ஆங்கிலத்தில்
Timing என்று சொல்வார்கள். அதாவது எந்த ஒரு
செயலையும் தொடங்குவதற்கும் அல்லது முடிப்பதற்கும் சரியான நேரம் என்று ஒன்று உண்டு. இதற்கும் நாம் நல்லநேரம் பார்ப்பதற்கும் சம்மந்தமில்லை. சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படும் செயல் எப்படி
வெற்றிகரமாக முடியுமோ அப்படித்தான் ஒரு செயலை சரியான நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவதும்.
ஜல்லிக்கட்டு
விஷயமும் அப்படித்தான் எனக்குப் படுகிறது.
இந்தப் போராட்டம் ஆரம்பித்ததும் அது மிகப் பெரிய தன்னெழுச்சியான போராட்டமுமாக
மாறியதும் வரலாறு. தமிழா் ஒவ்வொருவரும்
பெருமைப்பட வேண்டிய விஷயம். ஆனால் அந்தப் போராட்டத்தினை
முடிக்க இப்போது அந்தப் போராட்டத்தினை முன்னெடுத்தவா்கள் தாமதப்படுத்தும் ஒவ்வொரு கணமும்
அந்தப் போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்வது மட்டுமல்லாமல், விஷமிகள் அல்லது புல்லுருவிகள்
இந்த மக்கள் சக்தியை தங்களுடைய சுயநலத்துக்காக மாற்றக் கூடிய அபாயம் பெருமளவில் இருக்கிறது. அதற்கு நம் இளைஞா்கள் பகடைக் காய்களாகிவிடக் கூடாது.
என்னைப்
பொறுத்த வரையில் தமிழக அரசின் இந்த அவசரச் சட்டம் இப்போது நிரந்தரத் தீர்வு இல்லையென்றாலும்
கண்டிப்பாக நிரந்தரத் தீா்வுக்கான முயற்சியாக கண்டிப்பாக அமையும். இந்த சட்டம் (Ordinance) ஆறுமாத காலத்திற்கு மட்டும்தான்
செல்லுபடியாகும் என்றாலும் அதற்குள் கண்டிப்பாக அரசாங்கம் இதை நிரந்தரமாக்க எல்லா முயற்சிகளையும்
எடுப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம். இத்தகைய
போராட்டத்தினை பார்த்த பிறகு எந்த அரசாங்கமும் இந்தச் சட்டத்தினை நிரந்தரமாக்கத்தான்
கண்டிப்பாக முயற்சி செய்யும். அப்படி செய்யாத
பட்சத்தில் மீண்டும் மக்கள் தங்களுடைய சக்தியை இதற்கு மேலாகக் காட்டலாம்.
ஆனால்
இப்போது போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர தாமதிக்கும் நேரத்தில் இந்தப் போராட்டம்
திசை மாறிப் போவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் மட்டுமல்ல, அதற்கான விஷயங்களும் நடக்க
ஆரம்பித்திருக்கின்றன.
இப்போது
Social Media வில் சில செய்திகள் வருகின்றன.
அதாவது நாம் தமிழா் என்பது உண்மையாக இருந்தால் குடியரசு தினத்தினை கொண்டாடக்
கூடாது. நம் தேசியக் கொடியை அன்று அரைக்கம்பத்தில்
பறக்க விட வேண்டும் என்பது போன்ற செய்திகள்தான் அவை.
நாம்
தமிழா் என்று பெருமைப்படும் ஒரு விஷயத்தினை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்யும் அரசியல்
வியாபாரிகளுக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ இரையாகி விடக்கூடாது.
நாம்
தமிழா் என்பதற்கு பெருமைப்படும் அதே நேரத்தில் நாம் இந்தியர் என்பதற்காகவும் பெருமைப்படும் மக்கள்தான் இங்கு
அதிகம். அதனால் நாம் மிகவும் கவனமாக இருந்து
இத்தகைய களைகளை முதலிலேயெ பிடுங்கி எறிந்துவிட வேண்டும்.
ஏனென்றால்
நம் வெற்றியை வாழ்த்தும் வாய்கள் இங்கே குறைவுதான். ஆனால் நாம் தவறுதலாக தடுக்கி விழுந்தாலும் கை கொட்டி
சிரிக்க இங்கே ஆயிரக்கணக்கான கைகள் தயாராக இருக்கின்றன. ஏனென்றால் தமிழரின் இந்த மாபெரும் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாமல் எத்தனையோ வயிறுகள் எரிந்துகொண்டு இருக்கின்றன. நாம்தான் கவனமுடன் இருக்க வேண்டும்.