Monday, April 6, 2020

கொரோனா (கருணா) மூர்த்தி


கொரோனா (கருணா) மூர்த்தி 

என்னுடைய முன்றில் வலைத்தளத்தின் Tag Line ஆக "ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க" என்று எந்த சுபயோக சுபதினத்தில் வைத்தேன் என்று தெரியவில்லை - இப்படி ஒரு நீண்ட ஓய்வு கிடைக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.   

வாழ்க்கையின் அழகே அடுத்த நொடி நம் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்க்க முடியாத புதிர்தானே.  அப்படி ஒரு புதிராக நம் வாழ்வில் இப்போது வந்திருப்பது "கொரோனா வைரஸ்" என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. 

"கொரோனா வைரஸ்" பற்றி இன்று உலகமே பேசிக் கொண்டிருக்கிறது. உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் உயிர் பலிகளைத் தாண்டி இந்த வைரஸ் பல நல்ல விஷயங்களை இந்த உலகத்திற்கு தந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. 

காற்றின் மாசைக் குறைக்க எத்தனை எத்தனை திட்டங்கள். வருடக் கணக்கில் குறையாத காற்றின் மாசு ஒரு சில வாரங்களில் கணிசமாக குறைந்துள்ளது. 5 ஆண்டுகளில் படிப்படியாக மது விலக்கை கொண்டு வருவோம் என்ற வெற்றுக் கூச்சலை ஓரம் தள்ளி பூரண மது விலக்கை ஒரு சில நாட்களில் கொண்டுவந்தது.  விபத்துகளினால் ஏற்பட்ட மரணங்களைவிட  இந்த சில மாதங்களில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்கள் இந்தியாவில் மிகக் குறைவு (இதுவரை).

நமக்குதான் கொரோனா ஒரு வைரஸ். இந்த பிரபஞ்சத்தின் பார்வையில் கொரோனாவிற்கு நாம் ஒரு வைரஸ் - அவ்வளவுதான். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தின் பேருண்மையை எத்தனையோ மகான்களும் ஞானிகளும் காலம்தோறும் போதித்துக் கொண்டிருந்தாலும் அதையெல்லாம்  மனதில் கொள்ளாமல்,  தான் என்ற மமதையில் ஆணவத்தின் உச்சத்தில் இருந்து கொண்டு சர்வ வல்லமை பெற்றவன் நான் என்று கொக்கரித்துக் கொண்டிருந்த மனிதனின் உச்சந்தலையில் சம்மட்டியால் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறது இந்த கொரோனா.

குண்டு துளைக்காத கார், கறுப்புப்  பூனை காவல் படை, கண்ணசைவிற்கு காத்திருக்கும் ஆயிரம் வேலையாட்கள், ஒரு கைப்பொத்தானை அழுத்தி உலகையே கபளீகரம் செய்துவிடுவேன் என்று கர்ஜித்த வல்லரசுத் தலைவர்கள் எல்லாம்  இன்று நிலைமை எங்கள் கட்டுக்குள் இல்லை, எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியிடம்  மண்டியிட்டு புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

வல்லரசு நாட்டின் தலைவர்களின் ஆணவத்துக்கு கொஞ்சமும் சளைக்காதது நம் தனி மனித அகங்காரம்.  அதிகபட்சம் ஒரு 80 அல்லது 90 ஆண்டுகள் கூட இந்த உலகத்தில் இருக்கப் போவதில்லை என்று தெரிந்தும், காலம் காலமாக வாழப் போவது போன்று இயற்கையை அழித்து, மனிதர்களை வெறுத்து, என்னை யார் என்ன கேட்க முடியும் என்று சிலம்பாட்டம் ஆடிய கால்களை இன்று வீட்டுக்குள் முடக்கி இருக்கிறது இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ்.

இந்த அழகில் "Save the Planet" என்ற வெற்றுக் கூச்சல் வேறு.  விளம்பரங்களுக்கும், சுய விளம்பரங்களுக்கும் மனிதர்கள் வேண்டுமானால் மயங்கலாம்.  பிரபஞ்சம் மயங்காது.  "நீ யார் என்னைக் காப்பாற்ற - என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும் உன்னை முதலில் காப்பாற்றி கொள்" என்று நம் கன்னத்தில் அறைந்து சொல்லி விட்டது.

காற்றையும் நெருப்பையும் கடவுளாகவும், மரங்களை காவல் தெய்வங்களாகவும், காகம் போன்ற பறவைகளை தம் முன்னோர்களாகவும்  வணங்கிய நம் பாட்டனும் முப்பாட்டனும் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.  

இன்றையச் சூழலுக்கு பொருந்தும்படியாக சுந்தர ராமசாமி எழுதிய "காகங்கள்" என்ற சிறுகதை 1991-ம் ஆண்டு காலச் சுவடு ஆண்டு மலரில் வெளிவந்துள்ளது.

அந்தக் கதையின் சுருக்கம் இதுதான்.

ஒரு மனிதர் தன்னுடைய சிறு வயது முதல் தொடர்ந்து 40-50 ஆண்டுகள் காகங்களை கவனித்து வரும் பழக்கம் உள்ளவர்.  அது ஒரு நெடுஞ்சாலை.  அந்தச் சாலையில் ஒரு காலத்தில் மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வார்கள்.  அந்த நெல் மூட்டைகளில் இருந்து சிந்தும் நெல்மணிகளை கொத்தி தின்பதற்கு தினமும் விடியலில் காகங்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும்.  பிறகு மாட்டு வண்டிகள் மாறி லாரிகளானது.  ஆனாலும் நெல் மணிகள் சாலையில் சிந்துவது குறையவில்லை.  அதனால் காகங்கள் வருவதும் குறையவில்லை.  ஆனாலும் மாட்டு வண்டிக் காலத்தில் இருந்தது போல் காகங்களால் நின்று நிதானித்து சாப்பிட முடியவில்லை.  நெடுஞ்சாலையில் வேகமெடுக்கும் வண்டிகளில் சிக்காமல் தப்பித்து சாப்பிட காகங்கள் விடியலில் சீக்கிரமே அந்தச் சாலைக்கு வந்து விடுகின்றன.

ஒருநாள் அந்த ஊருக்கு வரும் கலெக்டர், வாகனப் போக்குவரத்தினை சீர் செய்யும் விதமாக அந்தச் சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்றி உத்தரவிடுவார்.  அதனால் அந்தப் பக்ககமாக செல்ல வேண்டிய நெல் மூட்டை ஏற்றிய லாரிகள் வேறு வழியில் செல்ல ஆரம்பித்து விடும்.  காலம் காலமாக அந்தச் சாலையில் நெல் மணிகளை சாப்பிட்டு வந்த அந்த நூற்றுக் கணக்கான காகங்கள் பெருத்த ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் அங்கிருந்து செல்லும்.

அந்தக் காகங்களுக்காக அந்த கலெக்டரிடம் முறையிடும் அந்த மனிதருக்கு கிடைக்கும் பட்டம் "மனநலம் குன்றியவர்".

இந்தக் கதையின் highlight அந்த மனிதர் காகங்களுக்காக கலெக்டரிடம் முறையிடுவதை சுந்தர ராமசாமி சொல்லும் விதம்.  அந்தக் கலெக்டர் அதிகார வர்கத்தின் குறியீடு.

இனி சுந்தர ராமசாமியின் வார்த்தைகள் :

"பின் விளைவுகளை யோசிக்கத் தெரியாதவர்களுக்குக் கையெழுத்திட அதிகாரம் இல்லை.  இப்போது வணிகர்கள் அல்ல - காகங்கள்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன.  கூடும் செலவுகளை வணிகர்கள் விலையில் ஏற்றி விடுவார்கள்.  காகங்களுக்கோ உணவில்லை.  மனித குலத்திற்கு அவை ஆற்றியுள்ள பங்கை நினைக்கும்போது மனம் விம்முகிறது.  அவற்றின் உன்னதங்கள் காற்றில் கலந்து கிடக்கின்றன.  உங்களது செத்த வரலாறு, செத்த நாகரிகம் எல்லாம் உங்களை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றன. 

இருகால் பிராணிகள் மட்டுமே உருவாக்கிய எந்த உன்னதமும் இந்த உலகத்தில் இல்லை. இருகால் பிராணிகள் உருவாக்கித் தந்திருப்பவை திமிர், கடைந்தெடுத்த அதிகாரம், ஆக்கமும் அழிவும் தங்கள் கைகளில்தான் என்ற அஞ்ஞான அகங்காரம். இந்தத் திமிரில் இருந்தான் சகல நோயுற்ற முடிவுகளும் உருவாகி வருகின்றன. புல்லும், பூண்டும், செடிகளும், கொடிகளும், புழுவும், பூச்சிகளும், காற்றும், ஒலியும், பறவைகளும், மிருகங்களும் இந்த நாகரிகத்தை உருவாக்க மனிதனுக்கு நிகரான பங்கை ஆற்றியுள்ளன.  தனக்கான உலகத்தை உருவாக்கும் திமிரில் உலகத்தை உருவாக்கப் பங்காற்றியுள்ள அனைத்துச் சக்திகளையும் ஈவிரக்கமின்றி மனிதன் அழித்துக் கொண்டிருக்கிறான். இந்த நன்றி கெட்டதனத்திற்கு தண்டனை வழங்க இந்த உலகத்தில் நீதிமன்றம் எதுவும் இல்லை.

காகங்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள எந்த நாகரிகமும் இல்லை.  பறவைகளில் அவை அதிக சங்கடம் அடைந்தன  எனில் பறவைகளில் அவைதாம் உங்களுடன் அதிகம் உறவாட விரும்பின.  ஆயிரக்கணக்கான கைக்குழந்தைகள் ஒரு பாதையில் கிடந்தது பசியால் துடித்துக் கதறினால் என்ன செய்வீர்கள் ?  

அழுகையின் குரலைப் புரிந்து கொள்ள முடியாத அதிகாரம் ஒருபோதும் நன்மையை விளைவித்தது இல்லை. இன்று ஒரு நொண்டிக் காகம் கூட உங்களை நம்பத் தயாராக இல்லை. இதனால் நீங்கள் காகங்களை அழித்துவிட முடியும் என்பதல்ல. ஒருக்காலும் உங்களால் அவற்றை அழிக்க முடியாது. தனக்காக மட்டுமே இந்த உலகம் படைக்கப்பட்டு இருக்கிறது என்ற அஞ்ஞான அகந்தை  அவற்றுக்கு இல்லை.  மேலும் அவற்றில் அலகுகள் திட்பமானவை.  சிறகுகள் வலிமையானவை.  பார்வை கூர்மையானது. இவற்றால் அவை வாழ்ந்து கொண்டிருக்கும்.  அவை பெரும் சக்தியாக திரண்டு ஒன்றாகப் பறக்கத் தொடங்கும்போது வானம் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் போகக் கூடும். அவற்றின் ஆற்றலை அன்று உணர்ந்து கொள்வீர்கள்.  ஆனால் அன்று உங்களைத் திருத்திக் கொள்ள உங்களுக்கு அவகாசம் இருக்காது.

இந்த வைரஸ் ஒரு சாம்பிள்தான். இப்போதாவது மனிதன் தன்னை திருத்திக் கொள்ளாவிட்டால் இயற்கை முற்றாக நம்மைத் துடைத்தெறிந்துவிட்டு தன்னை மீண்டும்   அழகாக புதுப்பித்துக்கொள்ளும்.  

இப்போது நம்மால் செய்யக் கூடியதெல்லாம் அந்தக் கொரோனா மூர்த்தியிடமே மண்டியிட்டு பிரார்த்தனை செய்வதுதான். நாங்கள் செய்த பிழைகளை பொறுத்து எங்களை காப்பாற்றுவீராக. 

நாம் இயற்கைக்கு நம்மால் செய்யக் கூடிய கைம்மாறு ஏதாவது உண்டெனில் அது நம்மால் முடிந்தவரை இயற்கைக்கு விரோதமாக எதுவும் செய்யாமல் இருப்பதுதான்.


No comments:

Post a Comment