Monday, April 14, 2014

தீதும் நன்றும் பிறர் தர வாரா



விஜய வருடம் முடிந்து ஜய  வருடம் தொடங்கி விட்டது. எப்போதும் போல் சில நட்புக்களின் வாழ்த்துக்கள், சர்க்கரை பொங்கல், டிவியில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன மற்றும் திரைக்கே வராத படங்களில் எதைப் பார்ப்பது என்று தெரியாமல் எதையும் பார்க்காமல், காமெடி சேனலுக்கு பதிலாக கேப்டன் டிவியில் கேப்டனின் பேச்சை பார்த்துவிட்டு, கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் புது வருடத் தொடக்கம் பெரும்பாலும் முடிந்து விட்டது.

இன்று ஏதாவது ஒரு உபயோகமான தகவலை வலை தளத்தில் பதிவு செய்யா விட்டால் என் நூற்றுகணக்கான (ஆயிரக்கணக்கான, இலட்சகணக்கான என்று மிகைப் படுத்தி பொய் சொல்ல விரும்பவில்லை) வாசக நண்பர்கள்  ஏமாந்து விடுவார்கள் என்பதால் இந்த பதிவு.

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் எழுதிய "உலகால் அறியப்படாத ரகசியம்" என்ற புத்தகத்திலிருந்து சில செய்திகள்.

ஜேம்ஸ் ஆலன் என்ற தத்துவ ஞானி கூறுகிறார் "வாழ்வில் மறைந்து கிடக்கும் சில உண்மைகள்தான் நம்மை வழி நடத்திச் செல்கின்றன என்று".

தனி மனித வாழ்விலும் சரி, சமுதாய வாழ்விலும் சரி இது உண்மை.  நாம் விளைவுகளை கண்டு  அஞ்சுகிறோம் அல்லது தவிர்க்க முயல்கிறோம், ஆனால் ஏன் இந்த விளைவுகள் என்று யோசிப்பதில்லை.  எந்த விளைவும் தானே அல்லது தற்செயலாக நிகழ்வதில்லை.  எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

இதைத்தான் "வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை  விதைத்தவன் தினை அறுப்பான்" என்றும் கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் "cause and effect" என்று சொல்கிறோம்.

நமக்கு ஒரு துன்பம் நேரும்போது யாரும் நம் முன் வந்து நீ இந்த செயலை செய்ததால் இந்த துன்பம் வந்தது என்று கூறுவதில்லை.  நாமும் விளைவில் வருந்தும் அளவுக்கு காரணத்தை யோசிப்பதில்லை.

நம்மை அப்பழுக்கற்ற மனிதர்களாக நினைத்துகொண்டு "நமக்கு ஏன் இந்த சோதனை என்று புலம்புகிறோம்".  என்னுடைய எந்த தீய எண்ணங்களால் இந்த விளைவு என்று யோசித்தால் வாழ்வில் மறைந்து கிடக்கும் நியாயங்கள் புலனாகின்றன.

நமது எண்ணங்களுக்கு ஏற்பத்தான் நம்முடைய சூழ்நிலைகள் அமைகின்றன. தீக்குள் விரலை வைத்தால் சுடுவது போல தீய எண்ணங்களின் விளைவுகள் உடனுக்குடன் நிகழ்வதில்லை. அப்படி நிகழ்ந்தால் நமக்கு காரண காரியம் புலப்பட்டுவிடும். நாமும் தவறுகள் செய்ய மாட்டோம்.  ஆனால் வாழ்வில் அப்படி எண்ணங்களுக்கும் விளைவுகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதில்லை.

எண்ணங்கள் ரகசியமானவை, அவற்றை மறைத்துவிடலாம் என்று நாம் நினைக்கிறோம்.  ஆனால் அவற்றை ஒரு நாளும் ஒளித்து வைக்க முடியாது.

நாம் எதை மற்றவர்களுக்கு நினைகிறோமோ அல்லது செய்கிறோமோ அது நமக்கே வந்து சேர்கிறது.

நமக்கு வந்த துன்பங்கள் எத்தகைய எண்ணங்களினால் உருவாயின என்று ஆழ்ந்து யோசிக்கும்போது நமக்கு காரண காரியம் புலப்படத் தொடங்கும்.

புத்தகத்தினை படித்தவுடன் அதில் உள்ள சில சிந்தனைகளை அசை போட்டு பார்த்தேன். மிகவும் சத்தியமான வார்த்தைகள் அவை.

காரண காரியங்களைப் பற்றி அறியாமல் அல்லது கவலைப்படாமல் வாழ்வின் நியதிகளுக்கு மாறாக செயல்கள் செய்த பலரும் இன்று அதற்கான பலனை அனுபவிப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

என் காரின் பின்னால் நான் எழுதியிருக்கும் வாசகம் "தீதும் நன்றும் பிறர் தர வாரா".  இந்த ஒரு சொற்றொடரின்  விளக்கம்தான் மேலே சொன்ன அத்தனை விசயங்களும்.

"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கத் தேவையில்லை" என்ற திருமூலரின் வார்தைகளை இங்கு நினைவில் கொள்வோம்.





1 comment:

  1. Guruve Saranam, I will try to practice it sir. I makes me to think of "THE SECRET" Book by the Rhonda Byrne.

    ReplyDelete