Sunday, August 5, 2018

கல் எறியும் குளம்


நான் வலைப்பதிவில் எழுதுவதற்கு ஒரு மாதம் இடைவெளி வந்து விட்டால் என் மனதில் அடிக்கடி வந்து போகும் நண்பர் மதுரை செந்தில்தான்.  அவர்தான் போன் செய்து ஏன் சார் கொஞ்ச நாளாக எதுவும் எழுதவில்லை.  அடிக்கடி எழுதுங்கள் சார் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.  நானும் தொடா்ந்து எழுத வேண்டும் என்று நினைப்பதோடு சரி.  தினமும் ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்து அலாரம் வைத்து காலையில் சரியாக ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கும்போது அதன் தலையில் தட்டிவிட்டு எப்போதும் போல் ஆறு மணிக்கு எழுந்திருப்பதுபோல், எழுதும் நினைப்பை ஏதோ ஒரு வேலை தட்டிச் சென்றுவிடுகிறது.  அதற்கு என்ன காரணம் சொன்னாலும் அது நொண்டிக் காரணம்தான்.

என் எழுத்தை எப்போதும் நான் கண்ணதாசன் எழுத்தாகவோ அல்லது வண்ணதாசன் எழுத்தாகவோ எண்ணிக்கொள்வதில்லை.  ஆனால் இவர்களின் எழுத்துக்களை படிக்கும்போது எனக்கு ஏற்படும் சில தெளிவுகளையும், நம்பிக்கைகளையும் பிறருக்குப் பகிர்ந்தால், படிக்கும் சிலருக்கும் வாழ்க்கையின் நம்பிக்கை விதைகளை விதைக்க முடியும் என்ற ஆவல்தான் என்னை எழுதத் தூண்டுகிறது.  அதுவும் தவிர இரமண மகரிஷியின் ”பிறர்க்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்” என்ற வார்த்தைகள் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் வார்த்தைகள்.  நல்லதோ, கெட்டதோ பிறருக்கு நாம் என்ன கொடுக்கிறோமோ அது நமக்கே கொடுத்துக்கொள்வதுதான்.  So, பிறருக்கு நான் கொடுக்கும் நம்பிக்கை என்பது ஒருவகையில் எனக்கே நான் கொடுத்துக் கொள்ளும் நம்பிக்கைதான்.  நான் உண்டு பசியாறிய பிறகுதான் உங்களுக்கு பரிமாறுகிறேன்.  பிடிப்பதும் பிடிக்காதும் உங்கள் பசியைப் பொருத்தது.

இன்று ”கல்யாண்ஜி கவிதைகள்” புத்தகத்தினை மேய்ந்து கொண்டு இருந்தபோது நிறைய கவிதைகளை “புக்மார்க்“ செய்து வைத்தேன். அதில் ஒரு கவிதையை இன்று பதிவிடலாம் என்று நினைத்தேன்.

அந்தக் கவிதை

இந்த பௌர்ணமி இரவில்
தனியாக
எந்தக் குளத்தின் கரையிலாவது
அமர்ந்து
கல் எறிய வேண்டுமென இருக்கிறது.
எந்தக் குளமும் இல்லை அருகில் –
மனக்குளம் தவிர.
ஏற்கனவே எறிந்த கற்களால்
அலையடித்துக் கொண்டிருக்கும் அது
இந்த நிலவிரவில் சற்று
அடங்கினால் நல்லது.
போக
கல்லெறிகிற ஆசை
இருக்கும் வரைக்கும்
கலங்கும் தானே எல்லாக் குளமும்.

ஒரு நல்ல கவிதையோ அல்லது எழுத்தோ எழுதுபவனின் எண்ணத்தைத்தான் பிரதிபலிக்க வேண்டுமென்ற கட்டயாமில்லை.  படிப்பவனின் மனநிலைக்குக் தகுந்தமாதிரி வேறுமாதிரியும் பொருள் கொடுக்கலாம். 

ஒரு முறை கண்ணதாசனின் வாசகர் ஒருவர் அவரின் ஒரு கவிதையைச் சுட்டிக்காட்டி அதன் பொருள் இதுதானே என்று கேட்டதற்கு  கண்ணதாசன் ”ஓ அப்படி ஒரு பொருள் இருக்கிறதா.  அப்படியும் வைத்துக்கொள்ளலாம் என்றாராம். 

அதனால் கல்யாண்ஜியின் இந்தக் கவிதை உங்களுக்கு எந்த மாதிரியான புரிதலைக் கொடுத்தாலும் சரிதான்  அதற்காக கல்யாண்ஜி நம்மீது கோபப்பட மாட்டார்.

இந்தக் கவிதையைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது இதுதான்  நாம் மனம் நிறைய ஆசைகளை அடுக்கிக் கொண்டு மனம் அடங்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறோம். ”ஏற்கனவே எறிந்த கற்களால் அலையடித்துக் கொண்டிருக்கும் அது இந்த நிலவிரவில் சற்று அடங்கினால் நல்லது” என்று நினைத்தாலும் மீண்டும் கல் எறியத்தான் ஆசைப்படுகிறோம்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பத்துப் பொருட்களை நினைவில் கொண்டு வாருங்கள்.  அவற்றில் எந்தப் பொருள் இல்லாமல் நம்மால் எப்போதும் போல் வாழ முடியும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.  எனக்கு அப்படி எந்தப் பொருளை யோசித்தாலும் அது இல்லாமல் வாழ முடியும் என்றுதான் தோன்றுகிறது.

வணிகமயமாகிவிட்ட நுகர்வுக் கலாசாரத்தில் நம்மீது பொருட்கள் திணிக்கப்பட்டுகொண்டே இருக்கின்றன. 

கைகள் போதாமல் நாம் குளத்தில் கற்களை எறிந்து கொண்டே அமைதியையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.  அதனால்தான் அமைதியையும் ஒரு பொருளாக நமக்கு விற்கும் வியாபாரிகள் பலர் ”ஆன்மீகவாதிகளாக” அலைந்து கொண்டிருக்கிறார்கள்.




2 comments:

  1. பௌர்ணமி நாளில் வண்ணதாசனின் கவிதை வரிகளை வாசிக்க வாய்த்தமைக்கு நன்றி. நல்ல பகிர்வு.

    ReplyDelete