்று வாங்கிக் கொண்டேன். அன்று எனக்குத் தெரியாது - இன்னும் சில நாட்களில் இந்தியாவின் "மதிப்புமிக்க" பணக்காரர்களில் நானும் ஒருவனாக இருக்கப் போகிறேன் என்று.
இந்தப் பதிவை எழுதும் இந்த நேரம் வரை எந்த வங்கி வாசலிலும் நிற்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. ஆனால் கையிருப்பு குறைந்து கொண்டே வருவதால் சீக்கிரம் நிற்க நேரிடலாம். அதற்குள் நிலைமை ஓரளவு சீராகும் என்று நம்புகிறேன்.
Demonetization எனப்படும் பணமதிப்பிறக்கம் (??) செய்வது இது முதல் முறை அல்ல. மூன்றாவது முறை. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு வருடம் முன்பு அதாவது 1946 ம் ஆண்டில் முதல் முறையாக பணமதிப்பிறக்கம் செய்யப் பட்டது. பிறகு 1978-ம் ஆண்டு ஜனதா ஆட்சிக் காலத்தில் திரு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது இரண்டாவது முறையாக பணமதிப்பிறக்கம் செய்யப் பட்டது. இப்போது மூன்றாவது முறையாக நமது பிரதமர் மோடி அவர்களால் பணமதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
As Indians we are good in planning but bad in implementation என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டோம். மிக நல்ல திட்டம் மிக மிக சொதப்பல் ஆகிக் கொண்டிருக்கிறது.
1946-ம் ஆண்டிலும் 1978-ம் ஆண்டிலும் பணமதிப்பிறக்கம் செய்யப் பட்ட கரன்சிகள் ரூபாய் 1000, 5000 மற்றும் 10000. இப்போது 500 மற்றும் 1000 ரூபாய்கள். இதில் கவனிக்கப் வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் 1978-ம் ஆண்டில் 1000 ரூபாய் என்பது பொது மக்களிடம் புழக்கத்தில இல்லாத பணம். அதனால் இந்த நடவடிக்கை பொது மக்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. ஆனால் இப்போது 500-ம் 1000-ம் சர்வ சாதாரணம். அதனால் திடீரென்று தகுந்த முன் ஏற்பாடுகள் ஏதுமின்றி இந்தக் கரன்சிகளை கழட்டி விட்டதால் பொது ஜனம் கால் கடுக்க கடுப்புடன் நின்று கொண்டிருக்கும் நிலை.
அதுவும் தவிர 500 மற்றும் 1000 ரூபாய் கறுப்பு பணம், சில வங்கி அதிகாரிகளின் துணையுடன் 2000 ரூபாய் கறுப்பு பணமாக மாறுவதாகத் தகவல். இப்படி நடப்பது நடந்து கொண்டே இருப்பதால் நிற்பவர்கள் நின்று கொண்டே இருக்கிறார்கள்.
நாங்க எல்லாம் வலது பக்கம் indicator போட்டு இடது பக்கம் திரும்புவோம் என்று சொல்லி இடது பக்கம் திரும்பிய ஒருவன் முட்டு சந்தில் போய் முட்டிக்கொண்டானாம். அப்படி ஆகிவிடக் கூடாது கறுப்பு பண ஒழிப்பு திட்டம்.
அப்புறம் ஜோக்கர் படத்தில் வரும் "என்னங்க சார் உங்க திட்டம் என்னங்க சார் உங்க சட்டம்" என்ற யுக பாரதியின் பாடல் வரிகளை போல ஆகிவிடக்கூடும்.
ஊழல் என்பது நாக்கில் ஊறும் உமிழ் நீர் போன்றது. துப்பத் துப்ப ஊறிக் கொண்டேதான் இருக்கும். மனிதனின் ஆசை இருக்கும் வரை ஊழல் ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் கண்ட இடங்களில் துப்பி அசிங்கம் செய்யாமல் இருந்தால் போதும்.
தவறுகளை மிக விரைவில் களைந்து ஊழலுக்கும் கறுப்பு பணத்துக்கும் எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்தால், மோடி Sir - You are going to be remembered forever in the Indian history.
No comments:
Post a Comment